Search This Blog

December 5, 2005

புது வெள்ளை மழை பொழிகின்றது....


இன்று வழக்கத்திற்கு மாறாக காலை 11 மணிக்கு எழுந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தால்,
வெளி உலகம் மிகப்பெரிய பனிப்போர்வையை போர்த்திக்கொண்டு சோம்பியிருந்தது.எங்கள் ஊரின் முதல் பனிப்பொழிவு இன்று அதிகாலை ஆரம்பித்திருக்கிறது.இனிமேல் அடுத்த 2-3 மாதங்களுக்கு வழக்கமான விருந்தாளியாக படுத்தப்போகிறது. இதற்குமுன் கடந்த 2 வருடங்களாக டல்லாஸ்'ல் இருந்தேன்.அங்கு வருடத்திற்கு ஒரே நாள்தான் பனிபொழிவு இருந்தது.
முதல் பனிப்பொழிவு என்பதால் வெளியே போய் விளையாடினொம்.சில (பனி)புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.....


November 4, 2005

அமெரிக்காவில் கோவிந்தோ....கோவிந்தோ...

கடந்த திங்களன்று,அலுவலகம் முடிந்து வீட்டுக்குவந்து காபி(இது ப்ரூ'ம்ம்மா....)சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது,அழைப்புமணி அழைத்தது.கதவைதிறந்தால், குட்டி ஸ்பைடர்மேனும்(பாபா ஸ்டைலில் கைவிரலை வைத்துக்கொண்டு நூல் விடுபவர்), சூப்பர்மேனும்(பேண்ட்'க்கு மேலே ஜட்டி போடுபவர்) கையில் ஒரு கூடையுடன் நின்றுக்கோண்டிருந்தார்கள். இன்று முடிக்கவேண்டிய வேலையை நாளைக்கு முடிப்பதாக ஆபிசில் மேனேஜ்ரிடம் 'ஜல்லியடித்துவிட்டு' வந்துவிட்டதால்,பிடித்துவர இவர்களை அனுப்பிவிட்டார்களா என யோசித்துக்கொண்டே கேள்விக்குறியுடன் அவர்களை பார்க்க, 'ஹாலோவின்' வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு கூடையை நீட்டினார்கள்.அதில் ஏகப்பட்ட 'கேண்டி'சும் சில 'டாய்'சும் இருந்தது.ஓ..ஹோ...நமக்குத்தான் தருகிறார்கள் என கூடையில் கையை விட்டால், ஸ்பைடர்மேன் கையை பிடித்து,'you should give us the candy's' என்றனர்.இது என்னடா வம்பா போச்சி என நினைத்துக்கொண்டிருந்தபோது,கை நிறைய 'கேண்டி'யோடு அண்ணி வந்து இரண்டுக்கூடையிலும் போட்டார்கள்.ஸ்பைடர்மேனும், சூப்பர்மேனும் 'தேங்ஸ் ஆன்டி' என சொல்லிவிட்டு என்னை 'அக்னி நட்சத்திர' பார்வை பார்த்துக்கொண்டே அடுத்த வீட்டிற்க்கு சென்றார்கள்.

பிறகு அண்ணி 'இன்று 'ஹாலோவின் டே'.குட்டிப்பசங்க விரும்பிய வேஷம் போட்டுக்கொண்டு,வீடுவீடாக கூடை/பையுடன் சென்று அவர்கள் கொடுப்பதை வாங்கி வருவார்கள் என விளக்கினார்கள்.எங்கள் வீட்டு வாண்டுகளும் கூடையுடன் கிளம்பி சென்றிருக்கிறார்கள் என உபரித்தகவலையும் சொன்னார்கள்.

எங்கள் வீட்டு வாண்டுகளின்(அஜித்,அஸ்வின்) வேஷம்..எனக்கு நம்ப ஊரில் புரட்டாசி மாதம் பிரதி சனிக்கிழமை,நெற்றி முழுக்க நாமத்துடன் கையில் சொம்பு/பையுடன்,'கோவிந்தோ.....கோவிந்தோ...' சொல்லிக்கொண்டு அரிசியோ,காசோ வாங்கி செல்லுபவர்களின் நியாபகம் வந்தது.

அதற்குபிறகு கேண்டி'ஸ் முழுவதையும் என்னிடம் கொடுத்து,வருபவர்களுகெல்லாம் வாரி வழங்குமாறு சொல்லிவிட்டு அண்ணி போய்விட்டார்கள். நானும் 'தேவுடா....தேவுடா...ஏழுமலை தேவுடா' பாட்டை போட்டுவிட்டு 'ஸ்பைடர்மேன்'களுக்காக 'தேவுடு' காத்துக்கொண்டிருந்தேன்.

October 28, 2005

அவுட்சோர்ஸ்....

http://www.cnn.com/2005/EDUCATION/10/26/tutored.from.afar.ap/index.html

மேலே உள்ள 'link' போய் பாருங்க... படிப்பும் இப்போ 'அவுட்சோர்ஸ்' ஆகுது இந்தியாவிலிருந்து....

October 26, 2005

ரஜினி ரசிகர்களின் ரயில் மறியல்....ஜப்பானில்

கடந்த செப்டம்பர் 31'ம் தேதி,ஜப்பானில் ஒரு மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடந்துள்ளது.அதை வெற்றிகரமாக நடத்தியவர்கள் அங்குள்ள ரஜினி ரசிகர்கள்.
ரஜினிகாந்த் நடித்த 'முத்து' பார்த்து 'பித்து' பிடித்தவர்கள்,அவருக்கு அங்கே ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர்.அதன் பிறகு அவர் நடித்த எல்லா படங்களும் ஜப்பானில் மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது.ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இந்த நிலையில்தான் இந்த போராட்டம் நடந்துள்ளது.அதிர்ந்துபோன ஜப்பான் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.கீழ்க்கண்ட கோரிக்கைகள் ரஜினி ரசிகர்களால் எழுப்பப்பட்டுள்ளது.

1. ஜப்பான் தலைநகர் 'டோக்கியோ'வின் பெயரை 'ரஜினியோ' என மாற்றவேண்டும்.

2. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 அரசு விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும்.

3. ரஜினி வருடத்துக்கு ஒருமுறையாவது,இமயமலைக்கு பதில் ஜப்பானில் உள்ள ஏதாவது ஒரு மலைக்கு(குறைந்தப்பட்சம்,ஏதாவதொரு 'எரிமலை'க்காவது) வரவேண்டும்.

4. ரஜினி படம் வெளியாகும் நாளில்,ஜப்பானில் 'இலவச ரயில் சேவை' அளிக்கவேண்டும்.

5. மீனா'வை இந்திய தூதராக ஜப்பானில் நியமிக்கவேண்டும்.

இத்தகவலை 'ஜப்பான் ரஜினி ரசிகர்' மன்ற தலைவர் 'ரஜினி காக்கமுரே'சான் தெரிவித்தார்.மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த ஆண்டு 'பிப்ரவரி 30'ம் நாள் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

மேற்கண்ட கோரிக்கைகளைக் கேட்ட ஜப்பான் அரசு,ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
அக்குழு விரைவில் இந்தியா வந்து பிரதமர்,ரஜினி,மீனா ஆகியோர்களை சந்திக்கும் என 'நம்பமுடியாத' வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ரயில் மறியலின்போது எடுத்தப்புகைப்படம்,உங்கள் பார்வைக்கு...


October 19, 2005

க(ங்குலி)ஜினி....

இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த ஜோக் இது...

சவுரவ்: என் பேர் சவுரவ். முழுப்பேரு சவுரவ் கங்குலி. நான் இந்தியன் கிரிக்கெட் டீம் கேப்டன்.

டாக்டர்: அவரால 15 நிமிசத்துக்கு மேலே எந்த கிரவுண்டுலயும் தொடர்ந்து ஆடமுடியாது. யாரோ அவரோட தலையில கிரிக்கெட் பந்தை கொண்டு பலமா தாக்கியிருக்காங்க!! இத நாங்க மருத்துவ ரீதியா Short Term Batting Lossனு சொல்லுவோம்...

இதுக்கு மேல நம்ம சரக்கு.......கேள்வி : எவ்வளவு நாளா இவருக்கு இந்த பிரச்சனை இருக்கு ?

டாக்டர்: ஒரு ஒன்றரை வருசமா இந்த வியாதி இருக்கு.

கேள்வி : அது சரி...எப்பவும் ஒரு பெரிய பையை வச்சினு சுத்துறாரே..அதுல என்னதான் இருக்கு ?

டாக்டர்: அதுவா...அது அவர் டீம்'காக விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து எடுத்த வீடியோ,போட்டோக்கள்,வாங்கின கோப்பைகள்,அவரோட 'daily fitness report' எல்லாம் வச்சி இருக்கார்.அடிக்கடி BCCI commitee'க்கு போய் விளக்கம் குடுக்க வேண்டி இருக்கர்தால எப்பவும் பையோட அலையராரு...

கேள்வி : இதென்ன..டாக்டர்....உடம்பெல்லாம் ஒரே நம்பர்'சாவும்,சில பேரோட பெயர்களுமாவும் இருக்கு ??

டாக்டர்: அவர் இதுவரைக்கும் ஆடின மேட்ச்,எவ்வளவு ரன் அடிச்சியிடிகாரு,எத்தன முறை 'டக்' அடிச்சிருக்காரு,எவ்வளவு முறை ICC'யால தடை வாங்கினாரு...அதெல்லாம்
மறக்காம இருக்க பச்சை குத்திட்டு இருக்காரு.

கேள்வி : அப்ப அவருக்கு எதுதான் நினைவிருக்கும்?

டாக்டர் : அவர் குடும்பம்,வழக்கமா பண்ற வேலைகள்,ம்.ம்....ம்ம்...கோச்'சோட சண்டை போடுறது,சட்டைய கழற்றி சுத்துறது.அப்புறம் அந்த 'incident' நடந்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் அதெல்லாம் மறக்கமாட்டார்...இன்னைக்கும் அவர்தான் 'கேப்டன்'னு நினைச்சிட்டு இருக்கார்னா பாத்துக்கோங்க...

கேள்வி : இவர் பிரச்சனை தீர என்னதான் வழி ?

டாக்டர் : அது BCCI,ICC' கிட்டதான் இருக்கு.டீமோட நிரந்தர கேப்டனா இவர அறிவிக்கனும்.
ஒரு ரன் எடுத்தா நூறு ரன் எடுத்த மாதிரினு சொல்லனும்.இவர் பேட்டிங் பண்ணும் போது,இவரே விருப்பபடும்போதுதான் அம்பயர் அவுட் குடுக்கனும்.இதெல்லாம் நடந்தா இவர் பழையப்படி ஆகிடுவார்...

கேள்வி : 10 digit'la ஒரு நம்பர் இருக்கே...மொபைல் நம்பர்'னு நினைக்கிறேன்...யாரோட நம்பர் டாக்டர் அது ?

டாக்டர் : ஓ..நீங்களும் பாத்துடீங்களா அத... அது நக்மா'வோட நம்பர். இவர்தான் இப்படி ஆயிட்டாரே,நானாவது ட்ரை பண்ணலாம்'னு பாத்தேன்...பாம்பே தாதாக்களுக்கும்,கொல்கத்தா தாதா(dada)க்கும்தான் லக் இருக்கு....எனக்கு லக்' இல்ல...

October 5, 2005

எங்கே செல்லும் இந்த பாதை.....மேலே உள்ள படம்,Grand Canyon செல்லும்போது எடுத்தது.மிகப்பெரிய பள்ளத்தாக்குதான் இந்த Grand Canyon.இது அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ளது.இந்த பள்ளத்தாக்கின் சிறப்பு,வெயில் ஏறஏற பாறைகளின் நிறம் மாறிக்கொண்டேயிருக்கும்.கீழே சில படங்களை இணைத்துள்ளேன்.'ஆறு வித்தியாசங்கள்' தெரிகிறதா என பார்த்துச் சொல்லுங்கள்.
பலருக்கு இந்த இடம் பரிச்சயமானதாக தோன்றும்.சங்கரின் 'ஜீன்ஸ்',ஹைர..ஹைர,ஐரோப்பா பாடலில்,ஐஸ்'சும்,ப்ரசாந்தும் இங்குதான் ஆடியிருப்பார்கள்.September 18, 2005

காதல் வெப்சைட் ஒன்று.....

தலைப்பைப் பார்த்த உடன்,'தல' நடித்த 'தீனா' பற்றி எழுதப்போகிறேன் என எண்ண வேண்டாம்.இது உண்மையிலேயே நிஜக்காதல் ஜோடி அவர்களின் காதல் வளர்ந்தகதையை
இந்த வெப்சைட்டில் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

அவர்களின் முதல் சந்திப்பு,இருவருக்கிடையில் ஏற்பட்ட ஈர்ப்பு,காதல்தீ பற்றிய விதம்,என அனைத்தையும் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.இ-மெயில் வாயிலாக அவர்கள் காதலை வெளிப்படுத்தியதை அப்படியே வெளியிட்டுள்ளனர்.இந்தவருட இறுதியில் திருமணபந்ததில் இணையப்போகும் இந்த ஜோடியை நீங்களும் வாழ்த்துங்களேன்.

http://sumeetandsubarna.weddingwindow.com - Check it out

September 13, 2005

பரிசு !!!


என்னவளுக்காக என்னால்
தாஜ்மஹால் கட்டமுடியாது.
என்னால் முடிந்தது,
பொம்மை தாஜ்மஹால்
பரிசாக அவளுக்கு!!!.


August 26, 2005

அவர்கள் அப்படித்தான்...

கடந்த 4 மாதங்களாக நியூஜெர்சியில் வசித்து வருகிறேன். நாங்களிருக்கும் அபார்மெண்ட் எதிர் வீட்டில் 3 அமெரிக்கர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் வழங்கும் மாத உதவித்தொகை மூலம் வாழ்பவர்கள்.அரசாங்கமே வீடும் கொடுத்திருக்கிறது. இதுவரை அவர்கள் எங்கும் சென்று நான் பார்த்ததில்லை.நாள் முழுவதும் காலைமுதல் இரவுவரை வீட்டுக்கு வெளியே அமர்ந்து விடுகிறார்கள். ஒரு 'ஆடியோ' சிஸ்டத்தில் சத்தமாக எதாவது பாடல்களை போட்டுவிடுகிறார்கள்.வாயில் எப்போதும் புகைந்துக்கொண்டிருக்கும்.சில நேரங்களில் வழியில் செல்வோரிடம் 'சிகரெட்'டிற்கு கையேந்துவார்கள்.மற்றபடி வேறு தொந்தரவு கிடையாது.
என்னால் கற்பனைக்கூட பண்ணமுடியவில்லை,நாள் முழுவதும் எந்தக்குறிக்கோளும் இல்லாமல் வெறுமென அமர்ந்துக்கொண்டு பொழுதைக்கழிப்பதென்பது மிகவும் கொடுமையான தண்டனையாக தோன்றுகிறது.

இவர்கள் இப்படியென்றால்,அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் உள்ளது.வயதான பெண்மணி,அவருடைய,வேலைக்குப் போகும் பெண்,அந்தப்பெண்ணின் இரு குழந்தைகள்,5-8 வயது இருக்கும். காலையில் அப்பெண் வேலைக்கு கிளம்பிய உடன்,அம்முதியப்பெண்மணி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கோகிளம்பிவிடும். சில மணி நேரங்கழித்து கைகளில் விதவிதமான பொருள்களுடன் திரும்புவார்கள்.இது தினமும் நடக்கும்.
ஒருநாள் அலுவலகம் தாமதமாக கிளம்பினேன். வீட்டில் ஏராளமான குப்பைகள் சேர்ந்துவிட்டதால்,அவைகளை எடுத்துக்கொண்டு,எங்கள் காலனியில் குப்பைகளைப்போடும்
இடத்திற்கு சென்றேன்.அங்கு நான் கண்டக்காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த முதிய பெண்மணி,குப்பைகளைக் குடைந்துக்கொண்டிருந்தது.அதிலிருந்து அரைக்குறையாக பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்ட பொருட்களை செகரித்துக்கொண்டிருந்தது.குழந்தைகளையும் பெரிய பெட்டிகளில் குவிந்திருந்த குப்பைகளை கிளற விட்டிருந்தது.தினமும் இப்படித்தான் நடந்துக்கொண்டிருப்பதாக,பிறகு சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தார்கள்.
எனக்கு அந்தக்குழந்தைகளை நினைத்துதான் கவலைப்படமுடிந்தது.

August 24, 2005

இன்று போய்..நாளை வா...

நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்றுதான் இங்கு வரமுடிந்தது. என்ன எழுதலாம் என முடிவு செய்யமுடியவில்லை.எழுதி நீண்ட நாட்கள் ஆனதால் 'டச்' விட்டுப்போச்சினு நினைக்கிறேன்.
முழுபலத்துடன் மீண்டு(ம்) வருகிறேன்....

July 14, 2005

ஹைக்கூ-2

சுவைத்தும் கசந்தது...
அவள் கொடுத்த
அல்வா !!!

July 6, 2005

ராஜாவின் திருவாசகம்...

ஊரெல்லாம் ஒரே பேச்சு.யாருடன் தொலைபேசினாலும் 'திருவாசகத்தை' கேட்டீங்களா? என விசாரிப்புகள். ஒரு 'வெப் சைட்டில்' MP3 format'ல் இருப்பதாக ஒரு நண்பன் மூலம் அறிந்து அதை இறக்கி ஒருதடவை ஓடவிட்டேன்.ஆனால் இவ்வாறு செய்ய மனம் குறுகுறுத்தது. மாலையில் 'எடிசனில்' உள்ள வீடியோ கடைக்கு சென்று 15$ கொடுத்து ஒரு CD'யை வாங்கினேன். அந்த கடைக்காரரிடம் 'CD எப்படி போகிறது என விசாரித்தேன்.காலையிலிருந்து நிறையபேர் வந்து வாங்கி செல்வதாகவும்,எதிர்பார்த்ததைவிட ஆதரவு அமோகமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

வீட்டிற்கு திரும்பிய உடன் CD'யை ஓடவிட்டேன்.மொத்தம் ஆறு பாடல்கள்.இனிமையாக ஒலிக்க ஆரம்பித்தது.ஆனால் எதுவும் முதலில் மனதில் ஒட்டவில்லை. நமக்கு 'டப்பாங்குத்து' பாடல்களாகக் கேட்டுக்கேட்டு ரசனையே மாறிவிட்டிருக்கிறது.மேலும் சுத்த தமிழில் பாடல்வரிகள். குறைந்தபட்சம் ஆறு எழு தடவைக்கேட்டால்தான் பாடலின் ஜீவன் புரிந்து ரசித்துருக முடியும் என நினைக்கிறேன்.பார்க்கலாம்.

கேட்டவரையில் 'ஜனனி ஜனனி' ல் இருக்கும் தெய்வீகத்தன்மையும், மனதை உருகச்செய்யும் ராகதேவனின் குரலும் இந்த 'திருவாசகத்தில்' குறைவதாக ஒரு எண்ணம். ஒருவேளை, மீண்டும் மீண்டும் கேட்கக்கேட்க உணரமுடியும் என நினைக்கிறேன்.

ஹைக்கூ......

சுவைக்காமலே இனித்தது..
அவள் கொடுத்த
கிட்-கேட்.

June 25, 2005

பயணங்கள் முடிவதில்லை...

அண்மையில் அலுவல் சம்பந்தமாக, வாஷிங்டனிலிருந்து நீயூஜெர்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. விமானம் புறப்படும் நேரம் மாலை 5 மணி. 3.30'க்கே விமானநிலையம் சென்று 'போர்டிங் கார்ட்' வாங்கியப்பிறகுதான் விமானம் 1 மணி நேரம் தாமதாமாகும் என அறிவிக்கப்பட்டது. இது என்னடா சோதனை என நினைத்துக்கொண்டு 'starbuck's' ல் ஒரு 'கேப்பச்சினோ'வை வாங்கிக்கொண்டு விமானநிலையத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் 'போர்டிங் கேட்' வந்தால், விமானம் மேலும் 1 மணி நெரம் தாமதமாகும் என அறிவித்தார்கள்.ஏதோ இயந்திரக்கோளாராம். ம்ம்ம்.... நான் கிளம்பிய நேரத்தில்தான் ஏதோ கோளாறு என நொந்துக்கோண்டு,வேண்டுதல் போல்,மீண்டும் ஒருமுறை விமானநிலையத்தை சுற்றிவிட்டு கடைசியாக 7 மணிக்கு விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.

எல்லா பயணிகளும் அமர்ந்தப்பிறகு,கதவை மூடிவிட்டு பணிப்பெண் பாதுகாப்பு நடைமுறைகளை விளக்க ஆரம்பித்த நேரத்தில், விமானியிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது.முக்கியமான பயணிகள் ஏற வேண்டியிருப்பதால் கதவு மீண்டும் திறக்கும் என அறிவிக்கப்பட்டது.
அது மிகச்சிறிய விமானம்.மொத்த இருக்கைகள் 50,ஏற்கனவே அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது. புதிதாக வருபவர்கள் எங்கு அமர்வார்கள் என நினைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு விமான சிப்பந்தி வந்து ஏற்கனவே அமர்ந்திருந்த இருப்பயணிகளை விமானத்தை விட்டு இறங்கச்சொன்னார்கள்.
ஆனால் இருவரும் இறங்க மறுத்துவிட்டார்கள்.அந்த இருவரும் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து வந்தவர்கள் ஆகவே அவர்கள் கண்டிப்பாக இறங்க வேண்டும் என விமான சிப்பந்தி சொல்லிவிட்டார்.அவர்கள் மீண்டும் மறுக்கவே 'செக்யூரிடி'யை விமானத்தினுள் அழைதது அவ்விருப் பயணிகளையும் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார்கள். நாங்கள் அனைவரும் நடந்தவைகளைக்கண்டு அதிர்ச்சி அடைந்திருந்தோம். பயணிகளிடம் இவ்வளவு கடினமாக நடந்துக்கொள்வார்களென யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.அதற்குப்பிறகு வேறு இருவர் ஏறியப்பிறகு விமானம் கிளம்பியது.
கடைசியாக இரவு 930'க்கு, 3 1/2 மணி நேர தாமதமாக நீயூஜெர்சியை அடைந்தேன். இதில் விஷேசம் என்னவென்றால், ஒழுங்காக நான் காரில் வந்திருந்தால், 3 மணி நேரத்தில் வந்து சேர்ந்திருக்கலாம்.

May 21, 2005

படித்ததில் பிடித்தது

ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே காதல் என்கிற பூ மலர்வதற்கு முன்பு,நட்பு என்கிற பசுமை நிறைந்த இலைகள் வளர்ந்திருக்க வேண்டும்.நட்பு என்கிற அந்தப் பசுமை நிறைந்த இலைகளின் கிளைகள் நம்பிக்கை.நம்பிக்கை என்ற கிளைகளின் அடிவேர், சுயநலமற்ற தன்மை.சுயநலம் கொண்டவர்களால் காதலிக்க முடியாது; காதலிப்பது போல்நாடகமாட மட்டுமே முடியும்.எல்லா நாடகமும் பொய்களும்,கடைசியில்தோல்வியில்தான் முடியும்.உலகில் நிறைய காதல்கள் தோல்வியுற இந்த நாடகமாடல்தான் காரணம்.

காதலில் மிக சுவாரசியமான விசயம் தன்னைக் காதலித்தவரைப் பற்றி எல்லா விவரங்களும் எவர் மூலமாகவோ தெரிந்து கொள்ள நேருவதுதான். யாரையோ மனதில் பூட்டி வைத்து அவரைப்பற்றி நெகிழ்வாக நினைத்துக் கொண்டிருக்க வேறு எவரோ அருகே வந்து உட்கார்ந்து அவரைப் பற்றி உனக்குத் தெரியுமா? என்று விதவிதமாக காதலிப்பவரின் கல்யாண குணங்களைஅடுக்கிக் கொண்டு போக, அவர் வீட்டு விவரங்களை விவரித்துக்கொண்டு போக மெய்மறந்து கேட்கின்ற ஒரு தன்மை ஏற்படும். இன்னும்தூண்டித்துருவி கேள்விகள் கேட்க ஆசை வரும்.அந்த ஆசைக்கு நல்ல தீனி கிடைத்தால் மனம் இடைவிடாது காதலித்தவரைப் பற்றி யோசிக்கத்தொடங்கிவிடும்.அந்த யோசிப்பு பொங்கி நல்ல கொதிநிலைக்கு வந்து,பக்குவமாய்க் கரைந்து காதலைக் கெட்டிப்படுத்தும். சொல்லப்பட்ட விவரங்கள் லட்சணமாகவும்,சுவையாகவும் இருப்பின் காதலித்தவர் மீதுமதிப்பு அபரிதமாய்க் கூடும்.

May 9, 2005

கனவே கலையாதே...

பலவருடக் கனவு அது.
ஒவ்வொரு முறையும்,
விமான நிலையம் சென்று
நண்பர்களை வழியனுப்பும்போதும்,
வரவேற்க்கும்போதும்....
என்று என்முறை வரும்?

இதோ அந்த கனவுநாள்...
பிரியும்துயரை தாங்கமுடியாமல்
ஊரிலேயே தங்கிவிட்ட தாயும்,துணைவியும்.
சோகத்தை மனதிலே தேக்கி
இன்முகத்துடன் தம்பியும்,தந்தையும்..

எத்தனையோ நண்பர்களை வழியனுப்பியிருக்க,
என்னை வழியனுப்ப யாரும் வரவில்லையே என
எண்ணிக்கொண்டிருந்தபோதே,இன்ப அதிர்ச்சியளித்து
இருநண்பர்கள் தோளணைக்க..
தோடங்கிவிட்டது என் பயணம்.

புது நாடு,புது மக்கள், புது சூழல்...
எதுவும் ஒட்டவில்லை மனதில்.
ஒவ்வொரு நொடியும் யுகமாய்
கழிந்துகொண்டிருக்கின்றன,
பிரியமானவர்களின் பிரிவால்.

விரல்விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறேன்,
தாய்நாடு திரும்பப்போகும் நாளை...
போதும் இந்த அயல் நாட்டு மோகம்...
கனவாகவே கலைந்திருக்கலாம்
என் பலவருடக்கனவு.

--------------------------------------------------------------------------------------------
கடந்த வாரம் என் நண்பன் ஒருவன் பணிநிமித்தம் அமெரிக்கா சென்றான்.
இன்று அவனுடன் தொலைப்பேசியப்பின், அவன் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக எழுதியதுதான் மேலே உள்ளது.

May 5, 2005

காதல் இலக்கணம்

சாதல், காதலின் கடைசிப்படி அல்ல...
உண்மைக்காதல், உயிர்கள் சேர்வது,பிரிவது அல்ல...

உடல்களால் பிரிந்தாலும்,
உள்ளத்தால் இணைவதே காதல்.
வாழ்க்கைச்சூழல் பிரித்தாலும்,
மனம் பிறழாமல் வாழ்வதே காதல்.

காதல்...காதல்...காதல்...
காதல் போயின்,
வீழேல்...வீழேல்...வீழேல்...

May 4, 2005

மீண்டும் அந்த நாட்கள் ?!?

சென்ற பதிவில், பள்ளியில் நடந்த தேர்தலைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதைப் பற்றி தெர்ந்துகொள்ள வேண்டுமென ஏராளமானவர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக(முக்கியமாக,இடைத்தேர்தல் காலம் என்பதால்,கழக உடன்பிறப்புகளும்,ரத்தத்தின் ரத்தங்களும் அவர்களுக்கே தெரியாத ஏதாவது குறுக்குவழி என்மூலம் கிடைக்குமா என அலைவதாக ஒரு சேதி)இன்றுகாலை,ரகசிய போலீஸிலிருந்து நம்பத்தகாத தகவல் வந்தால்,பல அவசரமான வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். 'பில்ட் அப்' போதும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே சொன்னது போல, பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான்.இரு பிரிவுகள் (A,B) ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும்.ஏழிலிருந்து எட்டாம் வகுப்பு போனவுடன்,அந்தவருடத்திற்க்கான பள்ளி மாணவத்தலைவர், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தலைமைசெயலகத்திலிருந்து அறிவிப்பு வந்தது. அதற்கு முந்திய வருடம்வரை இந்தமாதிரி தேர்தலோ,பள்ளி மாணவத்தலைவர் பதவியோ இருந்ததில்லை. பாராளுமன்றம் போல ஒரு குழு இருக்கும்.சபாநாயகர் எட்டாம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களிலிருந்து, அமைச்சர்களும், இணை,துணை அமைச்சர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அவர்களுக்கு இலாக்காக்களும் ஒதுக்கப்படும்.பிரதி வியாழன் மன்றம் கூடி மக்கள் எழுப்பும் பிரச்சனைகளை(பள்ளிக்கு வெளியே இருக்கும் கடைகளில் விற்க்கும் திண்பண்டங்களில் 'ஈ" மொய்க்கிறது. சுகாதார அமைச்சர் சரியாக செயல்படுவதில்லை -சாம்பிள் பிரச்சனை ) ஆராய்ந்து தீர்வளிக்கும்.தீர்க்கமுடியாத பிரச்சனைகள், ஜனாதிபதிக்கு போகும்.(அப்துல் கலாம் இல்லீங்கோ...தலைமைஆசிரியருக்கு).நானும், துணை உணவு அமைச்சராக இருந்ததாக நினைவு.

இந்தமுறை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்,எங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருந்தது.சில விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டது.அதன்படி,போட்டியாளர்கள் எட்டாம் வகுப்பிலிருந்து மட்டும் இருக்கவேண்டும்.ஒரு பிரிவிற்க்கு இரண்டு பேர். ஆக மொத்தம் நான்கு போட்டியாளர்கள். அதிக ஓட்டு பெறுபவர் பள்ளி மாணவத்தலைவராகவும், இரண்டாமிடம் பெறுபவர் உதவி பள்ளி மாணவத்தலைவராகவும் பதவி வகிப்பர். நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ஓட்டளிக்க தகுதியுடையவர்கள்.

நான் B' பிரிவு மாணவன்.முதலில் வகுப்பு மாணவர்கள் என்னையும், ஜெயக்குமார் என்ற மற்றொரு மாணவரையும் தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்தார்கள்.நாங்களும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். உணவு இடைவேளையில்தான் பிரச்சாரம் சூடுபிடிக்கும். ஆசிரியர் உபயோகிக்கும் மேஜைதான் மேடை. அதில் ஏறி நின்றுக்கொண்டு பிரசாரம் செய்வோம்.மேஜை இல்லாவிடில், ஏதாவது ஒரு வகுப்பு தோழனின் தோளில் ஏறி அமர்ந்துக்கோண்டு பேசுவேன்.அப்போதும் ஏதோ ஒன்று குறைவதாகத் தோன்றியது.ம்ம்ம்...போஸ்டரோ,நோட்டீஸோ அடித்தாலென்ன எனத்தோன்றியது. தொண்டர்களை அழைத்து பேப்பர்களில் வாசகங்கள் எழுதி ,பள்ளியில் உள்ள சுவர்கள், மரங்களில் எல்லாம் ஒட்டவைத்தோம்.அதுவும் போதாமல், ஒரு அச்சகத்தில் கொடுத்து நோட்டீஸாகவே அடித்தோம். வேண்டிய வாசகங்களை தமிழாசிரியர் எழுதிகொடுத்தார். பணத்தை வகுப்பு மாணவர்களிடமிருந்து வசூலித்துக்கொடுத்தோம். இவ்வாறாக தேர்தல் களம் சூடுபிடித்தது.நடுவில் ஏதாவது தகராறுகள் எதிர்தரப்பினருடன் ஏற்ப்படும்.அந்தசமயங்களில், இருதரப்பும்,உப்புமூட்டை சண்டையில் மோதிக்கொள்வோம்.அதாவது, நான் என்வகுப்பு தோழன் முதுகில் உப்புமூட்டை ஏறிகொண்டு காலால் எதிர்தரப்பு மூட்டையுடன் உதைத்துக்கொள்வோம்.

தேர்தல் நாளும் வந்தது.அனைத்து வகுப்பு ஆசிரியர்களின் ஆதரவும் எங்களுக்கேயிருந்தது.அவர்கள் வகுப்பு மாணவர்கள் ஓட்டளிக்கும் ஹாலுக்கு செல்லும்போது, எனக்கும்,ஜெயக்குமாருக்கும் ஓட்டளிக்குமாறு கூறிக்கொண்டிருந்தார்கள்.ஓட்டுப்பதிவும் முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை தலைமை ஆசிரியரின் அறையில் நடந்தது. 212 ஓட்டுகள் பெற்று நான் முதலிடத்திலும், 162 ஓட்டுகள் பெற்று ஜெயக்குமார் இரண்டாமிடத்திலும் வெற்றிப்பெற்றோம்.எதிர்தரப்பு 28, 24 ஓட்டுகள் பெற்று படுதோல்வியடைந்தது. அடுத்தநாள்,என் தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், இனிப்புகள் வழங்கி வெற்றியைக்கொண்டாடினோம்.

மாணவத்தலைவராக நான் பார்த்த வேலைகள். ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலைக்கூட்டத்தில் தேசியக்கொடி தலைமை ஆசிரியரால் ஏற்றப்படும்.அக்கூட்டத்தை மாணவத்தலைவர்தான் நடத்தவேண்டும்.கூட்டம் நடக்கும்போது நான் நிற்க்குமிடத்தில் காலை சூரியனின் ஒளி நெரடியாகத்தாக்கும். வேர்த்துவழிந்துக்கொண்டு,'ப' வடிவில் நடந்து சென்று தலைமைஆசிரியரை கொடிக்கம்பமிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து,கொடி ஏற்றசெய்ய வேண்டும்.பின், உறுதிமொழியை நான் வேர்த்துவழிந்துக்கொண்டு படிக்க அனைத்து மாணவர்களும் வழிமொழிவார்கள்.அதைதவிர, மாணவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகளெனில்,முடிந்த அளவு தீர்த்துவைக்க முயற்சிப்பேன்.
இப்போது அதையெல்லாம் நினைத்து பார்க்கும்போது, ஆச்சர்யமாகயிருக்கிறது. பழைய நண்பர்களை சந்திக்கும்போது இதையெல்லாம் பேசி மகிழ்வோம்.ம்ம்ம்ம்....ஏக்கமாக இருக்கிறது....மீண்டும் அந்த நாட்கள் திரும்புமா ??

May 2, 2005

ஞாபகம் வருதே.....

(இரண்டு மனம் வேண்டும்.........ராகத்தில் பாடவும்)

இரண்டு இட்லி வேண்டும்..
சர்வரிடம் கேட்பேன்..
சட்னியோடு ஒன்று...
சாம்பாரோடு ஒன்று...
இரண்டு இட்லி வே.......ண்டும்.

ஒரு செட்டு இட்லி இரண்டானால்....
ஒரு செட்டு பூரி இரண்டானால்....
ஒரு செட்டு தோசை இரண்டானால்....
ஒரு செட்டு தோசை இரண்டானா...ஆ...ஆ....ஆ......ல்....
தோட்டுக்கொள்ள சட்னி,சாம்பார் போதாதே..ஏஏஏ......
இரண்டு இட்லி வே...ஏ...ஏ..ஏ....ண்டும்.......

அரிசியின் தண்டனை மாவு வழி...
மாவின் தண்டனை தோசை வழி.....
தோசையின் தண்டனை வயித்துவலி..இ...இ...இ.....

தோசையின் தண்டனை வயித்துவலி...
வயித்துவலி..தீர என்ன வழி.....
இரண்டு இட்லி வே...ஏ...ஏ..ஏ....ண்டும்.......

*#*#*#*#*#*****************#*#*#*#*#*#*#**#*#*#*#*#**#**##**#*#*

ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை,எங்கள் ஊரில் உள்ளகிருஸ்துவ பள்ளியில்தான் படித்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, படிப்பைத்தவிர, மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், நான்காம் வகுப்புமுதல் எட்டாம் வகுப்புவரையிருக்கும் மாணவர்களை, நான்குப்பிரிவுகளாக, ஒவ்வொரு வகுப்பிலும் பிரித்து, வியாழன்தோறும் 4-530 மணி வரையில்,ஏதாவதொரு போட்டி (நாடகம் ,பாட்டு, ஓவியம்,பேச்சுப்போட்டி,நடனம்,மாறுவேடம் இன்னபிற)நடத்துவார்கள்.
அந்தந்த வகுப்பாசிரியர்களே, வெற்றி அணியை மதிப்பெண் வழங்கி தேர்ந்து எடுப்பார்கள்.பிறகு 4-8 வகுப்புவரை உள்ள நான்கு அணிகளின்,அந்த வாரத்தின் மதிப்பெண்களை சேர்த்து,அதிக மதிப்பெண்களை பெற்ற அணி அந்த வாரத்தின் வெற்றி அணியாக அறிவிக்கப்படும். ஆண்டு
இறுதியில்,அதிகமுறை வென்ற அணி,ஆண்டு விழாவில்,சிறந்த அணியாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்குவார்கள்.

அந்தவகையில்,நான் ஒரு அணியிலிருந்தேன்.மேலும்,அந்தவருடத்தில்,பள்ளி
மாணவத்தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன்.(அது ஒரு பெரியகதை.ஒரு சட்டசபை தேர்தல் போலயிருந்தது.அதைப் பற்றி தனியாக எழுதுகிறேன்.).எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குதான் பொறுப்பு அதிகமாகயிருக்கும். ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்றார்போல மாணவர்களை தேர்ந்தெடுத்து,அவர்களுக்கு பயிற்சியளித்து, வெற்றிப்பெற கடும்முயற்சி எடுப்போம்.அந்தவயதில் மிகவும் உற்சாகமாக எல்லாப் போட்டிகளிலும்
பங்குகொண்டு வெற்றிப்பெற பாடுபடுவோம்.உண்மையில் இந்தப்போட்டிகள், மாணவர்களுக்குள் இருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்தது.

மேற்க்கண்ட பாடல், ஒரு பாட்டுப்போட்டியில்,நான் எழுதியது,பாட்டுப்போட்டியென்று அறிவித்துவிட்டார்கள்.ஆனால், பாடல்களை படத்தில் உள்ளதுபோல் அப்படியே பாடக்கூடாது.வெண்டுமானால்,அதே ராகத்தில் பாடலாம்.வியாழன் மதியம்வரை எந்த பாடல்களும் தயாராகவில்லை.மேலும் அந்த ஆண்டில்,அதுதான் கடைசிப்போட்டி. முதலிடம் பெற வெண்டுமெனில்,இந்தப்போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டியக் கட்டாயம். ஜூனியர்களெல்லாம் பாட்டுக்காக காத்திருந்தார்கள். பாட்டு எழுதி பின் அவர்களுக்கு பயிற்சிவேறு அளிக்கவேண்டும்.அந்த நெருக்கடியான சமயத்தில் எழுதிய பாடல்தான் மேலே உள்ளது. இன்றைக்கும் ஒரு வார்த்தைக்கூட மறக்கவில்லை.

அதே போட்டிக்கு என் அணியை சேர்ந்த மாணவன் எழுதிய பாடல்,முழுவதும் நியாபகமில்லை.

A-புள்ள கருப்பாயி...
B-புள்ள கருப்பாயி...
C-புள்ள கருப்பாயி...
D-புள்ள கருப்பாயி.......

வேலவெட்டி இல்லாம வெறகு வெட்டப்போனேனே.....
வெட்டிவெலை சென்சிக்கினு வீணா பொழுதைக்கழிச்சேனே......

A-புள்ள கருப்பாயி...
B-புள்ள கருப்பாயி...
C-புள்ள கருப்பாயி...
D-புள்ள கருப்பாயி....... - இப்படியேப்போகும் பாடல்.

கடைசியில்....அந்த ஆண்டிற்க்கான சிறந்த அணியாக எங்கள் அணி தேர்வு செய்யப்பட்டது.

April 27, 2005

இரயில் பயணங்களில்.....

சென்ற வாரம் சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. ரயில் நிலையத்தில் பயணசீட்டு வாங்க வரிசையில் நின்றுக்கொண்டிருந்தபோது எனக்கு சிறிது முன்னால் இருந்தவரை எங்கோ பார்த்ததுபோல இருந்தது. உற்றுகவனித்தபோதுதான் அது என்னுடன் பொறியியல் கல்லூரியில் படித்த ஒருவர்(ன்) என தெரிந்தது. அப்போது பார்த்ததுக்கும் இப்போதுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. மிக அடர்ந்த தாடியுடன் நெற்றி முழுவதும் பட்டையும், பெரிய பொட்டுமாக இருந்தான். அவனும் சென்னைக்கே வ்ந்ததால், ஒன்றாக பயணத்தை ஆரம்பித்தோம்.

கிட்டதட்ட ஆறு வருடங்களுக்குப்பிறகு பார்ப்பதால் பேச நிறைய விஷயங்கள் இருந்தது.பிறகு அவனைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். தற்போதைக்கு சென்னையில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் HOD'யாக இருப்பதாகவும், விரைவில் மும்பையில் ஒரு ஆசிரமம் அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தான். மேலும் அவன் சோன்னது என்னவென்றால், " ஒரு 2 வருடம் பொறு மோகன், அதற்குப்பிறகு நீ எங்கிருந்தாலும் என்னைப்பற்றிய செய்திகள் அதிகம் பார்க்கலாம்.மேலும் பல ஆசிரமங்ளை பல இடங்களில் அமைப்பேன். பல நாடுகளுக்கும் விஜயம் செய்வேன்.அப்போது நீ அமெரிக்காவிலேயே இருந்தால் நீ அங்கேயே என்னை சந்திக்கலாம்" என்றான். நான் ஆடிப்போய்விட்டேன். ம்ம்ம்ம்......
நானெல்லாம் ஒரு கம்பெனியில் சேர்ந்து 4 ஆண்டுகள் குப்பைக்கொட்டிய பிறகுதான், அமெரிக்கா எந்த திசையில் இருக்கிறது என தெரிந்தது.
மேலும் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு வார இதழில் தொடர் எழுதிக்கொண்டிருந்த ஒரு இளம் சாமியாரைப்பற்றி பேச்சு திரும்பியது. நான் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்புவதற்கு சில தினங்களுக்கு முன்னாள் நானிருந்த ஊரில்( டல்லாஸ்) கோயிலுக்கு சென்றிருந்தபோது,மேற்சொன்ன சாமியாரின் பிரசங்கத்தை பார்த்தேன். அப்போது அந்த சாமியாரை வேறு எங்கோ பார்த்த நியாபகம் இருந்தது ஆனால் எஙகேயென்று நினைவில்லை. இதை இந்த சாமியாரிடம்(?????) சொன்னேன். அப்போதுதான் தெரிந்தது, நாங்கள் பாலிடெக்னிக் கடைசி வருடம் படிக்கும்போது(அங்கும் நானும்,ரயிலில் சந்தித்த சாமியாரும் ஒரே க்ரூப்பில் இருந்தோம்) அந்த மற்றொரு சாமியார் முதல்வருட மாணவனாம்.
படிப்பிற்க்குப்பிறகு வேலை செய்யப்பிடிக்காமல், ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து சில வித்தைகளைக் கற்றுக்கொண்டு இப்படி சாமியாராகி பல ஊர்களும்,நாடுகளும் சுற்றிக்கொண்டிருப்பதாகவும்,பல கோடிகள் சொத்து சேர்த்துவிட்டதாகவும் இந்த சாமியார் தெரிவித்தார்.
மேலும் இந்த சாமியார் என்னிடம் சொன்னது " கொஞ்ச நாள் போறு மகனே ! (அடியேனைதான் ;))) நான் அந்த சாமியாரைவிட மிக பெரிய அளவில் பேசப்படுவேன். ஒரு பொறியியல் கல்லூரி ஆரம்பிப்பேன். மிகப்பெரிய ஆசிரமம் ஆரம்பிப்பேன். " என ஏதேதோ சொல்லியப்படி வந்தான்.
கடைசியில் ஒரு வழியாக சென்னையை அடைந்தோம். பிரியும் நேரத்தில் அவன் சொன்னான். " அடுத்தமுறை சந்திக்கும்போது, நான் எந்த ஒரு நிலையிலிருந்தாலும், எவ்வளவுபேர் என்னை சந்திக்க காத்திருந்தாலும், நீ மட்டும் எந்த முன்னறிவிப்புமின்றி, எப்போது வெண்டுமானாலும் சந்திக்கலாம்" எனக் கூறினான்.
அதற்க்கு நான் சொன்னேன், அதைப்பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே. நானே நீ எந்த ஊரிலிருந்தாலும், நேரில் வந்து, சிறைக்கண்காணிப்பாளரின் முறையான அனுமதியுடன் வந்து சந்திக்கிறேன்' என சொல்லிவிட்டு, விட்டேன் ஜூட் ....

April 25, 2005

அழகிய தீயே...

அவள் ஒரு புரியாத புதிராயிருக்கிறாள்.
நெருங்கினாள் விலகிசெல்கிறாள்....
வில(க்)கலாம் என நினைக்கும்போது
சிரித்து அருகில் வருகிறாள்.

பல நேரங்களில் அமைதியான ஆறாகவும்.....
சில நேரங்களில் சுடும் தீயாகவும்....
அவள் ஆறா ??? தீயா ??? ஆரா தீயா ???
இல்லை என் மனதை கொள்ளைக்கொண்ட
அழகிய தீயா ?

April 15, 2005

காதல் கோட்டை

முதல்நாள் தலைநகர்வலத்திற்கு பிறகு,ஞாயிறன்று ஆக்ரா செல்ல ட்ராவல்சில் டிக்கட் வாங்கியிருந்தேன். ஏ.சி பஸ்ஸில் சொகுசு பயணம்.
பெரும்பாலோர் தென்னிந்தியாவிலிருந்து என்னைபோல் சுற்றிபார்க்க வந்திருந்தவர்கள்.நான்கு மணி நேர பயணம்.
முதலில் ஆக்ரா கோட்டை.மிக பிரமாண்டமான கோட்டை.ட்ராவல்சில் ஒரு கைடை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அந்த கோட்டையின் வரலாற்றை சிறப்பாக எடுத்துரைத்தார்.
ஒளரங்கசீப்,அவர் தந்தையான ஷாஜகானை சிறை வைத்திருந்த மேல்மாடத்திலிருந்து தூரத்தில்(குறைந்தது 2 கி.மீ) தாஜ்மஹால் ஒரு காதல் காவியத்தின் சின்னமாக காட்சியளிக்கிறது. நீங்கள் காதல் அனுபவமுள்ளவரெனில்,கண்டிப்பாக,அந்த இடத்தில் நிற்க்கும்போது ஒரு 'ஆட்டோக்ராப்' புத்தம் புதிய காப்பியாக ஓடும்(எனக்கு எதுவும் ஓடலீங்கண்ணா.....;)))).).
அதற்கடுத்து ஒரு தர்பார் உள்ளது. அந்த காலத்தில் அதுதான் மிகப் பெரிய தர்பார் மண்டபமாம். மண்டபத்தின் எந்த பகுதியிலிருந்தும் மன்னரை பார்க்ககூடிய வகையில் தூண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.மிக நெர்த்தியான கட்டடக்கலை.அந்த தர்பாரை சுற்றி நான்கு மாடங்கள் உள்ளது.அதில் ராணிகள் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்க்கலாம்.ஒரு அரசனுக்கு ஒரு ராணிதானே,அப்போ எதுக்கு நான்கு மாடங்கள் ? அதற்கு எங்கள் கைடு ஒரு அருமையான விளக்கம் சொன்னார். சட்டப்படி முஸ்லிம் மன்னர்கள் நான்கு ராணிகளை மணந்துகொள்ளலாமாம், ஆளுக்கு ஒரு மாடத்திலிருந்து சபையை கவணிக்கலாம்.மேலும்,சட்டப்படிதான் நான்கு,தேவையெனில் எததனை பெண்களையாவது அரண்மனையில் வைத்திருக்கலாம்.அதற்க்கென்று ஒரு பகுதியே இருக்கிறது..ம்..ம்ம்.....கொடுத்து வைத்தவர்கள். மெலும் ராணிகள் நீராட ஒரு கண்ணாடி அறை இருக்கிறதாம்.அந்த அறை முழுவதும் சிறுசிறு ஆயிரக்கணக்கான கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கிறதாம்.குளிப்பவரின் ஆயிரக்கணக்கான உருவங்கள் அறை முழுவதும் வியாப்பித்திருக்குமாம்..ம்ம்ம்ம்..என்னே ஒரு ரசனை........அந்த அறை இப்போது பார்வையாளர்கள் செல்ல அனுமதி இல்லை.. எந்த ராணிக்கு கொடுத்துவைத்திருக்கிறதோ..மீண்டும் அந்த அறையை உபயோகப்படுத்த......

அடுத்த பயணம், காதல் கல்லறையை நோக்கி....மனம் நிறைந்த எதிர்பார்ப்புகளுடன்,உலக அதிசயத்தை நோக்கி பயணம். வெயில் சுட்டெரிக்கிறது...கூட்டம் அலை மோதுகிறது... நுழைவுக்கட்டணம் செலுத்திவிட்டு,கடும் சோதனைகளை முடித்துக்கோண்டு உள்ளே நுழைந்தோம். எட்டிவிடும் தூரத்தில் ஒரு காதல் காவிய சின்னம்.நிதானமாக நடை பயின்று கண்கள் வழியாக அந்த அழகுப்பெட்டகத்தை பருகிக்கொண்டே அருகில் சென்றென்.
உண்மையில் தாஜ்மஹால் ஒரு உலக அதிசயம்தான்.ஒவ்வொரு அடியும்,கலைநயத்துடனும், சிறந்த வேலைபாடுகளுடனும் காதலைக் கலந்து வடிக்கப்பட்டிருக்கிறது. எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் ஒரு சிறந்த காட்சியை கண்ணுக்கு விருந்தளிக்கிறது.ஒரு மணி நெரத்திற்கும் அதிகமாக அங்கு சுற்றிவிட்டு, அனைத்து காட்சிகளையும் கேமராவில் சிறைபிடித்து,பிரிய மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.
அடுத்த பயணம், குழந்தை கண்ணன் பிறந்த மதுராவை நோக்கி. ஆக்ராவிலிருந்து 45 நிமிடப்பயணம். மதுராவில் ஒரு குறுகலான பாதை வழியே பயண்ம் சென்று கோயிலிருக்கும் இடத்தை அடைந்தோம். இங்கும் மிக கடுமையான பாதுகாப்பு.எந்திர துப்பாக்கிகளுடன் பார்க்கும் இடங்களில் எல்லாம் போலிஸ் தலைகள்.கோயிலை அடைந்த பிறகுதான் அதற்க்கான காரணம் புரிகிறது.கோயிலை மிக ஒட்டியே ஒரு பிரமாண்டமான மசூதி தெரிகிறது. ஒளரங்கசீப் காலத்தில் மதுரா சிறையை இடித்துவிட்டு எழுப்பப்பட்ட மசூதியென வரலாறு சொல்கிறார்கள்.அடுத்த 'அயோத்'தீ'க்கான சாத்தியகூறுகள் கண்கூடாகத்தெரிகிறது.
கோயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணன் பிறந்த சிறைகூடம் மக்கள் கூட்டத்தால்
நிரம்பி வழிகிறது.

மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கீழே இருக்கிறது ஆக்ராவிலும், மதுராவிலும். ஏழ்மையும்,சுகாதாரமில்லாத சுற்றுப்புறமும், உலக அதிசயம் இருக்கும் இடத்தில், அநியாயமாக இருக்கிறது.
ம்...ம்....இதுதான் இந்தியா.......

April 14, 2005

தலைநகர்வலம்

கடந்த திங்களன்று விசாநீட்டிற்புக்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது. சனியன்றே சென்றுவிட்டேன்.அன்று முழுவதும் குதுப்பினார், தாமரை கோவில் , செங்கோட்டை, இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகை, பிர்லா மந்திர் ஆகிய இடங்களை சுற்றினேன்.வெயில் குறைவாகவும், ட்ராவல்ஸ் வழியாக கார் ஏற்பாடும் ஆங்கிலம் தெரிந்த ஓட்டுனர் இருந்ததாலும் பயணம் நன்றாகயிருந்தது.
முதலில் குதுப்பினார்.நான் உயரம் மிக அதிகமாகயிருக்கும் என எதிர்பார்ப்புடன் சென்றேன்.ஆனால் ஏற்கனவே மிக உயரமான கட்டிடங்களை இந்தியாவிலும்,அமெரிக்கா,ஜப்பானிலும் பார்த்திருந்ததால் குதுப்பினார் ஏமாற்றமாக இருந்தது. சில போட்டோக்கள் எடுத்துகோண்டேன்.அப்போது அங்கு ஒரு குடும்பம் வந்தது.நான் லேட்டஸ்ட் மாடல் டிஜிட்டல் கேமரா வைத்து இருக்கிறேன்.அதை அந்த குடும்ப தலைவர் போலிருந்தவரிடம் கொடுத்து என்னை குதுப்பினார் முன் இருப்பது போல ஒரு க்ளிக்'க சொன்னேன்.எடுத்து முடித்ததும்,அந்த குடும்பம் முழுவதும் கேமராவை ஆராயத்தொடங்கியது.ஏதேதோ இந்தியில் பேசிக்கோண்டார்கள்.நான் 'பே'வேன முழித்துக்கொண்டிருந்தேன்.(திராவிட ஆட்சிகளின் புண்ணியத்தில் நமக்கு இந்தி நஹி மாலும். ;))
கடைசியில் ஒருவர் என்னிடம் வந்து கேமரா விலையென்ன என்று கேட்டார். இருபதாயிரம் என்றேன். மறுபடியும் ஒரு 'மந்திராலோசனை செய்துவிட்டு, 'எங்களுக்கு எவ்வளவுக்கு தருவீர்கள்' என கேட்டார்.(எல்லாம் இந்தியில்தான்). நான் அரைகுறை இந்தி,ஆங்கிலத்தில் 'இது விற்பனைக்கு நஹி..நஹி...' என சொல்லிவிட்டு கேமராவை வாங்கிகொண்டு வந்துவிட்டேன். நான் அங்கிருந்தவரை, என் பின்னாலேயே வந்து நான் கேமராவில் போட்டோ எடுப்பதை பார்த்துகொண்டிருந்தார்கள்.
அங்கிருந்து கிளம்பி தாமரை கோயில், செங்கோட்டையை பார்த்து விட்டு,நேரு,காந்தி சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகைக்கு சென்றேன். இதுவரை தொலைகாட்சியில் பார்த்திருந்த பகுதிகள், நேரில் பார்க்க அருமையாகயிருந்தது.பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி மாளிகை அருகே செல்ல முடியவில்லை(ம்ம்ம்..ம்ம்..நம்ம ஊர்காரர்தான் உள்ளே இருக்கிறார்).காரிலிருந்தே பார்க்கலாம்.அதே நிலைதான் பார்லிமெண்ட் வளாகத்திற்கும்.
மாலையில் பிர்லா மந்திர் கோயிலுக்கு சென்றிருந்தேன்.அங்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம்.மொபைல் போன் கூட எடுத்து செல்ல கூடாது. அதற்கெனயிருக்கும் கவுண்டரில் கொடுத்துவிட்டுதான் செல்ல வெண்டும்.
கோயிலை மிகவும் சிறப்பாகவும்,நெர்த்தியாகவும் கட்டியிருக்கிறார்கள்.அந்த இடம் மனதிற்கு இதமாகவும்,அமைதியாகவும் இருந்தது.

ஒரு நாள் முழுவதும் சுற்றியதில், புதுடெல்லிக்கும்,பழைய டெல்லிக்கும் மிக பெரிய வித்தியாசங்கள் தெரிந்தது. புதுடெல்லியில், அகலமான சாலைகளும்,நெர்த்தியான பாலங்களும், சிக்னல்களும்,வழி முழுவதும் பசுமையாக இருக்கிறது.முக்கியமாக இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகை,பார்லிமெண்ட் வளாகம், மந்திரிகள் குடியிருப்பு, அலுவகங்கள்.
புதுடெல்லிக்கும்,பழைய டெல்லிக்கும் நடுவில் ஒரு பாலம் இருக்கிறது.அதை தாண்டிய உடன் ஏதோ வேரொரு உலகத்தில் நுழைந்தது போலிருக்கிறது.
கடினமான போக்குவரத்து,குறுகிய சாலைகள்,பழங்காலத்து கட்டிடங்கள்,குறுக்கும்,நெடுக்கும் ஓடும் மக்கள்....அழுக்கான ந(ர)க(ர)மாக காட்சியளிக்கிறது.
ம்ம்ம்.....இதுதான் இந்தியா.......

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.இல்லத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் பொங்கட்டும்.
அன்புடன்
மோகன்.

April 8, 2005

மந்த்ராலயம்

கடந்த வாரம் வியாழனன்று மந்த்ராலயம் போனால் என்ன என்று தோன்றியது.உடனே KSRTC booking center சென்று அன்று இரவு பஸ்சுக்கு டிக்கட் புக் பண்ணிவிட்டு வந்துவிட்டேன். office'ல் மிச்சம் மீதி இருந்த வேலைகளை முடித்துவிட்டு விடு ஜூட். பயணத்திற்கு தேவையானவைகளை எடுத்துகொண்டு மெஜஸ்டிக் வந்து 9:30 பஸ் பிடித்தேன். வியாழன் என்பதால் கூட்டம் கம்மியாகயிருந்தது.கண்டக்டர் டிக்கெட் மாடி'பிட்டு ஹொஹி'னபிறகு யாருடைய தொந்தரவுமின்றி MP3 ப்ளேயரை காதில்மாட்டிகொண்டு பாலகுமாரன் படிக்க ஆரம்மித்துவிட்டேன்.பேங்களூர்-மந்த்ராலயம் 9 மணி நேரப்பயணம்.இடையே இரண்டு முறை ஏதாவது பொட்டல் காட்டில் டீ,காபி காட்டுவார்கள்.பயணம் ஒன்றும் அந்த அளவிற்கு சிறப்பாக இருக்காது.இப்போதுதான் சாலைகளை அகலபடுத்திகொண்டு இருக்கிறார்கள்.
அரைகுறையாக தூங்கி காலை 630'க்கு வெற்றிகரமாக மந்த்ராலயம் அடைந்தேன்.பஸ் ராய்ச்சூர்வரை செல்லும். மந்த்ராலயத்தில் என்னை தவிர வேறு யாரும் இறங்கவில்லை.என்னை வரவேற்க்க ஒரு பெரிய கூட்டம் காத்திருந்தது.( எல்லாம் லாட்ஜ் ப்ரொக்கர்கள்) ஒரு வழியாக அவர்களிடம் தப்பித்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றேன். கூட்டம் மிக குறைவாகவே இருந்தது.நல்ல தரிசனம்.விரும்பினால் அங்கேயே அமர்ந்து தியானம் செய்யலாம்.ஆனால் எல்லா தினங்களிலும் அனுமதிப்பதில்லை.கூட்டம் மிக குறைவாக இருக்கும் தினங்களில் யாரும் கண்டுக்கொள்வதில்லை.1 மணி நேரம் உள்ளே இருந்தேன். அதற்குபிறகு வழக்கமாக அங்கிருந்து 15 KM தூரத்தில் ஒரு கோயிலுக்கு அனைவரும் செல்வார்கள்.எனக்கு இது 4'வது பயணம்.அன்று வெயிலும் மிக அதிகம்.அறைக்கு திரும்பிவிட்டேன்.மாலை மறுபடியும் தரிசித்துவிட்டு சில பொருட்கள் (மற்றவர்களுக்கு கொடுக்க) வாங்கிகொண்டு,அறையை காலி செய்துவிட்டு 8 PM பஸ் பிடித்தேன்.மொத்தத்தில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.

April 4, 2005

முதல் எழுத்து

வணக்கம்.இது என் முதல் எழுத்து.இங்கு என் வாழ்க்கை பாதையில் எதிர்கொண்ட இனிய/இன்னாத அனுபவங்களை எழுதலாம் என்று இருக்கிறன். உங்கள் ஆதரவு தேவை.சந்திப்போம் விரைவில்.
அன்புடன்
மோகன்.