Search This Blog

July 21, 2008

தசாவதாரம்...ரஜினி ரசிகனின் பார்வையிலிருந்து...

ஏற்கனவே பதிவுலகத்தில் உள்ள பெரும்பாலோர் அடித்து துவைத்து காயப்போட்டுவிட்ட தலைப்புதான்.இரண்டு மூன்று வாரங்களாகவே,வாரயிறுதியில் பார்க்கவேண்டும் என திட்டமிட்டு ஏதேதோ காரணங்களால் படம் பார்க்கமுடியவில்லை. மேலும் பதிவுலகம்,பத்திரிகைகள், தொலைகாட்சி விமர்சனங்கள்,நண்பர்களின் கருத்துகள் என எல்லா திசைகளிலிருந்தும் படத்தின் அனைத்து நிறைகுறைகளையும் காட்சிவாரியாக தெரிந்துவிட்டதால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை.

சனியன்று நண்பர்களின் குடும்பத்துடன் மாலை 4 மணிக்காட்சிக்கு PVR'ல் ஆன்லைன் மூலமாக பதிவு செய்துவிட்டு 340'க்கு சென்று தானியங்கி இயந்திரத்தில் கடனட்டையை சொருகினால் அது வேலை செய்யவில்லை.இரண்டு மூன்று இடங்களில் அலைந்து அங்குள்ள பணியாளர்கள் உதவியுடன் டிக்கெட் பெற்று அரங்குக்குள் செல்லும்போது 410 மணி.12 ம் நூற்றாண்டு காலத்து பாடல்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. விமர்சனம் செய்திருந்த அனைவரும் முதல் 10 நிமிடங்கள்தான் ஹைலைட் என சொல்லியிருந்தும் அக்காட்சிகளை பார்க்கமுடியாமல் போனது.ஆனால் பின்வந்தக் காட்சிகள் அக்கவலையை மறக்கச் செய்து,படத்துடன் ஒன்றிவிட்டேன்.இடைவேளைவரை துரத்தல்கள்,இரண்டுப்பாடல்கள்,சில கொலைகள், நாயுடுவின் டைமிங் காமெடிகள் என மூச்சுவிட நேரமின்றி பரபரப்பாக எவ்வித தொய்வுமின்றி படம் ஓடியது.

விமர்சித்திருந்த சிலர்,மல்லிகா ஷெராவத் பாத்திரம் சில காட்சிகளே வருவதாக கூறியிருந்தார்கள்.ஆகவே அவர் கெட்ட ஆட்டம் போட்ட பாடல் முடிந்தவுடன் அவரைக்காலி பண்ணி விடுவார்கள் என நினைததால்,அவர்தான் அவருடன் கெட்ட ஆட்டத்தை தொடர முயன்றவரை காலி பண்ணிவிட்டு சென்னை வழியாக சிதம்பரம் வந்து யானையால் காலியாகிவிடுகிறார்.கமல் படத்தில் இந்த அளவுக்கு அவருக்கு காட்சிகள் அமைந்ததே பெரிய விஷயம்தான்.

என்னைப்பொருத்தவரை கமல் போட்ட அனைத்து வேடங்களும் தேவையானவைதான்.எதுவும் வீண் இல்லை.எடுத்துக்கொண்ட கதைக்களம் 'கியாஸ்(கேயாஸ்??) தியரி'க்கு ஒவ்வொருப் பாத்திரமும் எடுத்துக்கொண்ட முடிவை(சுனாமி 26,2004) நோக்கி சரியான பாதையில் நகர்த்த உதவியிருக்கிறது. கதையை இன்னும் ரசனையுள்ளதாக்க தேவையிருந்திருந்தால் இன்னும் இரண்டு மூன்று வேடங்கள்[கோயில் யானை, இறந்துபோகும் குரங்கு வேடங்களை சொல்லவில்லை ;))))] கூட கமல் போட்டிருக்கலாம்.

இரண்டாம் பாதியில், முதல் 30-45 நிமிடங்கள் படம் கொஞ்சம் தொய்கிறது. கமலும்,அசினும் பேசிக்கொள்ளும் வசனங்கள்,என்னடா,திடீரென 'கிரேசி மோகன்' வசனகர்த்தா கமலின் பேனாவை பிடுங்கி எழுதியிருப்பாரோயென யோசிக்க வைத்தது. மறுபடியும் வில்லன் முழுவேகத்தில் காரியத்தில் இறங்கியவுடன் பிடிக்கும் வேகம்,சிறு புயலாகி பின் பெருத்த சூறாவளியென மாறி,சுனாமியாக பேயாட்டம் போட்டு அந்த சிலையை வெளிக்கொணர்ந்து வில்லனையும்,உயிரியையும் அழித்து கமல் அசின் 12ம் நூற்றாண்டுக் காதலின் அடுத்த அத்தியாயத்தை 21ம் நூற்றாண்டில் ஆரம்பித்து வைத்து தென்றலாய் முடிகிறது.

நான் ஒரு முழு ரஜினி ரசிகன். ஆரம்பக்காலத்தில் அடிமட்ட ரசிகனுக்கு இருக்கும்(இருந்த) கமல் துவேஷம் எனக்கும் இருந்தது.ஆனால் காலம் மாறி தமிழ் படவுலகைவிட்டு வந்து சில சிறந்த பிற மொழிப்படங்கள், அமெரிக்காவில் இருந்த 2-3 வருடங்களில் பார்த்த பல ஆங்கிலப்படங்கள், என் திரை ரசனையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தின.ஆரம்பக்காலத்தில் குறைகளை கண்டறியவேண்டும் என்ற துவேஷத்துடன் பார்த்த பல கமல் படங்களை ஒரு சாதாரண திரைப்பட ரசிகன் என்ற பார்வையில் பார்த்தபோது,கமலஹாசன் எனும் கலைஞனின் கலைதாகமும்,அடுத்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற முயற்சியும்,அவரின் நடிப்பின் பல பரிமாணங்களும் தெரிந்தது. அவ்வகையில் 'தசாவதாரம்' நிச்சயமாக கமலின் மிக முக்கியமான ஒரு படைப்பு. குறை சொல்வதற்கான காரணங்கள் படத்தில் பல இருந்தாலும், ஒரு நல்ல படத்தை கொடுத்தக் காசுக்கு வஞ்சனையின்றி ஒய்வுப்பொழுதில் பார்த்து ரசிப்பதற்க்கு ஏற்றப்படம்தான்.
ஆகவே,விட்டக்காட்சிகளையும்,பரப்பரப்பான துரத்தல்களையும் மீண்டும் ஒருமுறை பார்க்க அடுத்தவாரக்காட்சிக்கு இப்போதே துண்டு போடவேண்டுமென முடிவு செய்துவிட்டேன்.

July 18, 2008

அணில்

அப்போது நான் ஐந்தாவதோ,ஆறாவதோ படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கும்பலாக கூடி ஏதோ பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். கும்பலுக்குள் நுழைந்து என்ன நடக்கிறது எனப்பார்த்தால், அண்ணனின் கையில் ஒரு குட்டி அணில் நடுக்கத்துடன் முடங்கிக்கிடந்தது. எப்படி வந்தது என விசாரித்ததில், ஒரு பூனையால் துரத்தப்பட்டு வீட்டுப்பரணில் ஏற முயன்று தவறிக் கீழே விழுந்ததில் அதன் ஒரு காலில் அடிப்பட்டு அதனால் ஓட முட்டியவில்லை. அவ்வேளையில் அண்ணன் பார்த்து, பூனையை துரத்திவிட்டதால்,அணில் உயிர் தப்பியிருந்தது.

சுற்றியுள்ள அனைவரும் ஆளாளுக்கு ஒரு வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அம்மா ஒரு துணியை நீரில் நனைத்து அதன் காலில் கட்டிவிட்டார்கள். காயம் ஆறும்வரை வீட்டிலேயே இருக்கட்டும் என முடிவு செய்து, ஒரு சிறிய கூண்டில் விட்டார்கள். அது பசியாற பாலாடையில் பாலை ஊற்றி அதற்கு கொடுத்தார்கள். அணிலும் கொஞ்சமாக குடித்துவிட்டு கூண்டிற்குள் போய்விட்டது. ஒரு வாரம்,பத்து நாட்களில் அதன் காயம் சுத்தமாக சரியாகிவிட்டது. வேளாவேளைக்கு பழங்களும், குழந்தைகள் குடிக்கும் பால் பாட்டிலில் பாலும் குடிக்க பழகியிருந்தது. காயம் ஆறிவிட்டதால் எதற்கு அதை கூண்டில் அடைத்துவைக்கவேண்டும், அதன் போக்குக்கு விட்டுவிடுங்கள் போய் விடட்டும் என அம்மா சொல்லிவிட்டார்கள். கூண்டை திறந்ததும் உற்சாகமாக வெளியே வந்த அணில் அந்த அறைக்குள் இங்கும் அங்குமாக ஓடிவிட்டு அண்ணனின் மேல் ஏறி கையில் அமர்ந்துவிட்டது.அடுத்த இரண்டு மூன்று நாட்களாக சுதந்திரத்துடன் வீட்டில் ஓடியாடிக் கொண்டிருந்தது. அது எங்கள் வீட்டை விட்டு போகாது என்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்தது.



அடுத்து வந்த நாட்களில் அந்த அணில் குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தினமும் பள்ளிவிட்டு வந்ததும் எங்கள் மாலைப்பொழுதுகள், அதனுடன் விளையாடுவதிலேயே கழிந்தது. பள்ளிவிட்டு வரும்வழியில் விற்க்கும் பழங்களை வாங்கிவந்து அதற்கு ஊட்டிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அது எங்கள் மேலெல்லாம் ஏறியிறங்கி விளையாடிக்கொண்டிருக்கும், அதற்கு பிடித்தமான உறங்குமிடம், எங்கள் சட்டையில் உள்ள மேல் பாக்கெட்.கை வழியாக மெலே ஏறி பாக்கெட்டில் நுழைந்து படுத்துக்கொள்ளும்.யாரவது கட்டிலில் படுத்திருந்தால் கட்டிலின் கால்வழியாக ஏறி அருகில் வந்து மேலே ஏறி விளையாட ஆரம்பித்துவிடும்.அணிலுக்கும் எங்கள் வீட்டிலுள்ள அனைவரையும் நன்றாக அடையாளம் க்ண்டுக்கொள்ள முடிந்தது. அம்மாவும், அண்ணனும்தான் அதற்கு பயங்கர பெட்' ஆகியிருந்தார்கள். நன்றாக சாப்பிட்டதால் பார்க்க அழகாக கொழுகொழு என ஆகியிருந்தது.
அப்பொது நாங்கள் மளிகைக்கடை வைத்திருந்தோம். பின்புறம் வீடும் முன்புறம் கடையும் ஒன்றாக இருக்கும். அம்மாவும் அண்ணனும் வீட்டுக்கும் கடைக்கும் போய்வரும்போது, அணிலும் அவர்கள் பின்னாலேயெ முன்னும் பின்னும் போய்வந்துக்கொண்டிருக்கும்... அதன் எதிரிகளான பூனையையோ, நாயையோ பார்த்துவிட்டால் வேகமாக ஓடி பரணிலோ,அல்லது வீட்டிலுள்ள யாராவது ஒருவரின் மேலோ ஏறிக்கொள்ளும். எங்காவது வெளியூர் சென்றால் அதுவும் ஒரு விருந்தினராக எங்களோடு விஜயம் செய்யும். பயணம் செய்யும் சமயங்களில் எங்களில் ஒருவரது சட்டைப்பையில்தான் வாசம் செய்யும்.கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் எங்கள் வீட்டில் அதன் ராஜ்ஜியம்தான்.
ஒருநாள் வீட்டில் அண்ணனைத்தவிர அனைவரும் வெவ்வேறு வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தர்ர்கள். அண்ணனுக்கு கடுமையான காய்ச்சலால் ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு வந்து மருத்துவர் குடுத்த மாந்திரைகளைப் போட்டுக்கொண்டு பெரிய கம்பளியை போர்த்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்து தூங்கிவிட்டார். வீட்டில் யாரையும் காணாத அணில் வழக்கம் போல கட்டிலில் ஏறி கம்பளிக்குள் புகுந்துக்கொண்டது. சிறிது நேரம் கழித்து தூக்கத்தில் அண்ணன் பு...ர...ண்...டு....ப் படுத்தார்.

July 15, 2008

இதற்கு என்னதான் தீர்வு ?

கடந்த வாரத்தில்,என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு, லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகிலுள்ள ஊரில் சிகிச்சைக்காக சென்றார்.அங்கு ECG எடுத்துப்பார்த்துவிட்டு bad cholesterol அதிக அளவில் இருப்பதால்தான் வலி ஏற்பட்டதாக கூறினார்கள். மேலும் பெங்களுரில் உள்ள 'இருதய' மருத்துவமனைக்கு referance letter கொடுத்து பரிசோதனைக்கு செல்ல சொன்னார்கள்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால்,உடனடியாக பெங்களூர் வந்து அந்த மருத்துவமனைக்கு சென்றார்கள். செக்கப் செய்துவிட்டு, மேலும் சில டெஸ்ட் செய்ய இருப்பதால் ஒருநாளாவது இருக்கவேண்டும் என சொல்லி ஜெனரல் வார்டில் தங்க சொல்லிவிட்டார்கள். அன்று மாலைவரை பல்வேறு டெஸ்டு' செய்துவிட்டு, மருத்துவர் மேற்க்கொண்டு என்ன செய்வது என்று நாளை சொல்வார்கள் என சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் ரவுண்ட்ஸ் வந்த முதல் மருத்துவர், அறிக்கைகளை பார்த்துவிட்டு,அபாயகரமாக எதுவும் இல்லை,உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் போதும் என சொன்னார். சிறிது நேரம் கழித்து,மற்றொரு மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டு,அதே கருத்தை தெரிவித்துவிட்டு சென்றார்.
அடுத்ததாக தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ் வந்தார்.அவர்தான் கடைசியாக முடிவு செய்ய வேண்டியவர். அவரும்,அறிக்கைகளையெல்லாம் பார்த்தார்.எங்கிருந்து வருகிறீர்கள்,என்ன வேலை பார்க்கிறீர்கள்( ஆசிரியராக இருக்கிறார்) எனக்கேட்டுவிட்டு, கடைசியாக ஒரு குண்டைப் போட்டார். இதயத்தில் அடைப்பு இருக்கலாம் என சந்தேகப் படுவதாகவும், ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் உடனடியாக எடுக்கவேண்டும்,பணத்தைக் கட்டிவிடுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.அதற்கு மட்டும் ரூ 10500 ஆகும் என தெரிவித்தார்கள்.
அவர்கள் வேண்டிய பணம் எடுத்து வராததால், என்னை வரசொன்னார்கள். நானும் அங்கு சென்று தலைமை மருத்துவரை சந்தித்தேன். மற்ற இருமருத்துவர்கள் எந்தப்பிரச்சனையும் இல்லை என சொல்லிவிட்டபிறகும் எதற்கு ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் எடுக்கவேண்டும் எனக் கேட்டதற்க்கு, 'இதய அடைப்பு இருப்பதாக தான் கருதுவதாகவும், அதனால் மாரடைப்பு எப்போதுவேண்டுமானாலும் ஏற்படலாம் என சொல்லிவிட்டு போய்விட்டார். வேறு எந்த விளக்கங்களையும் தரவில்லை. மற்ற இருமருத்துவரர்களையும் சந்திக்கவும் முடியவில்லை. வேறு வழியும் இல்லாததால்,அதுவரை ஆகியிருந்த செலவு,ஆன்ஜியோக்ராம் டெஸ்ட்'கான பணத்தையும் (ரூ 13000) 'கடன் அட்டை' வழியாக கட்டிவிட்டேன்.
அன்று மாலையே ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் எடுத்துவிட்டார்கள்.ஆனால் தலைமை மருத்துவர் இல்லாததால்,மறுநாள்தான் ரிசல்ட் சொல்லப்படும் என சொல்லிவிட்டார்கள். அன்று இரவும் அங்கே தங்கவேண்டியதாகிவிட்டது.
மறுநாள் அறிக்கையை பார்த்துவிட்டு,பெரிய அடைப்பு ஏதும் இல்லை, இருக்கும் badcholesterol 'ஐ மருந்துகள் மூலமாக சரிப்படுத்திவிடலாம் எனக்கூறி சென்று விட்டாராம். அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆக மாலை 7 மணிவரை ஆகிவிட்டது. மொத்தமாக ரூ 22000 வரை 2 நாட்களில் செலவானது.

இந்த நிகழ்ச்சியால்,எனக்கு எழுந்த கேள்விகள்...
1. எந்த அடிப்படையில் எடுக்கவேண்டிய சிகிச்சை முறைகள்,டெஸ்டுகள் முடிவாகிறது? 3 மருத்துவர்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், ரூ 10500'ம்,மேலும் ஒருநாள் தங்கலும் ஏற்பட்டது. வேண்டிய பணம் என்னால் உடனடியாக கொடுக்க முடிந்ததால்,டெஸ்ட் உடனடியாக எடுக்க முடிந்தது. இல்லையெனில் வேறு ஏற்பாடு செய்யவோ, சில நாட்கள் கழித்தோ,வேறு மருத்துவமனையிலோ டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும்.ஆனால்,அந்த மருத்துவர்,மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என பயமுறுத்திய பிறகு,தள்ளிப்போடும் முடிவை எப்படி எடுக்க முடியும்?

2. ஒருவேளை வசதியில்லாதோர் இந்த நிலைமைக்கு ஆளானால் அவர்கள் கதி என்ன?
3. மருத்துவர் சரியான விளக்கம் தராததால், அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றால், கண்டிப்பாக,முதல் மருத்துவமனையில் எடுதத எந்த அறிக்கையையும் பார்க்காமல், அதே டெஸ்டுகளை இங்கேயும் ஒருமுறை எடுக்க சொல்ல மாட்டார்கள் என என்ன நிச்சயம் ?
4. பணவசதியிருந்தும், தலைமை மருத்துவர் சரியான விளக்கம் தராததாலும்,மற்ற இரு மருத்துவர்களும் ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டதால் வீட்டிற்கு வந்துவிட்டு,சில நாட்கள் கழித்து நிஜமாகவே பிரச்சனையாகி ஏதாவது இழப்பு ஏற்பட்டால் என்ன ஆவது?

இப்போதுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள், சேவை என்பதையே மறந்துவிட்டு, மருத்துவ தொழிலை பெரும் வியாபாரமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள். அங்கு செல்பவர்களை,மனரீதியான நெருக்கடிக்கு தள்ளி,அவர்கள் சொல்லும் சிகிச்சைமுறைகளை செய்வதை தவிர வேறுவழியில்லை என்றாக்கிவிடுகிறார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு ?

நீ பாதி...நான் பாதி...

பழகிய காலத்தில்
என்னில் பாதி நீ என்றாள்...
திருமணத்திற்கு பிறகு,
அவள் பிள்ளையின் பெயரில்
பாதியாகிப் போனான்...

July 9, 2008

BSNL-நம்பினால் நம்புங்கள்...

கடந்த ஏப்ரல் மாதத்தில் அதுவரை தங்கியிருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அங்கிருந்து 6 கிமீ தொலைவில் வெறொரு வீட்டிற்க்கு குடிபெயர்ந்தேன். வீட்டில் இருந்த BSNL landline,broadband இணைப்பை புது வீட்டிற்க்கு மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து BSNL அலுவலகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே கொடுத்திருந்தேன். மே மாதம்வரை எந்த சத்தமும் காணோம். customer service'ஐ அழைத்து சொன்ன உடன், புதிதாக குடியேறியுள்ள பகுதியில் உள்ள BSNL அலுவலகத்தை அணுக சொல்லி,நம்பரையும் கொடுத்தார்கள்.
மே மாத முதல் இரண்டு வாரங்களில் தினமும் அவர்களை அழைத்து, என் BSNL இணைப்பு புது வீட்டிற்க்கு எப்போது கிடைக்குமென கேட்டுக்கொண்டிருந்தேன். எவ்விதமான பாசிடிவ் பதிலும் இல்லை. சனிக்கிழமைகளில் அவ்வலுவலகத்திற்கே நேரடியாகப் படையெடுக்க ஆரம்பித்தேன். ஒருவழியாக எங்கள் தெருவுக்கு பொறுப்பான லைன்மேனை சந்தித்து எப்ப்போது போன் லைன் கொடுக்கப்போகிறீர்கள் எனக்கேட்டதற்க்கு, உங்கள் வீட்டிற்க்கு 2 முறை வந்தேன்.வீட்டில் யாருமில்லை என விட்டேத்தியாக பதில் வந்தது( என்னுடடைய தாயார் 24*7 வீட்டில்தான் இருப்பார்கள்). வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு, மறுபடி எப்போது வருவீர்கள் என்றதற்க்கு,அடுத்த வாரத்தில் ஏதாவது ஒரு நாள் வருவதாக வரம் தந்தார்.
அந்தவாரம் முழுவதும் போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்ததில் மனமிரங்கி(???) வெள்ளிக்கிழமை இணைப்பு வந்துவிட்டது.வெலையை முடித்துவிட்டு மொய் பணம் கேட்டுள்ளார்,என் தாயார் ரூ 100 கொடுத்தற்க்கு,இவ்வளவுதானா? என நக்கலாக கேட்டுவிட்டு சென்றிருக்கிறார். ஒருவழியாக மே கடைசி வாரத்தில் இணைப்புக்கிடைத்து விட்டது.
நான் வீட்டிற்க்கு வந்து 'Broadband' இணைப்பை சோதித்தால் அது வேலை செய்யவில்லை. மறுபடியும் போன் வழியே படையெடுப்பு.ஒன்றும் நடக்கவில்லை. ஏர்டெல்'க்கு மாறிவிடலாமா என தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் அலுவலகத்தின் Intranet-forum'ல் ஒரு BSNL e-mail முகவரியை பார்த்தேன்.அந்த முகவரிக்கு புகார் அனுப்பினால் மாயம் நிகழும் என போட்டிருந்தார்கள். சரி முயன்றுதான் பார்க்கலாமே என முழுக்கதையையும் எழுதி அனுப்பினேன்.
இரண்டு நாட்களாக எந்த சத்தத்தையும் காணோம். 3ம் நாள் ஒரு இ-மெயில் வந்தது. "உங்கள் புகார்,பங்களூர் அலுவலகத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உங்களை தொடர்ப்பு கொள்வார்கள்" என்றிருந்தது. அட்லீஸ்ட் ஒரு பதிலாவது வந்ததேயென வீட்டிற்க்குப் போனால்,அதுநாள்வரை வெலை செய்துக்கொண்டிருந்த போன் 'கோமா' நிலைக்குப்போயிருந்தது.

உள்ளதும் போச்சடா...என்ற எரிச்சலுடன் மறுநாள் படுகாரமாக இன்னோரு இ-மெயிலை தட்டிவிட்டேன். அன்று மதியம் பங்களூர் BSNL அலுவலகத்திலிருந்து போன் வந்தது. ஒரு மொபைல் எண்ணைக்கொடுத்து பேசசொன்னார்கள். முக்கியமான வேலையில் நான் மூழ்கியிருந்தால் அவர்களை தொடர்புக்கொள்ளவில்லை. மறுபடியும் வேறொருவர் BSNL'லிருந்து அழைத்து,மிகவும் மரியாதையுடன் என்ன பிரச்சனை என்று விசாரித்துவிட்டு, நீங்கள் எப்பொது வீட்டிற்க்கு வருவீர்களென கேட்டார்கள். சரி என்னதான் நடக்கிறது பார்க்கலாமென,அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வருவதாக சொன்னேன். பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்பினேன். வீட்டை அடைவதற்குள்,3-4 மிஸ்டு கால். வீட்டை அடைந்து அந்த எண்ணுக்கு கூப்பிட்டு நான் வீட்டிலிருப்பதாக கூறினேன். அடுத்த 5 நிமிடத்தில், 3 BSNL ஊழியர்கள் வந்து, 10 நிமிடத்தில் போன், broadband இணைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.அந்த 3 பேரில், முன்பு வந்த லைன்மேனும் இருந்தார், ஒரு வார்த்தைக்கூட பேசாமல்,இணைப்பைக் கொடுத்துவிட்டு எல்லாம் சரியாக வெலை செய்கிறதா என என்னிடம் ஒருமுறைக்கு இருமுறை சரிப்பார்க்க சொல்லி, மிக மரியாதையுடன் 'நன்றி' சொல்லிவிட்டு (பணம் எதும் கேட்க்காமல்) கிளம்பிச்சென்றார்கள்.

எனக்கு சில நிமிடங்கள் நான் இந்தியாவில்தான் இருக்கிறேனா,இல்லை நடந்ததுயெல்லாம் ஏதாவது பகல்கனவா? என தெரியவில்லை. அடுத்த 2 நாட்கள் அவர்கள் போன் செய்து எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா எனவேறு விசாரித்தார்கள்.
இந்த மாற்றத்திற்க்கு காரணம் என்னவென்றால்,நான் புகார் அனுப்பிய இ-மெயில் முகவரி, டெல்லியில் உள்ள BSNL உயரதிகாரியின் ID. அவர் அங்கிருந்து பெங்களூர் அதிகாரிக்கு அனுப்பி follow-up செய்ததால்தான் மேற்கண்ட மாயாஜாலங்கள் நடந்தன.
ஒரு 10 நிமிட வேலைக்கு,கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் நேரம் செலவிட்டு இருக்கிறேன். கடைசியாக மேலிடத்தில் புகார் செய்ததால் எல்லாம் விரைவில் முடிந்தது,இல்லையென்றால் இன்னும் எந்தனை வாரங்கள்,மாதங்கள் ஆகியிருக்குமோ?
பின்குறிப்பு : இத்தகவலை,என் நண்பர்களிடமும் சொல்லி,அவர்களும் புகார்களை இ-மெயில் தட்டிவிட்டதில், பெரும்பாலானவர்களின் BSNL பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளன.