Search This Blog

January 14, 2009

படிக்காதவன் : லேட்டஸ்ட் விமர்சனம்

நான் எப்போதும் முதல்நாள்,முதல்காட்சி பார்ப்பதில்லை.அதுவும் பண்டிகைக்காலங்களில் வெளியாகும் படம் என்றால்,கூட்டம்,ரசிகர்களின் கூத்துக்கள்,அநியாய டிக்கெட்விலை,சீட் கிடைக்காமல் ஸ்கீரினுக்கு முன்னாலோ அல்லது ஏதாவதொரு மூலையில் கத்தல்களுக்கும்,வியர்வைக்கசகசப்புகளுக்கும் நடுவில் எவ்வித திருப்தியுமின்றி 3 மணி நேரத்தை கழிப்பது மிகவும் கடிணம்.ஆனால் விதி வலியது.இன்றைய நாளின் சம்பவங்கள் என்னை படிக்காதவன் திரைப்படத்தை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது. படத்தைப் பார்த்துமுடித்தவுடன் உடனடியாக விமர்சனம் எழுத வேண்டும் என்ற உந்துதலால் மடிக்கணிணியை திறந்து தட்ட ஆரம்பித்துவிட்டேன்.

முதலில் படத்தின் நாயகன்,நம் அனைவரும் அறிந்த கமர்சியல் கதாநாயகன்.படத்தில் ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான கதை(???),காமெடி,செண்டிமெண்ட்,சண்டை, பஞ்ச் டயலாக்,பாசப்போராட்டம்,பாடல்கள் என கமர்சியல் மசாலாக்களை அடித்து கலக்கியிருக்கிறார்கள்.

படம் கதாநாயகனின் சிறுவயது முதல் ஆரம்பிக்கிறது.பாசமான வக்கீல் அண்ணன்,பள்ளிசெல்லும் இரு தம்பிகள் என ஒரு அருமையான பாசத்தை பிழியும் பாடலுடன் ஆரம்பிக்கிறது.அப்பாடலில் அண்ணன் தீய்ந்துப்போன தோசையை சுட்டுபோடுவதால்,தம்பிகள் நல்ல தோசை சாப்பிட கல்யாணம் செய்துக் கொள்கிறார். தம்பிகளுக்கு தோசை சுட்டுப்போட வேண்டிய அண்ணி,தோசைகரண்டியால் தலையில் போடுவதால் தம்பிகள் இருவரும் வீட்டைவிட்டு சென்னைக்கு வந்துவிடுகிறார்கள்.

தம்பியின் படிப்பிற்க்காக கதாநாயகன் ஆட்டோ ஓட்டி கஷ்ட்டப்பட்டு படிக்கவைக்கிறார்.வழக்கம்போல நம்பி ஊதாரித்தனமாக செலவழித்து,ஒரு பணக்கார பெண்ணைக் காதலித்து அண்ணனின் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்துக்கொள்கிறார்.பணக்காரரின் சொத்துக்கு ஆசைப்படும் வில்லன்,அவரைக் கொன்று,பழியை கதாநாயகன் மேல் போட்டுவிடுகிறார்.பெரிய அண்ணன்,இந்த கேப்பில் நீதிபதியாகிவிடுகிறார்.அவரிடம் விசாரணைக்கு வரும் இந்த கேஸின் மூலம்,மீண்டும் தம்பிகளை அடையாளம் தெரிந்துக்கொண்டு,தம்பிகளுக்காக மீண்டும் வக்கீலாக டீப்ரமோட் ஆகி உண்மைகளைக் கண்டுபிடித்து கதாநாயகனை விடுவித்து,அனைவரும் ஒன்றாக தோசை சாப்பிடுகிறார்கள்.
கதாநாயகனின் டாக்ஸிகூட தமிழ் படித்திருக்கிறது.டாக்ஸியில் தவறான எண்ணத்துடன் யாராவது ஏறினால் ஸ்டார்ட் ஆகாது சண்டித்தனம் பண்ணும்.கதாநாயகன் அடிக்கடி டாக்ஸியுடன் பேசிக்கொல்லும் காட்சிகள் நன்றாக படம் பிடித்துள்ளனர். கதாநாயகி கர்ப்பிணி வேசத்தில் கள்ளச்சாராயம் விற்பதும்,கதாநாயகனுடன் மல்லுகட்டும் காட்சிகளும் நகைச்சுவையாக இருக்கிறது.பாடல்களும் கதாநாயகனின் சூப்பர்ஸ்டார் ஆசனத்தை நோக்கிய பயணத்திற்கு பயன்படும் விதத்தில் சிறப்பாக உள்ளது.

நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. 'தங்கச்சிய நாய் கட்சிச்சிப்பா......என கலக்குவதும்,பழம் விற்கும் கபாலி,திடீர் பணக்காரராகி கே.பாலி ஆவதும் கலகலப்புடன் படமாக்கப்பட்டுள்ளது.பாடல்கள் அருமையாக வந்துள்ளது. முதல் பாடல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டுள்ளது.தம்பி உதாசினப்படுத்திய வலியோடு,தண்ணீயடித்துவிட்டு,கதாநாயகியை பார்த்துப்பாடும் பாடல்..மிகவும் அருமை.நாயகன் நன்றாக நடித்துள்ளார்.

மொத்தத்தில் படிக்காதவன்...டிஸ்டிங்கனில் பாஸ் ஆகிவிடுவான்...

டிஸ்க்கி : இன்று விடுமுறை என்பதாலும்,அனைத்து தொல்லைக்காட்சிகளிலும் அறுவை ப்ரோக்ராம்கள் என்பதால்,DVD'ல் ரஜினி நடித்த 'படிக்காதவன்' படத்தை பார்த்தேன்.அதன் தாக்கத்தால் உடனடியாக இந்த விமர்சனம்...நீங்கள் வேறு ஏதாவது எதிர்ப்பார்த்து வந்திருந்தால் அதற்கு நான் பொருப்பல்ல..மீண்டும் முதல் வரியைப் படிக்கவும்