Search This Blog

November 4, 2005

அமெரிக்காவில் கோவிந்தோ....கோவிந்தோ...

கடந்த திங்களன்று,அலுவலகம் முடிந்து வீட்டுக்குவந்து காபி(இது ப்ரூ'ம்ம்மா....)சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது,அழைப்புமணி அழைத்தது.கதவைதிறந்தால், குட்டி ஸ்பைடர்மேனும்(பாபா ஸ்டைலில் கைவிரலை வைத்துக்கொண்டு நூல் விடுபவர்), சூப்பர்மேனும்(பேண்ட்'க்கு மேலே ஜட்டி போடுபவர்) கையில் ஒரு கூடையுடன் நின்றுக்கோண்டிருந்தார்கள். இன்று முடிக்கவேண்டிய வேலையை நாளைக்கு முடிப்பதாக ஆபிசில் மேனேஜ்ரிடம் 'ஜல்லியடித்துவிட்டு' வந்துவிட்டதால்,பிடித்துவர இவர்களை அனுப்பிவிட்டார்களா என யோசித்துக்கொண்டே கேள்விக்குறியுடன் அவர்களை பார்க்க, 'ஹாலோவின்' வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு கூடையை நீட்டினார்கள்.அதில் ஏகப்பட்ட 'கேண்டி'சும் சில 'டாய்'சும் இருந்தது.ஓ..ஹோ...நமக்குத்தான் தருகிறார்கள் என கூடையில் கையை விட்டால், ஸ்பைடர்மேன் கையை பிடித்து,'you should give us the candy's' என்றனர்.இது என்னடா வம்பா போச்சி என நினைத்துக்கொண்டிருந்தபோது,கை நிறைய 'கேண்டி'யோடு அண்ணி வந்து இரண்டுக்கூடையிலும் போட்டார்கள்.ஸ்பைடர்மேனும், சூப்பர்மேனும் 'தேங்ஸ் ஆன்டி' என சொல்லிவிட்டு என்னை 'அக்னி நட்சத்திர' பார்வை பார்த்துக்கொண்டே அடுத்த வீட்டிற்க்கு சென்றார்கள்.

பிறகு அண்ணி 'இன்று 'ஹாலோவின் டே'.குட்டிப்பசங்க விரும்பிய வேஷம் போட்டுக்கொண்டு,வீடுவீடாக கூடை/பையுடன் சென்று அவர்கள் கொடுப்பதை வாங்கி வருவார்கள் என விளக்கினார்கள்.எங்கள் வீட்டு வாண்டுகளும் கூடையுடன் கிளம்பி சென்றிருக்கிறார்கள் என உபரித்தகவலையும் சொன்னார்கள்.

எங்கள் வீட்டு வாண்டுகளின்(அஜித்,அஸ்வின்) வேஷம்..



எனக்கு நம்ப ஊரில் புரட்டாசி மாதம் பிரதி சனிக்கிழமை,நெற்றி முழுக்க நாமத்துடன் கையில் சொம்பு/பையுடன்,'கோவிந்தோ.....கோவிந்தோ...' சொல்லிக்கொண்டு அரிசியோ,காசோ வாங்கி செல்லுபவர்களின் நியாபகம் வந்தது.

அதற்குபிறகு கேண்டி'ஸ் முழுவதையும் என்னிடம் கொடுத்து,வருபவர்களுகெல்லாம் வாரி வழங்குமாறு சொல்லிவிட்டு அண்ணி போய்விட்டார்கள். நானும் 'தேவுடா....தேவுடா...ஏழுமலை தேவுடா' பாட்டை போட்டுவிட்டு 'ஸ்பைடர்மேன்'களுக்காக 'தேவுடு' காத்துக்கொண்டிருந்தேன்.