Search This Blog

May 4, 2005

மீண்டும் அந்த நாட்கள் ?!?

சென்ற பதிவில், பள்ளியில் நடந்த தேர்தலைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதைப் பற்றி தெர்ந்துகொள்ள வேண்டுமென ஏராளமானவர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக(முக்கியமாக,இடைத்தேர்தல் காலம் என்பதால்,கழக உடன்பிறப்புகளும்,ரத்தத்தின் ரத்தங்களும் அவர்களுக்கே தெரியாத ஏதாவது குறுக்குவழி என்மூலம் கிடைக்குமா என அலைவதாக ஒரு சேதி)இன்றுகாலை,ரகசிய போலீஸிலிருந்து நம்பத்தகாத தகவல் வந்தால்,பல அவசரமான வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். 'பில்ட் அப்' போதும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே சொன்னது போல, பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான்.இரு பிரிவுகள் (A,B) ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும்.ஏழிலிருந்து எட்டாம் வகுப்பு போனவுடன்,அந்தவருடத்திற்க்கான பள்ளி மாணவத்தலைவர், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தலைமைசெயலகத்திலிருந்து அறிவிப்பு வந்தது. அதற்கு முந்திய வருடம்வரை இந்தமாதிரி தேர்தலோ,பள்ளி மாணவத்தலைவர் பதவியோ இருந்ததில்லை. பாராளுமன்றம் போல ஒரு குழு இருக்கும்.சபாநாயகர் எட்டாம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களிலிருந்து, அமைச்சர்களும், இணை,துணை அமைச்சர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அவர்களுக்கு இலாக்காக்களும் ஒதுக்கப்படும்.பிரதி வியாழன் மன்றம் கூடி மக்கள் எழுப்பும் பிரச்சனைகளை(பள்ளிக்கு வெளியே இருக்கும் கடைகளில் விற்க்கும் திண்பண்டங்களில் 'ஈ" மொய்க்கிறது. சுகாதார அமைச்சர் சரியாக செயல்படுவதில்லை -சாம்பிள் பிரச்சனை ) ஆராய்ந்து தீர்வளிக்கும்.தீர்க்கமுடியாத பிரச்சனைகள், ஜனாதிபதிக்கு போகும்.(அப்துல் கலாம் இல்லீங்கோ...தலைமைஆசிரியருக்கு).நானும், துணை உணவு அமைச்சராக இருந்ததாக நினைவு.

இந்தமுறை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்,எங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருந்தது.சில விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டது.அதன்படி,போட்டியாளர்கள் எட்டாம் வகுப்பிலிருந்து மட்டும் இருக்கவேண்டும்.ஒரு பிரிவிற்க்கு இரண்டு பேர். ஆக மொத்தம் நான்கு போட்டியாளர்கள். அதிக ஓட்டு பெறுபவர் பள்ளி மாணவத்தலைவராகவும், இரண்டாமிடம் பெறுபவர் உதவி பள்ளி மாணவத்தலைவராகவும் பதவி வகிப்பர். நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ஓட்டளிக்க தகுதியுடையவர்கள்.

நான் B' பிரிவு மாணவன்.முதலில் வகுப்பு மாணவர்கள் என்னையும், ஜெயக்குமார் என்ற மற்றொரு மாணவரையும் தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்தார்கள்.நாங்களும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். உணவு இடைவேளையில்தான் பிரச்சாரம் சூடுபிடிக்கும். ஆசிரியர் உபயோகிக்கும் மேஜைதான் மேடை. அதில் ஏறி நின்றுக்கொண்டு பிரசாரம் செய்வோம்.மேஜை இல்லாவிடில், ஏதாவது ஒரு வகுப்பு தோழனின் தோளில் ஏறி அமர்ந்துக்கோண்டு பேசுவேன்.அப்போதும் ஏதோ ஒன்று குறைவதாகத் தோன்றியது.ம்ம்ம்...போஸ்டரோ,நோட்டீஸோ அடித்தாலென்ன எனத்தோன்றியது. தொண்டர்களை அழைத்து பேப்பர்களில் வாசகங்கள் எழுதி ,பள்ளியில் உள்ள சுவர்கள், மரங்களில் எல்லாம் ஒட்டவைத்தோம்.அதுவும் போதாமல், ஒரு அச்சகத்தில் கொடுத்து நோட்டீஸாகவே அடித்தோம். வேண்டிய வாசகங்களை தமிழாசிரியர் எழுதிகொடுத்தார். பணத்தை வகுப்பு மாணவர்களிடமிருந்து வசூலித்துக்கொடுத்தோம். இவ்வாறாக தேர்தல் களம் சூடுபிடித்தது.நடுவில் ஏதாவது தகராறுகள் எதிர்தரப்பினருடன் ஏற்ப்படும்.அந்தசமயங்களில், இருதரப்பும்,உப்புமூட்டை சண்டையில் மோதிக்கொள்வோம்.அதாவது, நான் என்வகுப்பு தோழன் முதுகில் உப்புமூட்டை ஏறிகொண்டு காலால் எதிர்தரப்பு மூட்டையுடன் உதைத்துக்கொள்வோம்.

தேர்தல் நாளும் வந்தது.அனைத்து வகுப்பு ஆசிரியர்களின் ஆதரவும் எங்களுக்கேயிருந்தது.அவர்கள் வகுப்பு மாணவர்கள் ஓட்டளிக்கும் ஹாலுக்கு செல்லும்போது, எனக்கும்,ஜெயக்குமாருக்கும் ஓட்டளிக்குமாறு கூறிக்கொண்டிருந்தார்கள்.ஓட்டுப்பதிவும் முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை தலைமை ஆசிரியரின் அறையில் நடந்தது. 212 ஓட்டுகள் பெற்று நான் முதலிடத்திலும், 162 ஓட்டுகள் பெற்று ஜெயக்குமார் இரண்டாமிடத்திலும் வெற்றிப்பெற்றோம்.எதிர்தரப்பு 28, 24 ஓட்டுகள் பெற்று படுதோல்வியடைந்தது. அடுத்தநாள்,என் தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், இனிப்புகள் வழங்கி வெற்றியைக்கொண்டாடினோம்.

மாணவத்தலைவராக நான் பார்த்த வேலைகள். ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலைக்கூட்டத்தில் தேசியக்கொடி தலைமை ஆசிரியரால் ஏற்றப்படும்.அக்கூட்டத்தை மாணவத்தலைவர்தான் நடத்தவேண்டும்.கூட்டம் நடக்கும்போது நான் நிற்க்குமிடத்தில் காலை சூரியனின் ஒளி நெரடியாகத்தாக்கும். வேர்த்துவழிந்துக்கொண்டு,'ப' வடிவில் நடந்து சென்று தலைமைஆசிரியரை கொடிக்கம்பமிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து,கொடி ஏற்றசெய்ய வேண்டும்.பின், உறுதிமொழியை நான் வேர்த்துவழிந்துக்கொண்டு படிக்க அனைத்து மாணவர்களும் வழிமொழிவார்கள்.அதைதவிர, மாணவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகளெனில்,முடிந்த அளவு தீர்த்துவைக்க முயற்சிப்பேன்.
இப்போது அதையெல்லாம் நினைத்து பார்க்கும்போது, ஆச்சர்யமாகயிருக்கிறது. பழைய நண்பர்களை சந்திக்கும்போது இதையெல்லாம் பேசி மகிழ்வோம்.ம்ம்ம்ம்....ஏக்கமாக இருக்கிறது....மீண்டும் அந்த நாட்கள் திரும்புமா ??

No comments: