Search This Blog

May 28, 2009

பசங்க.. பா(ப)டம் பெரியவங்களுக்கு

படத்தப்பத்தி ஒரு வரில சொல்லனும்னா, ஒவ்வொருவருக்கும் விதம்விதமான அனுபவங்களை, பாடங்களைத் தரும் படம்.

பசங்களா இருக்கவங்களுக்கு அவங்க நிகழ்காலத்தை திரையில் பார்க்கவும்,
வாலிப பசங்களா காலேஜ்'ல கும்பியடிக்குறவங்களுக்கு அவங்க சில மாதங்களுக்குமுன்
கடந்த வாழ்க்கை அத்தியாயத்தை புரட்டிப்பார்க்கவும்,

காலேஜ் முடிஞ்சி, வேலைல சேர்ந்து 'செட்டில்' ஆகிட்டோம்,அடுத்து என்னனு இருக்குறவங்களுக்கு சில்லுன்னு ஒரு காதல் அனுபவத்திற்கு ஏங்கவும், பள்ளிக்கல்லூரிப்பருவத்தில் உடன்பயின்ற நண்பர்கள், திடீரென காணாமல் எங்கே போய்விட்டார்கள் என அதிர்ச்சியுடன் திரும்பிப்பார்க்கவும்,

கல்யாணம் ஆகி, புது வாழ்க்கை,புது சொந்தங்கள்,புதுப்புது அனுபவங்கள் என மூழ்கி, களிப்புகளைக் கடந்து கடமையில் மூழ்கிபோனவர்களுக்கு,கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து, மரித்துப்போன பள்ளிக்கால நட்புகளையும்,இழந்துப்போன  குறும்பு விளையாட்டுக்களை நினைவடுக்குகளில் ஆராய்ந்துப்பார்க்கவும்,

குழந்தை(கள்) பெற்று,பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு,தன்வீட்டுச்சூழ்நிலையையும்,தன் குழந்தைகள் எதிர்பார்ப்புகளை எந்த அளவிற்கு நிறைவேற்றி இருக்கிறோம், செய்ய வேண்டியவைகள் என்ன? என்று தெரிந்துக்கொள்ளவும்,

பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு, அவர்கள் செய்யத்தவறிய, சரியாக செய்துவிட்ட விஷயங்களை பட்டியலிட்டு சரிபார்க்கவும்,

படிப்புமுடிந்து நன்றாக செட்டில் ஆகிவிட்ட,அல்லது வேலைவெட்டியின்றி வாழ்க்கையில் த(டம்)டுமாறும் தன் பிள்ளைகள்பற்றி மகிழ்ச்சியோ,கவலையோ கொள்ளும் பெற்றோர்களுக்கு, அவர்களின் கடந்த 20 ஆண்டுக்கால தாம்பத்யம், எந்த அளவுக்கு பிள்ளைகள் வாழ்க்கையை நன்றாக அமைத்தோ/அலைக்கிழித்தோ இருக்கிறது என சுயபரிசோதனை செய்துக்கொள்ளவும்,

என அனைவரையும் சிரிக்க,சிந்திக்க,சிலிர்க்க,கண்ணீர் சிந்த என அனைத்துவித அனுபவங்களையும் படம் பார்க்கும் இரண்டரை மணிநேரத்தில் நமக்கு அளித்து விடுகிறது.

எப்போதும் இரவில் படுக்கையில் படுத்த இரண்டு நிமிடங்களில் என்னைத்தழுவும் நித்திரை,
நான் படித்த ஆரம்பநிலைப்பள்ளி,கூடப்படித்த ஜெய், பாபு, தியாகு, துளசிராஜ், குப்பன், ரமேஷ், சிவக்குமார்,எழில்மாறன்,அறிவு, அம்பி(கா),மலர்(விழி), போன்றவர்களையும், தெரேசா,ஜெயமேரி டீச்சர், ஜேசுதாஸ், அருளானந்தம் வாத்தியார்கள்,தமிழய்யா பத்திநாதன்,பூபதி என பாதை அமைத்துக்கொடுத்த ஆசிரியர்களையும், ஏழாவது படிக்கும்போது பள்ளியில் புதிதாக சேர்ந்த ஜெய்குமாருக்கும் எனக்கும் படிப்பில்,முதல் ரேங்க் வாங்குவதில்,க்ளாஸ் லீடர் ஆவதில் என ஏற்பட்ட போட்டிகள், எட்டாவது படிக்கும்போது பள்ளி மாணவத் தலைவர் தேர்தலில் நானும்,ஜெய்யும் இரு அணிகளாகப்பிரிந்து போட்டியிட்டு ஜெய் 162 வாக்குகளும்,நான் 212 வாக்குகளும் பெற்று வெற்றிப்பெற்றதும், இந்த தேர்தலினால் எங்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவரும் பேசாமல் போனதும், பள்ளி நண்பர்களும்,ஆசிரியர்களும் எவ்வளவோ முயன்றும்,என் பிடிவாதத்தால் அவனுடன் பேசாமலே இருந்து,வெவ்வேறு பாதையில் வாழ்க்கைப்பயணம் தடம்மாறி, சிலவருடங்கள் கழித்து அவன் அக்கா திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வீடு தேடிவந்ததால் மறுபடியும் மலர ஆரம்பித்த எங்கள் நட்பு இன்றுவரை சரியான புரிதலுடன் எவ்வித இடருமின்றி வளர்வதும் என,பல்வேறு நிகழ்வுகளை கிளறி,அந்த ஞாபகங்களின் தாக்கத்தால் வெவ்வேறு மனநிலைகளுக்கு ஆட்பட்டு இரவு முழுவதும் என் தூக்கம் தூரதேசம் போனது.

எனினும் இன்று காலையில் எழுந்தபோது உடலும்,மனமும் எவ்வித களைப்புமின்றி, புத்துணர்ச்சியுடனும், புதுகூதுகலத்துடனும் கொண்டாட்டம் போடுவதற்கான காரணம்,படம்பார்த்த அந்த இரண்டரை மணிநேரத்தில் நானும் என் பள்ளிப்பருவத்தை மீண்டும் ஒருமுறை வாழ்ந்துப்பார்த்ததுதான்...

May 9, 2009

மரித்துப்போன மனிதம் : விஜய் டிவி நிகழ்ச்சி

கடந்த வியாழன் இரவு விஜய் டிவியில் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் செமிபைனல் ரவுண்ட் நடந்தது. அதில் கடைசியில் நடனமாடியவர் எடுத்திக்கொண்ட கான்செப்ட் 'இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள்'.சாதாரணமாக ஆரம்பித்த குழந்தைகளுடனான நடனம், அங்கு நிகழும் குண்டுவெடிப்பும்,மக்களின் அவலநிலையையும் கண்முன்னே நிகழ்த்திக்காட்டினார்கள். அந்த 10 நிமிட நடனம் பார்த்த அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தது.

வீடியோ இங்கே...

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4

அதைப்பார்த்து என்னில் எழுந்த உணர்ச்சிகளின் வடிவம் கீழே...


கண்ணீர்துளிகள் நிஜம்,
ரத்தஆறுகள் நிஜம்,
வலிகள் நிஜம்,
இழப்புகள் நிஜம்,
துடிப்புகள் நிஜம்,
ஏக்கங்கள் நிஜம்,
கொடுமைகள் நிஜம்,
பசி,பட்டினி நிஜம்,
கற்பழிப்புகள் நிஜம்,
மரணங்கள் நிஜம்,

நிதம்நிதம் இத்தகைய
நிஜங்களின் நிர்பந்தத்தில்
நாளைய விடுதலையை எண்ணி
இன்றைய விடியலாவது
விடைத்தருமா என்ற
வினாவுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கும்
விட்டில்பூச்சி கூட்டங்களாய்
நம் ரத்தத்தின் ரத்தங்கள்.

மனிதம் நம்மில் மரித்துவிட்டதா?