Search This Blog

May 21, 2005

படித்ததில் பிடித்தது

ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே காதல் என்கிற பூ மலர்வதற்கு முன்பு,நட்பு என்கிற பசுமை நிறைந்த இலைகள் வளர்ந்திருக்க வேண்டும்.நட்பு என்கிற அந்தப் பசுமை நிறைந்த இலைகளின் கிளைகள் நம்பிக்கை.நம்பிக்கை என்ற கிளைகளின் அடிவேர், சுயநலமற்ற தன்மை.சுயநலம் கொண்டவர்களால் காதலிக்க முடியாது; காதலிப்பது போல்நாடகமாட மட்டுமே முடியும்.எல்லா நாடகமும் பொய்களும்,கடைசியில்தோல்வியில்தான் முடியும்.உலகில் நிறைய காதல்கள் தோல்வியுற இந்த நாடகமாடல்தான் காரணம்.

காதலில் மிக சுவாரசியமான விசயம் தன்னைக் காதலித்தவரைப் பற்றி எல்லா விவரங்களும் எவர் மூலமாகவோ தெரிந்து கொள்ள நேருவதுதான். யாரையோ மனதில் பூட்டி வைத்து அவரைப்பற்றி நெகிழ்வாக நினைத்துக் கொண்டிருக்க வேறு எவரோ அருகே வந்து உட்கார்ந்து அவரைப் பற்றி உனக்குத் தெரியுமா? என்று விதவிதமாக காதலிப்பவரின் கல்யாண குணங்களைஅடுக்கிக் கொண்டு போக, அவர் வீட்டு விவரங்களை விவரித்துக்கொண்டு போக மெய்மறந்து கேட்கின்ற ஒரு தன்மை ஏற்படும். இன்னும்தூண்டித்துருவி கேள்விகள் கேட்க ஆசை வரும்.அந்த ஆசைக்கு நல்ல தீனி கிடைத்தால் மனம் இடைவிடாது காதலித்தவரைப் பற்றி யோசிக்கத்தொடங்கிவிடும்.அந்த யோசிப்பு பொங்கி நல்ல கொதிநிலைக்கு வந்து,பக்குவமாய்க் கரைந்து காதலைக் கெட்டிப்படுத்தும். சொல்லப்பட்ட விவரங்கள் லட்சணமாகவும்,சுவையாகவும் இருப்பின் காதலித்தவர் மீதுமதிப்பு அபரிதமாய்க் கூடும்.

May 9, 2005

கனவே கலையாதே...

பலவருடக் கனவு அது.
ஒவ்வொரு முறையும்,
விமான நிலையம் சென்று
நண்பர்களை வழியனுப்பும்போதும்,
வரவேற்க்கும்போதும்....
என்று என்முறை வரும்?

இதோ அந்த கனவுநாள்...
பிரியும்துயரை தாங்கமுடியாமல்
ஊரிலேயே தங்கிவிட்ட தாயும்,துணைவியும்.
சோகத்தை மனதிலே தேக்கி
இன்முகத்துடன் தம்பியும்,தந்தையும்..

எத்தனையோ நண்பர்களை வழியனுப்பியிருக்க,
என்னை வழியனுப்ப யாரும் வரவில்லையே என
எண்ணிக்கொண்டிருந்தபோதே,இன்ப அதிர்ச்சியளித்து
இருநண்பர்கள் தோளணைக்க..
தோடங்கிவிட்டது என் பயணம்.

புது நாடு,புது மக்கள், புது சூழல்...
எதுவும் ஒட்டவில்லை மனதில்.
ஒவ்வொரு நொடியும் யுகமாய்
கழிந்துகொண்டிருக்கின்றன,
பிரியமானவர்களின் பிரிவால்.

விரல்விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறேன்,
தாய்நாடு திரும்பப்போகும் நாளை...
போதும் இந்த அயல் நாட்டு மோகம்...
கனவாகவே கலைந்திருக்கலாம்
என் பலவருடக்கனவு.

--------------------------------------------------------------------------------------------
கடந்த வாரம் என் நண்பன் ஒருவன் பணிநிமித்தம் அமெரிக்கா சென்றான்.
இன்று அவனுடன் தொலைப்பேசியப்பின், அவன் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக எழுதியதுதான் மேலே உள்ளது.

May 5, 2005

காதல் இலக்கணம்

சாதல், காதலின் கடைசிப்படி அல்ல...
உண்மைக்காதல், உயிர்கள் சேர்வது,பிரிவது அல்ல...

உடல்களால் பிரிந்தாலும்,
உள்ளத்தால் இணைவதே காதல்.
வாழ்க்கைச்சூழல் பிரித்தாலும்,
மனம் பிறழாமல் வாழ்வதே காதல்.

காதல்...காதல்...காதல்...
காதல் போயின்,
வீழேல்...வீழேல்...வீழேல்...

May 4, 2005

மீண்டும் அந்த நாட்கள் ?!?

சென்ற பதிவில், பள்ளியில் நடந்த தேர்தலைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதைப் பற்றி தெர்ந்துகொள்ள வேண்டுமென ஏராளமானவர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக(முக்கியமாக,இடைத்தேர்தல் காலம் என்பதால்,கழக உடன்பிறப்புகளும்,ரத்தத்தின் ரத்தங்களும் அவர்களுக்கே தெரியாத ஏதாவது குறுக்குவழி என்மூலம் கிடைக்குமா என அலைவதாக ஒரு சேதி)இன்றுகாலை,ரகசிய போலீஸிலிருந்து நம்பத்தகாத தகவல் வந்தால்,பல அவசரமான வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். 'பில்ட் அப்' போதும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே சொன்னது போல, பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான்.இரு பிரிவுகள் (A,B) ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும்.ஏழிலிருந்து எட்டாம் வகுப்பு போனவுடன்,அந்தவருடத்திற்க்கான பள்ளி மாணவத்தலைவர், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தலைமைசெயலகத்திலிருந்து அறிவிப்பு வந்தது. அதற்கு முந்திய வருடம்வரை இந்தமாதிரி தேர்தலோ,பள்ளி மாணவத்தலைவர் பதவியோ இருந்ததில்லை. பாராளுமன்றம் போல ஒரு குழு இருக்கும்.சபாநாயகர் எட்டாம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களிலிருந்து, அமைச்சர்களும், இணை,துணை அமைச்சர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அவர்களுக்கு இலாக்காக்களும் ஒதுக்கப்படும்.பிரதி வியாழன் மன்றம் கூடி மக்கள் எழுப்பும் பிரச்சனைகளை(பள்ளிக்கு வெளியே இருக்கும் கடைகளில் விற்க்கும் திண்பண்டங்களில் 'ஈ" மொய்க்கிறது. சுகாதார அமைச்சர் சரியாக செயல்படுவதில்லை -சாம்பிள் பிரச்சனை ) ஆராய்ந்து தீர்வளிக்கும்.தீர்க்கமுடியாத பிரச்சனைகள், ஜனாதிபதிக்கு போகும்.(அப்துல் கலாம் இல்லீங்கோ...தலைமைஆசிரியருக்கு).நானும், துணை உணவு அமைச்சராக இருந்ததாக நினைவு.

இந்தமுறை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்,எங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருந்தது.சில விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டது.அதன்படி,போட்டியாளர்கள் எட்டாம் வகுப்பிலிருந்து மட்டும் இருக்கவேண்டும்.ஒரு பிரிவிற்க்கு இரண்டு பேர். ஆக மொத்தம் நான்கு போட்டியாளர்கள். அதிக ஓட்டு பெறுபவர் பள்ளி மாணவத்தலைவராகவும், இரண்டாமிடம் பெறுபவர் உதவி பள்ளி மாணவத்தலைவராகவும் பதவி வகிப்பர். நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ஓட்டளிக்க தகுதியுடையவர்கள்.

நான் B' பிரிவு மாணவன்.முதலில் வகுப்பு மாணவர்கள் என்னையும், ஜெயக்குமார் என்ற மற்றொரு மாணவரையும் தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்தார்கள்.நாங்களும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். உணவு இடைவேளையில்தான் பிரச்சாரம் சூடுபிடிக்கும். ஆசிரியர் உபயோகிக்கும் மேஜைதான் மேடை. அதில் ஏறி நின்றுக்கொண்டு பிரசாரம் செய்வோம்.மேஜை இல்லாவிடில், ஏதாவது ஒரு வகுப்பு தோழனின் தோளில் ஏறி அமர்ந்துக்கோண்டு பேசுவேன்.அப்போதும் ஏதோ ஒன்று குறைவதாகத் தோன்றியது.ம்ம்ம்...போஸ்டரோ,நோட்டீஸோ அடித்தாலென்ன எனத்தோன்றியது. தொண்டர்களை அழைத்து பேப்பர்களில் வாசகங்கள் எழுதி ,பள்ளியில் உள்ள சுவர்கள், மரங்களில் எல்லாம் ஒட்டவைத்தோம்.அதுவும் போதாமல், ஒரு அச்சகத்தில் கொடுத்து நோட்டீஸாகவே அடித்தோம். வேண்டிய வாசகங்களை தமிழாசிரியர் எழுதிகொடுத்தார். பணத்தை வகுப்பு மாணவர்களிடமிருந்து வசூலித்துக்கொடுத்தோம். இவ்வாறாக தேர்தல் களம் சூடுபிடித்தது.நடுவில் ஏதாவது தகராறுகள் எதிர்தரப்பினருடன் ஏற்ப்படும்.அந்தசமயங்களில், இருதரப்பும்,உப்புமூட்டை சண்டையில் மோதிக்கொள்வோம்.அதாவது, நான் என்வகுப்பு தோழன் முதுகில் உப்புமூட்டை ஏறிகொண்டு காலால் எதிர்தரப்பு மூட்டையுடன் உதைத்துக்கொள்வோம்.

தேர்தல் நாளும் வந்தது.அனைத்து வகுப்பு ஆசிரியர்களின் ஆதரவும் எங்களுக்கேயிருந்தது.அவர்கள் வகுப்பு மாணவர்கள் ஓட்டளிக்கும் ஹாலுக்கு செல்லும்போது, எனக்கும்,ஜெயக்குமாருக்கும் ஓட்டளிக்குமாறு கூறிக்கொண்டிருந்தார்கள்.ஓட்டுப்பதிவும் முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை தலைமை ஆசிரியரின் அறையில் நடந்தது. 212 ஓட்டுகள் பெற்று நான் முதலிடத்திலும், 162 ஓட்டுகள் பெற்று ஜெயக்குமார் இரண்டாமிடத்திலும் வெற்றிப்பெற்றோம்.எதிர்தரப்பு 28, 24 ஓட்டுகள் பெற்று படுதோல்வியடைந்தது. அடுத்தநாள்,என் தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், இனிப்புகள் வழங்கி வெற்றியைக்கொண்டாடினோம்.

மாணவத்தலைவராக நான் பார்த்த வேலைகள். ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலைக்கூட்டத்தில் தேசியக்கொடி தலைமை ஆசிரியரால் ஏற்றப்படும்.அக்கூட்டத்தை மாணவத்தலைவர்தான் நடத்தவேண்டும்.கூட்டம் நடக்கும்போது நான் நிற்க்குமிடத்தில் காலை சூரியனின் ஒளி நெரடியாகத்தாக்கும். வேர்த்துவழிந்துக்கொண்டு,'ப' வடிவில் நடந்து சென்று தலைமைஆசிரியரை கொடிக்கம்பமிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து,கொடி ஏற்றசெய்ய வேண்டும்.பின், உறுதிமொழியை நான் வேர்த்துவழிந்துக்கொண்டு படிக்க அனைத்து மாணவர்களும் வழிமொழிவார்கள்.அதைதவிர, மாணவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகளெனில்,முடிந்த அளவு தீர்த்துவைக்க முயற்சிப்பேன்.
இப்போது அதையெல்லாம் நினைத்து பார்க்கும்போது, ஆச்சர்யமாகயிருக்கிறது. பழைய நண்பர்களை சந்திக்கும்போது இதையெல்லாம் பேசி மகிழ்வோம்.ம்ம்ம்ம்....ஏக்கமாக இருக்கிறது....மீண்டும் அந்த நாட்கள் திரும்புமா ??

May 2, 2005

ஞாபகம் வருதே.....

(இரண்டு மனம் வேண்டும்.........ராகத்தில் பாடவும்)

இரண்டு இட்லி வேண்டும்..
சர்வரிடம் கேட்பேன்..
சட்னியோடு ஒன்று...
சாம்பாரோடு ஒன்று...
இரண்டு இட்லி வே.......ண்டும்.

ஒரு செட்டு இட்லி இரண்டானால்....
ஒரு செட்டு பூரி இரண்டானால்....
ஒரு செட்டு தோசை இரண்டானால்....
ஒரு செட்டு தோசை இரண்டானா...ஆ...ஆ....ஆ......ல்....
தோட்டுக்கொள்ள சட்னி,சாம்பார் போதாதே..ஏஏஏ......
இரண்டு இட்லி வே...ஏ...ஏ..ஏ....ண்டும்.......

அரிசியின் தண்டனை மாவு வழி...
மாவின் தண்டனை தோசை வழி.....
தோசையின் தண்டனை வயித்துவலி..இ...இ...இ.....

தோசையின் தண்டனை வயித்துவலி...
வயித்துவலி..தீர என்ன வழி.....
இரண்டு இட்லி வே...ஏ...ஏ..ஏ....ண்டும்.......

*#*#*#*#*#*****************#*#*#*#*#*#*#**#*#*#*#*#**#**##**#*#*

ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை,எங்கள் ஊரில் உள்ளகிருஸ்துவ பள்ளியில்தான் படித்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, படிப்பைத்தவிர, மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், நான்காம் வகுப்புமுதல் எட்டாம் வகுப்புவரையிருக்கும் மாணவர்களை, நான்குப்பிரிவுகளாக, ஒவ்வொரு வகுப்பிலும் பிரித்து, வியாழன்தோறும் 4-530 மணி வரையில்,ஏதாவதொரு போட்டி (நாடகம் ,பாட்டு, ஓவியம்,பேச்சுப்போட்டி,நடனம்,மாறுவேடம் இன்னபிற)நடத்துவார்கள்.
அந்தந்த வகுப்பாசிரியர்களே, வெற்றி அணியை மதிப்பெண் வழங்கி தேர்ந்து எடுப்பார்கள்.பிறகு 4-8 வகுப்புவரை உள்ள நான்கு அணிகளின்,அந்த வாரத்தின் மதிப்பெண்களை சேர்த்து,அதிக மதிப்பெண்களை பெற்ற அணி அந்த வாரத்தின் வெற்றி அணியாக அறிவிக்கப்படும். ஆண்டு
இறுதியில்,அதிகமுறை வென்ற அணி,ஆண்டு விழாவில்,சிறந்த அணியாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்குவார்கள்.

அந்தவகையில்,நான் ஒரு அணியிலிருந்தேன்.மேலும்,அந்தவருடத்தில்,பள்ளி
மாணவத்தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன்.(அது ஒரு பெரியகதை.ஒரு சட்டசபை தேர்தல் போலயிருந்தது.அதைப் பற்றி தனியாக எழுதுகிறேன்.).எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குதான் பொறுப்பு அதிகமாகயிருக்கும். ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்றார்போல மாணவர்களை தேர்ந்தெடுத்து,அவர்களுக்கு பயிற்சியளித்து, வெற்றிப்பெற கடும்முயற்சி எடுப்போம்.அந்தவயதில் மிகவும் உற்சாகமாக எல்லாப் போட்டிகளிலும்
பங்குகொண்டு வெற்றிப்பெற பாடுபடுவோம்.உண்மையில் இந்தப்போட்டிகள், மாணவர்களுக்குள் இருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்தது.

மேற்க்கண்ட பாடல், ஒரு பாட்டுப்போட்டியில்,நான் எழுதியது,பாட்டுப்போட்டியென்று அறிவித்துவிட்டார்கள்.ஆனால், பாடல்களை படத்தில் உள்ளதுபோல் அப்படியே பாடக்கூடாது.வெண்டுமானால்,அதே ராகத்தில் பாடலாம்.வியாழன் மதியம்வரை எந்த பாடல்களும் தயாராகவில்லை.மேலும் அந்த ஆண்டில்,அதுதான் கடைசிப்போட்டி. முதலிடம் பெற வெண்டுமெனில்,இந்தப்போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டியக் கட்டாயம். ஜூனியர்களெல்லாம் பாட்டுக்காக காத்திருந்தார்கள். பாட்டு எழுதி பின் அவர்களுக்கு பயிற்சிவேறு அளிக்கவேண்டும்.அந்த நெருக்கடியான சமயத்தில் எழுதிய பாடல்தான் மேலே உள்ளது. இன்றைக்கும் ஒரு வார்த்தைக்கூட மறக்கவில்லை.

அதே போட்டிக்கு என் அணியை சேர்ந்த மாணவன் எழுதிய பாடல்,முழுவதும் நியாபகமில்லை.

A-புள்ள கருப்பாயி...
B-புள்ள கருப்பாயி...
C-புள்ள கருப்பாயி...
D-புள்ள கருப்பாயி.......

வேலவெட்டி இல்லாம வெறகு வெட்டப்போனேனே.....
வெட்டிவெலை சென்சிக்கினு வீணா பொழுதைக்கழிச்சேனே......

A-புள்ள கருப்பாயி...
B-புள்ள கருப்பாயி...
C-புள்ள கருப்பாயி...
D-புள்ள கருப்பாயி....... - இப்படியேப்போகும் பாடல்.

கடைசியில்....அந்த ஆண்டிற்க்கான சிறந்த அணியாக எங்கள் அணி தேர்வு செய்யப்பட்டது.