Search This Blog

October 23, 2009

இரயில் பயணங்களில்...T.ராஜேந்தருடன்...

கடந்த மாதத்தில் அலுவலக விஷயமாக சென்னை செல்ல வேண்டியிருந்தது. 2.50க்கு வரவேண்டிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாக வந்தது. C2 கோச்'சில் டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.ஏறி அமர்ந்து ஒரு வெஜிடபிள் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு, ப்ளாட்பாரத்தில் வாங்கிய குமுதத்தை பிரித்து அரைத்தூக்கத்துடன் மேய ஆரம்பித்தேன்.திடீரென எனக்குப்பின்புறம் சில ஆச்சர்யக்குரல்கள் 'ஹ்லோ சார்,நீங்க எப்படி ட்ரெய்ன்ல, நாங்க எதிர்ப்பார்க்கவேயில்லை,ஒரு ஆட்டோக்ராப் சார்,ஒரே ஒரு போட்டோக்ராப் உங்ககூட சார்' என இரண்டு,மூன்றுப்பேர் என் சீட்டிற்குபின் நின்றுக்கொண்டிருந்தார்கள். அரைக்குறை தூக்கத்திலிருந்து வி(மு)ழித்த நான்,'என்னாடா இது,என்கிட்ட எதுக்கு ஆட்டோக்ராப்/போட்டோ எடுக்க ஆசைப்படுறாங்க? ஒருவேளை நான் சிறந்த ப்ளாகர்'னு தமிழ்மணத்தில் அறிவித்து,அது சன் ப்ளாஷ் நியூஸ்'ல வந்து நான் பெரிய ஆள் ஆகிட்டனோ'ன்னு நம்ம்ம்...பி...... திரும்பிப்பார்த்தா,எனக்கு பின்வரிசையில் ராஜேந்தர் அமர்ந்திருந்தார்.அந்த ரயில் ரசிகர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு,அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு அவர் மீண்டும் அவர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டார். எனக்கு ஏற்ப்பட்ட கடுப்பில் அவரைக்கண்டுக்கொள்ளாமல் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் என் காதுகள் பின்னால் நடப்பவற்றை 'பார்ட் டைம்'மாக கவனிக்க ஆரப்பித்தது.அந்த சில ரசிகர்களுக்குப்பிறகு வேறு யாரும் அவரைக்கண்டுக்கொள்ளவில்லை. அந்த ஏசி கோச்சில் அமர்ந்திருந்த பலரும் புத்தகத்திலும்,லேப்டாப்பிலும்,மொபைலிலும்,தூக்கத்திலும் மூழ்கிவிட்டார்கள். அவ்வப்போது நடமாடிய கேண்டீன் ஆட்கள் அவரைப்பார்த்து, சார்..காபி சாப்ட்ரீங்களா,வடை,பஜ்ஜி சூடா இருக்கு சாப்ட்ரீங்களா.. என தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவருக்கு தூக்கம் வ்ரவில்லைப்போலும்.அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துடன் பேச ஆரம்பித்தார். அவர்களிடம் இரண்டு வயது பெண் குழந்தை இருந்தது. அதைத்தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். கையாலும்,வாயாலும் தாளம்போட்டு சில சேட்டைகள் செய்துக்காட்டிக் கொண்டிந்தார். அந்தக் குழந்தையும் அவரை மாமா என அழைத்து ஒட்டிக்கொண்டது.சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் அலுத்துப்போய் தூங்கிவிட்டார். வண்டி ஜோலார்பேட்டையை நெருங்கியது.நான் பிறந்து வளர்ந்த ஊர்,மேலும் என்னைப்பார்க்க என்னுடைய சகோதரர் வந்திருந்தார். வண்டி நின்றப்பின் சகோதரருடன் பேசிவிட்டு மீண்டும் என் கோச்சில் ஏறி வாசல்கதவருகே கம்பியைப்பிடித்து நின்றுக்கொண்டே,என்னுடைய 'ப்ளாஷ்பேக்கில்' மூழ்கிப்போனேன். ஏறக்குறைய 8 வருடங்கள் ஜோலார்பேட்டை - காட்பாடி ரயில்தடத்தில் பயணித்திருக்கிறேன். 3 வருடங்கள் குடியாத்தம் பாலிடெக்னிக் படிப்புக்கும்,3 வருடங்கள் காட்பாடியில் என்ஜினியரிங் படிப்புக்கும்,மேலும் இரண்டு வருடங்களுக்கு அதே கல்லூரியில் வேலைபார்க்கவும் என, இவ்வழித்தடம்,என் வாழ்க்கைப்பாதையில் ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அந்த பசுமை நினைவுகளின் தாக்கத்தில் கட்டுண்டுக்கிடந்த நேரத்தில்,திடிரென ஒருக்குரல் 'பார்த்து ஜாக்கிரதையா நில்லுங்க சார்' என ஒலித்தது.யாரென திரும்பி பார்த்தால் டி.ஆர் நின்றுக்கொண்டிருந்தார்.நானும் 'அதெல்லாம் ஓகே சார்.எனக்கு இதுப்போல படியில் நின்று பயணிப்பதில் 8 வருட அனுபவம் இருக்கு' என்றேன். அவரும் 'ஆமா சார்,நானும் காலேஜ் படித்த காலத்தில் பல வருடம் ரயிலில் பயணித்திருக்கிறேன்.அந்த பழைய அனுபவங்களை பார்க்கவே இப்போதும் விமானத்தில் சென்னைப்போகாமல், ரயிலில் வந்தேன்' என்றார். அவர் இவ்வாறு இயல்பாக பேச ஆரம்பிக்கவே, நானும் அவருடன் உரையாட ஆரம்பித்தேன்.என் பெயரையும்,மற்ற விவரங்களையும் விசாரித்தார்.அவர் 'ஒரு தலை காதல்' என ஒரு புது திரைப்படம் எடுக்க் இருப்பதாகவும், அதற்கான 'கதாநாயகி'த் தேர்வுக்கு பெங்களூர் வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் ' என்னங்க சார், ஒரே இரயிலில் வருகிறோம்.யாரும் மற்றவரைப் பார்த்து புன்னகைப்பதோ,அறிமுகப்படுத்திக்கொள்வதோ இல்லை. பேச்சுத் துணையில்லாமல் 4-5 மணி நேரம் ஏசி கோச்சில் உட்கார்ந்தபடி பயணிப்பது கடினமாக உள்ளது.நான் உங்களோடு பேசுவதில் உங்களுக்கு ஆட்சேபணையில்லையே' எனக்கேட்டார். அதுவரை அவரைப்பற்றி நான் கொண்டிருந்த அபிப்ராயம் மாறி,அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்த மற்ற சிலப்பயணிகளும் கோச்சிலிருந்து வெளியே வந்து கதவருகே இருக்கும் நடைப்பாதையில் நின்றுக்கொண்டு அவருடன் பேச ஆரம்பித்தார்கள்.அவர் புதிதாக எடுக்கப்போகும் படத்தைப்பற்றி பேச்சு திருப்பியது. ' சார்,இது மதுரைய சார்ந்த கல்லூரி மாணவர்கள்,அவர்களுக்குள் ஏற்படும் காதல் பற்றிய கதை' என ஆரம்பித்தார்.நான் உடனே 'என்னங்க சார்,நீங்களும் மதுரப்பக்கம் போறீங்க.ஏற்கனவே சுப்ரமணியபுரம்,வெண்ணிலா கபடிக்குழு, மதுரைசம்பவம்'னு வந்துட்டு இருக்கு' என்றேன். 'நான் இந்தக்கதைய 1 வருஷத்துக்கு முன்பே தயார் செய்துவிட்டேன்,மற்றசிலக்காரணங்களால் தாமதமாகிவிட்டது.அடுத்த மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து ஏப்ரலில் வெளியிட்டு விடுவேன்' என கூறினார்.அந்த சமயத்தில் எங்களைச்சுற்றி 6-7 பேர் கூடிவிட்டிருந்தார்கள். வண்டியும் காட்பாடியை நெருங்கிக் கொண்டிருந்தது.


காட்பாடியில் இறங்கவேண்டியவர்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள்.அவர்களில் வயதான ஒரு தம்பதியினரும் இருந்தார்கள். அவர்களும் டி.ஆருடன் அறிமுகப்படுத்திக்கொண்டு,'உங்கள் பாட்டு என்றால் எங்களுக்கு நிறையப்பிடிக்கும்.எங்களுக்காக பாட முடியுமா என்றார்கள். வண்டி ப்ளாட்பாரத்தில் நுழைய ஆரம்பித்தது.அதைப்பார்த்த தம்பதியினர் வருத்தத்துடன், 'நீங்கள் பாடுவதை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு இல்லை' எனக்கூறினர். உடனே 'டி.ஆர்' அவர் பாக்கெட்டிலிருந்து ஒரு நாண்யத்தை எடுத்து,அருகிலிருந்த 'பாத்ரூம்' கதவில் தாளம் போட்டுக்கொண்டே 'வாடி என் மதுரக்காரக்கிளியே' எனத்தொடங்கும் பாடலை ராகத்துடன் பாட ஆரம்பித்தார்.அடுத்த இரண்டு நிமிடங்களில் வண்டி காட்பாடி ரயில்நிலையத்தில் நின்றது. அந்த வயதான தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'இந்த நாளை என்றைக்கும் மறக்கமாட்டோம்' என் 'டி.ஆரிடம் விடைப்பெற்று சென்றார்கள்.


வண்டியும் அங்கிருந்து கிளம்பியது. எங்களிடம் திரும்பிய அவர் ' வயசானவங்க சார்,நான் பாடாம இருந்திருந்தா,அது ஒரு குறையா அவங்களுக்கு இருந்திருக்கும்,அதனாலதான் உடனே பாட ஆரம்பிச்சேன்.ஏதோ என்னால முடிஞ்சது' என்றார். அவர் பாடியப்பாடல் அவரின் புதுப்படமான 'ஒரு தலை காதல் ' படத்திற்காக கம்போஸ் செய்திருக்கிறார்.அதை மறுப்படியும் தாளத்துடன் பாட ஆரம்பித்தார். ராகமும்,வரிகளும் வழக்கமான 'டி.ஆர்' டச்'சுடன் அருமையாக இருந்தது.அவர் பாடுவதை என் மொபைல் போனில் வீடியோவாக எடுத்தேன்.அதைக்கவனித்த அவர்,பாடி முடித்தவுடன் என்னிடம் ' மோகன், வீடியோவை 'internet'லோ வேறு யாருக்கோ கொடுத்து விடாதீர்கள்' வேண்டுமானால் 'அம்மாடி..ஆத்தாடி' பாடுகிறேன்,அதை எடுத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். நானும் ஒன்னும் கவலப்படாதீங்க சார்,அப்படியெல்லாம் பண்ணிடமாட்டேன்' எனக்கூற,அவர் 'அம்மாடி...ஆத்தாடி' பாட்டை பாட ஆரம்பித்தார்.


அடுத்த இரண்டு மணிநேரம்.மேலும் பல பயணிகள் வந்து அவருடன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்கள். பாடச்சொல்லிக் கேட்கும் போதெல்லாம், தயங்காமல் தாளத்துடன் பலப்பாடல்களை பாடினார். அரட்டை அரங்கம், தமிழக அரசியல்,சினிமா என பலரும் கேட்டக் கேள்விகளுக்கு தயங்காமல் வெளிப்படையான பதில் அளித்தார். ஏதோ ஒரு கேள்விக்கு 'தமிழகத்தில் பெண்கள் டி.வி சீரியலுக்கும்,ஆண்கள் டாஸ்மாக்'குக்கும் அடிமையாகிவிட்டனர்' என்றார்.வண்டி பெரம்பூரை நெருங்கும்போது கூட்டம் கலைந்தது.


என்னிடம் வந்த அவர் ' நான் காலேஜ் படிக்கும்போது,ரயில் பாத்ரூம் கதவில் காசை வைத்து தாளம் போட்டு பாட்டு பாடுவது வழக்கம், இன்று கதவருகே யாரும் இல்லாதபோது வந்து காசை எடுத்து இரண்டு தட்டுதட்டி பழைய அனுபவத்தைப் பெறலாம் என நினைத்திருந்தேன்.ஆனா இப்போ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்,பலப்பாடல்களை உங்கள் அனைவருக்கும் பாடிக்காட்டியது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு மோகன்' எனக்கூறினார்.இதுநாள்வரை பத்திரிக்கை,படங்கள்,டிவி மூலமாக அவரைப்பற்றி நான் கொண்டிருந்த சில தவறான அபிப்ராயங்கள் அந்த ரயில்பாதையில் விழுந்து சிதைந்தது.