Search This Blog

January 14, 2011

சிறுத்தை - திரைவிமர்சனம்கார்த்தி முதல்முறையாக பிக்பாக்கெட் திருடன்,முரட்டுப்போலிஸ் அதிகாரி என இரட்டை வேடம்.ஏற்கனவே ரஜினி,கமல்,விஜயகாந்த்,விக்ரம் மற்றும் சூர்யா என அனைவருமே அதகளம் பண்ணிய வேடத்தில் கார்த்தி என்ன வித்தியாசம் காட்டப்போகிறார் என்ற கேள்வி படம் ஆரம்பிக்கும்போது இருந்தது.ஏற்கனவே சூர்யா 'காக்க காக்க'வில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்'ஆகவும், 'சிங்கத்தில்' சீறும் போலிசாகவும் வெளுத்துக் கட்டியதில் கார்த்திக்கு இந்தப்படம் மிகப்பெரிய சோதனைக்களம். பரிட்சையில் தேறியிருக்கிறாரா கார்த்தி?

கதைக்காக இயக்குனர் சிவா பெரிதாக சிரமம் எடுக்கவில்லை.ஏற்கனவே ஏகப்பட்ட ஹீரோக்கள் 'மாஸ்' ஹீரோவாக நடித்து வெற்றிபெற்ற கதைதான். பிக்பாக்கெட் திருடனான கார்த்தி(ராக்கெட் ராஜா),சந்தானத்துடன் சேர்ந்து பல்வேறு திருட்டுக்களை செய்துகொண்டிருக்கிறார். அவரிடம் சந்தர்ப்பவசத்தில் ஒரு நான்கு வயது பெண் குழந்தை வந்து சேர்கிறது. அக்குழந்தை கார்த்தியை 'அப்பா' என சொந்தம் கொண்டாடுகிறது. போதாதக்குறைக்கு ஒரு பெரியக் கொலைக்காரக் கும்பல் கார்த்தியையும்((ராக்கெட் ராஜா)),குழந்தையையும் கொல்ல துரத்துகிறது.அப்போது 'போலிஸ்' கார்த்தி(ரத்னவேல் பாண்டியன்-IPS)' எண்ட்ரி ஆகிறார்.இருவரையும் காப்பாற்றிவிட்டு கத்திக்குத்துப்பட்டு உயிர் துறக்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் போலிஸ் DSP ரத்னவேல் பாண்டியன்-IPS ஆந்திராவில் உள்ள ஒரு ஊருக்கு செல்கிறார்.அந்த ஊரே ஒரு ரவுடிக்கும்பலிடம் அடிமைப்பட்டு இருக்கிறது. சீறும் சிறுத்தையாக(அப்பாடா…தலைப்புக்கு காரணம் சொல்லியாச்சி) மாறும் ‘பாண்டியன்’ வில்லனின் மகனின் மரணத்துக்கு காரணமாகிறார். வில்லனின் தம்பி(ம(மெ)கா வில்லன்) ஊருக்குள் நுழைந்து ‘பாண்டியனை’ போட்டுத்தள்ளுகிறார். ஆனால் வழக்கம்பொல ஹீரொ இறப்பதில்லை.அவரைக்காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறார்கள் அவருடன் பணிப்புரியும் போலிஸ்காரர்கள். அவர் உயிர்வாழப்போவது சிலக்காலமே என்பதால் அவர்போலவே இருக்கும் ‘ராக்கெட் ராஜா’விடம் குழந்தையை போலிஸ்காரர்கள் சேர்க்கிறார்கள்.

பாண்டியன் இறந்தவுடன் ‘ராக்கெட் ராஜா’ போலிஸ் வேடம் போட்டுக்கொண்டு குழந்தை மற்றும் சந்தானத்துடன் ஆந்திராவுக்கு சென்று வில்லன்களை சிரமம் அதிகமின்றி அழித்து ஊர் மக்களைக் காப்பாற்றி தமனாவின் கைப்பிடிக்கிறார்.

பிக்பாக்கெட் திருடனான 'ராக்கட் ராஜா' கார்த்தி 'காட்டுப்பூச்சி' சந்தானத்துடன் கூட்டணிப் போட்டுக்கொண்டு கிடைத்ததை எல்லாம் திருடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு கல்யாண வீட்டில் திருடச்செல்லும்போது தமனாவுடனான சந்திப்பு,பார்த்தவுடன் காதல் என முதல் பாதி காமெடியும் காதல் கலாட்டாவாகவும் செல்கிறது.காமெடியில் சந்தானம் இந்தமுறை கார்த்தியுடன் சேர்ந்து கலக்குகிறார்.கவுண்டமணிப்போல 'டைமிங் காமெடி' நன்றாக செல்லுபடியாகிறது.

கார்த்தி காமெடியிலும் நடிப்பிலும் கலக்குகிறார். தங்கியிருக்கும் ஏரியாவில் இருக்கும் பெண்களிடம் சண்டைப்பிடிப்பதும்,சந்தானத்தை கல்யாண வீட்டில் மாட்டிவிடுவதும், சாப்ட்வேர் என்ஜினியராக நடிக்க ‘மயில்சாமியின்’ ட்ரெஸ்சை ஆபிஸில் உருவி தமனாவுடன் ஜூட்விடுவது என கலந்துக்கட்டி அடிக்கிறார். கார்த்தியும் சந்தானமும் தங்கியிருக்கும் வீட்டிலிருக்கும் எல்லாப்பொருள்களும் திருட்டுப்பொருள்களாலேயே வடிவமைத்திருப்பதில் ஆர்ட் டைரக்டரின் திறமை மிளிர்கிறது.

தமனா வழக்கமான ஹீரோயின்,எவ்வித சிரமுமின்றி கார்த்தியைக் கண்டவுடன் காதலில் விழுந்து, கார்த்தியை கவுக்க அடிக்கடி இடுப்பைக்காட்டி கிறங்கடித்து இரண்டு டூயட்டில் ஆடிப்பாடி, கார்த்தியை அப்பா எனக்கூப்பிடும் குழந்தையால் அவரை சந்தேகப்பட்டுப்பிரிந்து பிறகு சேர்கிறார்.

ரத்னவேல் பாண்டியன் வேடத்திலும் 'கார்த்தி' மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.வேறு எந்த ஹீரோவின் சாயலும் விழாமல்,முக்கியமாக சூர்யாவின் சாயலின்றி,அவ்வேடத்திற்கு தேவையான தீரத்துடனும், மீசை முறுக்குடனும் துடிப்பாக நடித்திருக்கிறார். ‘போலிஸ்காரனோட உடுப்புக்கூட டூட்டி பார்க்கும்டா’ என்பதை சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.உண்மையிலேயே இந்தப்படம் கார்த்தியை ஒரு மாஸ் ஹீரோவாக உருவகப்படுத்தும்.அதற்கு உண்டான உழைப்பையும், மிகைப்படுத்தாத நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.

'ராஜா ராஜா,ராக்கெட் ராஜா' பாடல் தாளம்போட வைக்கிறது.மற்ற இரண்டு டூயட்கள் பிரமாதம் என சொல்லமுடியவில்லை.பிண்ணனி இசை நன்றாக வந்திருக்கிறது.

அண்ணனுக்கு 'சிங்கம்' போல தம்பிக்கு 'சிறுத்தை' ஒரு பக்கா மசாலா மாஸ் என்டர்டைனர்.

A Good time pass.

September 10, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் - விமர்சனம்கதை என்ற ஒன்று பெரிதாக இல்லாமல் இரண்டேமுக்கால் மணி நேரம் ஒரு படத்தை முழுதாக பார்க்கவைக்கமுடியுமா ? என்ற சவாலில் டுடோரியலில் சென்று படித்து first class'ல் பாஸ் பண்ணியிருக்கும் படம்தான் பாஸ் (எ) பாஸ்கரன்...

கதை என்ன என்று சொல்லவேண்டுமென்றால்..... இம்ம்.....ம்...ம்ம்...... ஓகே.... ஒகே....ஓகே.... ஏகப்பட்ட அரியர் வைத்துவிட்டு, 5 வருடங்களாக பரிட்சை எழுதி பாஸ் பண்ண சீரியசாக டிரை'கூட பண்ணாத, பொறுப்பு என்றால் கிலோ என்ன விலை என்றுக் கேட்கும் ஹீரோ, தான் போட்ட சபதத்தில் ஜெயிக்க (வேறு என்ன...தங்கச்சிக்கு ஆறே மாதத்தில் கல்யாணம், அடுத்தபடியாக காதலியை கைப்பிடிக்கும் லட்சியம்) நண்பனின் உதவியுடன் டுடோரியல் ஆரம்பித்து, அதில் சேரும் சில/பலரை 10வது பாஸ் செய்யவைத்து சபதத்தை நிறைவேற்றுகிறார்...(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......அப்பாடா...... கதைய சொல்லிட்டேன்...).

ஆர்யா,பொறுப்பில்லாத பையனாக,அப்பா இல்லாத குடும்பத்தில், மாட்டாஸ்பத்திரியில் டாக்டராக இருக்கும் கல்யாணமாகாத அண்ணன் சம்பாத்தியத்தில், டிவி காம்பயர் போல எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கும் தங்கை, பையன் பிட் அடித்தாவது பாஸ் பண்ணவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் அம்மா என்ற குடும்பத்தில் இருக்கிறார்.அவருக்கு மாமனார் காசில் சலூன் கடை(தல தளபதி சலூன் கடை) வைத்திருக்கும் சந்தானம் ஒரேஏஏஏஏஏஏஏஏஏ நண்பன்டாஆஆஆஆஆஆ............

ஒருமுறை அரியர் எழுத ஏராளமான பிட்'களோடு செல்லும்போது பஸ்சில் நயனதாராவை சந்திக்கிறார்.அவரிடம் பிட் அடித்து எக்ஸாம் எழுத போவதாக சொல்கிறார். அடுத்து என்ன சீன் வரும்????? கரெக்ட்.அதேதான்... எக்ஸாம் ஹாலில் எக்ஸாமினர் நயனதாராவேதான். அடுத்து கல்யாணமாகாத அண்ணனுக்கு அவர் விரும்பும் விஜயலட்சுமியை அவர் வீட்டுக்கு அம்மாவுடன் சென்று பேசி முடித்துவிட்டு வெளியே வரும்போது.......யார் வருவாங்க????? ஹீரோயினேதான்... அவருக்கு அங்கு என்ன வேலை???? என்னங்க சார்...எவ்ளோ..............படம்பார்த்திருக்கிறோம்,இதுகூட தெரியாதா? அவர்தான் விஜயலட்சுமியோட தங்கச்சி.... அப்புறம் என்ன நடக்கும்??? அதே....அதேஏஏஏஏஏஏஏதான்....அண்ணன் கல்யாணத்தின்போது ஹீரோ,ஹீரோயினை சுற்றி...சுற்றி வந்து பாட்டு பாடுவார்...ஹீரோயினும் அவரை பிடிக்காததுப்போல் காட்டிக்கொண்டு,அவர் செய்யும் சேட்டைகளையெல்லாம் ரசித்துக்கொண்டிருப்பார். அதன்பிறகு நண்பனின் உதவியோடு ஹீரோயினுக்கு அவரின் காதலை தெரிவிக்க முயற்சிப்பார். பஞ்சாயத்துக்கு ஹீரோவின் அண்ணி வந்து, 'வேலைவெட்டியில்லாமல் சுற்றும் உனக்கு என்ன யோக்கியதை இருக்கு என் தங்கையை கல்யாணம் செஞ்சிக்க' என்று சூடுபறக்க கேட்க,ரோசப்படும் ஹீரோ வீட்டைவிட்டு வெளியேறி நண்பனின் தலையை(???) அடகு வைத்து, சபதத்தில் கடைசியில் ஜெயிக்கிறார்.

படத்தின் நிஜ ஹீரோ சந்தானம்தான். அவர் வரும் காட்சிகளெல்லாம் காமெடி களைக் கட்டுகிறது. 'நான் கடவுள்' வில்லனிடம், ஆர்யா+சந்தானம் கூட்டணி டுடோரியல் காலேஜ் நடத்த கடன் கேட்க ,அவரின் பையனையும் 10 பாஸ் பண்ண வைக்கவேண்டும் என்ற படா கண்டிஷனோடு கடன் கொடுக்கிறார்.
டுடோரியலில் ஆள் சேர்க்க போஸ்டர் அடித்து ஒட்டி, ஷகிலாவை பாடம் நடத்த வைத்து என சில,பல டகால்டி வேலைகள் என சந்தானத்தின் காமெடி கல்லா கட்டுகிறது. ஒவ்வொரு வசனத்திற்கும்,'கவுண்டர்' அட்டாக் கொடுக்கும் சந்தானத்தின் காமெடிக்கு தியேட்டரில் பயங்கர அப்ளாஸ்.
முதல் மூன்று பாடல்கள் நன்றாக இருக்கிறது.யுவனின் இசை சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில்தான் முதல்முறை பாடல்களைக் கேட்டேன்/பார்த்தேன். தேவையில்லாத இடத்தில் கடைசிபாடல் படத்தின் வேகத்தடையாக உள்ளது.

SMS இயக்குனரின் கைவண்ணத்தில் அவருக்கு அடுத்த வெற்றிகரமான படம்.கும்பகோணத்தை மையமாக வைத்து 4 துணை,4 இணை இயக்குனர்களோடு சேர்த்து படம் பண்ணியிருக்கிறார். முதல் பாடலின் பிண்ணணியில் 'விண்ணைதாண்டி வருவாயா' போஸ்டரின் முன்பு ஹீரோ நடனமாடுவதாக காட்சி வருகிறது. அதற்கு வெகுபின்பு வரும் வேறொரு காட்சியில், ஆர்யாவும்,சந்தானமும், 'ஏகன்'+ ' வில்லு' பட ரிலீசன்று படம் பார்க்க செல்வதாக வருகிறது..

முதல்பாதி மிகவும் மெதுவாக போகிறது,சந்தானம் வரும் இடங்களைத்தவிர. இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு பரவாயில்லை. சிலக்காட்சிகளுக்கு சந்தானத்திடமிருந்த 'கத்தரி' யை பயன் படுத்தியிருக்கலாம். க்ளைமாக்ஸில் படத்தை முடித்து வைக்க, 'சிவா' வருகிறார்.

ஐய்யய்யோ... நயனதாராவை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். 'யாரடி நீ மோகினி' லுக்கில் கொஞ்சம் வயதானவராக வற்றிப்போய் இருக்கிறார்.not bad.

Boss (a) Baskaran : Good Time pass.

March 3, 2010

'விண்ணைத்தாண்டி வருவாயா?

Will you cross the skies for me? காதலில் உருகிய,காதலை இறுக்கிய,காதல் கருகிய,காதலில் மருகிய பலப்பல நெஞ்சங்களின் வலித்துடிப்பை ஒளிவடிவமாக்கியுள்ள திரைக்காதல்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா?

வாழ்க்கைப்பாதையில் காதல் என்ற அத்தியாயத்தை ப(பி)டிக்காமல் கடந்தவர்கள் வெகு சிலர்தான்.நம்மில் பலர் வாழ்வின் ஏதாவதொரு கணத்தில் நாமும் காதலிக்கப்படுவோமா?, காதல் சூறாவளி நெஞ்சக்கடலில் மையம் கொள்ளுமா என்று ஏங்கியவர்கள்தான்.அந்த ஏக்கத்தையும், ஏற்படும் வலிகளையும்,எதிர்க்கொள்ளும் புயல்களையும்,இதமாய் கொல்லும் இன்பகணங்களையும்,தோற்றுப்போனால் ஏற்படுத்தும் மரண இம்சைகளையும் கலந்துக்கட்டி இரண்டுமணி நேரத்தில் நம்வாழ்வில் கடந்த காதல்க(ன)ணங்களை கலைத்துப்போடும் படம்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா?


கார்த்திக்,ஜெஸ்ஸி என்ற இருதுருவங்கள் ஏதோ ஒரு நொடியில் காதல் என்ற காந்தசக்தியால் ஈர்க்கப்பட்டு, சேரவும் முடியாமல்,பிரியவும் முடியாமல் காதலை களையாமல் வாழ்க்கையின் நிதர்சனத்தில் தொலைந்து போகிறார்கள்.கார்த்திக்காக சிம்பு - படம்முழுக்க 'விரல்வித்தைக்' காட்டி நடிக்காமல்,நடித்திருக்கும் முதல்படம்.ஜெஸ்ஸியாக திரிஷா - கார்த்திக்கைவிட ஒரு வயது மூத்தவர் என்ற தொற்றத்துடன், காதல் வயப்படும் மேல்-மத்தியவர்க்கப் பெண்களுக்கேயுரிய குடும்பமா? காதலனா? என்ற குழப்பத்துடன் வளையவருகிறார். படத்தின் பெரும்பகுதியை இவ்விருவருமே ஆக்ரமித்துக்கொள்வதால்,இவர்கள் பேசும் வசனங்களே படத்தை நகர்த்தி செல்வது இரண்டாம் பாதியில் சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த இடங்களை ரஹ்மானின் இசையும்,தாமரையின் வரிகளும் நிரப்பிவிடுகின்றன.

காதலை அனுபவித்து,அந்த அனுபவம் தந்த துயர்களையும்,கவிதையையும்,வலியையும் கலந்து வசனங்கள் எழுதுப்பட்டுள்ளன.இக்கதைக்கு சிம்பு சரியான செலக்ஷன்.சிம்புவின் காதல்களும்,அதன் தோல்விகளும் அனைவருக்கும் தெரியும்.அது வெகுவாக இந்த திரைக்கதையின் நம்பகத்தன்மைக்கு உதவியுள்ளது.

இம்மாதிரியான திரைப்படங்களுக்கு இசையும்,பாடல் வரிகளும் மிகவும் முக்கியம்.அந்த எதிர்ப்பார்ப்பை,உணர்வை சரியான வகையில் ரகுமானின் இசையும்,தாமரையின் பாடல் வரிகளும் வெளிப்படுத்தியுள்ளது.கேமிராமேனின் கைவண்ணம் படத்திற்கு ஒரு 'ரிச் லுக்' தருகிறது.மிகவும் சிறப்பான ஒளிப்பதிவு...

மொத்தத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா? ',காதல் என்ற பெரும்கடற்புயலில் சிக்கி சிதறுண்டு போனவர்களின் உள்காயங்களையும்,அதில் வெற்றிகரமாக பயணித்து கரைச்சேர்ந்தவர்கள் சந்தித்த சோதனைகளையும் படம்பிடித்துக்காட்டியுள்ளது...
'விண்ணைத்தாண்டி வருவாயா? - வந்தால் உன்னைச் சரணடைவேன்....

October 23, 2009

இரயில் பயணங்களில்...T.ராஜேந்தருடன்...

கடந்த மாதத்தில் அலுவலக விஷயமாக சென்னை செல்ல வேண்டியிருந்தது. 2.50க்கு வரவேண்டிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாக வந்தது. C2 கோச்'சில் டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.ஏறி அமர்ந்து ஒரு வெஜிடபிள் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு, ப்ளாட்பாரத்தில் வாங்கிய குமுதத்தை பிரித்து அரைத்தூக்கத்துடன் மேய ஆரம்பித்தேன்.திடீரென எனக்குப்பின்புறம் சில ஆச்சர்யக்குரல்கள் 'ஹ்லோ சார்,நீங்க எப்படி ட்ரெய்ன்ல, நாங்க எதிர்ப்பார்க்கவேயில்லை,ஒரு ஆட்டோக்ராப் சார்,ஒரே ஒரு போட்டோக்ராப் உங்ககூட சார்' என இரண்டு,மூன்றுப்பேர் என் சீட்டிற்குபின் நின்றுக்கொண்டிருந்தார்கள். அரைக்குறை தூக்கத்திலிருந்து வி(மு)ழித்த நான்,'என்னாடா இது,என்கிட்ட எதுக்கு ஆட்டோக்ராப்/போட்டோ எடுக்க ஆசைப்படுறாங்க? ஒருவேளை நான் சிறந்த ப்ளாகர்'னு தமிழ்மணத்தில் அறிவித்து,அது சன் ப்ளாஷ் நியூஸ்'ல வந்து நான் பெரிய ஆள் ஆகிட்டனோ'ன்னு நம்ம்ம்...பி...... திரும்பிப்பார்த்தா,எனக்கு பின்வரிசையில் ராஜேந்தர் அமர்ந்திருந்தார்.அந்த ரயில் ரசிகர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு,அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு அவர் மீண்டும் அவர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டார். எனக்கு ஏற்ப்பட்ட கடுப்பில் அவரைக்கண்டுக்கொள்ளாமல் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் என் காதுகள் பின்னால் நடப்பவற்றை 'பார்ட் டைம்'மாக கவனிக்க ஆரப்பித்தது.அந்த சில ரசிகர்களுக்குப்பிறகு வேறு யாரும் அவரைக்கண்டுக்கொள்ளவில்லை. அந்த ஏசி கோச்சில் அமர்ந்திருந்த பலரும் புத்தகத்திலும்,லேப்டாப்பிலும்,மொபைலிலும்,தூக்கத்திலும் மூழ்கிவிட்டார்கள். அவ்வப்போது நடமாடிய கேண்டீன் ஆட்கள் அவரைப்பார்த்து, சார்..காபி சாப்ட்ரீங்களா,வடை,பஜ்ஜி சூடா இருக்கு சாப்ட்ரீங்களா.. என தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவருக்கு தூக்கம் வ்ரவில்லைப்போலும்.அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துடன் பேச ஆரம்பித்தார். அவர்களிடம் இரண்டு வயது பெண் குழந்தை இருந்தது. அதைத்தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். கையாலும்,வாயாலும் தாளம்போட்டு சில சேட்டைகள் செய்துக்காட்டிக் கொண்டிந்தார். அந்தக் குழந்தையும் அவரை மாமா என அழைத்து ஒட்டிக்கொண்டது.சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் அலுத்துப்போய் தூங்கிவிட்டார். வண்டி ஜோலார்பேட்டையை நெருங்கியது.நான் பிறந்து வளர்ந்த ஊர்,மேலும் என்னைப்பார்க்க என்னுடைய சகோதரர் வந்திருந்தார். வண்டி நின்றப்பின் சகோதரருடன் பேசிவிட்டு மீண்டும் என் கோச்சில் ஏறி வாசல்கதவருகே கம்பியைப்பிடித்து நின்றுக்கொண்டே,என்னுடைய 'ப்ளாஷ்பேக்கில்' மூழ்கிப்போனேன். ஏறக்குறைய 8 வருடங்கள் ஜோலார்பேட்டை - காட்பாடி ரயில்தடத்தில் பயணித்திருக்கிறேன். 3 வருடங்கள் குடியாத்தம் பாலிடெக்னிக் படிப்புக்கும்,3 வருடங்கள் காட்பாடியில் என்ஜினியரிங் படிப்புக்கும்,மேலும் இரண்டு வருடங்களுக்கு அதே கல்லூரியில் வேலைபார்க்கவும் என, இவ்வழித்தடம்,என் வாழ்க்கைப்பாதையில் ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அந்த பசுமை நினைவுகளின் தாக்கத்தில் கட்டுண்டுக்கிடந்த நேரத்தில்,திடிரென ஒருக்குரல் 'பார்த்து ஜாக்கிரதையா நில்லுங்க சார்' என ஒலித்தது.யாரென திரும்பி பார்த்தால் டி.ஆர் நின்றுக்கொண்டிருந்தார்.நானும் 'அதெல்லாம் ஓகே சார்.எனக்கு இதுப்போல படியில் நின்று பயணிப்பதில் 8 வருட அனுபவம் இருக்கு' என்றேன். அவரும் 'ஆமா சார்,நானும் காலேஜ் படித்த காலத்தில் பல வருடம் ரயிலில் பயணித்திருக்கிறேன்.அந்த பழைய அனுபவங்களை பார்க்கவே இப்போதும் விமானத்தில் சென்னைப்போகாமல், ரயிலில் வந்தேன்' என்றார். அவர் இவ்வாறு இயல்பாக பேச ஆரம்பிக்கவே, நானும் அவருடன் உரையாட ஆரம்பித்தேன்.என் பெயரையும்,மற்ற விவரங்களையும் விசாரித்தார்.அவர் 'ஒரு தலை காதல்' என ஒரு புது திரைப்படம் எடுக்க் இருப்பதாகவும், அதற்கான 'கதாநாயகி'த் தேர்வுக்கு பெங்களூர் வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் ' என்னங்க சார், ஒரே இரயிலில் வருகிறோம்.யாரும் மற்றவரைப் பார்த்து புன்னகைப்பதோ,அறிமுகப்படுத்திக்கொள்வதோ இல்லை. பேச்சுத் துணையில்லாமல் 4-5 மணி நேரம் ஏசி கோச்சில் உட்கார்ந்தபடி பயணிப்பது கடினமாக உள்ளது.நான் உங்களோடு பேசுவதில் உங்களுக்கு ஆட்சேபணையில்லையே' எனக்கேட்டார். அதுவரை அவரைப்பற்றி நான் கொண்டிருந்த அபிப்ராயம் மாறி,அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்த மற்ற சிலப்பயணிகளும் கோச்சிலிருந்து வெளியே வந்து கதவருகே இருக்கும் நடைப்பாதையில் நின்றுக்கொண்டு அவருடன் பேச ஆரம்பித்தார்கள்.அவர் புதிதாக எடுக்கப்போகும் படத்தைப்பற்றி பேச்சு திருப்பியது. ' சார்,இது மதுரைய சார்ந்த கல்லூரி மாணவர்கள்,அவர்களுக்குள் ஏற்படும் காதல் பற்றிய கதை' என ஆரம்பித்தார்.நான் உடனே 'என்னங்க சார்,நீங்களும் மதுரப்பக்கம் போறீங்க.ஏற்கனவே சுப்ரமணியபுரம்,வெண்ணிலா கபடிக்குழு, மதுரைசம்பவம்'னு வந்துட்டு இருக்கு' என்றேன். 'நான் இந்தக்கதைய 1 வருஷத்துக்கு முன்பே தயார் செய்துவிட்டேன்,மற்றசிலக்காரணங்களால் தாமதமாகிவிட்டது.அடுத்த மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து ஏப்ரலில் வெளியிட்டு விடுவேன்' என கூறினார்.அந்த சமயத்தில் எங்களைச்சுற்றி 6-7 பேர் கூடிவிட்டிருந்தார்கள். வண்டியும் காட்பாடியை நெருங்கிக் கொண்டிருந்தது.


காட்பாடியில் இறங்கவேண்டியவர்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள்.அவர்களில் வயதான ஒரு தம்பதியினரும் இருந்தார்கள். அவர்களும் டி.ஆருடன் அறிமுகப்படுத்திக்கொண்டு,'உங்கள் பாட்டு என்றால் எங்களுக்கு நிறையப்பிடிக்கும்.எங்களுக்காக பாட முடியுமா என்றார்கள். வண்டி ப்ளாட்பாரத்தில் நுழைய ஆரம்பித்தது.அதைப்பார்த்த தம்பதியினர் வருத்தத்துடன், 'நீங்கள் பாடுவதை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு இல்லை' எனக்கூறினர். உடனே 'டி.ஆர்' அவர் பாக்கெட்டிலிருந்து ஒரு நாண்யத்தை எடுத்து,அருகிலிருந்த 'பாத்ரூம்' கதவில் தாளம் போட்டுக்கொண்டே 'வாடி என் மதுரக்காரக்கிளியே' எனத்தொடங்கும் பாடலை ராகத்துடன் பாட ஆரம்பித்தார்.அடுத்த இரண்டு நிமிடங்களில் வண்டி காட்பாடி ரயில்நிலையத்தில் நின்றது. அந்த வயதான தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'இந்த நாளை என்றைக்கும் மறக்கமாட்டோம்' என் 'டி.ஆரிடம் விடைப்பெற்று சென்றார்கள்.


வண்டியும் அங்கிருந்து கிளம்பியது. எங்களிடம் திரும்பிய அவர் ' வயசானவங்க சார்,நான் பாடாம இருந்திருந்தா,அது ஒரு குறையா அவங்களுக்கு இருந்திருக்கும்,அதனாலதான் உடனே பாட ஆரம்பிச்சேன்.ஏதோ என்னால முடிஞ்சது' என்றார். அவர் பாடியப்பாடல் அவரின் புதுப்படமான 'ஒரு தலை காதல் ' படத்திற்காக கம்போஸ் செய்திருக்கிறார்.அதை மறுப்படியும் தாளத்துடன் பாட ஆரம்பித்தார். ராகமும்,வரிகளும் வழக்கமான 'டி.ஆர்' டச்'சுடன் அருமையாக இருந்தது.அவர் பாடுவதை என் மொபைல் போனில் வீடியோவாக எடுத்தேன்.அதைக்கவனித்த அவர்,பாடி முடித்தவுடன் என்னிடம் ' மோகன், வீடியோவை 'internet'லோ வேறு யாருக்கோ கொடுத்து விடாதீர்கள்' வேண்டுமானால் 'அம்மாடி..ஆத்தாடி' பாடுகிறேன்,அதை எடுத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். நானும் ஒன்னும் கவலப்படாதீங்க சார்,அப்படியெல்லாம் பண்ணிடமாட்டேன்' எனக்கூற,அவர் 'அம்மாடி...ஆத்தாடி' பாட்டை பாட ஆரம்பித்தார்.


அடுத்த இரண்டு மணிநேரம்.மேலும் பல பயணிகள் வந்து அவருடன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்கள். பாடச்சொல்லிக் கேட்கும் போதெல்லாம், தயங்காமல் தாளத்துடன் பலப்பாடல்களை பாடினார். அரட்டை அரங்கம், தமிழக அரசியல்,சினிமா என பலரும் கேட்டக் கேள்விகளுக்கு தயங்காமல் வெளிப்படையான பதில் அளித்தார். ஏதோ ஒரு கேள்விக்கு 'தமிழகத்தில் பெண்கள் டி.வி சீரியலுக்கும்,ஆண்கள் டாஸ்மாக்'குக்கும் அடிமையாகிவிட்டனர்' என்றார்.வண்டி பெரம்பூரை நெருங்கும்போது கூட்டம் கலைந்தது.


என்னிடம் வந்த அவர் ' நான் காலேஜ் படிக்கும்போது,ரயில் பாத்ரூம் கதவில் காசை வைத்து தாளம் போட்டு பாட்டு பாடுவது வழக்கம், இன்று கதவருகே யாரும் இல்லாதபோது வந்து காசை எடுத்து இரண்டு தட்டுதட்டி பழைய அனுபவத்தைப் பெறலாம் என நினைத்திருந்தேன்.ஆனா இப்போ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்,பலப்பாடல்களை உங்கள் அனைவருக்கும் பாடிக்காட்டியது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு மோகன்' எனக்கூறினார்.இதுநாள்வரை பத்திரிக்கை,படங்கள்,டிவி மூலமாக அவரைப்பற்றி நான் கொண்டிருந்த சில தவறான அபிப்ராயங்கள் அந்த ரயில்பாதையில் விழுந்து சிதைந்தது.

July 3, 2009

வாழ்க்கை என்பது மணம்,குணம் நிறைந்த காபி...

கல்லூரிமுடித்து சிலபல ஆண்டுகள் கழித்து ஒன்றுசேர்ந்த நண்பர்கள்குழு கல்லூரி நினைவுகளை அசைப்போட, கல்லூரி பேராசிரியர் ஒருவரின் வீட்டில் கூடினார்கள். பேச்சுவாக்கில், நடைமுறை வாழ்க்கை எப்படி போகிறது என்று பேராசிரியர் கேட்டதற்க்கு, ஏறக்குறைய அனைவரும் அலுவலக,குடும்ப வாழ்க்கை எந்திரமயமாகவும், மிகுந்த மன அழுத்தத்தை தரக்கூடியதாகவும், ஏமாற்றங்கள் நிறைந்ததாகவும் ஓடிக்கொண்டிருப்பதாக குறைப்பட்டார்கள்.
வீட்டிற்கு வந்தவர்களுக்கு காபி ஏற்பாடு செய்த பேராசிரியர், ஒரு பெரிய குடுவை நிறைய காபியையும், ஒரு பெரிய தட்டில் காபிகப்'களையும் எடுத்துவந்து மேஜையில் வைத்தார். அவர் வைத்த காபிகப்'கள் பல்வேறு வகைப்பட்டு இருந்தது,பலவண்ணங்களில்,வடிவங்களில், ப்ளாஸ்டிக், கண்ணாடி,வெள்ளி,எவர்சில்வர்,சாதாரண பேப்பர்கப் போன்றவற்றால் செய்யப்பட்ட கப்'கள் இருந்தது.அனைவரும் அவர்களுக்கு காபிகப்'களை எடுத்து வேண்டிய அளவு காபியை அதில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களுடன் வந்தமர்ந்த பேராசிரியர் இவ்வாறு கூறினார்...' நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவர் கையிலுள்ள காபிகப்'களையும்,மேஜைமீது யாராலும் தேர்ந்தெடுக்கப்படாமலுள்ள காபிகப்'களையும் பாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் நல்லவேலைப்பாடமைந்த,காஸ்ட்லியான கப்'களையே தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். விலைமலிவான,ஆடம்பரமில்லாத கப்'களை யாரும் தொடக்கூட இல்லை.இருப்பவற்றில் சிறந்ததைபெறவே அனைவரும் ஆசைப்பட்டிருக்கிறீர்கள்,ஆனால் உங்கள் அனைவருக்கும் தேவையானது சுவையான காபி,அதை எதில் குடிக்கிறீர்கள் என்று தேர்ந்தெடுப்பதிலும்,அடுத்தவனைவிட நான் சிறந்த கப்பை வைத்திருக்கிறேனா என ஆராய்வதிலும்தான் அனைவரின் கவனமும் இருந்ததே தவிர, கிடைந்த காபியை நீங்கள் ஒருவரும் ரசித்து ருசித்துக்குடிக்கவில்லை.


இதுபோலதான் உங்களின் நடைமுறை வாழ்க்கையும் அதில் நீங்கள் சந்திக்கிற துன்பங்களும்,துயரங்களும். வாழ்க்கை என்பது நீங்கள் குடிக்கும் காபியை போன்றது. சிறந்த காபிகப்'க்கு ஆசைப்பட்டு,கிடைந்த காபியை ரசித்துகுடிக்க முடியாமல் காபிகப் போன்ற வேலை,சமூக அடையாளம்,பணம்,பதவி போன்றவைகளில் சிறந்ததைப்பெற ஆசைப்பட்டு,வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க தெரியாமல் தொலைக்கிறீர்கள்....என்று முடித்தார்.

May 28, 2009

பசங்க.. பா(ப)டம் பெரியவங்களுக்கு

படத்தப்பத்தி ஒரு வரில சொல்லனும்னா, ஒவ்வொருவருக்கும் விதம்விதமான அனுபவங்களை, பாடங்களைத் தரும் படம்.

பசங்களா இருக்கவங்களுக்கு அவங்க நிகழ்காலத்தை திரையில் பார்க்கவும்,
வாலிப பசங்களா காலேஜ்'ல கும்பியடிக்குறவங்களுக்கு அவங்க சில மாதங்களுக்குமுன்
கடந்த வாழ்க்கை அத்தியாயத்தை புரட்டிப்பார்க்கவும்,

காலேஜ் முடிஞ்சி, வேலைல சேர்ந்து 'செட்டில்' ஆகிட்டோம்,அடுத்து என்னனு இருக்குறவங்களுக்கு சில்லுன்னு ஒரு காதல் அனுபவத்திற்கு ஏங்கவும், பள்ளிக்கல்லூரிப்பருவத்தில் உடன்பயின்ற நண்பர்கள், திடீரென காணாமல் எங்கே போய்விட்டார்கள் என அதிர்ச்சியுடன் திரும்பிப்பார்க்கவும்,

கல்யாணம் ஆகி, புது வாழ்க்கை,புது சொந்தங்கள்,புதுப்புது அனுபவங்கள் என மூழ்கி, களிப்புகளைக் கடந்து கடமையில் மூழ்கிபோனவர்களுக்கு,கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து, மரித்துப்போன பள்ளிக்கால நட்புகளையும்,இழந்துப்போன  குறும்பு விளையாட்டுக்களை நினைவடுக்குகளில் ஆராய்ந்துப்பார்க்கவும்,

குழந்தை(கள்) பெற்று,பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு,தன்வீட்டுச்சூழ்நிலையையும்,தன் குழந்தைகள் எதிர்பார்ப்புகளை எந்த அளவிற்கு நிறைவேற்றி இருக்கிறோம், செய்ய வேண்டியவைகள் என்ன? என்று தெரிந்துக்கொள்ளவும்,

பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு, அவர்கள் செய்யத்தவறிய, சரியாக செய்துவிட்ட விஷயங்களை பட்டியலிட்டு சரிபார்க்கவும்,

படிப்புமுடிந்து நன்றாக செட்டில் ஆகிவிட்ட,அல்லது வேலைவெட்டியின்றி வாழ்க்கையில் த(டம்)டுமாறும் தன் பிள்ளைகள்பற்றி மகிழ்ச்சியோ,கவலையோ கொள்ளும் பெற்றோர்களுக்கு, அவர்களின் கடந்த 20 ஆண்டுக்கால தாம்பத்யம், எந்த அளவுக்கு பிள்ளைகள் வாழ்க்கையை நன்றாக அமைத்தோ/அலைக்கிழித்தோ இருக்கிறது என சுயபரிசோதனை செய்துக்கொள்ளவும்,

என அனைவரையும் சிரிக்க,சிந்திக்க,சிலிர்க்க,கண்ணீர் சிந்த என அனைத்துவித அனுபவங்களையும் படம் பார்க்கும் இரண்டரை மணிநேரத்தில் நமக்கு அளித்து விடுகிறது.

எப்போதும் இரவில் படுக்கையில் படுத்த இரண்டு நிமிடங்களில் என்னைத்தழுவும் நித்திரை,
நான் படித்த ஆரம்பநிலைப்பள்ளி,கூடப்படித்த ஜெய், பாபு, தியாகு, துளசிராஜ், குப்பன், ரமேஷ், சிவக்குமார்,எழில்மாறன்,அறிவு, அம்பி(கா),மலர்(விழி), போன்றவர்களையும், தெரேசா,ஜெயமேரி டீச்சர், ஜேசுதாஸ், அருளானந்தம் வாத்தியார்கள்,தமிழய்யா பத்திநாதன்,பூபதி என பாதை அமைத்துக்கொடுத்த ஆசிரியர்களையும், ஏழாவது படிக்கும்போது பள்ளியில் புதிதாக சேர்ந்த ஜெய்குமாருக்கும் எனக்கும் படிப்பில்,முதல் ரேங்க் வாங்குவதில்,க்ளாஸ் லீடர் ஆவதில் என ஏற்பட்ட போட்டிகள், எட்டாவது படிக்கும்போது பள்ளி மாணவத் தலைவர் தேர்தலில் நானும்,ஜெய்யும் இரு அணிகளாகப்பிரிந்து போட்டியிட்டு ஜெய் 162 வாக்குகளும்,நான் 212 வாக்குகளும் பெற்று வெற்றிப்பெற்றதும், இந்த தேர்தலினால் எங்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவரும் பேசாமல் போனதும், பள்ளி நண்பர்களும்,ஆசிரியர்களும் எவ்வளவோ முயன்றும்,என் பிடிவாதத்தால் அவனுடன் பேசாமலே இருந்து,வெவ்வேறு பாதையில் வாழ்க்கைப்பயணம் தடம்மாறி, சிலவருடங்கள் கழித்து அவன் அக்கா திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வீடு தேடிவந்ததால் மறுபடியும் மலர ஆரம்பித்த எங்கள் நட்பு இன்றுவரை சரியான புரிதலுடன் எவ்வித இடருமின்றி வளர்வதும் என,பல்வேறு நிகழ்வுகளை கிளறி,அந்த ஞாபகங்களின் தாக்கத்தால் வெவ்வேறு மனநிலைகளுக்கு ஆட்பட்டு இரவு முழுவதும் என் தூக்கம் தூரதேசம் போனது.

எனினும் இன்று காலையில் எழுந்தபோது உடலும்,மனமும் எவ்வித களைப்புமின்றி, புத்துணர்ச்சியுடனும், புதுகூதுகலத்துடனும் கொண்டாட்டம் போடுவதற்கான காரணம்,படம்பார்த்த அந்த இரண்டரை மணிநேரத்தில் நானும் என் பள்ளிப்பருவத்தை மீண்டும் ஒருமுறை வாழ்ந்துப்பார்த்ததுதான்...

May 9, 2009

மரித்துப்போன மனிதம் : விஜய் டிவி நிகழ்ச்சி

கடந்த வியாழன் இரவு விஜய் டிவியில் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் செமிபைனல் ரவுண்ட் நடந்தது. அதில் கடைசியில் நடனமாடியவர் எடுத்திக்கொண்ட கான்செப்ட் 'இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள்'.சாதாரணமாக ஆரம்பித்த குழந்தைகளுடனான நடனம், அங்கு நிகழும் குண்டுவெடிப்பும்,மக்களின் அவலநிலையையும் கண்முன்னே நிகழ்த்திக்காட்டினார்கள். அந்த 10 நிமிட நடனம் பார்த்த அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தது.

வீடியோ இங்கே...

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4

அதைப்பார்த்து என்னில் எழுந்த உணர்ச்சிகளின் வடிவம் கீழே...


கண்ணீர்துளிகள் நிஜம்,
ரத்தஆறுகள் நிஜம்,
வலிகள் நிஜம்,
இழப்புகள் நிஜம்,
துடிப்புகள் நிஜம்,
ஏக்கங்கள் நிஜம்,
கொடுமைகள் நிஜம்,
பசி,பட்டினி நிஜம்,
கற்பழிப்புகள் நிஜம்,
மரணங்கள் நிஜம்,

நிதம்நிதம் இத்தகைய
நிஜங்களின் நிர்பந்தத்தில்
நாளைய விடுதலையை எண்ணி
இன்றைய விடியலாவது
விடைத்தருமா என்ற
வினாவுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கும்
விட்டில்பூச்சி கூட்டங்களாய்
நம் ரத்தத்தின் ரத்தங்கள்.

மனிதம் நம்மில் மரித்துவிட்டதா?