Search This Blog

April 25, 2009

என் ஜன்னலுக்கு வெளியே...

2005'லிருந்து 2008 வரை தினமணி,தமிழ்முரசு,புதியபார்வை,உயிர்மை மற்றும் அவர் வலைப்பதிவு என அரசியல்,சமூகம்,இலக்கியம்,வரலாறு என பலதரப்பட்ட தளங்களின் நிகழ்வுகள் பற்றிய மாலனின் கட்டுரைகளின் தொகுப்பு ச்என்ற புத்தகமாக 'கிழக்குப் பதிப்பகத்தால்' வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் தளத்தில் 2005'லிருத்து ஏற்பட்ட ஏகப்பட்ட நிகழ்வுகள்,கலைஞர் தலைமையிலான ஆட்சி,கலைஞர் குடும்பகுழப்பங்கள்.கவுடா குடும்ப அரசியல், அத்வானியின் ஜின்னா பற்றிய பேச்சினால் ஏற்பட்ட குழப்பங்கள், சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள்,காவிரி,ராமர் பாலம்,அணுஒப்பந்த சர்ச்சைகள்,கனிமொழியின் அரசியல் பிரவேசம் என சமகாலத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றிய விவரங்களும் அதைப்பற்றிய மாலனின் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.பெரும்பாலான விஷயங்கள் சுவைப்பட எழுதப்பட்டுள்ளது.

சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளான மும்பை தொடர் ரயில்குண்டு வெடிப்புகள்,தமிழககடலோர கிராமங்களின் சுனாமிக்குபிறகான வாழ்க்கைமுறைகள், குறிப்பாக ஒரு கடலோரகிராமத்தில் பத்தாவது படிக்கும் மாணவன்,அங்குள்ள குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுக்கும் செய்தி, சுனாமிக்குபிறகும் ஏன் இன்னும் மீன்பிடி தொழில் செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ற மாலனி கேள்விக்கு 'ஐயா,கடல் எங்களுக்கு அம்மா மாதிரி, இத்தனை வருடமும் அவதான் எங்களுக்கு சோறு போட்டிருக்கா,அன்னிக்கு அவளுக்கு ஏதோ கடும்கோவம்,அடிச்சிட்டா, அதனால அவள விட்டு போய்விடமுடியுமா' என்ற யதார்த்தமான பதில் பளீரென என்னை அறைந்தது.

'பாரதியின் மரணம் எழுப்பிய கேள்விகள்' என்ற கட்டுரை,திருவல்லிக்கேணியில் யானையால் தூக்கியெறியப்பட்டதால் பாரதி மரணமடைந்தார் என்று நினைத்துக்கொண்டிருந்த என் அறியாமையை தெளிவுப்படுத்தியது.

'மூளையை மட்டும் கழற்றி வைக்க முடிந்திருந்தால்..' என்றக்கட்டுரையில் மாலன் 'சிவாஜி' படம்பார்த்த அனுபவத்தையும் அதைச்சார்ந்த அவரின் அலசல்களையும் சொல்லியிருந்தார். காட்சிஅமைப்புகளும், கதையும் லாஜிக்கலாக இல்லை என்பது அவர் கருத்து. 'மாலன் அவர்களே, தமிழ்படங்களை,குறிப்பாக ரஜினி படங்கள்,அதுவும் சங்கர்(ஷங்கர்???) இயக்கிய படத்தில் லாஜிக் பார்ப்பது உம் தவறு.படம்பார்க்கும் மூன்று மணி நேரத்தில் திரையில் விரியும் சாகசங்களையும்,அழகி(????)களையும்,பர்ந்துபர்ந்து அடிப்பதையும், ஒரே பாட்டில்(பாட்டிலில் இல்லை.....) கட்டாந்தரையிலிருந்து, கோபுரத்திற்கு உயரும் மாயாஜாலத்தையும், இன்னபிற க்ராப்பிக்ஸ் கலக்கல்களையும் வாய்ப்பிளந்து பார்த்து,இனிமையாக பொழுதைக்கழிப்பதை விட்டுவிட்டு,யார் உங்கள் 'மூளையையெல்லாம் உபயோகப்படுத்தச் சொன்னது? (நான் ரஜினி ரசிகன் என்பது இங்கு தேவையற்ற தகவல்)

அரசியல் சார்ந்த 'நா காக்க' என்ற கட்டுரையில் 1971 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 'வங்கதேசம்' தொடர்பான போர் நடந்தசமயம் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனும்,இந்திராகாந்தியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர்,ஆனால் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.அந்த சமயத்தில் நிக்சன் அவர் உதவியாளரிடம் இந்திராவை 'கிழட்டு சூனியக்காரி' என திட்டி தீர்த்துள்ளார்.இதைப்பற்றிய விவரங்கள் ,அமெரிக்க அரசாங்க வழக்கப்படி 30 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டு சர்ச்சையானது நாம் அனைவரும் அறிந்ததுதான்.அந்த சமயத்தில் பிரிட்டன் சென்ற இந்திராகாந்தி பிபிசிக்கு பேட்டியளித்தார்,இந்தியா ஏன் வங்கதேசப்போர் விஷயத்தில் பொறுமைக்காக்கக்கூடாது எனற கேள்விக்கு இந்திரா 'பொறுமையாக இருந்தால் படுகொலைகள் நின்றுவிடுமா?கற்பழிப்புகள் நின்றுவிடுமா? கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?ஹிட்லர் படையெடுத்து வந்தபோது,யூதர்கள் சாகட்டும் என நீங்கள் பொறுமை காத்தீர்களா? என பொரிந்துதள்ளியுள்ளார்' என மாலனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய நிலைமையில் இலங்கையிலும் மேலே இந்திராகாந்தி சொல்லியுள்ள நிலைமைதான்.ஆனால் இந்திராவின் மருமகளும்,தமிழகத்தலைவர்களும்,இலங்கையில் உள்ள கடைசித்தமிழனின் தலை வெட்டுப்பட்டு சாயும்வரை மிகவும் பொறுமையாக 'கடையடைத்தும்,உண்ணாவிரதம் இருந்தும்,தந்தியடித்தும்,தொலைக்காட்சிகளில் சிறப்புத்திரைபடம் காண்பித்தும் தங்கள் பொறுமையைக் காட்டி, 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்ற பழமொழிக்கு புதுஅர்த்தத்தை கற்பித்துக்கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாகப்பார்த்தால்,'என் ஜன்னலுக்கு வெளியே' புத்தகம் கடந்த சில ஆண்டுகளில் நம்மைச்சுற்றி நடந்த விஷயங்களின் தொகுப்பை,நாம் கவனிக்கத்தவறிய சில செய்திகளையும்,மறந்துபோன/மருத்துப்போன நிகழ்வுகளையும் அசைபோடவைக்கிறது.


விவரங்களுக்கு http://nhm.in/shop/978-81-8493-063-4.html

2 comments:

ஷண்முகப்ரியன் said...

//பொறுமையாக இருந்தால் படுகொலைகள் நின்றுவிடுமா?கற்பழிப்புகள் நின்றுவிடுமா? கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?ஹிட்லர் படையெடுத்து வந்தபோது,யூதர்கள் சாகட்டும் என நீங்கள் பொறுமை காத்தீர்களா? //

இறந்து போன இந்த இந்திரா காந்தி இன்று இருந்திருந்தால் ஈழத் தமிழர்களின் ஆயிரக் கணக்கான இற்ப்புக்கள் தவிர்க்கப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் நண்பரே..

மோகன் said...

//இறந்து போன இந்த இந்திரா காந்தி இன்று இருந்திருந்தால் ஈழத் தமிழர்களின் ஆயிரக் கணக்கான இற்ப்புக்கள் தவிர்க்கப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் நண்பரே..///

அவர் இருந்திருந்தால் ஈழப்பிரச்சனைக்கு 90களிலேயே தீர்வு கிடைத்திருக்கும்