Search This Blog

August 26, 2005

அவர்கள் அப்படித்தான்...

கடந்த 4 மாதங்களாக நியூஜெர்சியில் வசித்து வருகிறேன். நாங்களிருக்கும் அபார்மெண்ட் எதிர் வீட்டில் 3 அமெரிக்கர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் வழங்கும் மாத உதவித்தொகை மூலம் வாழ்பவர்கள்.அரசாங்கமே வீடும் கொடுத்திருக்கிறது. இதுவரை அவர்கள் எங்கும் சென்று நான் பார்த்ததில்லை.நாள் முழுவதும் காலைமுதல் இரவுவரை வீட்டுக்கு வெளியே அமர்ந்து விடுகிறார்கள். ஒரு 'ஆடியோ' சிஸ்டத்தில் சத்தமாக எதாவது பாடல்களை போட்டுவிடுகிறார்கள்.வாயில் எப்போதும் புகைந்துக்கொண்டிருக்கும்.சில நேரங்களில் வழியில் செல்வோரிடம் 'சிகரெட்'டிற்கு கையேந்துவார்கள்.மற்றபடி வேறு தொந்தரவு கிடையாது.
என்னால் கற்பனைக்கூட பண்ணமுடியவில்லை,நாள் முழுவதும் எந்தக்குறிக்கோளும் இல்லாமல் வெறுமென அமர்ந்துக்கொண்டு பொழுதைக்கழிப்பதென்பது மிகவும் கொடுமையான தண்டனையாக தோன்றுகிறது.

இவர்கள் இப்படியென்றால்,அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் உள்ளது.வயதான பெண்மணி,அவருடைய,வேலைக்குப் போகும் பெண்,அந்தப்பெண்ணின் இரு குழந்தைகள்,5-8 வயது இருக்கும். காலையில் அப்பெண் வேலைக்கு கிளம்பிய உடன்,அம்முதியப்பெண்மணி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கோகிளம்பிவிடும். சில மணி நேரங்கழித்து கைகளில் விதவிதமான பொருள்களுடன் திரும்புவார்கள்.இது தினமும் நடக்கும்.
ஒருநாள் அலுவலகம் தாமதமாக கிளம்பினேன். வீட்டில் ஏராளமான குப்பைகள் சேர்ந்துவிட்டதால்,அவைகளை எடுத்துக்கொண்டு,எங்கள் காலனியில் குப்பைகளைப்போடும்
இடத்திற்கு சென்றேன்.அங்கு நான் கண்டக்காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த முதிய பெண்மணி,குப்பைகளைக் குடைந்துக்கொண்டிருந்தது.அதிலிருந்து அரைக்குறையாக பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்ட பொருட்களை செகரித்துக்கொண்டிருந்தது.குழந்தைகளையும் பெரிய பெட்டிகளில் குவிந்திருந்த குப்பைகளை கிளற விட்டிருந்தது.தினமும் இப்படித்தான் நடந்துக்கொண்டிருப்பதாக,பிறகு சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தார்கள்.
எனக்கு அந்தக்குழந்தைகளை நினைத்துதான் கவலைப்படமுடிந்தது.

August 24, 2005

இன்று போய்..நாளை வா...

நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்றுதான் இங்கு வரமுடிந்தது. என்ன எழுதலாம் என முடிவு செய்யமுடியவில்லை.எழுதி நீண்ட நாட்கள் ஆனதால் 'டச்' விட்டுப்போச்சினு நினைக்கிறேன்.
முழுபலத்துடன் மீண்டு(ம்) வருகிறேன்....

July 14, 2005

ஹைக்கூ-2

சுவைத்தும் கசந்தது...
அவள் கொடுத்த
அல்வா !!!

July 6, 2005

ராஜாவின் திருவாசகம்...

ஊரெல்லாம் ஒரே பேச்சு.யாருடன் தொலைபேசினாலும் 'திருவாசகத்தை' கேட்டீங்களா? என விசாரிப்புகள். ஒரு 'வெப் சைட்டில்' MP3 format'ல் இருப்பதாக ஒரு நண்பன் மூலம் அறிந்து அதை இறக்கி ஒருதடவை ஓடவிட்டேன்.ஆனால் இவ்வாறு செய்ய மனம் குறுகுறுத்தது. மாலையில் 'எடிசனில்' உள்ள வீடியோ கடைக்கு சென்று 15$ கொடுத்து ஒரு CD'யை வாங்கினேன். அந்த கடைக்காரரிடம் 'CD எப்படி போகிறது என விசாரித்தேன்.காலையிலிருந்து நிறையபேர் வந்து வாங்கி செல்வதாகவும்,எதிர்பார்த்ததைவிட ஆதரவு அமோகமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

வீட்டிற்கு திரும்பிய உடன் CD'யை ஓடவிட்டேன்.மொத்தம் ஆறு பாடல்கள்.இனிமையாக ஒலிக்க ஆரம்பித்தது.ஆனால் எதுவும் முதலில் மனதில் ஒட்டவில்லை. நமக்கு 'டப்பாங்குத்து' பாடல்களாகக் கேட்டுக்கேட்டு ரசனையே மாறிவிட்டிருக்கிறது.மேலும் சுத்த தமிழில் பாடல்வரிகள். குறைந்தபட்சம் ஆறு எழு தடவைக்கேட்டால்தான் பாடலின் ஜீவன் புரிந்து ரசித்துருக முடியும் என நினைக்கிறேன்.பார்க்கலாம்.

கேட்டவரையில் 'ஜனனி ஜனனி' ல் இருக்கும் தெய்வீகத்தன்மையும், மனதை உருகச்செய்யும் ராகதேவனின் குரலும் இந்த 'திருவாசகத்தில்' குறைவதாக ஒரு எண்ணம். ஒருவேளை, மீண்டும் மீண்டும் கேட்கக்கேட்க உணரமுடியும் என நினைக்கிறேன்.

ஹைக்கூ......

சுவைக்காமலே இனித்தது..
அவள் கொடுத்த
கிட்-கேட்.

June 25, 2005

பயணங்கள் முடிவதில்லை...

அண்மையில் அலுவல் சம்பந்தமாக, வாஷிங்டனிலிருந்து நீயூஜெர்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. விமானம் புறப்படும் நேரம் மாலை 5 மணி. 3.30'க்கே விமானநிலையம் சென்று 'போர்டிங் கார்ட்' வாங்கியப்பிறகுதான் விமானம் 1 மணி நேரம் தாமதாமாகும் என அறிவிக்கப்பட்டது. இது என்னடா சோதனை என நினைத்துக்கொண்டு 'starbuck's' ல் ஒரு 'கேப்பச்சினோ'வை வாங்கிக்கொண்டு விமானநிலையத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் 'போர்டிங் கேட்' வந்தால், விமானம் மேலும் 1 மணி நெரம் தாமதமாகும் என அறிவித்தார்கள்.ஏதோ இயந்திரக்கோளாராம். ம்ம்ம்.... நான் கிளம்பிய நேரத்தில்தான் ஏதோ கோளாறு என நொந்துக்கோண்டு,வேண்டுதல் போல்,மீண்டும் ஒருமுறை விமானநிலையத்தை சுற்றிவிட்டு கடைசியாக 7 மணிக்கு விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.

எல்லா பயணிகளும் அமர்ந்தப்பிறகு,கதவை மூடிவிட்டு பணிப்பெண் பாதுகாப்பு நடைமுறைகளை விளக்க ஆரம்பித்த நேரத்தில், விமானியிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது.முக்கியமான பயணிகள் ஏற வேண்டியிருப்பதால் கதவு மீண்டும் திறக்கும் என அறிவிக்கப்பட்டது.
அது மிகச்சிறிய விமானம்.மொத்த இருக்கைகள் 50,ஏற்கனவே அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது. புதிதாக வருபவர்கள் எங்கு அமர்வார்கள் என நினைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு விமான சிப்பந்தி வந்து ஏற்கனவே அமர்ந்திருந்த இருப்பயணிகளை விமானத்தை விட்டு இறங்கச்சொன்னார்கள்.
ஆனால் இருவரும் இறங்க மறுத்துவிட்டார்கள்.அந்த இருவரும் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து வந்தவர்கள் ஆகவே அவர்கள் கண்டிப்பாக இறங்க வேண்டும் என விமான சிப்பந்தி சொல்லிவிட்டார்.அவர்கள் மீண்டும் மறுக்கவே 'செக்யூரிடி'யை விமானத்தினுள் அழைதது அவ்விருப் பயணிகளையும் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார்கள். நாங்கள் அனைவரும் நடந்தவைகளைக்கண்டு அதிர்ச்சி அடைந்திருந்தோம். பயணிகளிடம் இவ்வளவு கடினமாக நடந்துக்கொள்வார்களென யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.அதற்குப்பிறகு வேறு இருவர் ஏறியப்பிறகு விமானம் கிளம்பியது.
கடைசியாக இரவு 930'க்கு, 3 1/2 மணி நேர தாமதமாக நீயூஜெர்சியை அடைந்தேன். இதில் விஷேசம் என்னவென்றால், ஒழுங்காக நான் காரில் வந்திருந்தால், 3 மணி நேரத்தில் வந்து சேர்ந்திருக்கலாம்.

May 21, 2005

படித்ததில் பிடித்தது

ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே காதல் என்கிற பூ மலர்வதற்கு முன்பு,நட்பு என்கிற பசுமை நிறைந்த இலைகள் வளர்ந்திருக்க வேண்டும்.நட்பு என்கிற அந்தப் பசுமை நிறைந்த இலைகளின் கிளைகள் நம்பிக்கை.நம்பிக்கை என்ற கிளைகளின் அடிவேர், சுயநலமற்ற தன்மை.சுயநலம் கொண்டவர்களால் காதலிக்க முடியாது; காதலிப்பது போல்நாடகமாட மட்டுமே முடியும்.எல்லா நாடகமும் பொய்களும்,கடைசியில்தோல்வியில்தான் முடியும்.உலகில் நிறைய காதல்கள் தோல்வியுற இந்த நாடகமாடல்தான் காரணம்.

காதலில் மிக சுவாரசியமான விசயம் தன்னைக் காதலித்தவரைப் பற்றி எல்லா விவரங்களும் எவர் மூலமாகவோ தெரிந்து கொள்ள நேருவதுதான். யாரையோ மனதில் பூட்டி வைத்து அவரைப்பற்றி நெகிழ்வாக நினைத்துக் கொண்டிருக்க வேறு எவரோ அருகே வந்து உட்கார்ந்து அவரைப் பற்றி உனக்குத் தெரியுமா? என்று விதவிதமாக காதலிப்பவரின் கல்யாண குணங்களைஅடுக்கிக் கொண்டு போக, அவர் வீட்டு விவரங்களை விவரித்துக்கொண்டு போக மெய்மறந்து கேட்கின்ற ஒரு தன்மை ஏற்படும். இன்னும்தூண்டித்துருவி கேள்விகள் கேட்க ஆசை வரும்.அந்த ஆசைக்கு நல்ல தீனி கிடைத்தால் மனம் இடைவிடாது காதலித்தவரைப் பற்றி யோசிக்கத்தொடங்கிவிடும்.அந்த யோசிப்பு பொங்கி நல்ல கொதிநிலைக்கு வந்து,பக்குவமாய்க் கரைந்து காதலைக் கெட்டிப்படுத்தும். சொல்லப்பட்ட விவரங்கள் லட்சணமாகவும்,சுவையாகவும் இருப்பின் காதலித்தவர் மீதுமதிப்பு அபரிதமாய்க் கூடும்.