Search This Blog

July 18, 2008

அணில்

அப்போது நான் ஐந்தாவதோ,ஆறாவதோ படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கும்பலாக கூடி ஏதோ பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். கும்பலுக்குள் நுழைந்து என்ன நடக்கிறது எனப்பார்த்தால், அண்ணனின் கையில் ஒரு குட்டி அணில் நடுக்கத்துடன் முடங்கிக்கிடந்தது. எப்படி வந்தது என விசாரித்ததில், ஒரு பூனையால் துரத்தப்பட்டு வீட்டுப்பரணில் ஏற முயன்று தவறிக் கீழே விழுந்ததில் அதன் ஒரு காலில் அடிப்பட்டு அதனால் ஓட முட்டியவில்லை. அவ்வேளையில் அண்ணன் பார்த்து, பூனையை துரத்திவிட்டதால்,அணில் உயிர் தப்பியிருந்தது.

சுற்றியுள்ள அனைவரும் ஆளாளுக்கு ஒரு வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அம்மா ஒரு துணியை நீரில் நனைத்து அதன் காலில் கட்டிவிட்டார்கள். காயம் ஆறும்வரை வீட்டிலேயே இருக்கட்டும் என முடிவு செய்து, ஒரு சிறிய கூண்டில் விட்டார்கள். அது பசியாற பாலாடையில் பாலை ஊற்றி அதற்கு கொடுத்தார்கள். அணிலும் கொஞ்சமாக குடித்துவிட்டு கூண்டிற்குள் போய்விட்டது. ஒரு வாரம்,பத்து நாட்களில் அதன் காயம் சுத்தமாக சரியாகிவிட்டது. வேளாவேளைக்கு பழங்களும், குழந்தைகள் குடிக்கும் பால் பாட்டிலில் பாலும் குடிக்க பழகியிருந்தது. காயம் ஆறிவிட்டதால் எதற்கு அதை கூண்டில் அடைத்துவைக்கவேண்டும், அதன் போக்குக்கு விட்டுவிடுங்கள் போய் விடட்டும் என அம்மா சொல்லிவிட்டார்கள். கூண்டை திறந்ததும் உற்சாகமாக வெளியே வந்த அணில் அந்த அறைக்குள் இங்கும் அங்குமாக ஓடிவிட்டு அண்ணனின் மேல் ஏறி கையில் அமர்ந்துவிட்டது.அடுத்த இரண்டு மூன்று நாட்களாக சுதந்திரத்துடன் வீட்டில் ஓடியாடிக் கொண்டிருந்தது. அது எங்கள் வீட்டை விட்டு போகாது என்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்தது.



அடுத்து வந்த நாட்களில் அந்த அணில் குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தினமும் பள்ளிவிட்டு வந்ததும் எங்கள் மாலைப்பொழுதுகள், அதனுடன் விளையாடுவதிலேயே கழிந்தது. பள்ளிவிட்டு வரும்வழியில் விற்க்கும் பழங்களை வாங்கிவந்து அதற்கு ஊட்டிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அது எங்கள் மேலெல்லாம் ஏறியிறங்கி விளையாடிக்கொண்டிருக்கும், அதற்கு பிடித்தமான உறங்குமிடம், எங்கள் சட்டையில் உள்ள மேல் பாக்கெட்.கை வழியாக மெலே ஏறி பாக்கெட்டில் நுழைந்து படுத்துக்கொள்ளும்.யாரவது கட்டிலில் படுத்திருந்தால் கட்டிலின் கால்வழியாக ஏறி அருகில் வந்து மேலே ஏறி விளையாட ஆரம்பித்துவிடும்.அணிலுக்கும் எங்கள் வீட்டிலுள்ள அனைவரையும் நன்றாக அடையாளம் க்ண்டுக்கொள்ள முடிந்தது. அம்மாவும், அண்ணனும்தான் அதற்கு பயங்கர பெட்' ஆகியிருந்தார்கள். நன்றாக சாப்பிட்டதால் பார்க்க அழகாக கொழுகொழு என ஆகியிருந்தது.
அப்பொது நாங்கள் மளிகைக்கடை வைத்திருந்தோம். பின்புறம் வீடும் முன்புறம் கடையும் ஒன்றாக இருக்கும். அம்மாவும் அண்ணனும் வீட்டுக்கும் கடைக்கும் போய்வரும்போது, அணிலும் அவர்கள் பின்னாலேயெ முன்னும் பின்னும் போய்வந்துக்கொண்டிருக்கும்... அதன் எதிரிகளான பூனையையோ, நாயையோ பார்த்துவிட்டால் வேகமாக ஓடி பரணிலோ,அல்லது வீட்டிலுள்ள யாராவது ஒருவரின் மேலோ ஏறிக்கொள்ளும். எங்காவது வெளியூர் சென்றால் அதுவும் ஒரு விருந்தினராக எங்களோடு விஜயம் செய்யும். பயணம் செய்யும் சமயங்களில் எங்களில் ஒருவரது சட்டைப்பையில்தான் வாசம் செய்யும்.கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் எங்கள் வீட்டில் அதன் ராஜ்ஜியம்தான்.
ஒருநாள் வீட்டில் அண்ணனைத்தவிர அனைவரும் வெவ்வேறு வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தர்ர்கள். அண்ணனுக்கு கடுமையான காய்ச்சலால் ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு வந்து மருத்துவர் குடுத்த மாந்திரைகளைப் போட்டுக்கொண்டு பெரிய கம்பளியை போர்த்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்து தூங்கிவிட்டார். வீட்டில் யாரையும் காணாத அணில் வழக்கம் போல கட்டிலில் ஏறி கம்பளிக்குள் புகுந்துக்கொண்டது. சிறிது நேரம் கழித்து தூக்கத்தில் அண்ணன் பு...ர...ண்...டு....ப் படுத்தார்.

2 comments:

Sudhakar said...

nice touching story

சிவா said...

முடிவு நச்...
சுஜாதா டச்...