Search This Blog

February 3, 2009

தேசிய நெடுஞ்சாலை NH7

கடந்த டிசம்பரில் ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்வதற்க்காக சென்னை செல்லவேண்டியிருந்தது. கூடவே நண்பனின் குடும்பமும்(பிறந்து ஒரு மாதமே ஆனக் கைக்குழந்தையும்,4 வயதான வாண்டுப்பெண்ணும்) வந்ததால் என்னுடைய காரிலேயே சென்றுவிடுவதென முடிவு செய்தோம்.பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 350கிமீ, முதல்முறையாக இந்தியாவில் நீண்டதூர சாலைவழிப்பயணம்,அதுவும் முழுதூரத்திற்கும் நான் ஒருவனே டிரைவர் வேலைப்பார்க்க வேண்டும்.புதன்கிழமை காலை 730க்கு முன்பு வீட்டிலிருந்துக் கிளம்பினோம்.ஒசூர்வரை பாலம் மற்றும் ரோடு போடும் வேலைகள் நடப்பதால்,35கிமீ கடக்க ஏறக்குறைய 1 மணி நேரம் ஆனது.
தென் திருப்பதி கோயில்-முழுத்தோற்றம்

ஒசூரிலிருந்து சென்னைவரை 4 வழிப்பாதை அமைக்கப்பட்டிருப்பதால் பயணம் இனிதே ஆரம்பித்தது.ஒசூரிலிருந்து சரியாக 10கிமீ தூரத்தில்,ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் தாண்டியவுடன் சாலையின் மறுபக்கத்தில் ஒரு சிறுக்குன்றின்மேல் தென்திருப்பதி என்று ஒரு வெங்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.சிறியக்கோயில் என்றாலும் மிகச்சிறப்பாக கட்டியுள்ளனர்.குன்றின் உச்சியில் கோயில் அமைந்துள்ளதால்,கோயிலின் பின்புற பிரகாரத்தை கடந்து எட்டிப்பார்த்தால் சரேலென சரியும் ஒரு பள்ளத்தாக்கு பச்சைப்பசேலென விரிகிறது.பரந்து விரிந்த பச்சை வயல்வெளியும்,அதைக் கட்டி அணைத்ததுப்போல வெகுதூரத்தில் தெரியும் மலைக்குன்றுகளும்,ஒயிலாக இடுப்பசைத்து வெக்கத்துடன் அன்னநடை நடந்து காதலனை நாடிச்செல்லும் இளம் கிராமத்து பெண்பொல வயல்களுக்கு நடுவே வளைந்து நெளிந்து சலசல என்ற கொலுசு சத்தம் போல கலகலத்து,காலை வெயிலின் தாக்கத்தால் தங்கம்போல தகதகத்து ஓடும் ஓடை நீரும்,அன்னையிடம் பாலருந்தி வயிறு நிறைந்த திருப்தியில்,தெய்வ சிரிப்பு சிரிக்கும் குழந்தையின் முகத்தைப் பார்க்கும் தாயின் பரவசநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும் மென்மையான தென்றல் காற்றும்,நாம் அங்கு செலவிடும் சில மணித்துளிகளில் நம் வயதை பாதியாகக் குறைத்து,வானத்தில் பறக்கும் ஆகாயவிமானத்தை முதல்முதலில் பார்க்கும் சிறுவனின் மனநிலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. அடுத்தமுறை ஒசூர் வழியாக கிருஷ்ணகிரி செல்பவர்கள் தவறாமல் இங்கு ஒரு விசிட் அடியுங்கள்.


தென் திருப்பதி கோயில்-கோபுரம்
பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை சாலையில் வாகன நெரிசல் ஓரளவிற்கு அதிகமாக இருக்கும்.ஏகப்பட்ட லாரிகளை ஓவர்டேக் செய்ய வேண்டியிருக்கும்.அதுவும் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை மலைப்பாங்கான சாலைகள்.பெரும்பாரம் ஏற்றிய லாரிகள்,ஆமை வேகத்தில் இருவழிகளையும் அடைத்துக்கொண்டு மேடேறுவது காரில் செல்லும் நம்முடைய பொறுமையை பயங்கரமாக சோதித்துவிடும்.கை எப்போதும் கியர் மாற்றுவதிலும், கால்கள் கிளட்ச்,பிரேக்,ஆக்ஸிலேட்டர் என மாறிமாறி சேற்றை மிதிப்பதைப்போல மாற்றிக்கொண்டிருப்பதில் கையும் காலும் ஓய்ந்துப்போகும்.கிருஷ்ணகிரிக்கு ஒர் 10கிமீ'க்கு முன்னால் அடையார் ஆனத்தபவன் உணவகம் உள்ளது.ஒன்றரை மணிநேர கடினப் பயணத்திற்குப்பிறகு சிறிது ஓய்வெடுக்க சிறந்த இடம்.

கிருஷ்ணகிரியைத்தாண்டி வேலூர் செல்லும் சாலையை அடைந்துவிட்டால்,வாகனம் ஓட்டுவதற்கு ஒரு சிறந்த தடமாகிவிடுகிறது.லாரிகள் அனைத்து சேலம் வழியாக தென் தமிழகத்திற்கும்,கேரளாவிற்கும் செல்வதால் வேலூர் சாலை,லாரிகள் அற்ற பாலைவன சோலையாகிவிடும்.சிறு பெரிய ஊர்களின் குறுக்கீடும் புறவழிச்சாலை அமைப்பால் விலகிச்சென்று விடுகிறது. ஆக்ஸிலேட்டரில் வைத்தக்காலை எடுக்கவே தேவையில்லை. குறைந்தப்பட்சம் 120கிமீ வேகத்தில் பறக்கலாம். ஆனால் அமெரிக்காவில் freeway'ல் கார் ஓட்டும் நிம்மதிக் கிடைப்பதில்லை.அதற்கு காரணம், சாலையின் குறுக்கே திடீரென ஓடும் மக்கள், எதிர்புறத்திலிருந்து அடுத்தப்பக்கம் செல்ல,முறையாக அமைக்கப்பட்டுள்ள அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள வழிகளைப் பயன்படுத்தாமல், நேரத்தையும்,பெட்ரோலையும் மிச்சம் பிடிக்கும் முனைப்புடன்,நாம் செல்லும் அதே திசையில் நேர்எதிரே வண்டி ஓட்டிவரும் இரண்டு சக்கரம்,ஆட்டோ,டிராக்டர்,லாரி, பேருந்துகள் என ஓட்டி வந்து மேலுலகத்திற்கு செல்லும் குறுக்குவழியை காட்டுவார்கள்.ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வண்டி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வேகத்தில் ஓட்டுவது நல்லது.

இந்த வழிகளின் சாலை ஓரங்கள்,இன்னும் கான்கிரீட் காடுகளாக மாறவில்லை.ஆகவே பெரும்பாலும் பச்சைபசேலென வயல்வெளிகளும்,மலைமுகடுகளும் பயணத்தை இனிமையாக்குகிறது.இந்தநிலை வேலூர் அடையும் வரைதான்.வேலூரிலிருந்து சென்னைவரை வெயிலூரின் கடுமையான வெப்பத்தால் காய்ந்துப்போய் உள்ளது. இன்னொரு பெரிய குறுக்கீடு ஆடு மாடுகளால் ஏற்படுகிறது.4 வழிப்பாதைகளின் நடுவில் சிறுமரங்களும்,புல்வெளிகளும் வளர்க்கிறார்கள்.அதற்கு நல்ல பராமரிப்பும்,தண்ணீரும் சாலை பணியாளர்களால் கொடுக்கப்படுகிறது. அந்தப்பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் மக்கள்,காலையிலேயெ அனைத்து கால்நடைகளுக்கும் சுதந்திரம் வழங்கி சாலையில் விட்டுவிடுகிறார்கள்,அவைகளும் மிகவும் சுதந்திரமாக தேசிய நெடுஞ்சாலையில் நடைப்போட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கலைத்தருகிறது.

வேலூர்,வாலாஜாவைத்தாண்டி கார் சென்றுக் கொண்டிருந்தது.ஏற்க்குறைய 70-80கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.ஒரு 50 அடிதூரத்தில் இடதுபுறமிருந்து ஒரு பசு திடீரென குறுக்கே நடக்க ஆரம்பித்தது. கடைசி சில நொடிகளில் அதைக்கவனித்த நான் வலதுப்புறம் திரும்பலாம் என்றால்,காருக்கு இணையாக ஒரு லாரி வந்துக்கொண்டிருந்தது,வேகத்தையும் முழுஅளவில் குறைக்க முடியவில்லை.பசுவும் கால்வாசி தூரத்தை நான் செல்லும் பாதையில் கடந்துக்கொண்டிருந்தது. வேறுவழியேயில்லை.காரை வலதுப்புறத்தில் லாரியை உரசாத மில்லிமீட்டர் தூரத்திற்கு செலுத்தி, வேகமும் 40கிமிக்கு குறைந்து ஒரு மைக்ரோ மீட்டர் இடைவெளியில் காரின் முன்பகுதி பசுவைக்கடந்திருந்தது.இடதுப்புற முன்பகுதி பசுவைக்கடக்கும் நேரம் 'டமார்'ரென ஒரு சத்தம்,கார் பசுவைகடந்துவிட்டது. ரிவர்வியூ மிர்ரர் வழியாக பார்த்ததில்,பசு எவ்வித பிரச்சனையுமின்றி மறுபக்கத்தை நோக்கி அன்னநடைப் போட்டுக்கொண்டிந்தது. இடதுபுற முன் இருக்கையில் 4 வயது குழந்தையுடன் அமர்ந்திருந்த நண்பனுக்கு எதுவும் ஆகவில்லை.ஏற்றிவிடப்பட்டிருந்த கண்ணாடியும் ஒன்றும் ஆகவில்லை. அப்போது சத்தம் எங்கிருந்து வந்தது? ஒருவேளை இடதுப்புறக்கதவின் கீழ்ப்பகுதி முழுவதும் அடிப்பட்டிருக்குமோ...அப்படியென்றால் குறைந்தப்பட்சம் ஒரு பத்தாயிரம் ரூபாய் மொய் எழுதவேண்டியிருக்குமோ என்ற கேள்வியுடன்,ஒரு கிமீ தூரம் கடந்துக் காரை ஓரம் கட்டினோம்.

காரிலிருந்து இறங்கி என்ன ஆனது என ஆராய்ந்தால்,இடதுப்புறக்கதவில் ஒரு சிறுக்கீறல் கூட இல்லை.பிறகுத்தான் கவனித்தோம்,இடதுப்புறம் உள்ள 'ரிவர்வியூ' மிர்ரர் மட்டும் முழுவதுமாக காணாமல் போயிருந்தது.அதுவும் கண்ணாடி மட்டும்தான்.கண்ணாடி ஹோல்டர் ஒன்றும் ஆகவில்லை.ஒரு 500 ரூபாய் செலவு அவ்வளவுதான்.அதைவிட யாருக்கும் எந்தவித இடருமின்றி பெரும் விபத்திலிருந்து தப்பித்த நிம்மதி. பசுக்கடக்கும்போது,அதன் முன்புற வாய்ப்பகுதி மட்டும் கண்ணாடியில் பட்டு,கண்ணாடி தெரித்ததால் அந்த பெரும் சத்தம்.பசுவின் வாய்ப்பகுதி அதனால் அடிப்பட்டதா என தெரியவில்லை.

அதற்குப்பிறகு மிகுந்தகவனத்துடன் ஓட்டி, ஸ்ரீபெரும்புதூருக்கு சில கிமி முன்னால் இன்னொரு உணவகத்தில் ஓய்வுக்காக நிறுத்தினோம்.அங்கிருந்து சென்னைவரை மறுபடியும் லாரிகளும்,நகரப்பேருந்துகளும்,ஆட்டோக்களுமென நெரிசல் அதிகமாகிவிடுகிறது. போதாதகுறைக்கு சுட்டெரிக்கும் மதிய வெயில்.ஒருவாறாக ஐந்தரை மணி நேரத்தில் சென்னை மாநகரை அடைந்தோம்.

சென்னையிலிருந்து பெங்களூர் வரும்போது எவ்வித சிறுசம்பவங்களும் இன்றி நல்லப்படியாக அடுத்த நாள் வீடு வந்து சேர்ந்தோம்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது,ஒரு நல்ல பயணமாகவே அமைந்தது.சிறந்தமுறையில் அமைக்கப்பட்ட சாலைகள்,பாலங்கள்,நல்ல உணவகங்கள்.ஆனால் சாலைவிதிகளை மதிக்கும் பாங்கு நமக்கு இன்னும் சரிவர தெரியவில்லை. அதற்கு சான்று வழிகளில் காணும் சிறு,பெரும் விபத்துகள்.வாகனத்தால் அடிப்பட்டு இறந்துப்பான நாய்களின் உடல்கள் அகற்றப்படாமல்,அதன்மேலே அனைத்து வாகனங்களும் சென்று,அது காய்ந்து சாலையோடு சாலையாக தேய்ந்துபோன தடங்கள். சிவப்புவிளக்கு சுழல வேகமாக செல்லும் ஆம்புலன்ஸ்கள் என பல நிகழ்வுகள்.

பெங்களூர்-சென்னை வழியில் 5 டோல்கேட்கள் உள்ளன.ஒவ்வொரு இடத்திலும் 25ரூ முதல் 45ரூ வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.ஏற்க்குறைய ரூ 350-400 வரை போய்வர செலவழிக்க வேண்டியுள்ளது.ஆனால் கொடுக்கும் காசுக்கு நல்லமுறையில் சாலைகளை பராமரிக்கிறார்கள்.அந்தவிதத்தில் மகிழ்ச்சியே !

2 comments:

Anonymous said...

But chennai to Bangalore is NH45. Not NH7...
NH7 starts from Kanniyakumri, passes thru salem, B'lore, H'bad,N'pore ends @ varanasi

Giri said...

Hi anony,

bangalore to krishnagiri is NH 7 only. krishagiri to chennai is NH 45.

btw we should prosecute people who let their cattle to wander in NHs. stupid people. its dangerous for both humans and stray animals.

mohan, happy that you are all safe. But its a bad idea to swerve to avoid animals. in that regard human lifes come first.