Search This Blog

December 8, 2008

காந்தி:உனது பிறந்தநாள் இன்று....

காந்தி(அ)அரவிந்தன்...

இன்று உனது பிறந்தநாள். வழக்கம்போல அலைப்பேசியில் அழைத்து வாழ்த்துக்கள் சொல்லத்தான் நினைத்தேன்.ஆனால் மனதில் நினைப்பதை எல்லாம் வாய் வார்த்தைகளால் சொல்லிவிட முடிவதில்லை. மேலும் அலைப்பேசியில் பேசுவதென்பது உனக்கு வேப்பங்காய்,அதனால்தான் இந்தக்கடிதம்.

எப்போது ஆரம்பித்தது நம் நட்பு ???

14 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டின் ஐந்தாவது செமஸ்டர். சுதாவும்,செல்வாவும் நீ எலக்ட்ரானிக்ஸ் லேபில் இருப்பதாகவும்,உன்னை அழைத்துக்கொண்டு ரூமிற்கு செல்லலாம் என முடிவு செய்து உனக்காக லேப் வாசலில் காத்திருந்தோம்.சிறிது நேரக் காத்திருப்புக்குப்பின், ஒரு ஒல்லியான உருவம்,முகத்தைவிட பெரிய(???)கண்ணாடியை மாட்டிக்கொண்டு, பெருத்த சிந்தனையுடன் ஒரு 'விஞ்ஞானி'க்குரிய (அசட்டுக்)'களை'யோடு வெளியே வந்தது. இதுதான் அரவிந்தன்,எங்க ஊர்க்காரன்..என செல்வா அறிமுகப்படுத்தி வைத்தான்.அன்று நாம் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை.அடுத்ததாக ராம்குமாரின் பிறந்தநாள் பார்ட்டியில்(அமைதியான ஓடையாய் ஓடிக்கொண்டிருக்கும் உன் இன்றையக் குடும்ப வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு அன்று என்ன நடந்தது என்று விவரமாக எழுதாமல் விடுகிறேன்) உன்னுடைய முகத்தின் முதல் பக்கத்தைப் பார்த்தேன்.

ஹாஸ்டலைவிட்டு நீயும் வெளியில் ரூம் எடுத்து தங்க ஆரம்பித்தப்பின், அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். அந்த சந்தர்ப்பத்தில்தான் உன்னுடைய இன்னொரு முகத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. நம் நண்பர்கள் அனைவரும் மேல்மாடியில் உள்ள அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மாலை மங்கும் நேரம்.இருள் மெதுவாக கவியத்தொடங்கியது. அறையில் எரிந்துக்கொண்டிருந்த விளக்கு கரண்ட் கட்'டால் அணைந்துவிட்டது.உடனே,நீ எழுந்து,கீழேப்போய் மெழுகுவர்த்தி ஏற்றி வருவதாய் சொல்லிச்சென்றாய்...நீ இறங்கிச் சென்ற சில நிமிடங்களில் கரண்ட் வந்துவிட்டது.ஆனால் உன்னைக்காணவில்லை. நீ என்ன செய்துக்கொண்டிருக்கிறாய் எனப்பார்க்க செல்வா கீழே வந்தான். நீயோ தீவிரமாக மெழுகுவர்த்தி தேடிக்கொண்டிருந்தாய்.நீ அறியாமல்,செல்வா அந்த அறையின் விளக்கை போட்டுவிட்டு ஒளிந்துக்கொண்டான். நீயும் மெழுகுவர்த்தியை கண்டுபிடித்து,அதை கொளுத்திக்கொண்டு,அந்த அறையின் மின்விளக்கை அணைத்துவிட்டு, மேல்மாடிக்கு வரும்வழியில்,இருட்டாக இருந்ததால்,அதற்கான மின்விளக்கையும் போட்டுவிட்டு, மெழுகுவர்த்தி காற்றில் அணையாமலிருக்க கையால் மூடிக்கொண்டு மாடியில் உள்ள அறைக்கு வந்து மெழுகுவர்த்தியை வைத்தாய்.நாங்கள் அனைவரும் உன்னுடைய கடமை உணர்ச்சியையும்,எடுத்தக்காரியத்தில் எவ்வித இடர்வந்தாலும், காரியத்தில் கண்ணாக,சுற்றி என்ன நடந்தாலும் கவலைப்படாமல் எடுத்தவேலையை முடிக்கும் ஒரு வல்லவனாகத்தான் உன்னைக் கருதினோம். ஆனால் அதன்பிறகுதான் கவனித்தோம்...நீ கண்ணாடிப் போட்டுக்கொள்ள மறந்துப்போனதை...

ஹாஸ்டலில் இருந்தவரை கடமை,கண்ணியம் கட்டுப்பாடு என சீரிய வாழ்க்கை வாழ்ந்து,ஆஸ்டல் மக்கள் அனைவராலும் "காந்தி' என அழைக்கப்பட்ட நீ....ஆஸ்டலைவிட்டு, வெளியே ரூம் எடுத்து தங்க ஆரம்பித்த சிறிது காலத்திலேயே.....மடமை, தண்ணி'யம், (காசுக்கு)தட்டுப்பாடு என மாறிப்போய் ஒரு பேப்பரில் அரியர்ஸ் வைக்கும் அளவுக்கு போனதற்கு என்னக் காரணம் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.

கல்லூரி நாட்களுக்குப்பிறகு,நம் கல்லூரியிலேயே சில மாதங்கள் நாம் வேலைப்பார்த்த,அந்த சமயத்தில்தான் உன்னுடைய இன்னொரு முகம் (ரொமான்டிக் லுக்????) வெளிப்பட்டது. மைக்ரோப்ராசசர் லேபில் '...மா'வுக்காவே நீ போவதும், மச்சான்... எவ்...வ்...வ்வ்....ளோ சாப்ப்ப்ப்ப்ப்ப்'டா இருக்கா என உருகியதும், அவளுக்கு(மட்டும்) ப்ராக்டிக்கலில் மார்க் அள்ளிவழங்கியதும், நாம் மதியம் சாப்பிடும் மெஸ் ஓனரின் பெண்,உன்னை மயக்க செய்த லீலைகளும்,அதில் நீ விழாமல் சுதா எடுத்த அதிரடி நடவடிக்கைகளும் என நாட்கள் உருண்டோடியது.

அதற்குப்பிறகு பேங்களூர் வந்து நீ,நான்,அருண் மூவரும் வேலைத்தேட ஆரம்பித்த மூன்றாம் மாதத்தில் ஒவ்வொருவராக வேலைக்கிடைத்தப்பின், ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வாழ்ந்த அந்த 4 வருடங்கள் எவ்விதக் கவலையும் இன்றி,வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டோம் என்ற தன்னம்பிக்கையில் இறுமாந்து இருந்த அந்த நாட்கள்,நம் அனைவருக்கும் வசந்தக்காலம்.அந்த வசந்தக்காலத்தில்தான், நம்மிடையேயான நட்பு மேலும் வளர்ந்து மணம்வீச ஆரம்பித்தது.

ஒரு மழைநாளிரவில், உன் அலுவலகத்திலிருந்து,வீடுவரை ஏறக்குறைய 6-7 கிமீ தூரத்திற்கு உன்னையும்,உன் இருசக்கரவாகனத்தையும் அப்துல் சமது தள்ளிக்கொண்டு வந்ததும்,அதனால் அவனுக்கு ஏற்பட்ட ரத்தக் கொதிப்புக்கு அவன் இன்றுவரை மாத்திரை சாப்பிட்டு வருவதும்,

ஓரிரவு,சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, உனக்கும், செல்வாவிற்கும் ஏற்ப்பட்ட சண்டையில் நீ கோபப்பட்டு எடுத்து எறிந்த சாம்பார் பாக்கெட்,செல்வா முகத்தில் படாமல் சுவற்றில் பட்டு தெறித்ததில் அரண்டுப்போன செல்வா,இன்றுவரை,சாம்பார் என்றாலே அலறிஅடித்துக்கொண்டு ஓடுவதும்,

காலையில் நாங்களெல்லாம் அலுவலகத்திற்கு கிளம்பிப் போனப்பின்பு, நீ தூங்கி எழுந்து பாத்ரூமில் நுழையும்போது,அதற்க்காகவே காத்திருந்து உன்னைத் தள்ளிவிட்டுவிட்டு சுதா பாத்ரூமிற்கு செல்வதும்,வாய்க்கூடக் கழுவாமல்,மணக்க..மணக்க 'சுத்தச் செந்தமிழில்' அவனுக்கு நீ அர்ச்சனைச் செய்ததும்....

குளிக்க பாத்ரூம் சென்று,என்ன தலைப்போகிற வேலை என்றாலும், குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரத்திற்கு குளிப்பதும்...அப்படிக் குளித்துக்கொண்டிருக்கும்போது...திடீரென...'.............ஷூஊஊஊஊ' என நீ ஊளையிடுவதும்...

சந்திரமுகி படம் பார்க்கலாமென முடிவு செய்து,உன் குடும்பத்தினர்,நம் நண்பர்களென அனைவரும் PVR'க்கு வந்ததும், நீயும் உங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் ரஜினி படம் முதல் வாரத்திலேயே பார்க்கப்போவதாக பெரிய பில்டப் கொடுத்துவிட்டு, அலுவலகத்திலிருந்து நேராக PVR வந்து, நேரடியாக மூன்றாம் மாடியில் உள்ள திரையரங்குக்கு வராமல், Forum' மாலின்,வெளிவாயிலிலேயே நீ 'தேவுடு' காத்துக்கொண்டு இருப்பது தெரியாமல், நாங்களெல்லாம் உனக்கு காத்திருந்து வெறுத்துப்போய், 'தேவுடா...தேவுடா...ஏழுமலை தேவுடா....' பாடல் ஆரம்பித்தவுடன் உள்ளே சென்று படத்தில் ஆழ்ந்துவிட்டதும், அதற்குப்பிறகு 1 மணி நேரம் கழித்து,உன் ஏழாவது அறிவு(????) வேலைச்செய்து,மேலே வந்து அரைக்குறையாக படம் பார்த்ததும்.....

எத்தனை எத்தனை நிகழ்வுகள் நாம் நண்பர்களாக சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தப்பின் !!!...சென்ற பயணங்கள், ரசித்தக் காட்சிகள்,சிரித்த சிரிப்புகள்,விவாதித்த விஷயங்கள், சிந்திய கண்ணீர் துளிகள், எடுத்த சபதங்கள், சந்தித்த தோல்விகள், பெற்ற வெற்றிகள், கிடைத்த சொந்தங்கள்,குழந்தைச் செல்வங்கள்,பார்த்த சினிமாக்கள்,சென்ற சுற்றுலாக்கள்...முடிவேயில்லை இதற்கு....

நம் 14 ஆண்டுக்கால நட்பில் உன்னுடைய பல முகங்களைப் பார்த்துவிட்டேன்.ஆனால் நீ அடிக்கடி இன்னும் ஒரு முகத்தைக் காட்டுவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாய்....அதை எப்போதுதான் காண்பிப்பதாக உத்தேசம்... அட்லீஸ்ட்...அடுத்த பிறந்தநாளுக்குள் அந்த முகத்தைப் பார்த்துவிட்டால், அடுத்தவருடப் பதிவில் எழுத வசதியாக இருக்கும்.

உன்னிடம் எனக்குப் பிடித்ததே, ஏடாகூடமாக ஏதாவது செய்துவிட்டு, மாட்டிக்கொண்டவுடன் ஒரு அசட்டு(க்களையுடன்)சிரிப்பு சிரிப்பாயே..அந்த சிரிப்புதான்... இன்றையநாள்வரை உன்னை ஏதாவதொரு வம்பில் மாட்டிவிட்டு உன்னுடைய செய்கைகளை ரசிப்பதற்கான காரணம்.

நம் நீண்ட நட்புப்பயணத்தில், உன்னிடம் பார்த்து வியந்த பலவிஷயங்களில் என்னால் மறக்கமுடியாதது...உன்னுடைய நியாபகசக்தியும்,காலம் தவறாமையும்,எதையும் ப்ளான் செய்து,அதில் சிறிதும் பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் திறமையும்...சத்தியமாக சொல்கிறேன்...நம் நண்பர்களில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இது சாத்தியமாகாது..


நம் மனப்பதிவுகளில் உள்ள எல்லாவற்றையும் எழுத இந்த ஒருப்பதிவு போதாது...ஆகவே...இந்த இனிய நாளில் எல்லா வளங்களையும் பெற்று,சிறந்த உடல்நலத்துடன்,சீரும் சிறப்புமாக பலப்பல ஆண்டுகள் வாழ என்
வாழ்த்து(க்)கள்

டிஸ்கி : இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள்,சுவாரசியத்திற்க்காக கூட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆகவே யாரும் அரவிந்தனை குறைத்து எடைப்போட வேண்டாம்....உண்மையில் அரவிந்தன் ஒரு அப்பாவி (அடப்பாவி...........இதெல்லாம் ரொம்ப ஓவரு)

No comments: