Search This Blog

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

October 23, 2009

இரயில் பயணங்களில்...T.ராஜேந்தருடன்...

கடந்த மாதத்தில் அலுவலக விஷயமாக சென்னை செல்ல வேண்டியிருந்தது. 2.50க்கு வரவேண்டிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாக வந்தது. C2 கோச்'சில் டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.ஏறி அமர்ந்து ஒரு வெஜிடபிள் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு, ப்ளாட்பாரத்தில் வாங்கிய குமுதத்தை பிரித்து அரைத்தூக்கத்துடன் மேய ஆரம்பித்தேன்.திடீரென எனக்குப்பின்புறம் சில ஆச்சர்யக்குரல்கள் 'ஹ்லோ சார்,நீங்க எப்படி ட்ரெய்ன்ல, நாங்க எதிர்ப்பார்க்கவேயில்லை,ஒரு ஆட்டோக்ராப் சார்,ஒரே ஒரு போட்டோக்ராப் உங்ககூட சார்' என இரண்டு,மூன்றுப்பேர் என் சீட்டிற்குபின் நின்றுக்கொண்டிருந்தார்கள். அரைக்குறை தூக்கத்திலிருந்து வி(மு)ழித்த நான்,'என்னாடா இது,என்கிட்ட எதுக்கு ஆட்டோக்ராப்/போட்டோ எடுக்க ஆசைப்படுறாங்க? ஒருவேளை நான் சிறந்த ப்ளாகர்'னு தமிழ்மணத்தில் அறிவித்து,அது சன் ப்ளாஷ் நியூஸ்'ல வந்து நான் பெரிய ஆள் ஆகிட்டனோ'ன்னு நம்ம்ம்...பி...... திரும்பிப்பார்த்தா,எனக்கு பின்வரிசையில் ராஜேந்தர் அமர்ந்திருந்தார்.



அந்த ரயில் ரசிகர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு,அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு அவர் மீண்டும் அவர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டார். எனக்கு ஏற்ப்பட்ட கடுப்பில் அவரைக்கண்டுக்கொள்ளாமல் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் என் காதுகள் பின்னால் நடப்பவற்றை 'பார்ட் டைம்'மாக கவனிக்க ஆரப்பித்தது.அந்த சில ரசிகர்களுக்குப்பிறகு வேறு யாரும் அவரைக்கண்டுக்கொள்ளவில்லை. அந்த ஏசி கோச்சில் அமர்ந்திருந்த பலரும் புத்தகத்திலும்,லேப்டாப்பிலும்,மொபைலிலும்,தூக்கத்திலும் மூழ்கிவிட்டார்கள். அவ்வப்போது நடமாடிய கேண்டீன் ஆட்கள் அவரைப்பார்த்து, சார்..காபி சாப்ட்ரீங்களா,வடை,பஜ்ஜி சூடா இருக்கு சாப்ட்ரீங்களா.. என தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவருக்கு தூக்கம் வ்ரவில்லைப்போலும்.அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துடன் பேச ஆரம்பித்தார். அவர்களிடம் இரண்டு வயது பெண் குழந்தை இருந்தது. அதைத்தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். கையாலும்,வாயாலும் தாளம்போட்டு சில சேட்டைகள் செய்துக்காட்டிக் கொண்டிந்தார். அந்தக் குழந்தையும் அவரை மாமா என அழைத்து ஒட்டிக்கொண்டது.சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் அலுத்துப்போய் தூங்கிவிட்டார். வண்டி ஜோலார்பேட்டையை நெருங்கியது.



நான் பிறந்து வளர்ந்த ஊர்,மேலும் என்னைப்பார்க்க என்னுடைய சகோதரர் வந்திருந்தார். வண்டி நின்றப்பின் சகோதரருடன் பேசிவிட்டு மீண்டும் என் கோச்சில் ஏறி வாசல்கதவருகே கம்பியைப்பிடித்து நின்றுக்கொண்டே,என்னுடைய 'ப்ளாஷ்பேக்கில்' மூழ்கிப்போனேன். ஏறக்குறைய 8 வருடங்கள் ஜோலார்பேட்டை - காட்பாடி ரயில்தடத்தில் பயணித்திருக்கிறேன். 3 வருடங்கள் குடியாத்தம் பாலிடெக்னிக் படிப்புக்கும்,3 வருடங்கள் காட்பாடியில் என்ஜினியரிங் படிப்புக்கும்,மேலும் இரண்டு வருடங்களுக்கு அதே கல்லூரியில் வேலைபார்க்கவும் என, இவ்வழித்தடம்,என் வாழ்க்கைப்பாதையில் ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அந்த பசுமை நினைவுகளின் தாக்கத்தில் கட்டுண்டுக்கிடந்த நேரத்தில்,திடிரென ஒருக்குரல் 'பார்த்து ஜாக்கிரதையா நில்லுங்க சார்' என ஒலித்தது.யாரென திரும்பி பார்த்தால் டி.ஆர் நின்றுக்கொண்டிருந்தார்.



நானும் 'அதெல்லாம் ஓகே சார்.எனக்கு இதுப்போல படியில் நின்று பயணிப்பதில் 8 வருட அனுபவம் இருக்கு' என்றேன். அவரும் 'ஆமா சார்,நானும் காலேஜ் படித்த காலத்தில் பல வருடம் ரயிலில் பயணித்திருக்கிறேன்.அந்த பழைய அனுபவங்களை பார்க்கவே இப்போதும் விமானத்தில் சென்னைப்போகாமல், ரயிலில் வந்தேன்' என்றார். அவர் இவ்வாறு இயல்பாக பேச ஆரம்பிக்கவே, நானும் அவருடன் உரையாட ஆரம்பித்தேன்.என் பெயரையும்,மற்ற விவரங்களையும் விசாரித்தார்.அவர் 'ஒரு தலை காதல்' என ஒரு புது திரைப்படம் எடுக்க் இருப்பதாகவும், அதற்கான 'கதாநாயகி'த் தேர்வுக்கு பெங்களூர் வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் ' என்னங்க சார், ஒரே இரயிலில் வருகிறோம்.யாரும் மற்றவரைப் பார்த்து புன்னகைப்பதோ,அறிமுகப்படுத்திக்கொள்வதோ இல்லை. பேச்சுத் துணையில்லாமல் 4-5 மணி நேரம் ஏசி கோச்சில் உட்கார்ந்தபடி பயணிப்பது கடினமாக உள்ளது.நான் உங்களோடு பேசுவதில் உங்களுக்கு ஆட்சேபணையில்லையே' எனக்கேட்டார். அதுவரை அவரைப்பற்றி நான் கொண்டிருந்த அபிப்ராயம் மாறி,அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்த மற்ற சிலப்பயணிகளும் கோச்சிலிருந்து வெளியே வந்து கதவருகே இருக்கும் நடைப்பாதையில் நின்றுக்கொண்டு அவருடன் பேச ஆரம்பித்தார்கள்.அவர் புதிதாக எடுக்கப்போகும் படத்தைப்பற்றி பேச்சு திருப்பியது. ' சார்,இது மதுரைய சார்ந்த கல்லூரி மாணவர்கள்,அவர்களுக்குள் ஏற்படும் காதல் பற்றிய கதை' என ஆரம்பித்தார்.நான் உடனே 'என்னங்க சார்,நீங்களும் மதுரப்பக்கம் போறீங்க.ஏற்கனவே சுப்ரமணியபுரம்,வெண்ணிலா கபடிக்குழு, மதுரைசம்பவம்'னு வந்துட்டு இருக்கு' என்றேன். 'நான் இந்தக்கதைய 1 வருஷத்துக்கு முன்பே தயார் செய்துவிட்டேன்,மற்றசிலக்காரணங்களால் தாமதமாகிவிட்டது.அடுத்த மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து ஏப்ரலில் வெளியிட்டு விடுவேன்' என கூறினார்.அந்த சமயத்தில் எங்களைச்சுற்றி 6-7 பேர் கூடிவிட்டிருந்தார்கள். வண்டியும் காட்பாடியை நெருங்கிக் கொண்டிருந்தது.


காட்பாடியில் இறங்கவேண்டியவர்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள்.அவர்களில் வயதான ஒரு தம்பதியினரும் இருந்தார்கள். அவர்களும் டி.ஆருடன் அறிமுகப்படுத்திக்கொண்டு,'உங்கள் பாட்டு என்றால் எங்களுக்கு நிறையப்பிடிக்கும்.எங்களுக்காக பாட முடியுமா என்றார்கள். வண்டி ப்ளாட்பாரத்தில் நுழைய ஆரம்பித்தது.அதைப்பார்த்த தம்பதியினர் வருத்தத்துடன், 'நீங்கள் பாடுவதை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு இல்லை' எனக்கூறினர். உடனே 'டி.ஆர்' அவர் பாக்கெட்டிலிருந்து ஒரு நாண்யத்தை எடுத்து,அருகிலிருந்த 'பாத்ரூம்' கதவில் தாளம் போட்டுக்கொண்டே 'வாடி என் மதுரக்காரக்கிளியே' எனத்தொடங்கும் பாடலை ராகத்துடன் பாட ஆரம்பித்தார்.அடுத்த இரண்டு நிமிடங்களில் வண்டி காட்பாடி ரயில்நிலையத்தில் நின்றது. அந்த வயதான தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'இந்த நாளை என்றைக்கும் மறக்கமாட்டோம்' என் 'டி.ஆரிடம் விடைப்பெற்று சென்றார்கள்.


வண்டியும் அங்கிருந்து கிளம்பியது. எங்களிடம் திரும்பிய அவர் ' வயசானவங்க சார்,நான் பாடாம இருந்திருந்தா,அது ஒரு குறையா அவங்களுக்கு இருந்திருக்கும்,அதனாலதான் உடனே பாட ஆரம்பிச்சேன்.ஏதோ என்னால முடிஞ்சது' என்றார். அவர் பாடியப்பாடல் அவரின் புதுப்படமான 'ஒரு தலை காதல் ' படத்திற்காக கம்போஸ் செய்திருக்கிறார்.அதை மறுப்படியும் தாளத்துடன் பாட ஆரம்பித்தார். ராகமும்,வரிகளும் வழக்கமான 'டி.ஆர்' டச்'சுடன் அருமையாக இருந்தது.அவர் பாடுவதை என் மொபைல் போனில் வீடியோவாக எடுத்தேன்.அதைக்கவனித்த அவர்,பாடி முடித்தவுடன் என்னிடம் ' மோகன், வீடியோவை 'internet'லோ வேறு யாருக்கோ கொடுத்து விடாதீர்கள்' வேண்டுமானால் 'அம்மாடி..ஆத்தாடி' பாடுகிறேன்,அதை எடுத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். நானும் ஒன்னும் கவலப்படாதீங்க சார்,அப்படியெல்லாம் பண்ணிடமாட்டேன்' எனக்கூற,அவர் 'அம்மாடி...ஆத்தாடி' பாட்டை பாட ஆரம்பித்தார்.






அடுத்த இரண்டு மணிநேரம்.மேலும் பல பயணிகள் வந்து அவருடன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்கள். பாடச்சொல்லிக் கேட்கும் போதெல்லாம், தயங்காமல் தாளத்துடன் பலப்பாடல்களை பாடினார். அரட்டை அரங்கம், தமிழக அரசியல்,சினிமா என பலரும் கேட்டக் கேள்விகளுக்கு தயங்காமல் வெளிப்படையான பதில் அளித்தார். ஏதோ ஒரு கேள்விக்கு 'தமிழகத்தில் பெண்கள் டி.வி சீரியலுக்கும்,ஆண்கள் டாஸ்மாக்'குக்கும் அடிமையாகிவிட்டனர்' என்றார்.வண்டி பெரம்பூரை நெருங்கும்போது கூட்டம் கலைந்தது.


என்னிடம் வந்த அவர் ' நான் காலேஜ் படிக்கும்போது,ரயில் பாத்ரூம் கதவில் காசை வைத்து தாளம் போட்டு பாட்டு பாடுவது வழக்கம், இன்று கதவருகே யாரும் இல்லாதபோது வந்து காசை எடுத்து இரண்டு தட்டுதட்டி பழைய அனுபவத்தைப் பெறலாம் என நினைத்திருந்தேன்.ஆனா இப்போ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்,பலப்பாடல்களை உங்கள் அனைவருக்கும் பாடிக்காட்டியது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு மோகன்' எனக்கூறினார்.இதுநாள்வரை பத்திரிக்கை,படங்கள்,டிவி மூலமாக அவரைப்பற்றி நான் கொண்டிருந்த சில தவறான அபிப்ராயங்கள் அந்த ரயில்பாதையில் விழுந்து சிதைந்தது.

March 9, 2009

அதிசயம்...ஆனால் உண்மை

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும், முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப், பனைகளுக்குப் பயன் உண்டு. பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவு:
பதனீர் - 180 லிட்டர்
பனை வெல்லம் - 25 கி
பனஞ்சீனி - 16 கி
தும்பு - 11.4 கி
ஈக்கு - 2.25 கி
விறகு - 10 கி
ஓலை - 10 கி
நார் - 20 கி.

தகவல்கள் போதுமா? நான் சொல்லவந்த விஷயம் என்னன்னா,மேலே சொன்னவைகள் நாம் அனைவரும் பெரும்பான்மையாக அறிந்ததுதான்.ஆனால் நேற்று ஒரு குடும்ப விழாவில் கலந்துக்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினத்திலிருந்து 15கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் 'பண்ணந்தூர்' என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன்.அந்த ஊரில் அதிசயப்பனை மரம் இருப்பதாக்ச் சொல்லி அதைக்காண அழைத்துச் சென்றார்கள்.




அங்கே இரண்டு பனைமரங்கள் நடப்பட்டு பலக்கிளைகள் பரப்பி ஆலமரம்போல பரந்து விரிந்துக்காட்சி தந்தது.பலவருடங்களுக்கு முன்பு மலேசியா சென்ற இந்த ஊர்க்காரர் ஒருவர்,அங்கிருந்துக் கொண்டுவந்து நட்ட பல பனைச்செடிகளில் இரண்டுமட்டும் வேறூன்றி வளர்ந்து இன்று பிரமாண்ட மரமாகாக் காட்சிதருகிறது.
நான் கண்ட அதிசயக்காட்சியை வலையுலக தமிழ் மக்களும் கண்டுக்களிக்க க்ளிக்'கியக் காட்சிகள் புகைப்படங்களாக மேலே.

February 3, 2009

தேசிய நெடுஞ்சாலை NH7

கடந்த டிசம்பரில் ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்வதற்க்காக சென்னை செல்லவேண்டியிருந்தது. கூடவே நண்பனின் குடும்பமும்(பிறந்து ஒரு மாதமே ஆனக் கைக்குழந்தையும்,4 வயதான வாண்டுப்பெண்ணும்) வந்ததால் என்னுடைய காரிலேயே சென்றுவிடுவதென முடிவு செய்தோம்.பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 350கிமீ, முதல்முறையாக இந்தியாவில் நீண்டதூர சாலைவழிப்பயணம்,அதுவும் முழுதூரத்திற்கும் நான் ஒருவனே டிரைவர் வேலைப்பார்க்க வேண்டும்.புதன்கிழமை காலை 730க்கு முன்பு வீட்டிலிருந்துக் கிளம்பினோம்.ஒசூர்வரை பாலம் மற்றும் ரோடு போடும் வேலைகள் நடப்பதால்,35கிமீ கடக்க ஏறக்குறைய 1 மணி நேரம் ஆனது.
தென் திருப்பதி கோயில்-முழுத்தோற்றம்

ஒசூரிலிருந்து சென்னைவரை 4 வழிப்பாதை அமைக்கப்பட்டிருப்பதால் பயணம் இனிதே ஆரம்பித்தது.ஒசூரிலிருந்து சரியாக 10கிமீ தூரத்தில்,ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் தாண்டியவுடன் சாலையின் மறுபக்கத்தில் ஒரு சிறுக்குன்றின்மேல் தென்திருப்பதி என்று ஒரு வெங்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.சிறியக்கோயில் என்றாலும் மிகச்சிறப்பாக கட்டியுள்ளனர்.குன்றின் உச்சியில் கோயில் அமைந்துள்ளதால்,கோயிலின் பின்புற பிரகாரத்தை கடந்து எட்டிப்பார்த்தால் சரேலென சரியும் ஒரு பள்ளத்தாக்கு பச்சைப்பசேலென விரிகிறது.பரந்து விரிந்த பச்சை வயல்வெளியும்,அதைக் கட்டி அணைத்ததுப்போல வெகுதூரத்தில் தெரியும் மலைக்குன்றுகளும்,ஒயிலாக இடுப்பசைத்து வெக்கத்துடன் அன்னநடை நடந்து காதலனை நாடிச்செல்லும் இளம் கிராமத்து பெண்பொல வயல்களுக்கு நடுவே வளைந்து நெளிந்து சலசல என்ற கொலுசு சத்தம் போல கலகலத்து,காலை வெயிலின் தாக்கத்தால் தங்கம்போல தகதகத்து ஓடும் ஓடை நீரும்,அன்னையிடம் பாலருந்தி வயிறு நிறைந்த திருப்தியில்,தெய்வ சிரிப்பு சிரிக்கும் குழந்தையின் முகத்தைப் பார்க்கும் தாயின் பரவசநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும் மென்மையான தென்றல் காற்றும்,நாம் அங்கு செலவிடும் சில மணித்துளிகளில் நம் வயதை பாதியாகக் குறைத்து,வானத்தில் பறக்கும் ஆகாயவிமானத்தை முதல்முதலில் பார்க்கும் சிறுவனின் மனநிலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. அடுத்தமுறை ஒசூர் வழியாக கிருஷ்ணகிரி செல்பவர்கள் தவறாமல் இங்கு ஒரு விசிட் அடியுங்கள்.


தென் திருப்பதி கோயில்-கோபுரம்




பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை சாலையில் வாகன நெரிசல் ஓரளவிற்கு அதிகமாக இருக்கும்.ஏகப்பட்ட லாரிகளை ஓவர்டேக் செய்ய வேண்டியிருக்கும்.அதுவும் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை மலைப்பாங்கான சாலைகள்.பெரும்பாரம் ஏற்றிய லாரிகள்,ஆமை வேகத்தில் இருவழிகளையும் அடைத்துக்கொண்டு மேடேறுவது காரில் செல்லும் நம்முடைய பொறுமையை பயங்கரமாக சோதித்துவிடும்.கை எப்போதும் கியர் மாற்றுவதிலும், கால்கள் கிளட்ச்,பிரேக்,ஆக்ஸிலேட்டர் என மாறிமாறி சேற்றை மிதிப்பதைப்போல மாற்றிக்கொண்டிருப்பதில் கையும் காலும் ஓய்ந்துப்போகும்.கிருஷ்ணகிரிக்கு ஒர் 10கிமீ'க்கு முன்னால் அடையார் ஆனத்தபவன் உணவகம் உள்ளது.ஒன்றரை மணிநேர கடினப் பயணத்திற்குப்பிறகு சிறிது ஓய்வெடுக்க சிறந்த இடம்.

கிருஷ்ணகிரியைத்தாண்டி வேலூர் செல்லும் சாலையை அடைந்துவிட்டால்,வாகனம் ஓட்டுவதற்கு ஒரு சிறந்த தடமாகிவிடுகிறது.லாரிகள் அனைத்து சேலம் வழியாக தென் தமிழகத்திற்கும்,கேரளாவிற்கும் செல்வதால் வேலூர் சாலை,லாரிகள் அற்ற பாலைவன சோலையாகிவிடும்.சிறு பெரிய ஊர்களின் குறுக்கீடும் புறவழிச்சாலை அமைப்பால் விலகிச்சென்று விடுகிறது. ஆக்ஸிலேட்டரில் வைத்தக்காலை எடுக்கவே தேவையில்லை. குறைந்தப்பட்சம் 120கிமீ வேகத்தில் பறக்கலாம். ஆனால் அமெரிக்காவில் freeway'ல் கார் ஓட்டும் நிம்மதிக் கிடைப்பதில்லை.அதற்கு காரணம், சாலையின் குறுக்கே திடீரென ஓடும் மக்கள், எதிர்புறத்திலிருந்து அடுத்தப்பக்கம் செல்ல,முறையாக அமைக்கப்பட்டுள்ள அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள வழிகளைப் பயன்படுத்தாமல், நேரத்தையும்,பெட்ரோலையும் மிச்சம் பிடிக்கும் முனைப்புடன்,நாம் செல்லும் அதே திசையில் நேர்எதிரே வண்டி ஓட்டிவரும் இரண்டு சக்கரம்,ஆட்டோ,டிராக்டர்,லாரி, பேருந்துகள் என ஓட்டி வந்து மேலுலகத்திற்கு செல்லும் குறுக்குவழியை காட்டுவார்கள்.ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வண்டி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வேகத்தில் ஓட்டுவது நல்லது.

இந்த வழிகளின் சாலை ஓரங்கள்,இன்னும் கான்கிரீட் காடுகளாக மாறவில்லை.ஆகவே பெரும்பாலும் பச்சைபசேலென வயல்வெளிகளும்,மலைமுகடுகளும் பயணத்தை இனிமையாக்குகிறது.இந்தநிலை வேலூர் அடையும் வரைதான்.வேலூரிலிருந்து சென்னைவரை வெயிலூரின் கடுமையான வெப்பத்தால் காய்ந்துப்போய் உள்ளது. இன்னொரு பெரிய குறுக்கீடு ஆடு மாடுகளால் ஏற்படுகிறது.4 வழிப்பாதைகளின் நடுவில் சிறுமரங்களும்,புல்வெளிகளும் வளர்க்கிறார்கள்.அதற்கு நல்ல பராமரிப்பும்,தண்ணீரும் சாலை பணியாளர்களால் கொடுக்கப்படுகிறது. அந்தப்பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் மக்கள்,காலையிலேயெ அனைத்து கால்நடைகளுக்கும் சுதந்திரம் வழங்கி சாலையில் விட்டுவிடுகிறார்கள்,அவைகளும் மிகவும் சுதந்திரமாக தேசிய நெடுஞ்சாலையில் நடைப்போட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கலைத்தருகிறது.

வேலூர்,வாலாஜாவைத்தாண்டி கார் சென்றுக் கொண்டிருந்தது.ஏற்க்குறைய 70-80கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.ஒரு 50 அடிதூரத்தில் இடதுபுறமிருந்து ஒரு பசு திடீரென குறுக்கே நடக்க ஆரம்பித்தது. கடைசி சில நொடிகளில் அதைக்கவனித்த நான் வலதுப்புறம் திரும்பலாம் என்றால்,காருக்கு இணையாக ஒரு லாரி வந்துக்கொண்டிருந்தது,வேகத்தையும் முழுஅளவில் குறைக்க முடியவில்லை.பசுவும் கால்வாசி தூரத்தை நான் செல்லும் பாதையில் கடந்துக்கொண்டிருந்தது. வேறுவழியேயில்லை.காரை வலதுப்புறத்தில் லாரியை உரசாத மில்லிமீட்டர் தூரத்திற்கு செலுத்தி, வேகமும் 40கிமிக்கு குறைந்து ஒரு மைக்ரோ மீட்டர் இடைவெளியில் காரின் முன்பகுதி பசுவைக்கடந்திருந்தது.இடதுப்புற முன்பகுதி பசுவைக்கடக்கும் நேரம் 'டமார்'ரென ஒரு சத்தம்,கார் பசுவைகடந்துவிட்டது. ரிவர்வியூ மிர்ரர் வழியாக பார்த்ததில்,பசு எவ்வித பிரச்சனையுமின்றி மறுபக்கத்தை நோக்கி அன்னநடைப் போட்டுக்கொண்டிந்தது. இடதுபுற முன் இருக்கையில் 4 வயது குழந்தையுடன் அமர்ந்திருந்த நண்பனுக்கு எதுவும் ஆகவில்லை.ஏற்றிவிடப்பட்டிருந்த கண்ணாடியும் ஒன்றும் ஆகவில்லை. அப்போது சத்தம் எங்கிருந்து வந்தது? ஒருவேளை இடதுப்புறக்கதவின் கீழ்ப்பகுதி முழுவதும் அடிப்பட்டிருக்குமோ...அப்படியென்றால் குறைந்தப்பட்சம் ஒரு பத்தாயிரம் ரூபாய் மொய் எழுதவேண்டியிருக்குமோ என்ற கேள்வியுடன்,ஒரு கிமீ தூரம் கடந்துக் காரை ஓரம் கட்டினோம்.

காரிலிருந்து இறங்கி என்ன ஆனது என ஆராய்ந்தால்,இடதுப்புறக்கதவில் ஒரு சிறுக்கீறல் கூட இல்லை.பிறகுத்தான் கவனித்தோம்,இடதுப்புறம் உள்ள 'ரிவர்வியூ' மிர்ரர் மட்டும் முழுவதுமாக காணாமல் போயிருந்தது.அதுவும் கண்ணாடி மட்டும்தான்.கண்ணாடி ஹோல்டர் ஒன்றும் ஆகவில்லை.ஒரு 500 ரூபாய் செலவு அவ்வளவுதான்.அதைவிட யாருக்கும் எந்தவித இடருமின்றி பெரும் விபத்திலிருந்து தப்பித்த நிம்மதி. பசுக்கடக்கும்போது,அதன் முன்புற வாய்ப்பகுதி மட்டும் கண்ணாடியில் பட்டு,கண்ணாடி தெரித்ததால் அந்த பெரும் சத்தம்.பசுவின் வாய்ப்பகுதி அதனால் அடிப்பட்டதா என தெரியவில்லை.

அதற்குப்பிறகு மிகுந்தகவனத்துடன் ஓட்டி, ஸ்ரீபெரும்புதூருக்கு சில கிமி முன்னால் இன்னொரு உணவகத்தில் ஓய்வுக்காக நிறுத்தினோம்.அங்கிருந்து சென்னைவரை மறுபடியும் லாரிகளும்,நகரப்பேருந்துகளும்,ஆட்டோக்களுமென நெரிசல் அதிகமாகிவிடுகிறது. போதாதகுறைக்கு சுட்டெரிக்கும் மதிய வெயில்.ஒருவாறாக ஐந்தரை மணி நேரத்தில் சென்னை மாநகரை அடைந்தோம்.

சென்னையிலிருந்து பெங்களூர் வரும்போது எவ்வித சிறுசம்பவங்களும் இன்றி நல்லப்படியாக அடுத்த நாள் வீடு வந்து சேர்ந்தோம்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது,ஒரு நல்ல பயணமாகவே அமைந்தது.சிறந்தமுறையில் அமைக்கப்பட்ட சாலைகள்,பாலங்கள்,நல்ல உணவகங்கள்.ஆனால் சாலைவிதிகளை மதிக்கும் பாங்கு நமக்கு இன்னும் சரிவர தெரியவில்லை. அதற்கு சான்று வழிகளில் காணும் சிறு,பெரும் விபத்துகள்.வாகனத்தால் அடிப்பட்டு இறந்துப்பான நாய்களின் உடல்கள் அகற்றப்படாமல்,அதன்மேலே அனைத்து வாகனங்களும் சென்று,அது காய்ந்து சாலையோடு சாலையாக தேய்ந்துபோன தடங்கள். சிவப்புவிளக்கு சுழல வேகமாக செல்லும் ஆம்புலன்ஸ்கள் என பல நிகழ்வுகள்.

பெங்களூர்-சென்னை வழியில் 5 டோல்கேட்கள் உள்ளன.ஒவ்வொரு இடத்திலும் 25ரூ முதல் 45ரூ வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.ஏற்க்குறைய ரூ 350-400 வரை போய்வர செலவழிக்க வேண்டியுள்ளது.ஆனால் கொடுக்கும் காசுக்கு நல்லமுறையில் சாலைகளை பராமரிக்கிறார்கள்.அந்தவிதத்தில் மகிழ்ச்சியே !

September 17, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 9

டிஸ்கி : கடந்த சில நாட்களாக வேலைக்கொஞ்சம் அதிகமாகிவிட்டதால், தொடர்ந்து எழுதமுடியவில்லை.....இப்ப Am back......;))

கடந்தப்பதிவில் அமெரிக்காவில் IT கம்பெனியில் காண்ட்ராக்ட்ர் அல்லது நேரடி எம்ப்ளாயி'யாகவோ வேலை செய்யும் இந்தியமக்கள் தன்வேலையைக் காப்பாற்றிக்கொள்ள செய்யும் 'வேலைகள்' என்ன என்பதைப்பற்றி எழுதப்போவதாக சொல்லியிருந்தேன்.இந்தப்பதிவு அதைப் பற்றிதான்.

முதலில் அமெரிக்க கம்பெனியில் நேரடியாக வேலைப்பெற்றுப் பணிப்புரியும் நம் மக்களைப்பற்றி. கடந்தப்பதிவில் decision maker level'ல் பணிப்புரியும் நம்மவர்கள் அதைப்பயன் படுத்தி பணம் செய்யும் வித்தைகளைக் கூறியிருந்தேன். அவர்களைத்தவிர்த்து அவர்களுக்கு கீழேப் பணிப்புரியும் team lead,techlead போன்றவர்கள் அவர்களுடன் இந்திய சர்வீஸ் கம்பெனியிலிருந்து வந்து பணிப்புரியும் மக்களுக்கு வேலையை பகிர்ந்தளிப்பவர்களாகவோ, அல்லது செய்துமுடிக்கப்பட்ட வேலைகளை review செய்பவர்களாகவோ இருப்பார்கள். பொதுவாக சர்வீசஸ் கம்பெனியிலிருந்து வேலை செய்பவர்கள் process oriented'ஆக இருப்பார்கள்(அல்லது அப்படி இருப்பதாக காட்டிக் கொள்வார்கள்) .process oriented என்றால் ஏகப்பட்ட 'டாக்குமெண்ட்' வேலைகள் இருக்கும். சாப்ட்வேரில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் விவரமாக ஆவணப்படுத்த வேண்டும்.இதனால் நன்மை என்னவென்றால் ஒரு புராஜக்ட் அதில் வேலைச் செய்துக்கொண்டிருக்கும் ஒரு சிலரை மட்டும் என்றென்றும் நம்பியிருக்க தேவையில்லை. புதிதாக சேரும் எவரும்,அந்த ஆவணங்களைப் படித்து புரிந்துக்கொண்டு,விட்ட இடத்திலிருந்து அதிகப்பிரச்சனைகளின்றி வேலையைத்தொடர ஏதுவாக இருக்கும். தீமை என்னவென்றால், இதற்கு ஆகும் நேரத்திற்கு 'கஸ்டமர்' செலவு செய்யவேண்டும்.அதோடு முன்பே கூறியுள்ளதுப்போல் அதில் வேலை செய்தவரின் முக்கியத்துவம் அதிகமில்லை.ஆகவே நம்மவர்களின் முதல் எதிர்ப்பு 'ஆவணப்படுத்துதல்' வேலைகளுக்கு.

நான் முதலில் வேலைச்செய்த அமெரிக்க கம்பெனியின் techlead ஒரு இந்தியர். நான் அனைத்து விவரங்களையும் டாகுமெண்ட் செய்ய ஆரம்பித்தேன். அது முடிந்தவுடன் review'க்காக அவருக்கு அனுப்பினேன். அதைப்பார்த்துவிட்டு என்னை அழைத்து இதற்கேல்லாம் நெரம் செலவழிக்கவேண்டாம் எனக்கூறிவிட்டார். ஆனால் எங்கள் கம்பெனியில் நாங்கள் அதைச் செய்யவேண்டும் என்பதால், ஓய்வு நேரத்தில் நான் தொடர்ந்து ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு வருடம் வேலைப் பார்த்து விட்டு வேறு நகருக்கு செல்வதற்குமுன், நான் கடந்த ஒருவருடமாக தயாரித்திருந்த ஆவணங்களை என்னுடைய பரிசாக அவருக்கு அளித்தேன். சில மாதங்களுக்குப்பிறகு என்னைத் தொடர்புக்கொண்ட அவர்,நான் அளித்திருந்த ஆவணங்கள் அந்தப்புராஜக்ட்க்கு பெருமளவில் உபயோகப் படுவதாகவும்,இனிமேல் டாகுமெண்ட் செய்வதை நடைமுறைப் படுத்தப்போவதாகவும் கூறினார்.

அதேப்போல், ஒரு சர்வீஸ் கப்பெனியிலிருந்து ஒரு அமெரிக்க கம்பெனிக்கு Time & material முறையில் ஆட்கள் தேவைப்படும்போது சர்வீஸ் கம்பெனி பரிந்துரைக்கும் developer/techlead ஆகியோரை அமெரிக்க கம்பெனியை சேர்ந்தவர்கள் இண்டர்வியூ செய்வார்கள். அந்த இண்டட்வியூ பேனலில் 'இந்தியர்' யாராவது இருந்தால்,நீங்கள் காலி. ஏதோ 'நாசா'விலிருந்து ஏவப்படும் ராக்கெட்'க்கான சாப்ட்வேரை தயாரிக்கும் பணியில் உங்களை அமர்த்தப் போவதற்கான இண்டர்வியூப்போல அக்குவேறு ஆணிவேறாக உங்களைக் கேள்விமேல் கேள்விக்கேட்டு குடாய்ந்து நம்முடைய கான்பிடன்ஸ் லெவலையே காலி செய்துவிடுவார்கள். அந்த இண்டரியூவில் தேர்வாக எளிதான வழி, அவர்கள் அறிவுஜீவித்தனமாக( ????) கேட்கும் கேள்விகளுக்கு ராஜேந்திரக்குமார் பாணியில் 'ங்கே' என முழித்துவிட்டு, இது ஒரு சிறந்தக்கேள்வி,என் வாழ்நாளில் இதுப்போல யாரும் கேட்டதில்லை என அடித்துவிட்டால்,அவரும் 'இவன் ரொம்ம்ம்....ப நல்லவன்,இங்க வந்து நம்ப வேலைக்கு வேட்டு வைக்கமாட்டான்' என நம்பி நம்மை தெர்ந்தெடுத்து விடுவார். கடைசியில் 'ஆன்சைட்' போனப்பிறகு, ராக்கெட்'க்கான சாப்ட்வேரை எழுதாமல்,ஏதாவதொரு ஆதிக்கால மெயின்ப்ரேம்' சாப்ட்வேரில் 'சிக்'கெடுக்கும் வேலையை தலையில் கட்டிவிடுவார்கள்.

உங்கள் புராஜக்ட் ஆப்ஷோரிலிருந்து முழுவதுமாக தயாரிக்கப்பட்டு acceptance testing' காக ஆன்சைட்டிலுள்ள இந்திய கஸ்டமரிடம் போனால், நீங்கள் எவ்வளவு சிறப்பாக புராஜக்ட் செய்து டெலிவரி செய்திருந்தாலும் அதில் குறைகள் கண்டுப்பிடித்து, application வேலையே செய்யாது அல்லது நாம் எதிர்ப்பார்த்த முறையில் தயாரிக்கப்படவில்லை என management level'ல் escalate செய்துவிடுவார்கள். ஒரு எளிய உதாரணமாக இரண்டு எண்களைக் கூட்டும் வேலை எனச் சொல்லி, நாம் 2+1=3 என காட்டினால், அது எப்படி 2+1=3 எனலாம்,எனக்கு வேண்டியது 1+2=3'தான் என பிரச்சனையைக் கிளப்புவார்கள். ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்து 'successful production roll-out' செய்து higher management'க்கு அதை அறிவிக்கும் இ-மெயிலில் கவனமாக நம்முடைய முகவரிகள் இல்லாதவாறு பார்ந்துக்கொள்வார்கள்.

IT துறையில் சிரமமில்லாத வேலை development project. ஆரம்பம்முதல், இறுதிவரை அனைத்து செயல்பாடுகளும் நம் பொறுப்பில் இருப்பதால் ஒரு சிறிய திறமையான குழு அமைந்தால், வேலையை சுலபமாக முடித்துவிடலாம். அவ்வாறில்லாமல் ஏதாவதொரு 'maintenance' டீமில்,அதுவும் அந்த சாப்ட்வேர் அமெரிக்காவில் 'காண்ட்ராக்ட்'ராக வேலைப்பார்க்கும் நம்பவர்களின் தயாரிப்பென்றால் அவ்வளவுதான். code'ஐ பார்த்தால் தலையும் புரியாது,காலும் புரியாது. ஒழுங்குமுறையின்றி,எவ்விதக்குறிப்புமின்றி அலங்கோலமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 1+1=2 என்பதை ((18343/45.67223)*(863434-883743(884545-(7454/4545)))+87878*532)+1 என எழுதியிருப்பார்கள். அவர்களுடைய ஒரேக் குறிக்கோள் அவர்களைத் தவிர வேறு யாரும் அவர்கள் எழுதிய லாஜிக்கைப் புரிந்துக்கொள்ளக்கூடாது. அப்படியிருந்தால்தான் அவர்களின் வேலைக்கு யாரும் சுலபமாக வேட்டு வைக்கமுடியாது.

கடந்த சில வாரங்களாக எழுதியப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகப் படித்துப்பார்த்தபோது,இதுவரை IT துறையில் நான் கண்டவைகளில் எனக்கு தவறாகவோ அல்லது வித்தியாசமாகப் பட்டவைகளை, மொழி/இன ரீதியாகப் பாகுபடுத்தி எழுதியிருக்கிறேன்.பெரும்பாலும் இனரீதியான குழுக்களில் உள்ள குறைகள் பற்றி எழுதியிருக்கிறேன். இவைகள் குறைய என்ன செய்யவேண்டும்? எவ்வாறு IT துறையை ஒரு சிறந்தத்துறையாக உருவாக்கலாம்...அதற்கு நம் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கு என்ன?

(தொடரும்.....)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8

September 7, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 8

2006'ம் தொடக்கத்தில் 'பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்' என்பதற்கான நிகழ்வு நடந்தது. நியூ இயர் கொண்டாட்டங்கள் முடித்து, ஆபிஸுக்கு வந்த மேனேஜர்கள்(decision makers) அந்தக்கம்பெனியின் ஆடிட்டிங் டீம்'மால் ஒரே நேரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த நிமிடமே வேலையிலிருந்து நீக்கப்பட்டு, அவர்கள் லேப்டாப்'பையோ,அவர்கள் க்யூபிக்கில் உள்ள எந்தப் பொருளையும் எடுக்கவிடாமல் பறிமுதல் செய்யப்பட்டு,அவர்களுக்கு கீழே வேலைச் செய்பவர்கள் முன்னிலையில் வெளியேற்றப் பட்டார்கள்.

யாருக்கும் அப்போது எப்படி இது நிகழ்ந்தது எனப் புரியவில்லை.அந்த மேனேஜர்களும் அதற்குப்பிறகு அந்த நகரத்தில் இல்லை.யாராலும் அவர்களைத் தொடர்ப்புக்கொள்ள முடியவில்லை. என்னுடைய 'காண்ட்ராக்ட்டர்' நண்பரும் இந்த நிகழ்ச்சி நடப்பதற்க்கு சில மாதங்களுக்கு முன்பாகவே வேறு கம்பெனிக்கு மாறியிருந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு 'யாஹூ' சாட் வழியாக அந்த நண்பர் கிடைத்தார்.என்னுடைய மொபைல் எண்ணை வாங்கி உடனடியாக தொடர்ப்புக்கொண்டார். அவரிடம் ஏன் அவர் அந்தக் கம்பெனியிலிருந்து வெளியேறிவிட்டார் எனக்கேட்டதற்க்கு ஒரு பெரிய விளக்கத்தைக் கூறினார்.

3-4 வருடங்களாக எந்தவிதச் சிக்கலுமின்றி அந்த மேனேஜர்களுக்கும், கன்சல்டன்சி கம்பெனிக்கும் உறவு தொடர்ந்துள்ளது. அந்த சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இன்னொரு கன்சல்டன்சி கம்பெனியிலிருந்தும் ஆட்கள் தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல் கம்பெனி மேனேஜர்களிடம் காரணம் கேட்டதற்கு ' பெரும்பாலோனோரை உங்கள் கம்பெனி வழியாகமட்டும் எடுப்பதால் 'higher management'க்கு சந்தேகம் ஏற்படலாம்,ஆகவேதான் 3 இந்தியன் சர்வீசஸ் கம்பெனிகளோடு,இந்த புது கன்சல்டன்சி கம்பெனியிலிருந்தும் ஆட்களைத் தேர்வு செய்வதாகவும்' கூறியுள்ளார்கள். ஆனால் போகப்போக புதிய கன்சல்டன்சி கம்பெனியிலிருந்து ஆட்களை எடுப்பது அதிகரித்துள்ளது.

இதில் ஏதோ விஷ(ய)ம் இருக்கிறது என சந்தேகித்த முதல் கன்சல்டன்சி கம்பெனி விவகாரத்தை ஆராய்ந்தப்போது, அந்தப் புதிய கன்சல்டன்சி கம்பெனியில் இந்த மூன்று மேனேஜர்களும் மறைமுகப் பங்குதாரர்களாகவும்,அந்தக்கம்பெனியை நடந்துவது அவர்களின் உறவினர்கள்தான் என்றத்தகவல் கிடைத்துள்ளது. இந்த விவரங்களைக் கூறி அந்த மேனேஜர்களைக் கேட்டதற்கு பேச்சு முற்றி அவர்களுக்குள்ளே பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது.சிறிது நாட்களில் அந்த கன்சல்சன்சி வழியாக சேர்ந்தவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அக்கம்பெனியிலிருந்து வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர்.2-3 மாதங்களில் கிட்டத்தட்ட 70 பேர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நெருக்கடிக்கும், நஷ்டத்திற்க்கும் ஆளான அந்த கன்சல்டன்சி கம்பெனி கடந்த 3-4 வருடங்களாக அந்த மேனேஜர்களுக்கு கொடுக்கப்பட்ட கமிஷன் விவகாரங்களை 'higher management' க்கு போட்டுக்கொடுத்துவிட்டு அவர்கள் கன்சல்டன்சி கம்பெனியை மூடிவிட்டிருக்கிறார்கள். விவரங்களை ஆராய்த்த கம்பெனி ஆடிட்டிங் டீம் அந்த மேனேஜர்களின் பேங்க் கணக்குகளை தடைச்செய்துவிட்டு அவர்களை நீக்கிவிட்டார்கள்.ஆனால் விஷயம் வெளியே தெரிந்தால் கம்பெனி பெயர் கெட்டுவிடும் என்பதால் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது ஒரேஒரு எடுத்துக்காட்டுதான்.இதுபோல் பலக்கம்பெனிகளில் நடைப்பெருகிறது. இந்தியர்கள் மட்டும் அல்ல,அனைத்து நாட்டினரும் ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறமென எவ்வித வேறுபாடுகளுமின்றி 'ஒற்றுமையாக' ஒன்று சேர்ந்து உலகத்தின் தொன்றுத்தொட்டு நிகந்துவரும் லஞ்சம், குறுக்குவழியில் பணம் சம்பாதித்தல், துரோகம்,சுயநலத்துடன் தன்முன்னேற்றத்திற்காக எவ்விதசெயலையும் மனசுத்தியுடன் செய்தல் போன்றவைகளை, 21'ம் நூற்றாண்டில் பல இந்திய நடுத்தரக்குடும்பத்து மக்களின் வாழ்வில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் IT துறையிலும் மேற்க்கூறிய விஷயங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதைத்தவிர தங்கள் வெலைகளைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்காவில் 'காண்ட்ராக்ட்டர்களாக வேலைச் செய்யும் நம்மக்கள் செய்யும் 'தகிடுதம்'கள் என்னென்ன??

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7

(தொடரும்)

September 2, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 7

2003'ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்கவாசம் ஆரம்பித்தது.எங்கள் கம்பெனியிலிருந்து நானும், ஆப்ஷோரிலிருந்து இருவரும் வேலையை ஆரம்பித்தோம். அது ஒரு டெவலப்மெண்ட் ப்ராஜக்ட்.எங்களைத்தவிர மேலும் 18-20 பேர் டீமிலிருந்தார்கள்.அதில் பெரும்பாலோர் நான் அமெரிக்காவிலிருந்த நகரத்திலிருந்தும்,மற்றவர்கள் வேறொரு நகரத்திலிருந்தும் வேலை செய்தார்கள்.கிட்டத்தட்ட 4 மாதங்கள் வேலை அதிகமிருந்தது, என்னுடைய டீம் ஆப்ஷோரிலிருந்ததால் சிலசமயம் இரவுமுழுவதும் வேலையிருந்தது.ஆகவே வெலையைத்தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. முதல் 'ரிலீசுக்கு' பிறகு வேலை சுலபமானது.மேலும் 'ஆப்ஷொரிலிருந்து' வேலைப்பார்த்தவர்களையும் நான் அமெரிக்காவிற்கு வரசெய்துவிட்டேன்.ஆகவே எனக்கு வேலை முன்பிருந்ததுபோல் அதிகமில்லை. ஆகவே என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்க்க ஆரம்பித்தேன்.

வழக்கமாக இந்தியாவிலிருந்து 'சர்வீஸ் கம்பெனிகளின்' சேவையை பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்,முதலில் ஒரு இந்தியன் கம்பெனியோடு வேலையை ஆரம்பிப்பார்கள். சிறிதுக்காலத்திற்கு பிறகு சில வேலைகளை வேறோரு இந்திய சர்வீஸ் கம்பெனிக்கு கொடுப்பார்கள். இதனால் இரண்டு இந்தியக் கம்பெனிகளுக்கும் ஒரு போட்டி ஏற்படும் ஆகவே வேலையை திறமையாக முடித்துக்கொடுக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படும்.சில சமயம் பில்லிங் ரேட்டும் குறைக்கவேண்டியிருக்கும். இதனால் அமெரிக்க கம்பெனிக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவையைப் பெறமுடியும். இந்த உத்தியை நான் வேலைச் செய்த அமெரிக்க கம்பெனியும் செய்திருந்தது. இந்தியாவின் முதல் மூன்று முண்ணனி நிறுவனங்களில் இருந்தும் இந்த ப்ராஜக்ட்டில் ஆட்கள் இருந்தார்கள். ப்ராஜக்ட் மேனேஜர், டெக்னிக்கல் மேனேஜர், குரூப் ஹெட்(decision makers for that group) அனைவரும் அமெரிக்க கம்பெனியைச் சார்ந்த அமெரிக்காவில் செட்டில் ஆன இந்தியர்கள்.

நான் மேற்சொன்ன உத்தியை அமெரிக்க கம்பெனியில் வேலை செய்யும் இந்தியர்கள்தான் அவர்கள் க்ரூப்'பில் புகுத்தியிருந்தார்கள். நான் வேலை செய்த ப்ராஜக்ட் தவிர மேலும் சில ப்ராஜக்ட்களும் அவர்களுக்கு கீழே இருந்தது.குறைந்தது 60-80 பேர்கள் அந்த க்ரூப்பில் இருந்தார்கள். குறைந்த செலவில் 3 இந்திய சர்வீஸ் கம்பெனிகளுக்குள் போட்டியை ஏற்படுத்தி நிறைவான சேவையைப் பெற்று,அவர்கள் வேலைச் செய்யும் அமெரிக்க கம்பெனிக்கு லாபத்தை ஏற்படுத்துவதாக முதலில் நானும் பெருமைப்பட்டேன் அந்த இந்தியர்களின் சாமார்த்தியத்தை எண்ணி.

சிறிது மேலும் ஆராய்ந்தப்பிறகு வேறொரு உண்மை கண்ணில் பட்டது. மொத்தம் உள்ள 60-80 பேரில் அதிகப்பட்சம் ஒரு 30 சதவிகிதம்தான் இந்த இந்திய சர்வீஸ் கம்பெனி மக்கள்(எங்கள் கம்பெனியிலிருந்து நாங்கள் மூவர்தான்..) மீதி அனைவரும் அமெரிக்காவில் இயங்கும் 'கன்சல்டன்சி' கம்பெனி வழியாக 'காண்ட்ராக்ட்' தொழிலாளியாக இங்கு வந்து வேலை செய்பவர்கள்.அதிலும் 80%க்கு மேல் அனைவரும் தெலுங்குதேச மக்கள். இன்னொரு முக்கிய விஷயம்,நான் மேற்க்கூறிய மேனேஜர்கள் (decision makers) அனைவரும் தெலுங்கு மக்கள்.

காண்ட்ராக்ட் மக்களோடு பழகி அவர்களோடு நெருக்கமாக நட்புமுறையில் பழக ஆரம்பித்தப் பிறகு தெரிந்த மற்றொரு உண்மை, அந்த கன்சல்டென்ஸி கம்பெனியும் தெலுங்கு மக்களாலேயே நடத்தப்படுவதை அறிந்தேன். அப்போதுதான் ஏதோ ஒரு உள்குத்து இருப்பதாக உணர்ந்தேன். எங்கள் கம்பெனி மேனேஜரோடு பேசிக்கொண்டிருக்கும்போது, 'ஏன் நம் கம்பெனிக்கு 3 பேரைத் தவிர வேறு யாரையும் சேர்க்க முடியவில்லை? என வினவினேன். 'decisions makers' வோடு அவர் தொடர்ந்துப் பேசுவதாகவும் ஆனால் மேலும் சிலரை சேர்க்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லையென்றும்,ஆனால் அந்த கன்சல்டென்ஸி கம்பெனிக்கே முன்னுரிமைக் கொடுப்பதாகவும் சொன்னார். ஆனால் அதேக் கம்பெனியின் வேறு க்ரூப்பில் உள்ள ப்ராஜக்ட்டில் எளிதில் நம் கம்பெனி மக்களை சேர்க்க அந்த க்ரூப்பின் ஹெட்(அமெரிக்கன்) அனுமதிப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் 'காண்ட்ராக்ட்' மக்களில் என்வயதைச் சார்ந்த ஒருவர் எனக்கு நன்கு பழக்கம் ஆனார் மனம்விட்டு பேசும் அளவிற்கு. ஒருநாள் அவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.'எப்படி நீ சார்ந்த கன்சல்டன்சி கம்பெனி ஆட்களை மட்டும் இந்த க்ரூப்பில் சுலபமாக சேர்த்துக்கொள்கிறார்கள்?' . நீண்ட தயக்கத்திற்குப் பிறகு ஒரு பெரிய உண்மையை வெளியிட்டார். அந்தக் கன்சல்டன்சி கம்பெனி வழியாக வரும் ஒவ்வொருவரின் 'பில்லிங் ரேட்டிலும்' ஒரு குறிப்பிட்ட சதவிகிதம், 'decision makers'க்கு கமிஷனாகப் போகிறது'. நான் ஆடிப்போனேன்.எப்படியென்றால், உதாரணத்திற்கு ஒரு காண்ட்ராக்டர்க்கு ஒரு மணி நேரத்திற்கு 100 டாலர் என அமெரிக்க கம்பெனியோடு(நம் decision makers மேனேஜர்களோடு) டீலை அந்த கன்சல்டன்ஸி கம்பெனிப் போடும். அதில் ஒரு 25 டாலர் அந்தக்கன்சல்டன்சி கம்பெனிக்குப் போகும்,ஒரு 20-25 டாலர்கள் கமிஷனாக 'நம் decision makers' மேனேஜர்கள் பங்குப் போட்டுக்கொள்வார்கள். மீதியுள்ள 50 டாலர் காண்ட்ராக்ட் எம்ப்ளாயிக்குப் போகும். இப்படியாக கணக்குப்போட்டால் (1 employee*25$*8hrs/day*21days/month) ஒரு 4200 டாலர் கமிஷனாகப் போகும்,அந்த க்ரூப்பில் 50-60 பேர்வரை அந்தக் கன்சல்டன்ஸி கம்பெனி வழியாக வேலைச் செய்பவர்கள். அப்படியென்றால் அந்த மேனெஜர்கள் மாதத்திற்க்கு அடிக்கும் கமிஷன் எவ்வளவு என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால்,அந்த க்ரூப்பில் இந்தியர்கள் தவிர வேறு நாட்டவர் (அமெரிக்கன்,சைனீஸ், ஜப்பானியர்கள்) எவரும் தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. தப்பித்தவறிச் சேறுபவர்களும் சில வாரங்கள்/மாதங்களில் வேறு க்ரூப்பிற்கோ,கம்பெனிக்கோ மாறிவிடுவார்கள். நான் வேலைச் செய்தக் காலத்தில் ஒரு சைனீஸ் எங்கள் ப்ராஜக்ட்டில் சேர்ந்தார். அவருக்கு அவர் டெக்னிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கு சம்பந்தமே இல்லாத வேலையைக் கொடுத்தார்கள்.அவரும் வேறு வழியில்லாமல் செய்ய ஆரம்பித்தார். ஏதாவது சந்தேகம் என்றுக்கேட்டால் சரியான விளக்கத்தை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. சைனீஸ் என்பதால் அவரது ஆங்கிலமும் சிறப்பான முறையில் இல்லை.மேலும் எந்த மீட்டிங் என்றாலும் 'டெக்னிக்கல்' விஷயங்கள் தவிர பெருப்பாலும் தெலுங்கில்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் ஆபிசில் இருக்கும்போது,ஏதோ ஹைதராபாத்தில் உள்ள கம்பெனியில் வேலைப் பார்ப்பதுப் போல சுற்றுசூழ்நிலை இருக்கும். ஆபிசை விட்டு வெளியில் வந்தால்தான் நீங்கள் அமெரிக்காவில் இருப்பதை உணர்வீர்கள். இந்த சூழ்நிலையை தாக்குப் பிடிக்க முடியாமல் மூன்றே மாதத்தில் அந்த சைனீஸ் அன்பர் 'கனடா'வில் வேலைவாங்கி சென்றுவிட்டார். சொன்னால் நம்பமாட்டீர்கள்,ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் இருந்த ஆபிஸ் கட்டிடத்தில் காவலாளிகளைத் தவிர மற்ற அனைவரும் இந்தியர்கள் மட்டும்தான். இந்தியர்கள் வேலைச் செய்யும் ப்ராஜக்ட் அனைவற்றையும் இந்த பில்டிங்'கு மாற்றிவிட்டு அமெர்க்கர் அனைவரும் வேறு பில்டிங் மாறிவிட்டார்கள். இன்றும் அந்த பில்டிங்கை(919) இந்தியன் பில்டிங்காகத்தான் வைத்திருப்பதாக நண்பர் கூறினார்.

மேலும் நானிருந்த டீமி'ல் பார்த்தால் அந்த மேனேஜர்களின் மனைவிகள்,அவர்களின் உறவினர்களும் அந்தக் கன்சல்டன்சி கம்பெனி வழியாக இங்கு வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனைவிகள் 'working from home' என்று பெரும்பாலும் வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பதாக கணக்குக் காட்டிவிட்டு சம்பாதித்துக் கொண்டிருநதார்கள்.அவர்கள் கணவர் மேனேஜர் என்பதால் பெரிய அளவிற்கு வேலையும் இருக்காது.


அந்த டீமில் நான் 2005 தொடக்கம்வரை இருந்தேன்.அதுவரை அவர்களின் வாழ்க்கை கொண்டாட்டமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதற்குப்பிறகு வேறு நகரத்திற்கு நான் சென்றுவிட்டேன். 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பது இவர்களுக்கெல்லாம் பொருந்தாது' என்று அடிக்கடி எண்ணிக்கொள்வேன். ஆனால் அந்தப் பழமொழி அனைவருக்கும் பொருந்தும் என நிரூபித்த நிகழ்ச்சி, அந்த மேனேஜர்கள் யாரால் பலனடைந்தார்களோ அவர்களாலேயே நிகழ்த்தப்பட்டது 2006 ஆம் ஆண்டு தொடக்கத்திலே.....

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6

(தொடரும்....)

September 1, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 6

நான் முதல்முறையாக அமெரிக்காவுக்கு 2003'ம் ஆண்டு,ஜூலை மாதவாக்கில் எங்கள் கம்பெனி வழியாக கஸ்டமர் ஆபிசில் வேலைச் செய்யச் சென்று,கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள், மூன்று வெவ்வேறு நகரங்களில் பணிப்புரிந்தேன்.பிறகு இந்தியா திரும்பியப்பின்,கடந்த ஜனவரி 2008 வரை ஆப்ஷோர் டேமேஜராக 2 வருடங்கள் பணிப்புரிந்தேன்.இந்த 5 ஆண்டுகளாக வேலைச்செய்த 'கஸ்டமர்' கம்பெனிகளில், என்னுடன் பணியாற்றிய,கஸ்டமர் மக்கள் பெரும்பாலோர் இந்தியர்கள்.அதிலும் தெலுங்கு மக்கள் அதிகம்.

IT துறையில் பெரும்பாலும் ஜப்பானியர்களுடன் வேலைச் செய்வது மிகவும் கடினம் என்பது பெரும்பான்மையானக் கருத்து.அது 100% உண்மையும்கூட.நான் கிட்டத்தட்ட 3 வருடங்கள்(2000-2003) ஜப்பான் கம்பெனியின் ப்ராஜக்ட்டில் வேலைச் செய்துள்ளேன். அவர்கள் திருப்திபடுத்தும் விதத்தில் வேலைச்செய்வது(customer satisfaction),அதுவும் இந்தியச் சூழ்நிலையில் மிகமிகக்கடினம். அதற்கு சில முக்கியக் காரணங்கள்.

1. மொழிப்பிரச்சனை - ஜப்பானியமொழி கொஞ்சம் கடினமானது நாம் கற்றுக்கொள்ள.அதேப் போல் ஜப்பானியர்கள் அவர்கள் கல்வியை ஜப்பானியமொழியிலே கற்பதால்,ஆங்கிலத்தைச் சரளமாகக் கையாளத் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவு. நான் வேலைவிஷயமாக ஒரு மாதம் டோக்கியோவில்(2001) தங்கியிருந்தேன். உணவு விஷயத்தில் அங்குள்ள உணவங்களில் உள்ளவர்களிடம் 'ஆர்டர்' செய்வதென்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.என்னுடன் வந்த மற்றோரு நண்பர் சைவம். நாங்கள் Mcdonald'க்கு சாப்பிடச் சென்றால்,நான் வழக்கமாக சிக்கன் பர்கரை ஆர்டர் செய்துவிடுவேன்.ஆனால் நண்பரோ வெஜ்பர்கர் சாப்பிடுபவர்.வெஜ்பர்கர் மெனுக்கார்டில் இருக்காது. ஆகவே அவர் 'பில் போடுபவரிடம்' மெனுக்கார்டை எடுத்து 'சிக்கன் பர்கரை' காண்பித்து, பர்கர் 'without chicken' வேண்டும் என்பார்..'பில்'லரோ' ராஜேந்திரக்குமார் ஸ்டைலில் 'ங்கே..' என முழிப்பார்.பிறகு மீண்டும் அந்தப் படத்தைக் காண்பித்து,'burger,no chicken...no meat...only vegitable' எனப் பலமுறைச் சொல்வார்,சிலபல நிமிட தலைச் சொறிதலுக்குப் பிறகு 'ஓ...வெஜ் பர்கர்???' எனப் புரிந்துக்கொண்டு, பில்லைப் போடுவார்.அதற்குப்பிறகு உள்ளே பர்கர் தயாரிப்பவர்க்கும் அவர் சொல்லிவிடுவார்.நண்பருக்கோ பாதிபசி அவர் 'சைகை மொழியை' அந்த ஜப்பானியருக்கு புரிய வைத்த மகிழ்ச்சியிலேயே போய்விட்டு இருக்கும்.

ஒரு புராஜக்ட் செய்யும்போது அனைத்து 'டாக்குமெண்ட்ஸ்'ஐயும்(req,design,functional, testplan/cases/results) ஆங்கிலத்தில் தயார் செய்து, பிறகு ஜப்பானியமொழியில் மாற்றி அவர்களுக்கு அனுப்பிவைப்போம்.ஆனால் எதற்கும் ரெஸ்பான்ஸ் இருக்காது 'கிணற்றில் போட்டக்கல்' போல. இப்படிபட்ட நிலையில் ஒரு 'டெவலப்மெண்ட்' ப்ராஜக்டை முடித்து 'அக்ஸப்டன்ஸ்' டெஸ்டுக்காக அவர்களுக்கு அனுப்பினோம். அனுப்பிய முதல்வாரம் எந்த பதிலும் இல்லை.இரண்டாவது வாரமும் 'NO SOUND'...'என்னாடா இது,நாம்ப bug-ஏ இல்லாத அப்ளிகேஷனை தயாரித்துவிட்டோமா? இரண்டு வாரம் டெஸ்ட் பண்ணியும் எந்த பிழையையும் அவர்கள் அனுப்பவில்லையே என 'நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி' அதற்கடுத்த வாரத்தில் 'டீம் ட்ரிப்' போகப் பெரிய ப்ளானே தயாரித்துவிட்டோம்.அவ்வார இறுதியில்,டீம் டின்னர்'க்கு சென்று பயங்கர கூத்து வேறு.

மீண்டும் திங்கள் அன்று பணிக்கு வந்தோம். காலை 10 மணியளவில் ஒரே ஒரு இ-மெயில் ஒரு எக்ஸல் இணைப்போடு 'கஸ்டமரிடம்' இருந்து வந்து இருந்தது. ஏதோ பாராட்டுப்பத்திரம்தான் அனுப்பியிருக்கிறார்கள் என்ற 'நினைப்புடன்(ரொம்ம்ம்ம்பதான்)' அதைத் திறந்துப் பா...ர்...த்.....த.... டேமேஜர் அலறிவிட்டார்...அவர்விட்ட சவுண்டில் அடுத்த நொடியில் அனைவரும் ஒரு கான்பரன்ஸ் ரூமில் இருந்தோம். கிட்டத்தட்ட 500'க்கும் அதிகமான 'defect' அந்த எக்ஸல் சீட்டில் எங்களைப் பார்த்து ஏளனமாகப் பல்லிளித்தது. அவர்கள் செய்த முதல் டெஸ்ட் என்னவென்றால், அந்த அப்ளிகேஷனை ப்ரொவ்சர் வழியாக இணைத்து 'லாகின்' செய்துவிட்டு,பிறகு நெட்வொர்க் கேபிளை பிடுங்கிவிட்டு, மறுபடியும் 'அப்ளிக்கேஷனில்' உள்ள சில 'லிங்க்'களை 'க்ளிக்'கினால், 'கேபிள் இணைப்பு இல்லை' என எர்ரர் மெசேஜ் 'பாப்பப்'பில் வரவேண்டும்' என்று டெஸ்ட் செய்துள்ளார்கள். அவ்வளவுதான்,டேமேஜர் அடுத்தப் ப்ளைட்டை பிடித்து ஜப்பானுக்கு ஓடினார்.நாங்கள் அடுத்த இரண்டு மாதங்கள் ராப்பகலாக வேலைச் செய்து எல்லாவற்றையும் சரிசெய்தோம்.

2.இந்தியர்களுக்கும்,ஜப்பானியர்களுக்கும் வேலைச்செய்வதிலுள்ள அணுகுமுறை :
அனைவரும் அறிந்ததுப்போல,ஜப்பானியர்கள் கடும் உழைப்பாளிகள். வேலை நேரத்தில் வேலையை மட்டும்தான் பார்ப்பார்கள்.நான் அங்கிருந்த ஒரு மாதத்தில் அவர்கள் கடும் உழைப்பைப்பார்த்து அசந்துப்போனேன். காலை 930-10மணிக்கு சீட்டில் அமர்ந்தால், பகல் உணவுக்கு மணி அடிக்கும்வரை(1230pm-100pm- உண்மையிலேயே நம் ஊரில் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதுப்போல ஆபிசில் அடிக்கிறார்கள்)வேலை பார்க்கிறார்கள்.அநாவசியமாக பக்கத்து சீட்டு மக்களிடம் அரட்டை அடிப்பதோ,டீ ப்ரேக்'கென 30 நிமிடங்கள் வெளியேப்போவதோ, எதுவும் கிடையாது. மிகவும் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.அதனால்தான் அவர்களால் 'மேக்ஸிமம் அவுட்புட்' கொடுக்கமுடிகிறது.

நாமெல்லாம்,காலையில் கஷ்டப்பட்டு ஒரு 9 மணிக்கு ஆபிசில் நுழைந்து, அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு, நண்பர்களுடன் கேண்டின் சென்று,காலை உணவு முடித்து சீட்டிற்கு வர 930-945 ஆகிவிடும். அதற்குப்பிறகு இ-மெயில் செக் செய்துவிட்டு, வந்துள்ள அனைத்து மெயில்களையும் படித்துவிட்டு,கஸ்டமரிடமிருந்து வந்த முக்கியமான மெயில்களை உடனடியாக 'டீமுக்கு' அனுப்பிவிட்டு, அதையும்விட முக்கியமாக வந்துள்ள 'பார்வேர்ட்' மொக்கை மெயில்களை படித்து,சிறிதும் தாமதிக்காமல் நண்பர்குழுக்களுக்கு அனுப்பிவிட்டு, வழக்கமாக செய்திகளைப்பார்க்கும்,rediff,தினமலர், தட்ஸ்தமிழ், தமிழ்மணம், விகடன், குமுதம் என மேய்ந்துவிட்டு 'வாட்சை'ப்பார்த்தால்,1030am ஆகிவிட்டிருக்கும்.உடனடியாக ஒரு காப்பி ப்ரேக் 11 மணிவரையில்.ஏதாவது டீம் மீட்டிங் இருந்தால் 11 மணிக்குமேல் செல்வதும், இல்லையேல், இருக்கும்வேலைகளை இன்றே செய்யலாமா? இல்லை பிறகு பார்த்துக்கொள்ளலாமா என்ற யோசிப்பிலேயெ மதிய உணவுக்கு சென்றுவிட்டு நிதானமாக ஒரு 2 மணியளவில் சீட்டிற்குவந்து, உண்டமயக்கத்தில்,கடனேயென அன்றைய வேலையை ஆரம்பித்து ஒரு 7-8 மணிவாக்கில் அன்றையதினம் முடியும்(இடையில் காப்பி ப்ரேக்,கடலை ப்ரேக்,ஸ்நாக்ஸ் ப்ரேக் என ஏகப்பட்ட தடங்கல்கள் வேறு).

ஜப்பானியர்களைப்போல நாமும் வேலை நேரத்தில் வேலைகளை மட்டும் பார்த்தால் எங்கேயோ போய்விடுவோம்.நம்மிடம் உள்ள இன்னொரு கெட்டப்பழக்கம் எந்தவேலையையும் தள்ளிப்போடுவது,அதற்குப்பிறகு அடித்துப்பிடித்து கடைசி நிமிடங்கள்வரை பயங்கர டென்சனோடு வேலைப்பார்ப்பது. இன்னொரு முக்கியமான வேறுபாடு,ஜப்பானியர்கள் hard-workers ஆனால் smart-workers கிடையாது.ஆனால் இந்தியர்களோ எடுத்துக்கொண்ட வேலையை திறம்பட செய்வதில் வல்லவர்கள்(smart workers-இதற்கு ஒரு முக்கியக் காரணம்,நம்முடைய கணித அறிவு & we are good at logical thinking.ஜப்பானியர்களுக்கு machine-dependency அதிகம்.ஒரு சிறியக் கணக்குப்போடக்கூட 'கால்குலேட்டர்' தேடுவார்கள்),ஆனால் 'எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனோபாவத்துடன், வேலைகளைத் தள்ளிப் போடுவது நம்முடைய பலவீனம்.

இவ்வளவுத்தூரம் நான் மேலே எழுதியிருப்பதற்கு காரணம்,முன்பே கூறியுள்ளதுப்போல, IT துறையில்,ஜப்பானியக் கஸ்டமரோடு வேலைப்பார்ப்பது கடினம்,அவர்களைத் திருப்திபடுத்துவது மிகமிகக் கடினம் என்றக் கருத்தை வலியுறுத்தவே...

மேற்க்கூறிய கருத்துகளில் அசையா நம்பிக்கை வைத்திருந்த நான் அமெரிக்காவில் இரண்டரை ஆண்டுகளும்,இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளும் 'இந்தியன் கஸ்டமரோடு' வேலைப்பார்த்தப் பின்பு,என் முந்தையக் கருத்துகளிலிருந்து எவ்வித நிபந்தனைகளுமின்றி பின்வாங்கிவிட்டேன்.அமெரிக்காவில் உள்ள IT கம்பெனிகளிலிருந்து, இந்தியாவில் உள்ள 'IT services' கம்பெனிகளோடு இணைந்து 'customer' என்ற நிலையில் பணிப்புரியும் இந்தியர்களைவிட ஜப்பானியக் கஸ்டமர்கள் 100..இல்லை 1000 சதவிகிதம் மேலானவர்கள்.
இது உண்மை....உண்மை...உண்மை...இதற்கு ஒரு மிகவும் முக்கியமானக் காரணம்...அவர்கள் செய்யும் அரசியல்,அவர்களில் மிகச்சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கச் செய்யும் தகிடுதம்கள்.....

அதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில்....

disclaimer : கடந்த பாகத்தில் IT துறையில் கன்னடர்களின் பங்குக் குறித்து எழுதுவதாகக் கூறியிருந்தேன்.ஆனால்,கன்னடமக்களின் சதவிகிதம் IT துறையில் மிகக்குறைவு என்பதும்,நானும் அவர்களுடன் சேர்ந்து வேலைப்பார்த்தது மிகவும் குறைவு என்பதால் அதைப்பற்றி விரிவாக எழுத எதுவுமில்லை...நிறைவுப் பகுதியில் சிலக்குறிப்பிட்ட விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்கிறேன்.

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
>பாகம் 5


(தொடரும்)

August 31, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 5

இது என்னுடைய 50வது பதிவு.....

முன்பே குறிப்பிட்டதுப்போல் தெலுங்குதேச மக்களுக்கு இணையாக அல்லது மிகக்குறைந்த சதவிகித வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் IT துறையில் கொடிநாட்டுபவர்கள் தமிழர்கள். மற்ற மாநில மக்களுக்கு இணையாக பெரியப்பொறுப்புகளில் சம அளவில் திறைமையாக செயல்படுகிறார்கள்.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது,குழுமனப்பான்மை,தன் மாநில/இன மக்களை ஆதரிப்பது தமிழினத்தில் குறைவுதான். அதற்கான பலக்காரணங்களில் ஒரு காரணம், தான் தன் இனத்தை சார்ந்தவர்களை ஆதரிப்பது பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற ஒரு எண்ணம். இது தமிழக மக்களுக்கே உள்ள பொதுவான குணமோ? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இந்தக்குழு மனப்பான்மை,ஆரம்பக்கட்டத்தில் 'fresher' ஆக இருக்கும்போது மிக அதிக அளவில் இருப்பதில்லை. காலேஜிலிருந்து நேரடியாக வேலைக்கு வந்திருப்பதால், அந்த சூழலையே இங்கும் தொடர்கிறார்கள்.ஆனால்,ஒரு டீம் லீட், டேமேஜர் என ஆகும்போது ஆட்டோமெடிக்'காக வேறு நிலைக்கு சென்றுவிருகிறார்கள்.

அதேப்போல் ஆங்கில மோகம் (அல்லது) தமிழில் இன்னோரு தமிழரோடு, அவர் தமிழர் என நன்றாகத்தெரிந்தும் பொதுவான விஷயங்களைக்கூட ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வது நம் மக்களிடம் அதிகம் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட இருவர் ஒரே 'ப்ராஜக்ட்'ல் இருந்தால், சகஜமாகத் தமிழில் பேசக் கொஞ்சம் காலமாகிறது. மற்ற மொழிக்காரர்கள் இதில் பெரிதும் மாறுப்பட்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூக்காக ஒருக்கல்லூரிக்கு சென்றிருந்தேன். என்னுடன் ஒரு சிங்'கும் (சிங்கம் இல்லைங்க !!!) பேனலில் வந்திருந்தார். இரவு உணவு முடித்துவிட்டு காலேஜ் கேம்பஸ்'சை வலம் வந்தபோது, எதிரில் மூன்று பஞ்சாபிகள் வந்தார்கள். இரண்டுப் பெரியவர்கள், ஒரு மாணவன். தலையைப்பார்த்தவுடன் அவர்கள் மாநிலத்தவர் எனத்தெரிந்துக் கொண்டு, பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு சிறிது நேரம் பேசிப்பின்பு விடைப்பெற்றனர். அதன்பிறகு நான் நம்ப சிங்'கத்திடம் கேட்டேன்,என்ன உங்களுக்கு தெரிந்தவர்களா? என்று. அதற்கு அவர் சொன்னார்,இப்போதுதான் முதல்முறை சந்தித்தோம்.அவர்கள் அவர் பையனை இந்தக்கல்லூரியில் சேர்க்க வந்துள்ளார்கள்.அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்,எந்த உதவி வேண்டுமென்றாலும் என்னுடன் பேசுமாறு சொல்லியிருக்கிறேன்',எனச் சொன்னார். இப்படிப்பட்ட மனப்பான்மை நம்பவர்களிடம் எந்த அளவுக்கு உள்ளது என நமக்கேத்தெரியும்.

நான் சிலவருடங்களுக்கு முன்பு டெவலப்பராக இருந்தபோது, புது டேமேஜராக தமிழர் ஒருவர் சேர்ந்தார்.அவருக்கு பேங்களூர் புதுசு அப்போது.ஒருமுறை ரிலீஸ் இருந்ததால் இரவுமுழுவதும் வேலை இருந்தது. டின்னருக்காக நானும் இன்னொரு தமிழ் நண்பரும் கேன் டீன் செல்லக் கிளம்பினோம். அப்போது அங்குவந்த டேமேஜரும் எங்களுடன் இணைந்துக்கொண்டார். வேறுவழியில்லாமல் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தோம். அவருக்கு அவர் தங்கும் ஏரியாவில் காய்கறிகள் எங்கு கிடைக்கும் என்று சரியாகத்தெரியவில்லை. அதைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அன்றுக்காலையில் அவர் ஏதோ ஒருக்காயை வாங்க வேண்டுமெனத் தேடியதாகவும்,கிடைக்கவில்லை எனக்கூறினார். அது என்னடா,பெங்களூரிலே கிடைக்காத காய் என ஆச்சர்யப்பட்டு அவரிடமேக் கேட்டோம். அவருக்கு அதற்கு சரியான ஆங்கில வார்த்தை சொல்லமுடியாமல்,இவ்வாறு சொன்னார்...' you know,its a long one.... green color' ... இது என்னடா..பச்சைப்பாம்பைச் சொல்றாரா... எங்காவது சீனாவிற்க்கு long-term assignment போய்ட்டு வந்துவிட்டாரா?" என நினைத்துக்கொண்டே....'கொஞசம் விளக்கமாகச் சொல்லுங்க'னு கேட்டோம்... அதற்கு..." you know,we can prepare sambar using that....imm.... hey... by one of the Bakiya raj movie, this vegitable became very popular' எனச் சொன்னார்... 'முருங்கைகாயா?' என தமிழிலேயேக் கேட்டோம்.... அப்போதும் 'உஜாலா'விற்கு மாறாமல்.. 'yaya...you are rite' னு வழிந்தார்... அப்போதிருந்து அவரை 'பாக்கியராஜ்'னு டீமி'ல் ஓட்டிக்கொண்டிருந்தோம்(அவருக்கு தெரியாமல்தான்...).

இந்த ஆங்கிலத்தில் பேசும் மோகம்(????) வடத்தமிழகத்திலிருந்து(சென்னையும்...அதைச்சார்ந்த மாவட்டங்களும்...)வந்து 'பொட்டித்தட்டும்' மக்களிடம்,கொஞ்சம் அதிகமாக இருக்கிறது... தென்தமிழகப் பாசக்கார பயல்களிடம் தமிழ் மொழிப்பாசம் கொஞ்சம் அதிகம்தான்....அதற்கு ஒரு முக்கியக்காரணம், பெரும்பாலும் நாம் அனைவரும் பள்ளியில் படிக்கும்வரை ஆங்கிலம் ஒரு பாடமாக இருப்பதும், அதை ஒரு மொழியாகக் கற்றுப் பழகாமல், ஒரு subject' ஆக பாஸ் பண்ணால் போதுமென மக்'கடிப்பதே. அதேப்போல் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்றக்கட்டாயம்,பள்ளிக் கல்லூரி படிப்புகள் முடிக்கும்வரை ஏற்ப்படுவதில்லை. வேலைக்கு செல்லும்போதுதான் அதற்க்கான சந்தர்ப்பமே அமைகிறது.

நானே ஆங்கிலத்தில் தட்டுதடுமாறிப் பேச ஆரம்பித்தது 'பொட்டித்தட்டும்' தொழிலுக்கு வந்தப்பிறகுதான். ஆரம்பக்காலத்தில் இந்தக்குறையே,என்னை பிற மாநில மக்களோடு சகஜமாகப் பேசிப்பழகும் தன்னம்பிக்கையைக் கொடுக்கவில்லை. பிறகு ஜப்பான்,அமெரிக்கா என கட்டாயமாக ஆங்கிலம் பேசியே ஆகவேண்டிய இடங்களில் சில வருடங்கள் பணிப்புரிந்தப் பிறகு சரியாகிவிட்டேன்.

வேலை விஷயத்தில்,கொடுத்த வேலையை கொஞ்சம் 'ப்ரஷர்' கொடுத்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிடும் திறமை நம் மக்களுக்கு உண்டு. மேனேஜ்மெண்ட்' வேலைகளைவிட, டெக்னிக்கல் பொறுப்புகளை சிறப்பாக செய்யக்கூடியவர்கள்.

முந்தையப்பதிவில், மலையாள/அழகான வட இந்தியப்பெண்களிடம் கடின வேலையைக் கொடுத்தால், குறிப்பிட்ட வெளையில் அந்த வேலை முடிக்கப்பட்டு விடும் என்றும், அந்தவேலையைச் செய்தவர்கள் யாரென்பது,அந்தப் பெண்ணோடு யார் அடுத்த நாள் 'லஞ்ச்'க்கு செல்கிறார்களோ அவர்களே எனச் சொல்லியிருந்தேன்....அப்படி கவனித்துப் பார்த்தால்...தமிழ் மக்களின் சதவிகிதம் கொஞ்சம் அதிகம் என்பது உண்மைதான்....( அலோ....யாருப்பா அது... நான் எத்தனை முறை அப்படி 'லஞ்ச்'க்கு போனேனு கேக்கறது???)

Disclaimer : ( இக்குழு மனப்பான்மை தமிழர்களுக்கு மிகக் குறைவு என சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, விவாதத்தில் பங்குக் கொண்ட மல்லு நண்பர் ஒருவர் ' மல்லுகளிடம் தான் அந்த மன்ப்பான்மை மிகமிகக் குறைவு எனக்கூறி அதற்க்கான சான்றுகளையும் அடுக்க ஆரம்பித்துவிட்டார்'. இதான் 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பதா???? )
அடுத்தப் பதிவில் கன்னட மக்களின் பங்கைப்பற்றி எழுதலாமென இருக்கிறேன்....

(தொடரும்....)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

August 26, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 4

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
என் 9 வருட IT வாழ்க்கையில் ஏறத்தாழ 5 வருடங்கள் மலையாளதேச டெமெஜர்களுடன் கழித்துள்ளேன். குழுமனப்பான்மைக்கு இவர்களை விட்டால் ஆளில்லை.எல்லாவற்றிலும் அவர்கள் இனத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமைக்கொடுப்பார்கள். கஷ்டப்பட்டு ஜாவா,சி,சி++ மொழிகள் கற்றுக்கொள்வதற்கு பதில் 30 நாட்களில் மலையாளம் கற்றுக் கொண்டால் நம்முடைய கேரியர் புரோக்ரஷன் வேகமாக இருக்கும் என நண்பர்களுடன் சீரியசாக பலமுறை விவாத்திருக்கிறோம்.

இவர்கள் விஷயம் எப்படியென்றால்,ஏதாவதொரு முக்கியப்பொறுப்பில் ஒரு மலையாளி இருக்கிறார் என்றால்,அவருக்கு கீழேயுள்ள அனைத்து முக்கியப் பொறுப்புகளிலும்,குறைந்தது 80% மல்லுக்'களையே பார்க்கலாம்.அதற்குப்பிறகு அவர்கள் ராஜ்ஜியம்தான்.

நான் முன்பிருந்த க்ரூப்'பின் வைஸ் ப்ரசிடென்ட் ஒரு மல்லு.அவருக்கு டைரக்ட் ரிபோர்டீஸ்(group head,delivery head,solution head,program mgr etc)எல்லோருமே மல்லுஸ்தான்.ஒரே தமிழரும்,பெங்காலியும் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அவருக்கு கீழ் பணிப்புரிந்தார்கள்.அந்த க்ரூப்பில் வரும் progression, stock options,qurterly best performer awards எல்லாமே அவர்கள் மக்களுக்கு மட்டும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.

ஒருமுறை நண்பன் ஒருவர், ஒரு கேண்டிடெடை முதல்சுற்று இண்டர்வியூ செய்துவிட்டு அவருடைய மல்லு பாஸிடம் சென்று,அந்த கேண்டிடேட் பிலோ ஆவெரேஜ்'தான், நிராகரித்துவிடலாம் என சொல்லியிருக்கிறார், resume'யை வாங்கிப்பார்த்த அந்த மல்லு டேமேஜர் அவன் மல்லுவென தெரிந்துக்கொண்டு,'கேரளாவிலிருந்து வந்து இருக்கிறான், கண்டிப்பாக நன்றாக வேலை செய்வான்' எனச்சொல்லி அவனை தேர்வுசெய்யச் சொல்லி விட்டார். நண்பன் ஆடிப்போய்விட்டான்.

ஒரு டீம் மீட்டிங் எனப்போனால்,அங்கே பெரும்பாலும் மலையாளத்தில்தான் கதைத்துக் கொண்டிருப்பார்கள்.அதேப்போல் லன்ச்'க்கு போகும்போதும் அவர்கள் குழுவோடுதான் செல்வார்கள். தவறியும் வேறுயாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

வேலை விஷயத்தில் தெலுங்குதேச மக்களைவிட நன்றாக செயல் படுவார்கள்.ஆங்கிலம் பிரச்சனையாக இருக்காது,என்ன பிரச்சனையென்றால், எல்லாவற்றிலும் 'ஓ' சேர்த்து விடுவார்கள்.ஒரு மல்லுப்பொண்ணு ஒரு டீமி'ல் இருக்கிறது என்றால்,அனைத்து இள(ன)ங்காளைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அவள் வேலையை முடித்துக்கொடுத்துவிடுவார்கள்.

நான் கடந்த வருடம் ஒரு ப்ராஜக்டில் டேமேஜராக இருந்தப்போது, எல்லாக்கடினமான வேலையையும் ஒரு மல்லுப்பெண்ணிற்கு கொடுத்து விடுவேன்.வேலை சுலபமாக முடிந்துவிடும்.சிலசமயம் மாலை 5 மணிக்குமேல் வேலையைக்கொடுத்து(குறைந்தபட்சம் 3 மணி நேரமாகும் முடிப்பதற்க்கு) அன்றே முடிக்கச்சொல்லிவிட்டு 6மணிக்கு நான் கிளம்பிவிடுவேன்.அப்பெண்ணும் 6மணிக்கு கிளம்பிவிடும்.ஆனால் அடுத்த நாள் காலையிலே அந்தவேலை முடிந்துவிட்டிருக்கும்.யார் அந்தவேலையை முடித்தார்கள் என்பது,அந்தப்பெண் 'லன்ச்'க்கு யாருடன் அன்று செல்கிறாள் எனப்பார்த்தால் விளங்கிவிடும். சில சமயங்களில் இந்த லாஜிக் அழகான வட இந்தியப்பெண்களுக்கும் பொருந்தும்.

அடுத்தப் பதிவில்(என்னுடைய வெற்றிக்கரமான 50வது பதிவு) 'தங்கத் தமிழனின்' சேவை/லீலைகளைப் பற்றி எழுதுகிறேன்...
(தொடரும்...)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3

August 25, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 3

பாகம் 1 பாகம் 2
கொல்கத்தாவிலிருந்து USA தலைநகரான ஹைதராபாத் வர முதலில் ப்ளைட்தான் தேர்வுசெய்திருந்தேன்.ஒரு மாறுதலுக்காக ரயிலில் பயணம் செய்யலாமென முடிவு செய்து ரயிலில் வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக பதிவு எழுத முடியவில்லை! ( அடப்பாவி, வாரயிறுதி முழுவதும் இழுத்துப்போர்த்தி தூங்கிவிட்டு,போதாக்குறைக்கு நேற்று முழுவதும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு,இப்படி ஒரு பில்டப்பா??? )...ஒகே..ஓகே...இப்ப நம்ப கதையைப் பார்க்கலாம்...
IT துறையில் தமிழர்களுக்கு இணையாக,இன்னும் சொல்லப்போனால் தமிழர்களைவிட அதிக சதவிகிதத்தில் கோலோச்சுபவர்கள் தெலுங்குமக்களே....எல்லாப்புகழும் சந்திரபாபு'காருக்கே.... ஆந்திராவிலிருந்து ஏதாவது ஒரு கல்லூரியில் என்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கும் எந்த ஆணைக்கேட்டாலும்,பெரும்பாலானவர்கள் அவர்கள் லட்சியமாக கூறுவது...எப்படியாவது என்ஜினியரிங் முடித்துவிட்டு,முடிந்தால் கேம்பஸில் ஏதாவது ஒரு MNC'யிலேயோ அல்லது service company'யிலோ வேலை வாங்கி இந்தியாவில்,பல்லைக்கடித்துக்கொண்டு 2-3 வருடங்களைக் கழித்துவிட்டு ஏதாவதொரு வழியில் US-longterm வாங்கிக்கொண்டு US சென்றுவிடவேண்டியது,அல்லது குறைந்தப்பட்சம் 2-3months shortterm assigment'ஆக US போய்விட்டு வந்து US Return என்ற 'tag'கோடு, உடனடியாக பெண்பார்த்து லட்சக்கணக்கான(சிலருக்கு கோடிக்கணக்கில்) வருமானத்துடன் வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டியது. இதுதான் பெரும்பாலோனோரின் குறைந்தப்பட்ச லட்சியம்.
மேலும் இந்திய கம்பெனி வழியாக H1B-BL1 விசாவோ வாங்கி அங்கு சென்றுவிட்டு, project ஏதாவதொருக்காரணத்தால் close ஆகிவிட்டால்,அங்கிருந்தே ரிசைன் செய்துவிட்டு ஏதாவதொரு கன்சல்டன்சி கம்பெனி வழியாக வேறு வேலைக்கு தாவிவிடுவதில் முதலிடம் ஆந்திர மக்களுக்கே (நம்மவர்கள் இரண்டாமிடம்). மேலும் அவர்கள் சேரும் கன்சல்டன்சி கம்பெனிகள் பெரும்பாலும் ரொம்ப நாளைக்கு முன்னால் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்ட ஆந்திர'வாடுவின் கம்பெனியாக இருக்கும்(இந்த கன்சல்டன்சி கம்பெனி எனும் போர்வையில் இவர்கள் காசுப் பண்ணும் வித்தைகளை விரைவில் எழுதுகிறேன்).

கேம்பஸில் வேலைக்கிடைக்காதோர் அல்லது அவர்கள் 'மார்க்கெட் வேல்யுவை' அதிகப்படுத்த விரும்புவோர் தெர்ந்தெடுக்கும் அடுத்தவழி 'அமெரிக்காவில் மேற்படிப்பு'(பெரும்பாலும் MS). அமெரிக்காவின் ஏதாவதொரு யுனிவர்சிட்டியில் இடம்பிடித்து அங்கு செல்வதற்கான விசா,தங்கும் இடம்,செலவுக்கான பணம்/வேலை ஆகியவவைகளை தயார் செய்துவிட்டு அங்கு சென்று விடுவார்கள். படிப்பு முடிந்தவுடன் மேற்சொன்ன 'கன்சல்டன்சி கம்பெனி' வழியாக ஏதாவதொருக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள்.பிறகு வழக்கம்போல போட்ட முதலை,வட்டியுடன் எடுக்க,கல்யாணம்,கச்சேரி,பிறகு க்ரீன்கார்டுக்கான கடும்தவம்.

அமெரிக்கா செல்வதற்கான முதல்படி விசா(H1B/BL1/Business/student visa) வாங்குவது.விசா பெறுவதற்கான முதற்கட்ட வேலைகளை முடித்து, சென்னையில் உள்ள US கவுன்ஸ்லெட்டில் இண்டர்வியு தேதி முடிவானவுடன்,பெரும்பாலான ஆந்திரவாசிகள் படை எடுப்பது 'விசா பாலாஜி (அ) விசா வெங்கனா'யை தரிசிக்க ஹைதராபாத் அருகிலுள்ள 'ச்சில்கூரு'க்கு. இந்தக்கோயிலுக்கு சென்று வேணடிக்கொண்டால் விசா கிடைப்பதில் எந்தச்சிக்கலும் இருக்காது என்பது அவர்களின் நம்பிக்கை.விசாக்கிடைத்து ப்ளைட் டிக்கெட்,கிளம்பும் தேதி முடிவானவுடன் திருப்பதி வெங்கடாசலபதியின் தரிசனம் கண்டிப்பாக உண்டு.

நான் சிறிதுக்காலம் technical interview panel'ல் இருந்தேன்.சில HR மக்களிடமும் நல்ல பழக்கம் உண்டு.வரும் resume'க்களில் fake மிக அதிக சதவிகிதம் ஆந்திரமக்களிடமிருந்துதான்(வழக்கம் போல நம்மவர்கள் இரண்டாம் இடம்). அவர்கள் போட்டிருக்கும் யுனிவர்சிட்டி,வேலை செய்ததாகப் போட்டிருக்கும் கம்பெனிகள்(பெரும்பாலும் மன்னார்&கம்பேனியாக இருக்கும்) ப்ளாக்லிஸ்ட் பண்ணப்பட்டிருக்கும். இதில்தப்பி முதல்சுற்றுக்கு தேறுபவர்கள் டெக்னிக்கல் இண்டர்வியூக்கு வருவார்கள்.நான் வழக்கமாக அவர்கள் வேலை செய்த கடைசி புராஜக்ட் பற்றி விளக்க சொல்வேன்...அதிலேயே அவர்களின் திறைமை விளங்கிவிடும். ஒருமுறை தெலுங்குதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்திருந்தார்.அவரின் resume'வை வாங்கி பார்த்துக்கொண்டிருக்கும்போதே,tellme abt u' என்றுக் கேட்டுவிட்டு resume'வைப் புரட்டிக் கொண்டிருந்தேன். நான் resume'ல் என்ன படித்துக்கொண்டிருந்தேனோ,அதையே வார்த்தை மாறாமல், வரிபிசகாமல் சொல்லிக் கொண்டிருந்தார். என்னடா இது,சந்திரமுகியில் ரஜினி,வடிவேல் மனசில் நினைப்பதையெல்லாம் சொல்வதுபோல இந்தப்பெண்ணும் சொல்லுதே, ஏழாவதறிவு ஏதாவது வேலைச்செய்கிறதா என நிமிர்ந்துப் பார்த்தால், அவர்மடியில் ஒரு பைலை வைந்துக்கொண்டு,அதிலிருந்த மற்றோரு resume copy'யை பார்த்து சின்சியராக படித்துக்கொண்டிருந்தார்.நான்கேட்ட ஒரு சின்னக்கேள்விக்கு எவ்வளவு சின்சியரா பதில் சொல்றாங்க... இவங்க ரோ...ம்ம்ம்ம்ப நல்லவங்க'னு அத்தோட அந்த இண்டர்வியுவை முடித்துவிட்டேன்.

சமீபத்தில் ஒருக்கல்லூரிக்கு கேம்பஸ் இண்டர்வியூக்காக சென்றிருந்தேன்.கிட்டத்தட்ட 25 பேரை இண்டர்வியூ செய்து ஒரு 12 பேரை தேர்வுசெய்தேன்.அது தமிழகத்தில் உள்ள தெலுங்கு மைனாரிட்டி கல்லூரி(மேலும் அடியேன் ஒருகாலத்தில் படித்துப்பட்டம் பெற்றக்கல்லூரி).ஒரு 10 பேரைப் பார்த்தப்பிறகு 11வதாக ஒரு மாணவர் வந்தார்.ஹைதராபாத் சொந்த ஊர் என்றும், எங்கள் கம்பெனியில் வேலைப்பார்ப்பது லட்சியம் என்றும் சொன்னார்.நானும் வழக்கமாக மற்றவர்களைக் கெட்டக்கேள்விகளையே கேட்க ஆரம்பித்தேன்.எதற்கும் தெளிவான பதிலில்லை. ஆவரேஜ் லெவலில்கூட இல்லாததால்,அவரிடம் நீ தேர்வுபெறவில்லை,இப்போது போகலாமென கூறினேன்.அவ்வளவுதான்...அழும் நிலைக்கு சென்றுவிட்டார்...எப்படியாவது என்னை தேர்வு செய்துவிடுங்கள்,கம்பெனியில் சேர்வதற்க்கு முன்பு நன்றாகப் படித்து விடுகிறேன்' எனக்கூறி விடாப் பிடியாக அறையைவிட்ட வெளியே செல்லாமல் அடம் பிடித்தார்... இது என்னடா வம்பாப் போச்சி'யென வெளியிலிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டு அம்மாணவரை வெளியேற்றினேன்.

வேலை விஷயத்தில் பெரும்பாலான 'சுந்தர தெலுங்கர்கள்' அபொவ் ஆவெரெஜ் லெவலில் உள்ளார்கள்.ஒருவிஷயத்தை ஒருமுறைக்கு இருமுறை சொல்லவேண்டும்.மேலும் தொடர்ந்தக் கண்காணிப்பும் இருக்கவேண்டும்,இல்லையேல் சொதப்பிவிடுவார்கள். ஆங்கில அறிவிலும், தமிழ்நாட்டின் இரண்டாம்/மூன்றாம் நிலை நகரங்களிலிருந்துவரும் மக்கள் அளவுக்கு சிரமப் படுவார்கள்.development project'ஐவிட maintenance project'ல் போட்டுவிட்டால் ஓரளவிற்கு சிரமமில்லாமல் இவர்களை வைத்து வண்டியை ஓட்டிவிடலாம்.மொழிப்பாசம் மற்ற இனத்தவர்களைப்போல இவர்களுக்கும் உண்டு,team'ல் அவர்கள் இனத்தினருக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
சமீபத்தில் முடிந்த 'appraisal cycle'ன்போது, என்னுடன் பணிப்புரியும் தெலுங்குதேச அன்பர் ஒருவர் வந்து அளாவளாவிக்கொண்டிருந்தார்.எப்போதும் வழியிலோ அல்லது ஏதாவதொரு மீட்டிங்கிலோ சந்தித்துக்கொண்டால் 'ஹாய்''பை' என்ற அளவில்தான் எங்கள் தொடர்ப்புஇருக்கும்.இப்போது வழக்கத்திற்க்கு மாறாகத்தானாக வந்துப்பேசிக் கொண்டிருக்கிறாரே என்ன விஷயம் எனக்கேட்டதற்க்கு அவருக்கு தெரிந்தவரின் 'appraisal' என்னிடம் வந்து இருப்பதாகவும்,பார்த்துப்போடுமாறும் கூறினார்.நானும் பார்த்துப் "போட்டு" விட்டேன்.;)).
இந்தியாவில் தெலுங்கு மக்களுடன் வேலைப்பார்த்ததைவிட அமெரிக்காவில் 3 வருடம் 'மடிப்பொட்டி' தட்டியபோது ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது,அதைப்பற்றி விரைவில் எழுதுகிறேன்.அடுத்தப்படியாக,ஹைதராபாத்திலிருந்து கொச்சினுக்கு செல்லலாமென இருக்கிறேன்...

(தொடரும்...)
பாகம் 1 பாகம் 2

August 22, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 2

முதல் பதிவிற்கு இங்கே போகவும்...

நேற்றைய பதிவில் ஜாதிவித்தியாசம் என்பது மற்றதுறைகளோடு ஒப்பிடும்போது, IT துறையில் மிகவும் குறைந்தபட்சமே உள்ளது என முடித்திருந்தேன்.அந்த குறைந்தப்பட்சமும் வெளிப்படையாக தெரிவது 'அவாளி'டம் மட்டும்தான். அதனாலான பாதிப்புகள் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது,IT துறையில் மிகவும் குறைவுதான்.ஆகவே அதைப்பற்றிய விவாதங்களை தொடர விரும்பவில்லை.

பின்னூட்டமிட்ட நண்பர்கள் மாநிலவாரியான அணுகுமுறை பெருமளவில் இருப்பதாக சொன்னார்கள்..உண்மைதான்...நானும் அதைப்பற்றிதான் எழுதப்போகிறேன்.மேலும் சில ஆண்டுகள் அமெரிக்காவில் பணிப்புரிந்தபோது,அங்குள்ள கம்பெனிகளில் பணிபுரியும் நம்தேச மக்கள், அவர்களின் இன உணர்வையும்,மாநில பாசத்தையும்,குறுக்குவழியில் பணம் பார்க்கும் திறமையையை பற்றியும் எழுதலாம் என இருக்கிறேன்.

வடக்கு,தெற்கு என பாகுபடுத்துவது,இந்திய அரசியல் முதல்கொண்டு,அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டி பறக்கும் அணுகுமுறை. அதற்கு IT துறையும் விதிவிலக்கல்ல.ஆனால் ஒட்டு மொத்த IT மக்கள்தொகையில் வடக்கத்திய மாநிலங்களிலிருந்து பணிப்புரிவோரின் சதவிகிதம்,தென்மாநில மக்களின் சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது,மிகவும் குறைவுதான்.

அக்குறைந்த வடக்கத்திய மக்களில் கோலோச்சுவது 'பெங்காலி' மக்கள்.பேச்சில் அவர்களை அடித்துக்கொள்ள முடியாது.வெறும் கையில் முழம் போடுவதில் திறைமைசாலிகள். மற்றவர்களை எப்படிப் பயன்படுத்தினால் தான் முன்னேறமுடியும் என்பதை விரல்நுனியில் வைத்திருப்பார்கள். எதுவுமே தெரியாமல் கண்மூடித்தனமாக 'ரிஸ்க்' எடுப்பது அவர்களுக்கு
'ரஸ்க்(ரசகுல்லா)' சாப்பிடுவதுபோல...இதில் அதிசயம் என்னவென்றால்,பெரும்பாலான சமயங்களில் அதில் அவர்கள் வெற்றியடைந்து விடுவதுதான்.அதற்கு காரணம்,முன்பே குறிப்பிட்டதுபோல,மடுவையும்,மலையாக காட்டும் அவர்களின் பேசும்திறமைதான்.

நான் 'பொட்டிதட்டும்' கம்பெனியில், சிறிதுகாலம் ஒரு 'பெங்காலி' டேமேஜருடன் வெலை செய்துக்கொண்டிருந்தேன். அவருடைய IT அறிவு எப்படிப்பட்டது என்றால், testing team அவரிடம் வந்து black box,white box testing செய்யவேண்டும் என்று சொன்னால், அந்த இரண்டு box'ம் வாங்குவதற்கான செலவு 'estmation sheet'ல் சேர்த்துவிட்டாயா? என கேட்டு அவர்களின் ஏழாவதறிவை சோதிப்பார்.ஒருமுறை 'SDLC process'ஐ optimize செய்யப்போகிறேன் என களத்தில் குதித்து, அதைப்பற்றிய விவாதத்தின்போது, sequence, class,activity diagram'போன்ற design phase' வேலைகளையெல்லாம் 'requirement phase'லயே செய்யனும்னு ஒரு பெரிய புரட்சியே பண்ணினார்.இதுபோல இன்னும் ஏராளமான நிகழ்ச்சிகள்.

ஆனால் இம்மாதிரியான 'அதிமேதாவிதனமெல்லாம்' தனக்கு கீழே வேலைச் செய்பவர்களிடம்தான். அவருடைய பாஸ்'க்கோ அல்லது கஸ்டமர்கான பிரசண்டேசனுக்கோ, அதற்கு தேவையான விவரங்களை அவருக்கு கீழே வேலைப்பார்க்கும் நம்மைப்போன்ற பேசாமடந்தைகள் தலையில கட்டி,அவர்களிடமே விவரங்களை கேட்டுக்கொள்வார்.மீட்டிங் செல்லும்போதும்,நம்மை துணைக்கு அழைத்துக்கொண்டு, நம்மிடம் தெரிந்துக்கொண்ட விவரங்களை,யாருக்கும் எளிதில் புரிந்துவிடாதவண்ணம் எடுத்துவிட ஆரம்பித்தாரென்றால், 'என்னமா பேசுரான்...இவன் பேசுரது நம்பளுக்கு ஒன்னும் புரியமாட்டங்குதே...நமக்குதான் டெக்னாலஜி டச் விட்டுப்போச்சோ...இவன் ரொம்...ப புத்திசாலிடா..' என கேட்பவர்களின் கான்பிடன்ஸ் லெவலையே காலிப்பண்ணிவிடுவார்.இதிலும் மயங்காத சில புத்திசாலி கஸ்டமர்கள்,அவர் சொல்வதைப் புரிந்துக்கொண்டு சில ஆழமான கேள்விகள் கேட்கும்போது, 'இதெல்லாம் ஒரு கேள்வி,இதற்கு நான் எதற்கு பதில் சொல்ல வேண்டும்,என்கீழ் வேலை செய்பவனே பதில் சொல்லிவிடுவான்' என ஒரு நக்கல் புன்னகையுடன் நம்பக்கம் கைக்காட்டி விடுவார்.இப்படிப்பட்ட திருவிளையாடல்களால், சில ஆண்டுகளுக்கு முன்பு 'டேமேஜராக' சேர்ந்தவர் இப்போது 'குரூப் ஹெட்'டாக உயர்ந்துவிட்டார்.very high growth rate....

அவர்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களைக் கைத்தூக்கிவிடுவதிலும் வல்லவர்கள்.அதேபோல் நான் புடித்த முயலுக்கு இரண்டரைக்கால்தான் என சாதிப்பதிலும்,அதை மறுப்பவர்களை வன்மம் கொண்டு சரியான நெரத்தில் மட்டம் தட்டுவதிலும் மன்னர்கள்.சில நேரங்களில் அவர்கள் 'ஈகோவே' அவர்களை படுகுழியிலும் தள்ளியிருக்கிறது.

மொத்தத்தில்,முன்பே குறிப்பிட்டதுபோல 'வெறும் கையில் முழம்' போடும் பேச்சாற்றல், விளைவைப் பற்றிக்கவலைப் படாமல் துணிந்து 'ரிஸ்க்' எடுப்பது,'ஈகோ' என கலந்து செய்த கலவைதான்...பெங்காலிகள்....

பெங்காலிகள் தவிர இதர வடமாநில IT மக்களோடு நான் வேலை செய்தது மிகவும் குறைவு.ஆகவே 'கொல்கத்தா'விலிருந்து 'ப்ளைட்' பிடித்து நேராக 'USA'க்கு அடுத்த பதிவில் இறங்குகிறேன்....

உங்கள் கவனத்திற்கு... IT'ல் USA என்றால் 'United state of Andhra pradesh'

அடுத்தப்பதிவில் USA'ல உங்களை சந்திக்கிறேன்..........

முதல் பதிவிற்கு
இங்கே போகவும்...

(தொடரும்)

August 21, 2008

நீயா...நானா? - ஜாதிகள் இல்லையடி பாப்பா...ஆனால் ???

கடந்தவார விஜய் டிவி நீயாநானா நிகழ்ச்சியில் அலுவலகத்தில் ஜுனியர் சீனியர்களுக்கிடையேயான உறவு பற்றி சுடச்சுட விவாதித்தார்கள். அப்போது கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி,இனம்/ஜாதி அடிப்படையில் சீனியர்கள் அவர்களின் இனத்தை சார்ந்தவர்களை சப்போர்ட் செய்கிறார்களா?

இக்கேள்விக்கு பதில் அளித்தோர் அம்மாதிரியான பாகுபடுத்தும் பாங்கு பெரும்பாலான துறைகளில் இருப்பதாக தெரிவித்தார்கள்.அந்த கேள்வி எனக்குள்ளும் எழுத்தது. நான் கடந்த பல வருடங்களாக 'பொட்டி' தட்டிக்கொண்டிருக்கும் IT துறையில் இந்தக்கேள்விக்கான பதில் என்ன?

என் அனுபவத்தில், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மிகமிகக் குறைவாகவேதான் இருக்கிறது.அதற்கு முழுமுதற்காரணம்,இங்கு யாருக்கும் கூடவேலை செய்பவர் என்ன ஜாதி என்று அறிந்துக்கொள்ளவேண்டிய அவசியம் சிறிதும் இல்லை.வேலை செய்யும் சூழலிலும் அதை வெளிப்படுத்துவதற்கான எவ்வித முகாந்திரமும் சிறிதளவும் இல்லை.IT துறையில் உள்ளோர் பெருமளவில் இளையவயதினராக இருப்பதும்,அவர்களின் திறமையையும், செயல்படும் திறனையும் கொண்டே அவர்களின் வளர்ச்சி(பெரும்பாலும்) நிர்ணயிக்கப்படுவதால் ஜாதி என்ற ஒரு கேள்வி எங்கும் எழுவதில்லை.

ஒருவர் என்ன இனம் என்று வெளியுலகத்திற்க்கு வெளிப்படுத்துவதில் அவர்கள் அணியும் உடையும்,உணவுப்பழக்கவழக்கங்களுக்கும் ஒருபங்கு இருக்கிறது.ஆனால் உடை விசயத்தில், எல்லோரும் நன்றாக சம்பாதிப்பதால் மாடர்ன் உடைகள்,மற்றும் அலுவலகங்களில் ட்ரெஸ் கோட் இருப்பதால் அதற்கேற்றார்போல் உடுத்துவதால்,உடைகள்மூலம் யாரும் வேறுபடுத்தப்படுவதில்லை.
உணவு விஷயத்திலும்,அலுவலகத்தில் அனைத்துவகை உணவுகளும் கிடைப்பதாலும், சைவம், அசைவம் சாப்பிடுவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருப்பதால்,அவ்விதத்திலும் ஒருவர் சார்ந்துள்ள இனம் வெளிப்படுத்தப்படுவதில்லை.

இவைகள் எல்லாவற்றையும்விட, இன/ஜாதி அடிப்படையிலான வேலைவாய்ப்புக்கு இங்கு ஆப்பு என்பதால் ஒருவர் என்ன இனம் என்ற கேள்வி அவர்கள் இத்துறையில் காலடி எடுத்து வைக்கும்போதே அவர்கள் காலடியிலேயே மிதிப்பட்டு போகிறது.

ஆகவே பாரதி,காந்தி மற்றும் பல தலைவர்கள் கனவுக்கண்ட ஜாதியற்ற சமுதாயம், எல்லோரும் ஓரினம், லஞ்சலாவணியமற்ற துறை ஒன்று உருவாகிவிட்டதா??? அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என ஆனந்தமாக பாடுவதற்கான நிலைமையை அடைந்துவிட்டோமா? வேறு எவ்விதத்திலும் IT துறையில் பாகுபாடுகள் இல்லாமல் 'திறமைக்கு மட்டுமே முதலிடம்,வேறு எந்த தடைக்கற்களுமே இல்லை' என ஆணித்தரமாக அடித்துக்கூறும் நிலையில் இருக்கிறோமா???

(IT துறையில் உள்ள சில இருண்டப்பக்கங்களைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்...)

July 15, 2008

இதற்கு என்னதான் தீர்வு ?

கடந்த வாரத்தில்,என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு, லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகிலுள்ள ஊரில் சிகிச்சைக்காக சென்றார்.அங்கு ECG எடுத்துப்பார்த்துவிட்டு bad cholesterol அதிக அளவில் இருப்பதால்தான் வலி ஏற்பட்டதாக கூறினார்கள். மேலும் பெங்களுரில் உள்ள 'இருதய' மருத்துவமனைக்கு referance letter கொடுத்து பரிசோதனைக்கு செல்ல சொன்னார்கள்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால்,உடனடியாக பெங்களூர் வந்து அந்த மருத்துவமனைக்கு சென்றார்கள். செக்கப் செய்துவிட்டு, மேலும் சில டெஸ்ட் செய்ய இருப்பதால் ஒருநாளாவது இருக்கவேண்டும் என சொல்லி ஜெனரல் வார்டில் தங்க சொல்லிவிட்டார்கள். அன்று மாலைவரை பல்வேறு டெஸ்டு' செய்துவிட்டு, மருத்துவர் மேற்க்கொண்டு என்ன செய்வது என்று நாளை சொல்வார்கள் என சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் ரவுண்ட்ஸ் வந்த முதல் மருத்துவர், அறிக்கைகளை பார்த்துவிட்டு,அபாயகரமாக எதுவும் இல்லை,உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் போதும் என சொன்னார். சிறிது நேரம் கழித்து,மற்றொரு மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டு,அதே கருத்தை தெரிவித்துவிட்டு சென்றார்.
அடுத்ததாக தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ் வந்தார்.அவர்தான் கடைசியாக முடிவு செய்ய வேண்டியவர். அவரும்,அறிக்கைகளையெல்லாம் பார்த்தார்.எங்கிருந்து வருகிறீர்கள்,என்ன வேலை பார்க்கிறீர்கள்( ஆசிரியராக இருக்கிறார்) எனக்கேட்டுவிட்டு, கடைசியாக ஒரு குண்டைப் போட்டார். இதயத்தில் அடைப்பு இருக்கலாம் என சந்தேகப் படுவதாகவும், ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் உடனடியாக எடுக்கவேண்டும்,பணத்தைக் கட்டிவிடுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.அதற்கு மட்டும் ரூ 10500 ஆகும் என தெரிவித்தார்கள்.
அவர்கள் வேண்டிய பணம் எடுத்து வராததால், என்னை வரசொன்னார்கள். நானும் அங்கு சென்று தலைமை மருத்துவரை சந்தித்தேன். மற்ற இருமருத்துவர்கள் எந்தப்பிரச்சனையும் இல்லை என சொல்லிவிட்டபிறகும் எதற்கு ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் எடுக்கவேண்டும் எனக் கேட்டதற்க்கு, 'இதய அடைப்பு இருப்பதாக தான் கருதுவதாகவும், அதனால் மாரடைப்பு எப்போதுவேண்டுமானாலும் ஏற்படலாம் என சொல்லிவிட்டு போய்விட்டார். வேறு எந்த விளக்கங்களையும் தரவில்லை. மற்ற இருமருத்துவரர்களையும் சந்திக்கவும் முடியவில்லை. வேறு வழியும் இல்லாததால்,அதுவரை ஆகியிருந்த செலவு,ஆன்ஜியோக்ராம் டெஸ்ட்'கான பணத்தையும் (ரூ 13000) 'கடன் அட்டை' வழியாக கட்டிவிட்டேன்.
அன்று மாலையே ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் எடுத்துவிட்டார்கள்.ஆனால் தலைமை மருத்துவர் இல்லாததால்,மறுநாள்தான் ரிசல்ட் சொல்லப்படும் என சொல்லிவிட்டார்கள். அன்று இரவும் அங்கே தங்கவேண்டியதாகிவிட்டது.
மறுநாள் அறிக்கையை பார்த்துவிட்டு,பெரிய அடைப்பு ஏதும் இல்லை, இருக்கும் badcholesterol 'ஐ மருந்துகள் மூலமாக சரிப்படுத்திவிடலாம் எனக்கூறி சென்று விட்டாராம். அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆக மாலை 7 மணிவரை ஆகிவிட்டது. மொத்தமாக ரூ 22000 வரை 2 நாட்களில் செலவானது.

இந்த நிகழ்ச்சியால்,எனக்கு எழுந்த கேள்விகள்...
1. எந்த அடிப்படையில் எடுக்கவேண்டிய சிகிச்சை முறைகள்,டெஸ்டுகள் முடிவாகிறது? 3 மருத்துவர்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், ரூ 10500'ம்,மேலும் ஒருநாள் தங்கலும் ஏற்பட்டது. வேண்டிய பணம் என்னால் உடனடியாக கொடுக்க முடிந்ததால்,டெஸ்ட் உடனடியாக எடுக்க முடிந்தது. இல்லையெனில் வேறு ஏற்பாடு செய்யவோ, சில நாட்கள் கழித்தோ,வேறு மருத்துவமனையிலோ டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும்.ஆனால்,அந்த மருத்துவர்,மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என பயமுறுத்திய பிறகு,தள்ளிப்போடும் முடிவை எப்படி எடுக்க முடியும்?

2. ஒருவேளை வசதியில்லாதோர் இந்த நிலைமைக்கு ஆளானால் அவர்கள் கதி என்ன?
3. மருத்துவர் சரியான விளக்கம் தராததால், அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றால், கண்டிப்பாக,முதல் மருத்துவமனையில் எடுதத எந்த அறிக்கையையும் பார்க்காமல், அதே டெஸ்டுகளை இங்கேயும் ஒருமுறை எடுக்க சொல்ல மாட்டார்கள் என என்ன நிச்சயம் ?
4. பணவசதியிருந்தும், தலைமை மருத்துவர் சரியான விளக்கம் தராததாலும்,மற்ற இரு மருத்துவர்களும் ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டதால் வீட்டிற்கு வந்துவிட்டு,சில நாட்கள் கழித்து நிஜமாகவே பிரச்சனையாகி ஏதாவது இழப்பு ஏற்பட்டால் என்ன ஆவது?

இப்போதுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள், சேவை என்பதையே மறந்துவிட்டு, மருத்துவ தொழிலை பெரும் வியாபாரமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள். அங்கு செல்பவர்களை,மனரீதியான நெருக்கடிக்கு தள்ளி,அவர்கள் சொல்லும் சிகிச்சைமுறைகளை செய்வதை தவிர வேறுவழியில்லை என்றாக்கிவிடுகிறார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு ?

July 9, 2008

BSNL-நம்பினால் நம்புங்கள்...

கடந்த ஏப்ரல் மாதத்தில் அதுவரை தங்கியிருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அங்கிருந்து 6 கிமீ தொலைவில் வெறொரு வீட்டிற்க்கு குடிபெயர்ந்தேன். வீட்டில் இருந்த BSNL landline,broadband இணைப்பை புது வீட்டிற்க்கு மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து BSNL அலுவலகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே கொடுத்திருந்தேன். மே மாதம்வரை எந்த சத்தமும் காணோம். customer service'ஐ அழைத்து சொன்ன உடன், புதிதாக குடியேறியுள்ள பகுதியில் உள்ள BSNL அலுவலகத்தை அணுக சொல்லி,நம்பரையும் கொடுத்தார்கள்.
மே மாத முதல் இரண்டு வாரங்களில் தினமும் அவர்களை அழைத்து, என் BSNL இணைப்பு புது வீட்டிற்க்கு எப்போது கிடைக்குமென கேட்டுக்கொண்டிருந்தேன். எவ்விதமான பாசிடிவ் பதிலும் இல்லை. சனிக்கிழமைகளில் அவ்வலுவலகத்திற்கே நேரடியாகப் படையெடுக்க ஆரம்பித்தேன். ஒருவழியாக எங்கள் தெருவுக்கு பொறுப்பான லைன்மேனை சந்தித்து எப்ப்போது போன் லைன் கொடுக்கப்போகிறீர்கள் எனக்கேட்டதற்க்கு, உங்கள் வீட்டிற்க்கு 2 முறை வந்தேன்.வீட்டில் யாருமில்லை என விட்டேத்தியாக பதில் வந்தது( என்னுடடைய தாயார் 24*7 வீட்டில்தான் இருப்பார்கள்). வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு, மறுபடி எப்போது வருவீர்கள் என்றதற்க்கு,அடுத்த வாரத்தில் ஏதாவது ஒரு நாள் வருவதாக வரம் தந்தார்.
அந்தவாரம் முழுவதும் போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்ததில் மனமிரங்கி(???) வெள்ளிக்கிழமை இணைப்பு வந்துவிட்டது.வெலையை முடித்துவிட்டு மொய் பணம் கேட்டுள்ளார்,என் தாயார் ரூ 100 கொடுத்தற்க்கு,இவ்வளவுதானா? என நக்கலாக கேட்டுவிட்டு சென்றிருக்கிறார். ஒருவழியாக மே கடைசி வாரத்தில் இணைப்புக்கிடைத்து விட்டது.
நான் வீட்டிற்க்கு வந்து 'Broadband' இணைப்பை சோதித்தால் அது வேலை செய்யவில்லை. மறுபடியும் போன் வழியே படையெடுப்பு.ஒன்றும் நடக்கவில்லை. ஏர்டெல்'க்கு மாறிவிடலாமா என தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் அலுவலகத்தின் Intranet-forum'ல் ஒரு BSNL e-mail முகவரியை பார்த்தேன்.அந்த முகவரிக்கு புகார் அனுப்பினால் மாயம் நிகழும் என போட்டிருந்தார்கள். சரி முயன்றுதான் பார்க்கலாமே என முழுக்கதையையும் எழுதி அனுப்பினேன்.
இரண்டு நாட்களாக எந்த சத்தத்தையும் காணோம். 3ம் நாள் ஒரு இ-மெயில் வந்தது. "உங்கள் புகார்,பங்களூர் அலுவலகத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உங்களை தொடர்ப்பு கொள்வார்கள்" என்றிருந்தது. அட்லீஸ்ட் ஒரு பதிலாவது வந்ததேயென வீட்டிற்க்குப் போனால்,அதுநாள்வரை வெலை செய்துக்கொண்டிருந்த போன் 'கோமா' நிலைக்குப்போயிருந்தது.

உள்ளதும் போச்சடா...என்ற எரிச்சலுடன் மறுநாள் படுகாரமாக இன்னோரு இ-மெயிலை தட்டிவிட்டேன். அன்று மதியம் பங்களூர் BSNL அலுவலகத்திலிருந்து போன் வந்தது. ஒரு மொபைல் எண்ணைக்கொடுத்து பேசசொன்னார்கள். முக்கியமான வேலையில் நான் மூழ்கியிருந்தால் அவர்களை தொடர்புக்கொள்ளவில்லை. மறுபடியும் வேறொருவர் BSNL'லிருந்து அழைத்து,மிகவும் மரியாதையுடன் என்ன பிரச்சனை என்று விசாரித்துவிட்டு, நீங்கள் எப்பொது வீட்டிற்க்கு வருவீர்களென கேட்டார்கள். சரி என்னதான் நடக்கிறது பார்க்கலாமென,அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வருவதாக சொன்னேன். பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்பினேன். வீட்டை அடைவதற்குள்,3-4 மிஸ்டு கால். வீட்டை அடைந்து அந்த எண்ணுக்கு கூப்பிட்டு நான் வீட்டிலிருப்பதாக கூறினேன். அடுத்த 5 நிமிடத்தில், 3 BSNL ஊழியர்கள் வந்து, 10 நிமிடத்தில் போன், broadband இணைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.அந்த 3 பேரில், முன்பு வந்த லைன்மேனும் இருந்தார், ஒரு வார்த்தைக்கூட பேசாமல்,இணைப்பைக் கொடுத்துவிட்டு எல்லாம் சரியாக வெலை செய்கிறதா என என்னிடம் ஒருமுறைக்கு இருமுறை சரிப்பார்க்க சொல்லி, மிக மரியாதையுடன் 'நன்றி' சொல்லிவிட்டு (பணம் எதும் கேட்க்காமல்) கிளம்பிச்சென்றார்கள்.

எனக்கு சில நிமிடங்கள் நான் இந்தியாவில்தான் இருக்கிறேனா,இல்லை நடந்ததுயெல்லாம் ஏதாவது பகல்கனவா? என தெரியவில்லை. அடுத்த 2 நாட்கள் அவர்கள் போன் செய்து எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா எனவேறு விசாரித்தார்கள்.
இந்த மாற்றத்திற்க்கு காரணம் என்னவென்றால்,நான் புகார் அனுப்பிய இ-மெயில் முகவரி, டெல்லியில் உள்ள BSNL உயரதிகாரியின் ID. அவர் அங்கிருந்து பெங்களூர் அதிகாரிக்கு அனுப்பி follow-up செய்ததால்தான் மேற்கண்ட மாயாஜாலங்கள் நடந்தன.
ஒரு 10 நிமிட வேலைக்கு,கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் நேரம் செலவிட்டு இருக்கிறேன். கடைசியாக மேலிடத்தில் புகார் செய்ததால் எல்லாம் விரைவில் முடிந்தது,இல்லையென்றால் இன்னும் எந்தனை வாரங்கள்,மாதங்கள் ஆகியிருக்குமோ?
பின்குறிப்பு : இத்தகவலை,என் நண்பர்களிடமும் சொல்லி,அவர்களும் புகார்களை இ-மெயில் தட்டிவிட்டதில், பெரும்பாலானவர்களின் BSNL பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளன.

July 10, 2006

குளிச்சா குற்றாலம்....

கடந்த மாத இறுதியில் கல்லூரி நண்பனின் திருமணத்தில் கலந்துக்கொள்வதற்காக பெங்களுரிலிருந்து நண்பர்களுடன் சங்கரன்கோவிலுக்கு 'தூத்துக்குடி எக்ஸ்பிரஸில்' புறப்பட்டோம். இரவு 915க்கு மைசூரிலிருந்து வந்து சேரவேண்டிய வண்டி,1030க்குதான் வந்து பிறகு கிளம்பியது.பரிசோதகர் வந்துபோனபின்பு உறங்கலாமென 1 மணி நேரம் காத்திருந்தோம்.யாரும் வருவதாக தெரியவில்லை. காலையில் வண்டி 'கொடை ரோடை' நெருங்கும்போது விழித்தெழுந்தோம்.வண்டி மதுரையில் நுழையும்போது 'ப்ளாட்பாரத்தில்' மீனாட்சி பவன் சிற்றுண்டிசாலை' கண்ணில் பட்டது.
அங்கு 'இட்லி,பொங்கல்,பூரி,காபி' என எல்லாவற்றையும் 'பார்சலில்' வாங்கிக்கொண்டோம்.உணவு வகைகள் அனைத்தும் அருமையாக இருந்தது. 'காபி'யின் சுவை, பேஷ்...,பெஷ்.....ரொம்ம்ம்ம்ப நன்னாயிருக்கு' என எங்கள் அனைவரையும் சொல்லவைத்தது.

ஒருவழியாக காலை 1030 வாக்கில் கோவில்பட்டியை அடைந்தோம்.அங்கிருந்து சங்கரன்கோவிலுக்கு 1 மணி நெர பேருந்துப்பயணம். வழி மிகவும் மோசமாக இருந்தது.சுற்றுப்பிரதேசமும் வறண்டு களையிழந்து காணப்பட்டது.
மதிய உணவை நண்பனின் வீட்டில் முடித்துக்கொண்டு ஒரு 'சுமோ'வில் 'குற்றாலம்' நோக்கிப்புறப்பட்டோம். 50 நிமிடப்பயணம்.
வழி முழுவதும் பெரிய பெரிய காற்றாலைகளை அமைத்து 'மின்சாரம்' தயாரிகிறார்கள்.'குற்றாலம்' நெருங்க நெருங்க காற்றின் வேகமும் அதிகமாகிறது.சுற்றுப்பிரதேசமும் மிகவும் பசுமையாக,கண்களுக்கு இதமாக இருக்கிறது. ஒரு 40 கிமி இடைவெளியில் வறண்ட மற்றும் வளமையான பிரதேசங்கள்.

முதலில் 'ஐந்தருவி'க்கு சென்றோம்.அப்போதுதான் சாரல் மழை விட்டிறுந்தது.மக்கள் கூட்டமும் குறைவாகவே இருந்தது எங்களுக்கு நிறைவாக இருந்தது. அருவில் தண்ணீரும் மிதமான வேகத்தில் கொட்டிக்கொண்டிருந்தது. 'ஐந்தருவி'யில் இரண்டு பகுதிகள் பெண்கள் பகுதியிலும், இரண்டு பகுதிகள் ஆண்கள் பக்கமும் விழுந்துக்கொண்டிருந்தது. இன்னோரு பகுதி அன்று தண்ணீர் குறைவாக இருந்ததால் காணவில்லை.

அங்கிருந்து 'மெயின்' அருவிக்கு சென்றோம்.இங்கு தண்ணீர் மிகவும் அதிகமாக இருந்தது.நாங்கள் சென்ற நெரத்தில் 'சாரல்' மழையும் பொழிய ஆரம்பித்தது. ஒரே சமயத்தில் மலையிலிருந்து விழும் மலைஅருவியிலும்,வானத்திலிருந்து விழும் மழைஅருவியிலும் ஆனந்தமாக குளித்தோம்.அருவியின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. உடம்புக்கு நல்ல 'மசாஜ்'ஜாக சரியான அடி விழுந்தது. 'குளிச்சா குற்றாலம்....' என எழுதியவர் அந்த அனுபவத்தை உணர்ந்துதான் எழுதியிருக்கவேண்டும்.ஒரு நிஜமான 'குளியல்' அனுபவம் வேண்டுமெனில் ஒரு நடை குற்றாலம் சென்று குளியல் போட்டுவிட்டு வாருங்கள்.

March 24, 2006

மீண்டும் பேங்களூர் வாசம்....

கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேங்களூர் வாசம்.கடந்த ஒரு வாரமாக 'எலெக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் அலுவலகத்திற்கு பைக்கில் வந்துகொண்டிருக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து கிளம்பும்முன் இங்குள்ள நண்பர்களை தொடர்பு கொண்டபோது 'அங்கேயே வேறு ஏதாவது புராஜெக்ட் சேர்ந்துவிடு,ஒசூர் ரோடு ட்ராப்பிக்'ல் மாட்டிக்கொள்ளாதே' என பயமுறுத்தியிருந்தார்கள்.போதாதகுறைக்கு சில இ-மெயில் ஜோக்குகளும் ஒசூர் ரோடு ட்ராப்பிக் பற்றி பார்த்து மிரண்டு போய்யிருந்தேன்.
முதல்நாள் அலுவலகம் கிளம்பும்முன் இந்தவிஷயங்கள் மனதில் ஓட வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.ஆனால் நான் எதிர்ப்பார்த்த அளவிற்கு நெரிசலின்றி 35 நிமிடத்தில் அலுவலகம் வந்துவிட்டேன்.மடிவாளா,பொம்மனாள்ளி போன்ற இடங்களில் நெருக்கடி அதிகமிருந்தது. போதாதகுறைக்கு மடிவாளா முதல் எலெக்ட்ரானிக் சிட்டி வரை பாலம் அமைப்பதற்க்கான ஆரம்பவேலைகளை ஆரம்பித்துள்ளனர்.வரும் காலங்கள் மிககடினமாக இருக்கும் என்பது நிதர்சனம்.பைக் என்பதால் கிடைக்கும் இடைவெளியில வந்துவிட முடிகிறது.காரோ மற்ற வாகனமோ என்றால் ரோம்ப கஷ்டம்பா....கார் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தை ஒசூர் ரோட்டில் தூக்கிப்போட்டு விட்டேன். ;)))

இதுதவிர மிகப்பெரிய மாற்றமாக என் கண்ணில் அறைந்தது 'பெண்கள்'.
அலுவலகத்தில் நுழைந்தால் எங்கும்,எங்கெஙும் பெண்கள்..பெண்கள்..மேலும்(நம்ம மேலே இல்லப்பா......) பெண்கள். விதவிதமான,வண்ணவண்ண,அனைத்துவகையான ஆடைகளூடன் வலம்வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்களின் 'புரட்சி' என்ற பெயரில்
உடைகளில் ஏகப்பட்ட 'வறட்சி',
காட்சியாகிறது அழகின் 'திரட்சி'.
அதைக்கண்ட எனக்கோ 'மிரட்சி........

இதுதான் தோன்றியது எனக்கு.பொருளாதார தாராயமயமாக்கல் நம் வாழ்க்கைமுறையை மிகவும் மாற்றியிருக்கிறது.முதல்நாளில்தான் இந்த காட்சிகள் மாற்றமாக தெரிந்தது.இப்போது பழகிவிட்டது.

December 5, 2005

புது வெள்ளை மழை பொழிகின்றது....


இன்று வழக்கத்திற்கு மாறாக காலை 11 மணிக்கு எழுந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தால்,
வெளி உலகம் மிகப்பெரிய பனிப்போர்வையை போர்த்திக்கொண்டு சோம்பியிருந்தது.எங்கள் ஊரின் முதல் பனிப்பொழிவு இன்று அதிகாலை ஆரம்பித்திருக்கிறது.இனிமேல் அடுத்த 2-3 மாதங்களுக்கு வழக்கமான விருந்தாளியாக படுத்தப்போகிறது. இதற்குமுன் கடந்த 2 வருடங்களாக டல்லாஸ்'ல் இருந்தேன்.அங்கு வருடத்திற்கு ஒரே நாள்தான் பனிபொழிவு இருந்தது.
முதல் பனிப்பொழிவு என்பதால் வெளியே போய் விளையாடினொம்.சில (பனி)புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.....


November 4, 2005

அமெரிக்காவில் கோவிந்தோ....கோவிந்தோ...

கடந்த திங்களன்று,அலுவலகம் முடிந்து வீட்டுக்குவந்து காபி(இது ப்ரூ'ம்ம்மா....)சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது,அழைப்புமணி அழைத்தது.கதவைதிறந்தால், குட்டி ஸ்பைடர்மேனும்(பாபா ஸ்டைலில் கைவிரலை வைத்துக்கொண்டு நூல் விடுபவர்), சூப்பர்மேனும்(பேண்ட்'க்கு மேலே ஜட்டி போடுபவர்) கையில் ஒரு கூடையுடன் நின்றுக்கோண்டிருந்தார்கள். இன்று முடிக்கவேண்டிய வேலையை நாளைக்கு முடிப்பதாக ஆபிசில் மேனேஜ்ரிடம் 'ஜல்லியடித்துவிட்டு' வந்துவிட்டதால்,பிடித்துவர இவர்களை அனுப்பிவிட்டார்களா என யோசித்துக்கொண்டே கேள்விக்குறியுடன் அவர்களை பார்க்க, 'ஹாலோவின்' வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு கூடையை நீட்டினார்கள்.அதில் ஏகப்பட்ட 'கேண்டி'சும் சில 'டாய்'சும் இருந்தது.ஓ..ஹோ...நமக்குத்தான் தருகிறார்கள் என கூடையில் கையை விட்டால், ஸ்பைடர்மேன் கையை பிடித்து,'you should give us the candy's' என்றனர்.இது என்னடா வம்பா போச்சி என நினைத்துக்கொண்டிருந்தபோது,கை நிறைய 'கேண்டி'யோடு அண்ணி வந்து இரண்டுக்கூடையிலும் போட்டார்கள்.ஸ்பைடர்மேனும், சூப்பர்மேனும் 'தேங்ஸ் ஆன்டி' என சொல்லிவிட்டு என்னை 'அக்னி நட்சத்திர' பார்வை பார்த்துக்கொண்டே அடுத்த வீட்டிற்க்கு சென்றார்கள்.

பிறகு அண்ணி 'இன்று 'ஹாலோவின் டே'.குட்டிப்பசங்க விரும்பிய வேஷம் போட்டுக்கொண்டு,வீடுவீடாக கூடை/பையுடன் சென்று அவர்கள் கொடுப்பதை வாங்கி வருவார்கள் என விளக்கினார்கள்.எங்கள் வீட்டு வாண்டுகளும் கூடையுடன் கிளம்பி சென்றிருக்கிறார்கள் என உபரித்தகவலையும் சொன்னார்கள்.

எங்கள் வீட்டு வாண்டுகளின்(அஜித்,அஸ்வின்) வேஷம்..



எனக்கு நம்ப ஊரில் புரட்டாசி மாதம் பிரதி சனிக்கிழமை,நெற்றி முழுக்க நாமத்துடன் கையில் சொம்பு/பையுடன்,'கோவிந்தோ.....கோவிந்தோ...' சொல்லிக்கொண்டு அரிசியோ,காசோ வாங்கி செல்லுபவர்களின் நியாபகம் வந்தது.

அதற்குபிறகு கேண்டி'ஸ் முழுவதையும் என்னிடம் கொடுத்து,வருபவர்களுகெல்லாம் வாரி வழங்குமாறு சொல்லிவிட்டு அண்ணி போய்விட்டார்கள். நானும் 'தேவுடா....தேவுடா...ஏழுமலை தேவுடா' பாட்டை போட்டுவிட்டு 'ஸ்பைடர்மேன்'களுக்காக 'தேவுடு' காத்துக்கொண்டிருந்தேன்.

August 26, 2005

அவர்கள் அப்படித்தான்...

கடந்த 4 மாதங்களாக நியூஜெர்சியில் வசித்து வருகிறேன். நாங்களிருக்கும் அபார்மெண்ட் எதிர் வீட்டில் 3 அமெரிக்கர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் வழங்கும் மாத உதவித்தொகை மூலம் வாழ்பவர்கள்.அரசாங்கமே வீடும் கொடுத்திருக்கிறது. இதுவரை அவர்கள் எங்கும் சென்று நான் பார்த்ததில்லை.நாள் முழுவதும் காலைமுதல் இரவுவரை வீட்டுக்கு வெளியே அமர்ந்து விடுகிறார்கள். ஒரு 'ஆடியோ' சிஸ்டத்தில் சத்தமாக எதாவது பாடல்களை போட்டுவிடுகிறார்கள்.வாயில் எப்போதும் புகைந்துக்கொண்டிருக்கும்.சில நேரங்களில் வழியில் செல்வோரிடம் 'சிகரெட்'டிற்கு கையேந்துவார்கள்.மற்றபடி வேறு தொந்தரவு கிடையாது.
என்னால் கற்பனைக்கூட பண்ணமுடியவில்லை,நாள் முழுவதும் எந்தக்குறிக்கோளும் இல்லாமல் வெறுமென அமர்ந்துக்கொண்டு பொழுதைக்கழிப்பதென்பது மிகவும் கொடுமையான தண்டனையாக தோன்றுகிறது.

இவர்கள் இப்படியென்றால்,அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் உள்ளது.வயதான பெண்மணி,அவருடைய,வேலைக்குப் போகும் பெண்,அந்தப்பெண்ணின் இரு குழந்தைகள்,5-8 வயது இருக்கும். காலையில் அப்பெண் வேலைக்கு கிளம்பிய உடன்,அம்முதியப்பெண்மணி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கோகிளம்பிவிடும். சில மணி நேரங்கழித்து கைகளில் விதவிதமான பொருள்களுடன் திரும்புவார்கள்.இது தினமும் நடக்கும்.
ஒருநாள் அலுவலகம் தாமதமாக கிளம்பினேன். வீட்டில் ஏராளமான குப்பைகள் சேர்ந்துவிட்டதால்,அவைகளை எடுத்துக்கொண்டு,எங்கள் காலனியில் குப்பைகளைப்போடும்
இடத்திற்கு சென்றேன்.அங்கு நான் கண்டக்காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த முதிய பெண்மணி,குப்பைகளைக் குடைந்துக்கொண்டிருந்தது.அதிலிருந்து அரைக்குறையாக பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்ட பொருட்களை செகரித்துக்கொண்டிருந்தது.குழந்தைகளையும் பெரிய பெட்டிகளில் குவிந்திருந்த குப்பைகளை கிளற விட்டிருந்தது.தினமும் இப்படித்தான் நடந்துக்கொண்டிருப்பதாக,பிறகு சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தார்கள்.
எனக்கு அந்தக்குழந்தைகளை நினைத்துதான் கவலைப்படமுடிந்தது.

June 25, 2005

பயணங்கள் முடிவதில்லை...

அண்மையில் அலுவல் சம்பந்தமாக, வாஷிங்டனிலிருந்து நீயூஜெர்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. விமானம் புறப்படும் நேரம் மாலை 5 மணி. 3.30'க்கே விமானநிலையம் சென்று 'போர்டிங் கார்ட்' வாங்கியப்பிறகுதான் விமானம் 1 மணி நேரம் தாமதாமாகும் என அறிவிக்கப்பட்டது. இது என்னடா சோதனை என நினைத்துக்கொண்டு 'starbuck's' ல் ஒரு 'கேப்பச்சினோ'வை வாங்கிக்கொண்டு விமானநிலையத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் 'போர்டிங் கேட்' வந்தால், விமானம் மேலும் 1 மணி நெரம் தாமதமாகும் என அறிவித்தார்கள்.ஏதோ இயந்திரக்கோளாராம். ம்ம்ம்.... நான் கிளம்பிய நேரத்தில்தான் ஏதோ கோளாறு என நொந்துக்கோண்டு,வேண்டுதல் போல்,மீண்டும் ஒருமுறை விமானநிலையத்தை சுற்றிவிட்டு கடைசியாக 7 மணிக்கு விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.

எல்லா பயணிகளும் அமர்ந்தப்பிறகு,கதவை மூடிவிட்டு பணிப்பெண் பாதுகாப்பு நடைமுறைகளை விளக்க ஆரம்பித்த நேரத்தில், விமானியிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது.முக்கியமான பயணிகள் ஏற வேண்டியிருப்பதால் கதவு மீண்டும் திறக்கும் என அறிவிக்கப்பட்டது.
அது மிகச்சிறிய விமானம்.மொத்த இருக்கைகள் 50,ஏற்கனவே அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது. புதிதாக வருபவர்கள் எங்கு அமர்வார்கள் என நினைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு விமான சிப்பந்தி வந்து ஏற்கனவே அமர்ந்திருந்த இருப்பயணிகளை விமானத்தை விட்டு இறங்கச்சொன்னார்கள்.
ஆனால் இருவரும் இறங்க மறுத்துவிட்டார்கள்.அந்த இருவரும் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து வந்தவர்கள் ஆகவே அவர்கள் கண்டிப்பாக இறங்க வேண்டும் என விமான சிப்பந்தி சொல்லிவிட்டார்.அவர்கள் மீண்டும் மறுக்கவே 'செக்யூரிடி'யை விமானத்தினுள் அழைதது அவ்விருப் பயணிகளையும் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார்கள். நாங்கள் அனைவரும் நடந்தவைகளைக்கண்டு அதிர்ச்சி அடைந்திருந்தோம். பயணிகளிடம் இவ்வளவு கடினமாக நடந்துக்கொள்வார்களென யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.அதற்குப்பிறகு வேறு இருவர் ஏறியப்பிறகு விமானம் கிளம்பியது.
கடைசியாக இரவு 930'க்கு, 3 1/2 மணி நேர தாமதமாக நீயூஜெர்சியை அடைந்தேன். இதில் விஷேசம் என்னவென்றால், ஒழுங்காக நான் காரில் வந்திருந்தால், 3 மணி நேரத்தில் வந்து சேர்ந்திருக்கலாம்.