Search This Blog

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

September 10, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் - விமர்சனம்



கதை என்ற ஒன்று பெரிதாக இல்லாமல் இரண்டேமுக்கால் மணி நேரம் ஒரு படத்தை முழுதாக பார்க்கவைக்கமுடியுமா ? என்ற சவாலில் டுடோரியலில் சென்று படித்து first class'ல் பாஸ் பண்ணியிருக்கும் படம்தான் பாஸ் (எ) பாஸ்கரன்...

கதை என்ன என்று சொல்லவேண்டுமென்றால்..... இம்ம்.....ம்...ம்ம்...... ஓகே.... ஒகே....ஓகே.... ஏகப்பட்ட அரியர் வைத்துவிட்டு, 5 வருடங்களாக பரிட்சை எழுதி பாஸ் பண்ண சீரியசாக டிரை'கூட பண்ணாத, பொறுப்பு என்றால் கிலோ என்ன விலை என்றுக் கேட்கும் ஹீரோ, தான் போட்ட சபதத்தில் ஜெயிக்க (வேறு என்ன...தங்கச்சிக்கு ஆறே மாதத்தில் கல்யாணம், அடுத்தபடியாக காதலியை கைப்பிடிக்கும் லட்சியம்) நண்பனின் உதவியுடன் டுடோரியல் ஆரம்பித்து, அதில் சேரும் சில/பலரை 10வது பாஸ் செய்யவைத்து சபதத்தை நிறைவேற்றுகிறார்...(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......அப்பாடா...... கதைய சொல்லிட்டேன்...).

ஆர்யா,பொறுப்பில்லாத பையனாக,அப்பா இல்லாத குடும்பத்தில், மாட்டாஸ்பத்திரியில் டாக்டராக இருக்கும் கல்யாணமாகாத அண்ணன் சம்பாத்தியத்தில், டிவி காம்பயர் போல எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கும் தங்கை, பையன் பிட் அடித்தாவது பாஸ் பண்ணவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் அம்மா என்ற குடும்பத்தில் இருக்கிறார்.அவருக்கு மாமனார் காசில் சலூன் கடை(தல தளபதி சலூன் கடை) வைத்திருக்கும் சந்தானம் ஒரேஏஏஏஏஏஏஏஏஏ நண்பன்டாஆஆஆஆஆஆ............

ஒருமுறை அரியர் எழுத ஏராளமான பிட்'களோடு செல்லும்போது பஸ்சில் நயனதாராவை சந்திக்கிறார்.அவரிடம் பிட் அடித்து எக்ஸாம் எழுத போவதாக சொல்கிறார். அடுத்து என்ன சீன் வரும்????? கரெக்ட்.அதேதான்... எக்ஸாம் ஹாலில் எக்ஸாமினர் நயனதாராவேதான். அடுத்து கல்யாணமாகாத அண்ணனுக்கு அவர் விரும்பும் விஜயலட்சுமியை அவர் வீட்டுக்கு அம்மாவுடன் சென்று பேசி முடித்துவிட்டு வெளியே வரும்போது.......யார் வருவாங்க????? ஹீரோயினேதான்... அவருக்கு அங்கு என்ன வேலை???? என்னங்க சார்...எவ்ளோ..............படம்பார்த்திருக்கிறோம்,இதுகூட தெரியாதா? அவர்தான் விஜயலட்சுமியோட தங்கச்சி.... அப்புறம் என்ன நடக்கும்??? அதே....அதேஏஏஏஏஏஏஏதான்....அண்ணன் கல்யாணத்தின்போது ஹீரோ,ஹீரோயினை சுற்றி...சுற்றி வந்து பாட்டு பாடுவார்...ஹீரோயினும் அவரை பிடிக்காததுப்போல் காட்டிக்கொண்டு,அவர் செய்யும் சேட்டைகளையெல்லாம் ரசித்துக்கொண்டிருப்பார். அதன்பிறகு நண்பனின் உதவியோடு ஹீரோயினுக்கு அவரின் காதலை தெரிவிக்க முயற்சிப்பார். பஞ்சாயத்துக்கு ஹீரோவின் அண்ணி வந்து, 'வேலைவெட்டியில்லாமல் சுற்றும் உனக்கு என்ன யோக்கியதை இருக்கு என் தங்கையை கல்யாணம் செஞ்சிக்க' என்று சூடுபறக்க கேட்க,ரோசப்படும் ஹீரோ வீட்டைவிட்டு வெளியேறி நண்பனின் தலையை(???) அடகு வைத்து, சபதத்தில் கடைசியில் ஜெயிக்கிறார்.

படத்தின் நிஜ ஹீரோ சந்தானம்தான். அவர் வரும் காட்சிகளெல்லாம் காமெடி களைக் கட்டுகிறது. 'நான் கடவுள்' வில்லனிடம், ஆர்யா+சந்தானம் கூட்டணி டுடோரியல் காலேஜ் நடத்த கடன் கேட்க ,அவரின் பையனையும் 10 பாஸ் பண்ண வைக்கவேண்டும் என்ற படா கண்டிஷனோடு கடன் கொடுக்கிறார்.
டுடோரியலில் ஆள் சேர்க்க போஸ்டர் அடித்து ஒட்டி, ஷகிலாவை பாடம் நடத்த வைத்து என சில,பல டகால்டி வேலைகள் என சந்தானத்தின் காமெடி கல்லா கட்டுகிறது. ஒவ்வொரு வசனத்திற்கும்,'கவுண்டர்' அட்டாக் கொடுக்கும் சந்தானத்தின் காமெடிக்கு தியேட்டரில் பயங்கர அப்ளாஸ்.
முதல் மூன்று பாடல்கள் நன்றாக இருக்கிறது.யுவனின் இசை சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில்தான் முதல்முறை பாடல்களைக் கேட்டேன்/பார்த்தேன். தேவையில்லாத இடத்தில் கடைசிபாடல் படத்தின் வேகத்தடையாக உள்ளது.

SMS இயக்குனரின் கைவண்ணத்தில் அவருக்கு அடுத்த வெற்றிகரமான படம்.கும்பகோணத்தை மையமாக வைத்து 4 துணை,4 இணை இயக்குனர்களோடு சேர்த்து படம் பண்ணியிருக்கிறார். முதல் பாடலின் பிண்ணணியில் 'விண்ணைதாண்டி வருவாயா' போஸ்டரின் முன்பு ஹீரோ நடனமாடுவதாக காட்சி வருகிறது. அதற்கு வெகுபின்பு வரும் வேறொரு காட்சியில், ஆர்யாவும்,சந்தானமும், 'ஏகன்'+ ' வில்லு' பட ரிலீசன்று படம் பார்க்க செல்வதாக வருகிறது..

முதல்பாதி மிகவும் மெதுவாக போகிறது,சந்தானம் வரும் இடங்களைத்தவிர. இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு பரவாயில்லை. சிலக்காட்சிகளுக்கு சந்தானத்திடமிருந்த 'கத்தரி' யை பயன் படுத்தியிருக்கலாம். க்ளைமாக்ஸில் படத்தை முடித்து வைக்க, 'சிவா' வருகிறார்.

ஐய்யய்யோ... நயனதாராவை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். 'யாரடி நீ மோகினி' லுக்கில் கொஞ்சம் வயதானவராக வற்றிப்போய் இருக்கிறார்.not bad.

Boss (a) Baskaran : Good Time pass.

October 23, 2009

இரயில் பயணங்களில்...T.ராஜேந்தருடன்...

கடந்த மாதத்தில் அலுவலக விஷயமாக சென்னை செல்ல வேண்டியிருந்தது. 2.50க்கு வரவேண்டிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாக வந்தது. C2 கோச்'சில் டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.ஏறி அமர்ந்து ஒரு வெஜிடபிள் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு, ப்ளாட்பாரத்தில் வாங்கிய குமுதத்தை பிரித்து அரைத்தூக்கத்துடன் மேய ஆரம்பித்தேன்.திடீரென எனக்குப்பின்புறம் சில ஆச்சர்யக்குரல்கள் 'ஹ்லோ சார்,நீங்க எப்படி ட்ரெய்ன்ல, நாங்க எதிர்ப்பார்க்கவேயில்லை,ஒரு ஆட்டோக்ராப் சார்,ஒரே ஒரு போட்டோக்ராப் உங்ககூட சார்' என இரண்டு,மூன்றுப்பேர் என் சீட்டிற்குபின் நின்றுக்கொண்டிருந்தார்கள். அரைக்குறை தூக்கத்திலிருந்து வி(மு)ழித்த நான்,'என்னாடா இது,என்கிட்ட எதுக்கு ஆட்டோக்ராப்/போட்டோ எடுக்க ஆசைப்படுறாங்க? ஒருவேளை நான் சிறந்த ப்ளாகர்'னு தமிழ்மணத்தில் அறிவித்து,அது சன் ப்ளாஷ் நியூஸ்'ல வந்து நான் பெரிய ஆள் ஆகிட்டனோ'ன்னு நம்ம்ம்...பி...... திரும்பிப்பார்த்தா,எனக்கு பின்வரிசையில் ராஜேந்தர் அமர்ந்திருந்தார்.



அந்த ரயில் ரசிகர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு,அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு அவர் மீண்டும் அவர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டார். எனக்கு ஏற்ப்பட்ட கடுப்பில் அவரைக்கண்டுக்கொள்ளாமல் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் என் காதுகள் பின்னால் நடப்பவற்றை 'பார்ட் டைம்'மாக கவனிக்க ஆரப்பித்தது.அந்த சில ரசிகர்களுக்குப்பிறகு வேறு யாரும் அவரைக்கண்டுக்கொள்ளவில்லை. அந்த ஏசி கோச்சில் அமர்ந்திருந்த பலரும் புத்தகத்திலும்,லேப்டாப்பிலும்,மொபைலிலும்,தூக்கத்திலும் மூழ்கிவிட்டார்கள். அவ்வப்போது நடமாடிய கேண்டீன் ஆட்கள் அவரைப்பார்த்து, சார்..காபி சாப்ட்ரீங்களா,வடை,பஜ்ஜி சூடா இருக்கு சாப்ட்ரீங்களா.. என தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவருக்கு தூக்கம் வ்ரவில்லைப்போலும்.அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துடன் பேச ஆரம்பித்தார். அவர்களிடம் இரண்டு வயது பெண் குழந்தை இருந்தது. அதைத்தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். கையாலும்,வாயாலும் தாளம்போட்டு சில சேட்டைகள் செய்துக்காட்டிக் கொண்டிந்தார். அந்தக் குழந்தையும் அவரை மாமா என அழைத்து ஒட்டிக்கொண்டது.சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் அலுத்துப்போய் தூங்கிவிட்டார். வண்டி ஜோலார்பேட்டையை நெருங்கியது.



நான் பிறந்து வளர்ந்த ஊர்,மேலும் என்னைப்பார்க்க என்னுடைய சகோதரர் வந்திருந்தார். வண்டி நின்றப்பின் சகோதரருடன் பேசிவிட்டு மீண்டும் என் கோச்சில் ஏறி வாசல்கதவருகே கம்பியைப்பிடித்து நின்றுக்கொண்டே,என்னுடைய 'ப்ளாஷ்பேக்கில்' மூழ்கிப்போனேன். ஏறக்குறைய 8 வருடங்கள் ஜோலார்பேட்டை - காட்பாடி ரயில்தடத்தில் பயணித்திருக்கிறேன். 3 வருடங்கள் குடியாத்தம் பாலிடெக்னிக் படிப்புக்கும்,3 வருடங்கள் காட்பாடியில் என்ஜினியரிங் படிப்புக்கும்,மேலும் இரண்டு வருடங்களுக்கு அதே கல்லூரியில் வேலைபார்க்கவும் என, இவ்வழித்தடம்,என் வாழ்க்கைப்பாதையில் ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அந்த பசுமை நினைவுகளின் தாக்கத்தில் கட்டுண்டுக்கிடந்த நேரத்தில்,திடிரென ஒருக்குரல் 'பார்த்து ஜாக்கிரதையா நில்லுங்க சார்' என ஒலித்தது.யாரென திரும்பி பார்த்தால் டி.ஆர் நின்றுக்கொண்டிருந்தார்.



நானும் 'அதெல்லாம் ஓகே சார்.எனக்கு இதுப்போல படியில் நின்று பயணிப்பதில் 8 வருட அனுபவம் இருக்கு' என்றேன். அவரும் 'ஆமா சார்,நானும் காலேஜ் படித்த காலத்தில் பல வருடம் ரயிலில் பயணித்திருக்கிறேன்.அந்த பழைய அனுபவங்களை பார்க்கவே இப்போதும் விமானத்தில் சென்னைப்போகாமல், ரயிலில் வந்தேன்' என்றார். அவர் இவ்வாறு இயல்பாக பேச ஆரம்பிக்கவே, நானும் அவருடன் உரையாட ஆரம்பித்தேன்.என் பெயரையும்,மற்ற விவரங்களையும் விசாரித்தார்.அவர் 'ஒரு தலை காதல்' என ஒரு புது திரைப்படம் எடுக்க் இருப்பதாகவும், அதற்கான 'கதாநாயகி'த் தேர்வுக்கு பெங்களூர் வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் ' என்னங்க சார், ஒரே இரயிலில் வருகிறோம்.யாரும் மற்றவரைப் பார்த்து புன்னகைப்பதோ,அறிமுகப்படுத்திக்கொள்வதோ இல்லை. பேச்சுத் துணையில்லாமல் 4-5 மணி நேரம் ஏசி கோச்சில் உட்கார்ந்தபடி பயணிப்பது கடினமாக உள்ளது.நான் உங்களோடு பேசுவதில் உங்களுக்கு ஆட்சேபணையில்லையே' எனக்கேட்டார். அதுவரை அவரைப்பற்றி நான் கொண்டிருந்த அபிப்ராயம் மாறி,அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்த மற்ற சிலப்பயணிகளும் கோச்சிலிருந்து வெளியே வந்து கதவருகே இருக்கும் நடைப்பாதையில் நின்றுக்கொண்டு அவருடன் பேச ஆரம்பித்தார்கள்.அவர் புதிதாக எடுக்கப்போகும் படத்தைப்பற்றி பேச்சு திருப்பியது. ' சார்,இது மதுரைய சார்ந்த கல்லூரி மாணவர்கள்,அவர்களுக்குள் ஏற்படும் காதல் பற்றிய கதை' என ஆரம்பித்தார்.நான் உடனே 'என்னங்க சார்,நீங்களும் மதுரப்பக்கம் போறீங்க.ஏற்கனவே சுப்ரமணியபுரம்,வெண்ணிலா கபடிக்குழு, மதுரைசம்பவம்'னு வந்துட்டு இருக்கு' என்றேன். 'நான் இந்தக்கதைய 1 வருஷத்துக்கு முன்பே தயார் செய்துவிட்டேன்,மற்றசிலக்காரணங்களால் தாமதமாகிவிட்டது.அடுத்த மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து ஏப்ரலில் வெளியிட்டு விடுவேன்' என கூறினார்.அந்த சமயத்தில் எங்களைச்சுற்றி 6-7 பேர் கூடிவிட்டிருந்தார்கள். வண்டியும் காட்பாடியை நெருங்கிக் கொண்டிருந்தது.


காட்பாடியில் இறங்கவேண்டியவர்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள்.அவர்களில் வயதான ஒரு தம்பதியினரும் இருந்தார்கள். அவர்களும் டி.ஆருடன் அறிமுகப்படுத்திக்கொண்டு,'உங்கள் பாட்டு என்றால் எங்களுக்கு நிறையப்பிடிக்கும்.எங்களுக்காக பாட முடியுமா என்றார்கள். வண்டி ப்ளாட்பாரத்தில் நுழைய ஆரம்பித்தது.அதைப்பார்த்த தம்பதியினர் வருத்தத்துடன், 'நீங்கள் பாடுவதை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு இல்லை' எனக்கூறினர். உடனே 'டி.ஆர்' அவர் பாக்கெட்டிலிருந்து ஒரு நாண்யத்தை எடுத்து,அருகிலிருந்த 'பாத்ரூம்' கதவில் தாளம் போட்டுக்கொண்டே 'வாடி என் மதுரக்காரக்கிளியே' எனத்தொடங்கும் பாடலை ராகத்துடன் பாட ஆரம்பித்தார்.அடுத்த இரண்டு நிமிடங்களில் வண்டி காட்பாடி ரயில்நிலையத்தில் நின்றது. அந்த வயதான தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'இந்த நாளை என்றைக்கும் மறக்கமாட்டோம்' என் 'டி.ஆரிடம் விடைப்பெற்று சென்றார்கள்.


வண்டியும் அங்கிருந்து கிளம்பியது. எங்களிடம் திரும்பிய அவர் ' வயசானவங்க சார்,நான் பாடாம இருந்திருந்தா,அது ஒரு குறையா அவங்களுக்கு இருந்திருக்கும்,அதனாலதான் உடனே பாட ஆரம்பிச்சேன்.ஏதோ என்னால முடிஞ்சது' என்றார். அவர் பாடியப்பாடல் அவரின் புதுப்படமான 'ஒரு தலை காதல் ' படத்திற்காக கம்போஸ் செய்திருக்கிறார்.அதை மறுப்படியும் தாளத்துடன் பாட ஆரம்பித்தார். ராகமும்,வரிகளும் வழக்கமான 'டி.ஆர்' டச்'சுடன் அருமையாக இருந்தது.அவர் பாடுவதை என் மொபைல் போனில் வீடியோவாக எடுத்தேன்.அதைக்கவனித்த அவர்,பாடி முடித்தவுடன் என்னிடம் ' மோகன், வீடியோவை 'internet'லோ வேறு யாருக்கோ கொடுத்து விடாதீர்கள்' வேண்டுமானால் 'அம்மாடி..ஆத்தாடி' பாடுகிறேன்,அதை எடுத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். நானும் ஒன்னும் கவலப்படாதீங்க சார்,அப்படியெல்லாம் பண்ணிடமாட்டேன்' எனக்கூற,அவர் 'அம்மாடி...ஆத்தாடி' பாட்டை பாட ஆரம்பித்தார்.






அடுத்த இரண்டு மணிநேரம்.மேலும் பல பயணிகள் வந்து அவருடன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்கள். பாடச்சொல்லிக் கேட்கும் போதெல்லாம், தயங்காமல் தாளத்துடன் பலப்பாடல்களை பாடினார். அரட்டை அரங்கம், தமிழக அரசியல்,சினிமா என பலரும் கேட்டக் கேள்விகளுக்கு தயங்காமல் வெளிப்படையான பதில் அளித்தார். ஏதோ ஒரு கேள்விக்கு 'தமிழகத்தில் பெண்கள் டி.வி சீரியலுக்கும்,ஆண்கள் டாஸ்மாக்'குக்கும் அடிமையாகிவிட்டனர்' என்றார்.வண்டி பெரம்பூரை நெருங்கும்போது கூட்டம் கலைந்தது.


என்னிடம் வந்த அவர் ' நான் காலேஜ் படிக்கும்போது,ரயில் பாத்ரூம் கதவில் காசை வைத்து தாளம் போட்டு பாட்டு பாடுவது வழக்கம், இன்று கதவருகே யாரும் இல்லாதபோது வந்து காசை எடுத்து இரண்டு தட்டுதட்டி பழைய அனுபவத்தைப் பெறலாம் என நினைத்திருந்தேன்.ஆனா இப்போ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்,பலப்பாடல்களை உங்கள் அனைவருக்கும் பாடிக்காட்டியது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு மோகன்' எனக்கூறினார்.இதுநாள்வரை பத்திரிக்கை,படங்கள்,டிவி மூலமாக அவரைப்பற்றி நான் கொண்டிருந்த சில தவறான அபிப்ராயங்கள் அந்த ரயில்பாதையில் விழுந்து சிதைந்தது.