Search This Blog

Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

February 3, 2009

தேசிய நெடுஞ்சாலை NH7

கடந்த டிசம்பரில் ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்வதற்க்காக சென்னை செல்லவேண்டியிருந்தது. கூடவே நண்பனின் குடும்பமும்(பிறந்து ஒரு மாதமே ஆனக் கைக்குழந்தையும்,4 வயதான வாண்டுப்பெண்ணும்) வந்ததால் என்னுடைய காரிலேயே சென்றுவிடுவதென முடிவு செய்தோம்.பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 350கிமீ, முதல்முறையாக இந்தியாவில் நீண்டதூர சாலைவழிப்பயணம்,அதுவும் முழுதூரத்திற்கும் நான் ஒருவனே டிரைவர் வேலைப்பார்க்க வேண்டும்.புதன்கிழமை காலை 730க்கு முன்பு வீட்டிலிருந்துக் கிளம்பினோம்.ஒசூர்வரை பாலம் மற்றும் ரோடு போடும் வேலைகள் நடப்பதால்,35கிமீ கடக்க ஏறக்குறைய 1 மணி நேரம் ஆனது.
தென் திருப்பதி கோயில்-முழுத்தோற்றம்

ஒசூரிலிருந்து சென்னைவரை 4 வழிப்பாதை அமைக்கப்பட்டிருப்பதால் பயணம் இனிதே ஆரம்பித்தது.ஒசூரிலிருந்து சரியாக 10கிமீ தூரத்தில்,ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் தாண்டியவுடன் சாலையின் மறுபக்கத்தில் ஒரு சிறுக்குன்றின்மேல் தென்திருப்பதி என்று ஒரு வெங்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.சிறியக்கோயில் என்றாலும் மிகச்சிறப்பாக கட்டியுள்ளனர்.குன்றின் உச்சியில் கோயில் அமைந்துள்ளதால்,கோயிலின் பின்புற பிரகாரத்தை கடந்து எட்டிப்பார்த்தால் சரேலென சரியும் ஒரு பள்ளத்தாக்கு பச்சைப்பசேலென விரிகிறது.பரந்து விரிந்த பச்சை வயல்வெளியும்,அதைக் கட்டி அணைத்ததுப்போல வெகுதூரத்தில் தெரியும் மலைக்குன்றுகளும்,ஒயிலாக இடுப்பசைத்து வெக்கத்துடன் அன்னநடை நடந்து காதலனை நாடிச்செல்லும் இளம் கிராமத்து பெண்பொல வயல்களுக்கு நடுவே வளைந்து நெளிந்து சலசல என்ற கொலுசு சத்தம் போல கலகலத்து,காலை வெயிலின் தாக்கத்தால் தங்கம்போல தகதகத்து ஓடும் ஓடை நீரும்,அன்னையிடம் பாலருந்தி வயிறு நிறைந்த திருப்தியில்,தெய்வ சிரிப்பு சிரிக்கும் குழந்தையின் முகத்தைப் பார்க்கும் தாயின் பரவசநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும் மென்மையான தென்றல் காற்றும்,நாம் அங்கு செலவிடும் சில மணித்துளிகளில் நம் வயதை பாதியாகக் குறைத்து,வானத்தில் பறக்கும் ஆகாயவிமானத்தை முதல்முதலில் பார்க்கும் சிறுவனின் மனநிலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. அடுத்தமுறை ஒசூர் வழியாக கிருஷ்ணகிரி செல்பவர்கள் தவறாமல் இங்கு ஒரு விசிட் அடியுங்கள்.


தென் திருப்பதி கோயில்-கோபுரம்




பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை சாலையில் வாகன நெரிசல் ஓரளவிற்கு அதிகமாக இருக்கும்.ஏகப்பட்ட லாரிகளை ஓவர்டேக் செய்ய வேண்டியிருக்கும்.அதுவும் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை மலைப்பாங்கான சாலைகள்.பெரும்பாரம் ஏற்றிய லாரிகள்,ஆமை வேகத்தில் இருவழிகளையும் அடைத்துக்கொண்டு மேடேறுவது காரில் செல்லும் நம்முடைய பொறுமையை பயங்கரமாக சோதித்துவிடும்.கை எப்போதும் கியர் மாற்றுவதிலும், கால்கள் கிளட்ச்,பிரேக்,ஆக்ஸிலேட்டர் என மாறிமாறி சேற்றை மிதிப்பதைப்போல மாற்றிக்கொண்டிருப்பதில் கையும் காலும் ஓய்ந்துப்போகும்.கிருஷ்ணகிரிக்கு ஒர் 10கிமீ'க்கு முன்னால் அடையார் ஆனத்தபவன் உணவகம் உள்ளது.ஒன்றரை மணிநேர கடினப் பயணத்திற்குப்பிறகு சிறிது ஓய்வெடுக்க சிறந்த இடம்.

கிருஷ்ணகிரியைத்தாண்டி வேலூர் செல்லும் சாலையை அடைந்துவிட்டால்,வாகனம் ஓட்டுவதற்கு ஒரு சிறந்த தடமாகிவிடுகிறது.லாரிகள் அனைத்து சேலம் வழியாக தென் தமிழகத்திற்கும்,கேரளாவிற்கும் செல்வதால் வேலூர் சாலை,லாரிகள் அற்ற பாலைவன சோலையாகிவிடும்.சிறு பெரிய ஊர்களின் குறுக்கீடும் புறவழிச்சாலை அமைப்பால் விலகிச்சென்று விடுகிறது. ஆக்ஸிலேட்டரில் வைத்தக்காலை எடுக்கவே தேவையில்லை. குறைந்தப்பட்சம் 120கிமீ வேகத்தில் பறக்கலாம். ஆனால் அமெரிக்காவில் freeway'ல் கார் ஓட்டும் நிம்மதிக் கிடைப்பதில்லை.அதற்கு காரணம், சாலையின் குறுக்கே திடீரென ஓடும் மக்கள், எதிர்புறத்திலிருந்து அடுத்தப்பக்கம் செல்ல,முறையாக அமைக்கப்பட்டுள்ள அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள வழிகளைப் பயன்படுத்தாமல், நேரத்தையும்,பெட்ரோலையும் மிச்சம் பிடிக்கும் முனைப்புடன்,நாம் செல்லும் அதே திசையில் நேர்எதிரே வண்டி ஓட்டிவரும் இரண்டு சக்கரம்,ஆட்டோ,டிராக்டர்,லாரி, பேருந்துகள் என ஓட்டி வந்து மேலுலகத்திற்கு செல்லும் குறுக்குவழியை காட்டுவார்கள்.ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வண்டி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வேகத்தில் ஓட்டுவது நல்லது.

இந்த வழிகளின் சாலை ஓரங்கள்,இன்னும் கான்கிரீட் காடுகளாக மாறவில்லை.ஆகவே பெரும்பாலும் பச்சைபசேலென வயல்வெளிகளும்,மலைமுகடுகளும் பயணத்தை இனிமையாக்குகிறது.இந்தநிலை வேலூர் அடையும் வரைதான்.வேலூரிலிருந்து சென்னைவரை வெயிலூரின் கடுமையான வெப்பத்தால் காய்ந்துப்போய் உள்ளது. இன்னொரு பெரிய குறுக்கீடு ஆடு மாடுகளால் ஏற்படுகிறது.4 வழிப்பாதைகளின் நடுவில் சிறுமரங்களும்,புல்வெளிகளும் வளர்க்கிறார்கள்.அதற்கு நல்ல பராமரிப்பும்,தண்ணீரும் சாலை பணியாளர்களால் கொடுக்கப்படுகிறது. அந்தப்பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் மக்கள்,காலையிலேயெ அனைத்து கால்நடைகளுக்கும் சுதந்திரம் வழங்கி சாலையில் விட்டுவிடுகிறார்கள்,அவைகளும் மிகவும் சுதந்திரமாக தேசிய நெடுஞ்சாலையில் நடைப்போட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கலைத்தருகிறது.

வேலூர்,வாலாஜாவைத்தாண்டி கார் சென்றுக் கொண்டிருந்தது.ஏற்க்குறைய 70-80கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.ஒரு 50 அடிதூரத்தில் இடதுபுறமிருந்து ஒரு பசு திடீரென குறுக்கே நடக்க ஆரம்பித்தது. கடைசி சில நொடிகளில் அதைக்கவனித்த நான் வலதுப்புறம் திரும்பலாம் என்றால்,காருக்கு இணையாக ஒரு லாரி வந்துக்கொண்டிருந்தது,வேகத்தையும் முழுஅளவில் குறைக்க முடியவில்லை.பசுவும் கால்வாசி தூரத்தை நான் செல்லும் பாதையில் கடந்துக்கொண்டிருந்தது. வேறுவழியேயில்லை.காரை வலதுப்புறத்தில் லாரியை உரசாத மில்லிமீட்டர் தூரத்திற்கு செலுத்தி, வேகமும் 40கிமிக்கு குறைந்து ஒரு மைக்ரோ மீட்டர் இடைவெளியில் காரின் முன்பகுதி பசுவைக்கடந்திருந்தது.இடதுப்புற முன்பகுதி பசுவைக்கடக்கும் நேரம் 'டமார்'ரென ஒரு சத்தம்,கார் பசுவைகடந்துவிட்டது. ரிவர்வியூ மிர்ரர் வழியாக பார்த்ததில்,பசு எவ்வித பிரச்சனையுமின்றி மறுபக்கத்தை நோக்கி அன்னநடைப் போட்டுக்கொண்டிந்தது. இடதுபுற முன் இருக்கையில் 4 வயது குழந்தையுடன் அமர்ந்திருந்த நண்பனுக்கு எதுவும் ஆகவில்லை.ஏற்றிவிடப்பட்டிருந்த கண்ணாடியும் ஒன்றும் ஆகவில்லை. அப்போது சத்தம் எங்கிருந்து வந்தது? ஒருவேளை இடதுப்புறக்கதவின் கீழ்ப்பகுதி முழுவதும் அடிப்பட்டிருக்குமோ...அப்படியென்றால் குறைந்தப்பட்சம் ஒரு பத்தாயிரம் ரூபாய் மொய் எழுதவேண்டியிருக்குமோ என்ற கேள்வியுடன்,ஒரு கிமீ தூரம் கடந்துக் காரை ஓரம் கட்டினோம்.

காரிலிருந்து இறங்கி என்ன ஆனது என ஆராய்ந்தால்,இடதுப்புறக்கதவில் ஒரு சிறுக்கீறல் கூட இல்லை.பிறகுத்தான் கவனித்தோம்,இடதுப்புறம் உள்ள 'ரிவர்வியூ' மிர்ரர் மட்டும் முழுவதுமாக காணாமல் போயிருந்தது.அதுவும் கண்ணாடி மட்டும்தான்.கண்ணாடி ஹோல்டர் ஒன்றும் ஆகவில்லை.ஒரு 500 ரூபாய் செலவு அவ்வளவுதான்.அதைவிட யாருக்கும் எந்தவித இடருமின்றி பெரும் விபத்திலிருந்து தப்பித்த நிம்மதி. பசுக்கடக்கும்போது,அதன் முன்புற வாய்ப்பகுதி மட்டும் கண்ணாடியில் பட்டு,கண்ணாடி தெரித்ததால் அந்த பெரும் சத்தம்.பசுவின் வாய்ப்பகுதி அதனால் அடிப்பட்டதா என தெரியவில்லை.

அதற்குப்பிறகு மிகுந்தகவனத்துடன் ஓட்டி, ஸ்ரீபெரும்புதூருக்கு சில கிமி முன்னால் இன்னொரு உணவகத்தில் ஓய்வுக்காக நிறுத்தினோம்.அங்கிருந்து சென்னைவரை மறுபடியும் லாரிகளும்,நகரப்பேருந்துகளும்,ஆட்டோக்களுமென நெரிசல் அதிகமாகிவிடுகிறது. போதாதகுறைக்கு சுட்டெரிக்கும் மதிய வெயில்.ஒருவாறாக ஐந்தரை மணி நேரத்தில் சென்னை மாநகரை அடைந்தோம்.

சென்னையிலிருந்து பெங்களூர் வரும்போது எவ்வித சிறுசம்பவங்களும் இன்றி நல்லப்படியாக அடுத்த நாள் வீடு வந்து சேர்ந்தோம்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது,ஒரு நல்ல பயணமாகவே அமைந்தது.சிறந்தமுறையில் அமைக்கப்பட்ட சாலைகள்,பாலங்கள்,நல்ல உணவகங்கள்.ஆனால் சாலைவிதிகளை மதிக்கும் பாங்கு நமக்கு இன்னும் சரிவர தெரியவில்லை. அதற்கு சான்று வழிகளில் காணும் சிறு,பெரும் விபத்துகள்.வாகனத்தால் அடிப்பட்டு இறந்துப்பான நாய்களின் உடல்கள் அகற்றப்படாமல்,அதன்மேலே அனைத்து வாகனங்களும் சென்று,அது காய்ந்து சாலையோடு சாலையாக தேய்ந்துபோன தடங்கள். சிவப்புவிளக்கு சுழல வேகமாக செல்லும் ஆம்புலன்ஸ்கள் என பல நிகழ்வுகள்.

பெங்களூர்-சென்னை வழியில் 5 டோல்கேட்கள் உள்ளன.ஒவ்வொரு இடத்திலும் 25ரூ முதல் 45ரூ வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.ஏற்க்குறைய ரூ 350-400 வரை போய்வர செலவழிக்க வேண்டியுள்ளது.ஆனால் கொடுக்கும் காசுக்கு நல்லமுறையில் சாலைகளை பராமரிக்கிறார்கள்.அந்தவிதத்தில் மகிழ்ச்சியே !

July 10, 2006

குளிச்சா குற்றாலம்....

கடந்த மாத இறுதியில் கல்லூரி நண்பனின் திருமணத்தில் கலந்துக்கொள்வதற்காக பெங்களுரிலிருந்து நண்பர்களுடன் சங்கரன்கோவிலுக்கு 'தூத்துக்குடி எக்ஸ்பிரஸில்' புறப்பட்டோம். இரவு 915க்கு மைசூரிலிருந்து வந்து சேரவேண்டிய வண்டி,1030க்குதான் வந்து பிறகு கிளம்பியது.பரிசோதகர் வந்துபோனபின்பு உறங்கலாமென 1 மணி நேரம் காத்திருந்தோம்.யாரும் வருவதாக தெரியவில்லை. காலையில் வண்டி 'கொடை ரோடை' நெருங்கும்போது விழித்தெழுந்தோம்.வண்டி மதுரையில் நுழையும்போது 'ப்ளாட்பாரத்தில்' மீனாட்சி பவன் சிற்றுண்டிசாலை' கண்ணில் பட்டது.
அங்கு 'இட்லி,பொங்கல்,பூரி,காபி' என எல்லாவற்றையும் 'பார்சலில்' வாங்கிக்கொண்டோம்.உணவு வகைகள் அனைத்தும் அருமையாக இருந்தது. 'காபி'யின் சுவை, பேஷ்...,பெஷ்.....ரொம்ம்ம்ம்ப நன்னாயிருக்கு' என எங்கள் அனைவரையும் சொல்லவைத்தது.

ஒருவழியாக காலை 1030 வாக்கில் கோவில்பட்டியை அடைந்தோம்.அங்கிருந்து சங்கரன்கோவிலுக்கு 1 மணி நெர பேருந்துப்பயணம். வழி மிகவும் மோசமாக இருந்தது.சுற்றுப்பிரதேசமும் வறண்டு களையிழந்து காணப்பட்டது.
மதிய உணவை நண்பனின் வீட்டில் முடித்துக்கொண்டு ஒரு 'சுமோ'வில் 'குற்றாலம்' நோக்கிப்புறப்பட்டோம். 50 நிமிடப்பயணம்.
வழி முழுவதும் பெரிய பெரிய காற்றாலைகளை அமைத்து 'மின்சாரம்' தயாரிகிறார்கள்.'குற்றாலம்' நெருங்க நெருங்க காற்றின் வேகமும் அதிகமாகிறது.சுற்றுப்பிரதேசமும் மிகவும் பசுமையாக,கண்களுக்கு இதமாக இருக்கிறது. ஒரு 40 கிமி இடைவெளியில் வறண்ட மற்றும் வளமையான பிரதேசங்கள்.

முதலில் 'ஐந்தருவி'க்கு சென்றோம்.அப்போதுதான் சாரல் மழை விட்டிறுந்தது.மக்கள் கூட்டமும் குறைவாகவே இருந்தது எங்களுக்கு நிறைவாக இருந்தது. அருவில் தண்ணீரும் மிதமான வேகத்தில் கொட்டிக்கொண்டிருந்தது. 'ஐந்தருவி'யில் இரண்டு பகுதிகள் பெண்கள் பகுதியிலும், இரண்டு பகுதிகள் ஆண்கள் பக்கமும் விழுந்துக்கொண்டிருந்தது. இன்னோரு பகுதி அன்று தண்ணீர் குறைவாக இருந்ததால் காணவில்லை.

அங்கிருந்து 'மெயின்' அருவிக்கு சென்றோம்.இங்கு தண்ணீர் மிகவும் அதிகமாக இருந்தது.நாங்கள் சென்ற நெரத்தில் 'சாரல்' மழையும் பொழிய ஆரம்பித்தது. ஒரே சமயத்தில் மலையிலிருந்து விழும் மலைஅருவியிலும்,வானத்திலிருந்து விழும் மழைஅருவியிலும் ஆனந்தமாக குளித்தோம்.அருவியின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. உடம்புக்கு நல்ல 'மசாஜ்'ஜாக சரியான அடி விழுந்தது. 'குளிச்சா குற்றாலம்....' என எழுதியவர் அந்த அனுபவத்தை உணர்ந்துதான் எழுதியிருக்கவேண்டும்.ஒரு நிஜமான 'குளியல்' அனுபவம் வேண்டுமெனில் ஒரு நடை குற்றாலம் சென்று குளியல் போட்டுவிட்டு வாருங்கள்.

October 5, 2005

எங்கே செல்லும் இந்த பாதை.....



மேலே உள்ள படம்,Grand Canyon செல்லும்போது எடுத்தது.மிகப்பெரிய பள்ளத்தாக்குதான் இந்த Grand Canyon.இது அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ளது.இந்த பள்ளத்தாக்கின் சிறப்பு,வெயில் ஏறஏற பாறைகளின் நிறம் மாறிக்கொண்டேயிருக்கும்.கீழே சில படங்களை இணைத்துள்ளேன்.'ஆறு வித்தியாசங்கள்' தெரிகிறதா என பார்த்துச் சொல்லுங்கள்.
பலருக்கு இந்த இடம் பரிச்சயமானதாக தோன்றும்.சங்கரின் 'ஜீன்ஸ்',ஹைர..ஹைர,ஐரோப்பா பாடலில்,ஐஸ்'சும்,ப்ரசாந்தும் இங்குதான் ஆடியிருப்பார்கள்.



June 25, 2005

பயணங்கள் முடிவதில்லை...

அண்மையில் அலுவல் சம்பந்தமாக, வாஷிங்டனிலிருந்து நீயூஜெர்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. விமானம் புறப்படும் நேரம் மாலை 5 மணி. 3.30'க்கே விமானநிலையம் சென்று 'போர்டிங் கார்ட்' வாங்கியப்பிறகுதான் விமானம் 1 மணி நேரம் தாமதாமாகும் என அறிவிக்கப்பட்டது. இது என்னடா சோதனை என நினைத்துக்கொண்டு 'starbuck's' ல் ஒரு 'கேப்பச்சினோ'வை வாங்கிக்கொண்டு விமானநிலையத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் 'போர்டிங் கேட்' வந்தால், விமானம் மேலும் 1 மணி நெரம் தாமதமாகும் என அறிவித்தார்கள்.ஏதோ இயந்திரக்கோளாராம். ம்ம்ம்.... நான் கிளம்பிய நேரத்தில்தான் ஏதோ கோளாறு என நொந்துக்கோண்டு,வேண்டுதல் போல்,மீண்டும் ஒருமுறை விமானநிலையத்தை சுற்றிவிட்டு கடைசியாக 7 மணிக்கு விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.

எல்லா பயணிகளும் அமர்ந்தப்பிறகு,கதவை மூடிவிட்டு பணிப்பெண் பாதுகாப்பு நடைமுறைகளை விளக்க ஆரம்பித்த நேரத்தில், விமானியிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது.முக்கியமான பயணிகள் ஏற வேண்டியிருப்பதால் கதவு மீண்டும் திறக்கும் என அறிவிக்கப்பட்டது.
அது மிகச்சிறிய விமானம்.மொத்த இருக்கைகள் 50,ஏற்கனவே அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது. புதிதாக வருபவர்கள் எங்கு அமர்வார்கள் என நினைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு விமான சிப்பந்தி வந்து ஏற்கனவே அமர்ந்திருந்த இருப்பயணிகளை விமானத்தை விட்டு இறங்கச்சொன்னார்கள்.
ஆனால் இருவரும் இறங்க மறுத்துவிட்டார்கள்.அந்த இருவரும் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து வந்தவர்கள் ஆகவே அவர்கள் கண்டிப்பாக இறங்க வேண்டும் என விமான சிப்பந்தி சொல்லிவிட்டார்.அவர்கள் மீண்டும் மறுக்கவே 'செக்யூரிடி'யை விமானத்தினுள் அழைதது அவ்விருப் பயணிகளையும் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார்கள். நாங்கள் அனைவரும் நடந்தவைகளைக்கண்டு அதிர்ச்சி அடைந்திருந்தோம். பயணிகளிடம் இவ்வளவு கடினமாக நடந்துக்கொள்வார்களென யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.அதற்குப்பிறகு வேறு இருவர் ஏறியப்பிறகு விமானம் கிளம்பியது.
கடைசியாக இரவு 930'க்கு, 3 1/2 மணி நேர தாமதமாக நீயூஜெர்சியை அடைந்தேன். இதில் விஷேசம் என்னவென்றால், ஒழுங்காக நான் காரில் வந்திருந்தால், 3 மணி நேரத்தில் வந்து சேர்ந்திருக்கலாம்.

April 27, 2005

இரயில் பயணங்களில்.....

சென்ற வாரம் சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. ரயில் நிலையத்தில் பயணசீட்டு வாங்க வரிசையில் நின்றுக்கொண்டிருந்தபோது எனக்கு சிறிது முன்னால் இருந்தவரை எங்கோ பார்த்ததுபோல இருந்தது. உற்றுகவனித்தபோதுதான் அது என்னுடன் பொறியியல் கல்லூரியில் படித்த ஒருவர்(ன்) என தெரிந்தது. அப்போது பார்த்ததுக்கும் இப்போதுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. மிக அடர்ந்த தாடியுடன் நெற்றி முழுவதும் பட்டையும், பெரிய பொட்டுமாக இருந்தான். அவனும் சென்னைக்கே வ்ந்ததால், ஒன்றாக பயணத்தை ஆரம்பித்தோம்.

கிட்டதட்ட ஆறு வருடங்களுக்குப்பிறகு பார்ப்பதால் பேச நிறைய விஷயங்கள் இருந்தது.பிறகு அவனைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். தற்போதைக்கு சென்னையில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் HOD'யாக இருப்பதாகவும், விரைவில் மும்பையில் ஒரு ஆசிரமம் அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தான். மேலும் அவன் சோன்னது என்னவென்றால், " ஒரு 2 வருடம் பொறு மோகன், அதற்குப்பிறகு நீ எங்கிருந்தாலும் என்னைப்பற்றிய செய்திகள் அதிகம் பார்க்கலாம்.மேலும் பல ஆசிரமங்ளை பல இடங்களில் அமைப்பேன். பல நாடுகளுக்கும் விஜயம் செய்வேன்.அப்போது நீ அமெரிக்காவிலேயே இருந்தால் நீ அங்கேயே என்னை சந்திக்கலாம்" என்றான். நான் ஆடிப்போய்விட்டேன். ம்ம்ம்ம்......
நானெல்லாம் ஒரு கம்பெனியில் சேர்ந்து 4 ஆண்டுகள் குப்பைக்கொட்டிய பிறகுதான், அமெரிக்கா எந்த திசையில் இருக்கிறது என தெரிந்தது.
மேலும் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு வார இதழில் தொடர் எழுதிக்கொண்டிருந்த ஒரு இளம் சாமியாரைப்பற்றி பேச்சு திரும்பியது. நான் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்புவதற்கு சில தினங்களுக்கு முன்னாள் நானிருந்த ஊரில்( டல்லாஸ்) கோயிலுக்கு சென்றிருந்தபோது,மேற்சொன்ன சாமியாரின் பிரசங்கத்தை பார்த்தேன். அப்போது அந்த சாமியாரை வேறு எங்கோ பார்த்த நியாபகம் இருந்தது ஆனால் எஙகேயென்று நினைவில்லை. இதை இந்த சாமியாரிடம்(?????) சொன்னேன். அப்போதுதான் தெரிந்தது, நாங்கள் பாலிடெக்னிக் கடைசி வருடம் படிக்கும்போது(அங்கும் நானும்,ரயிலில் சந்தித்த சாமியாரும் ஒரே க்ரூப்பில் இருந்தோம்) அந்த மற்றொரு சாமியார் முதல்வருட மாணவனாம்.
படிப்பிற்க்குப்பிறகு வேலை செய்யப்பிடிக்காமல், ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து சில வித்தைகளைக் கற்றுக்கொண்டு இப்படி சாமியாராகி பல ஊர்களும்,நாடுகளும் சுற்றிக்கொண்டிருப்பதாகவும்,பல கோடிகள் சொத்து சேர்த்துவிட்டதாகவும் இந்த சாமியார் தெரிவித்தார்.
மேலும் இந்த சாமியார் என்னிடம் சொன்னது " கொஞ்ச நாள் போறு மகனே ! (அடியேனைதான் ;))) நான் அந்த சாமியாரைவிட மிக பெரிய அளவில் பேசப்படுவேன். ஒரு பொறியியல் கல்லூரி ஆரம்பிப்பேன். மிகப்பெரிய ஆசிரமம் ஆரம்பிப்பேன். " என ஏதேதோ சொல்லியப்படி வந்தான்.
கடைசியில் ஒரு வழியாக சென்னையை அடைந்தோம். பிரியும் நேரத்தில் அவன் சொன்னான். " அடுத்தமுறை சந்திக்கும்போது, நான் எந்த ஒரு நிலையிலிருந்தாலும், எவ்வளவுபேர் என்னை சந்திக்க காத்திருந்தாலும், நீ மட்டும் எந்த முன்னறிவிப்புமின்றி, எப்போது வெண்டுமானாலும் சந்திக்கலாம்" எனக் கூறினான்.
அதற்க்கு நான் சொன்னேன், அதைப்பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே. நானே நீ எந்த ஊரிலிருந்தாலும், நேரில் வந்து, சிறைக்கண்காணிப்பாளரின் முறையான அனுமதியுடன் வந்து சந்திக்கிறேன்' என சொல்லிவிட்டு, விட்டேன் ஜூட் ....

April 15, 2005

காதல் கோட்டை

முதல்நாள் தலைநகர்வலத்திற்கு பிறகு,ஞாயிறன்று ஆக்ரா செல்ல ட்ராவல்சில் டிக்கட் வாங்கியிருந்தேன். ஏ.சி பஸ்ஸில் சொகுசு பயணம்.
பெரும்பாலோர் தென்னிந்தியாவிலிருந்து என்னைபோல் சுற்றிபார்க்க வந்திருந்தவர்கள்.நான்கு மணி நேர பயணம்.
முதலில் ஆக்ரா கோட்டை.மிக பிரமாண்டமான கோட்டை.ட்ராவல்சில் ஒரு கைடை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அந்த கோட்டையின் வரலாற்றை சிறப்பாக எடுத்துரைத்தார்.
ஒளரங்கசீப்,அவர் தந்தையான ஷாஜகானை சிறை வைத்திருந்த மேல்மாடத்திலிருந்து தூரத்தில்(குறைந்தது 2 கி.மீ) தாஜ்மஹால் ஒரு காதல் காவியத்தின் சின்னமாக காட்சியளிக்கிறது. நீங்கள் காதல் அனுபவமுள்ளவரெனில்,கண்டிப்பாக,அந்த இடத்தில் நிற்க்கும்போது ஒரு 'ஆட்டோக்ராப்' புத்தம் புதிய காப்பியாக ஓடும்(எனக்கு எதுவும் ஓடலீங்கண்ணா.....;)))).).
அதற்கடுத்து ஒரு தர்பார் உள்ளது. அந்த காலத்தில் அதுதான் மிகப் பெரிய தர்பார் மண்டபமாம். மண்டபத்தின் எந்த பகுதியிலிருந்தும் மன்னரை பார்க்ககூடிய வகையில் தூண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.மிக நெர்த்தியான கட்டடக்கலை.அந்த தர்பாரை சுற்றி நான்கு மாடங்கள் உள்ளது.அதில் ராணிகள் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்க்கலாம்.ஒரு அரசனுக்கு ஒரு ராணிதானே,அப்போ எதுக்கு நான்கு மாடங்கள் ? அதற்கு எங்கள் கைடு ஒரு அருமையான விளக்கம் சொன்னார். சட்டப்படி முஸ்லிம் மன்னர்கள் நான்கு ராணிகளை மணந்துகொள்ளலாமாம், ஆளுக்கு ஒரு மாடத்திலிருந்து சபையை கவணிக்கலாம்.மேலும்,சட்டப்படிதான் நான்கு,தேவையெனில் எததனை பெண்களையாவது அரண்மனையில் வைத்திருக்கலாம்.அதற்க்கென்று ஒரு பகுதியே இருக்கிறது..ம்..ம்ம்.....கொடுத்து வைத்தவர்கள். மெலும் ராணிகள் நீராட ஒரு கண்ணாடி அறை இருக்கிறதாம்.அந்த அறை முழுவதும் சிறுசிறு ஆயிரக்கணக்கான கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கிறதாம்.குளிப்பவரின் ஆயிரக்கணக்கான உருவங்கள் அறை முழுவதும் வியாப்பித்திருக்குமாம்..ம்ம்ம்ம்..என்னே ஒரு ரசனை........அந்த அறை இப்போது பார்வையாளர்கள் செல்ல அனுமதி இல்லை.. எந்த ராணிக்கு கொடுத்துவைத்திருக்கிறதோ..மீண்டும் அந்த அறையை உபயோகப்படுத்த......

அடுத்த பயணம், காதல் கல்லறையை நோக்கி....மனம் நிறைந்த எதிர்பார்ப்புகளுடன்,உலக அதிசயத்தை நோக்கி பயணம். வெயில் சுட்டெரிக்கிறது...கூட்டம் அலை மோதுகிறது... நுழைவுக்கட்டணம் செலுத்திவிட்டு,கடும் சோதனைகளை முடித்துக்கோண்டு உள்ளே நுழைந்தோம். எட்டிவிடும் தூரத்தில் ஒரு காதல் காவிய சின்னம்.நிதானமாக நடை பயின்று கண்கள் வழியாக அந்த அழகுப்பெட்டகத்தை பருகிக்கொண்டே அருகில் சென்றென்.
உண்மையில் தாஜ்மஹால் ஒரு உலக அதிசயம்தான்.ஒவ்வொரு அடியும்,கலைநயத்துடனும், சிறந்த வேலைபாடுகளுடனும் காதலைக் கலந்து வடிக்கப்பட்டிருக்கிறது. எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் ஒரு சிறந்த காட்சியை கண்ணுக்கு விருந்தளிக்கிறது.ஒரு மணி நெரத்திற்கும் அதிகமாக அங்கு சுற்றிவிட்டு, அனைத்து காட்சிகளையும் கேமராவில் சிறைபிடித்து,பிரிய மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.
அடுத்த பயணம், குழந்தை கண்ணன் பிறந்த மதுராவை நோக்கி. ஆக்ராவிலிருந்து 45 நிமிடப்பயணம். மதுராவில் ஒரு குறுகலான பாதை வழியே பயண்ம் சென்று கோயிலிருக்கும் இடத்தை அடைந்தோம். இங்கும் மிக கடுமையான பாதுகாப்பு.எந்திர துப்பாக்கிகளுடன் பார்க்கும் இடங்களில் எல்லாம் போலிஸ் தலைகள்.கோயிலை அடைந்த பிறகுதான் அதற்க்கான காரணம் புரிகிறது.கோயிலை மிக ஒட்டியே ஒரு பிரமாண்டமான மசூதி தெரிகிறது. ஒளரங்கசீப் காலத்தில் மதுரா சிறையை இடித்துவிட்டு எழுப்பப்பட்ட மசூதியென வரலாறு சொல்கிறார்கள்.அடுத்த 'அயோத்'தீ'க்கான சாத்தியகூறுகள் கண்கூடாகத்தெரிகிறது.
கோயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணன் பிறந்த சிறைகூடம் மக்கள் கூட்டத்தால்
நிரம்பி வழிகிறது.

மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கீழே இருக்கிறது ஆக்ராவிலும், மதுராவிலும். ஏழ்மையும்,சுகாதாரமில்லாத சுற்றுப்புறமும், உலக அதிசயம் இருக்கும் இடத்தில், அநியாயமாக இருக்கிறது.
ம்...ம்....இதுதான் இந்தியா.......

April 14, 2005

தலைநகர்வலம்

கடந்த திங்களன்று விசாநீட்டிற்புக்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது. சனியன்றே சென்றுவிட்டேன்.அன்று முழுவதும் குதுப்பினார், தாமரை கோவில் , செங்கோட்டை, இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகை, பிர்லா மந்திர் ஆகிய இடங்களை சுற்றினேன்.வெயில் குறைவாகவும், ட்ராவல்ஸ் வழியாக கார் ஏற்பாடும் ஆங்கிலம் தெரிந்த ஓட்டுனர் இருந்ததாலும் பயணம் நன்றாகயிருந்தது.
முதலில் குதுப்பினார்.நான் உயரம் மிக அதிகமாகயிருக்கும் என எதிர்பார்ப்புடன் சென்றேன்.ஆனால் ஏற்கனவே மிக உயரமான கட்டிடங்களை இந்தியாவிலும்,அமெரிக்கா,ஜப்பானிலும் பார்த்திருந்ததால் குதுப்பினார் ஏமாற்றமாக இருந்தது. சில போட்டோக்கள் எடுத்துகோண்டேன்.அப்போது அங்கு ஒரு குடும்பம் வந்தது.நான் லேட்டஸ்ட் மாடல் டிஜிட்டல் கேமரா வைத்து இருக்கிறேன்.அதை அந்த குடும்ப தலைவர் போலிருந்தவரிடம் கொடுத்து என்னை குதுப்பினார் முன் இருப்பது போல ஒரு க்ளிக்'க சொன்னேன்.எடுத்து முடித்ததும்,அந்த குடும்பம் முழுவதும் கேமராவை ஆராயத்தொடங்கியது.ஏதேதோ இந்தியில் பேசிக்கோண்டார்கள்.நான் 'பே'வேன முழித்துக்கொண்டிருந்தேன்.(திராவிட ஆட்சிகளின் புண்ணியத்தில் நமக்கு இந்தி நஹி மாலும். ;))
கடைசியில் ஒருவர் என்னிடம் வந்து கேமரா விலையென்ன என்று கேட்டார். இருபதாயிரம் என்றேன். மறுபடியும் ஒரு 'மந்திராலோசனை செய்துவிட்டு, 'எங்களுக்கு எவ்வளவுக்கு தருவீர்கள்' என கேட்டார்.(எல்லாம் இந்தியில்தான்). நான் அரைகுறை இந்தி,ஆங்கிலத்தில் 'இது விற்பனைக்கு நஹி..நஹி...' என சொல்லிவிட்டு கேமராவை வாங்கிகொண்டு வந்துவிட்டேன். நான் அங்கிருந்தவரை, என் பின்னாலேயே வந்து நான் கேமராவில் போட்டோ எடுப்பதை பார்த்துகொண்டிருந்தார்கள்.
அங்கிருந்து கிளம்பி தாமரை கோயில், செங்கோட்டையை பார்த்து விட்டு,நேரு,காந்தி சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகைக்கு சென்றேன். இதுவரை தொலைகாட்சியில் பார்த்திருந்த பகுதிகள், நேரில் பார்க்க அருமையாகயிருந்தது.பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி மாளிகை அருகே செல்ல முடியவில்லை(ம்ம்ம்..ம்ம்..நம்ம ஊர்காரர்தான் உள்ளே இருக்கிறார்).காரிலிருந்தே பார்க்கலாம்.அதே நிலைதான் பார்லிமெண்ட் வளாகத்திற்கும்.
மாலையில் பிர்லா மந்திர் கோயிலுக்கு சென்றிருந்தேன்.அங்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம்.மொபைல் போன் கூட எடுத்து செல்ல கூடாது. அதற்கெனயிருக்கும் கவுண்டரில் கொடுத்துவிட்டுதான் செல்ல வெண்டும்.
கோயிலை மிகவும் சிறப்பாகவும்,நெர்த்தியாகவும் கட்டியிருக்கிறார்கள்.அந்த இடம் மனதிற்கு இதமாகவும்,அமைதியாகவும் இருந்தது.

ஒரு நாள் முழுவதும் சுற்றியதில், புதுடெல்லிக்கும்,பழைய டெல்லிக்கும் மிக பெரிய வித்தியாசங்கள் தெரிந்தது. புதுடெல்லியில், அகலமான சாலைகளும்,நெர்த்தியான பாலங்களும், சிக்னல்களும்,வழி முழுவதும் பசுமையாக இருக்கிறது.முக்கியமாக இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகை,பார்லிமெண்ட் வளாகம், மந்திரிகள் குடியிருப்பு, அலுவகங்கள்.
புதுடெல்லிக்கும்,பழைய டெல்லிக்கும் நடுவில் ஒரு பாலம் இருக்கிறது.அதை தாண்டிய உடன் ஏதோ வேரொரு உலகத்தில் நுழைந்தது போலிருக்கிறது.
கடினமான போக்குவரத்து,குறுகிய சாலைகள்,பழங்காலத்து கட்டிடங்கள்,குறுக்கும்,நெடுக்கும் ஓடும் மக்கள்....அழுக்கான ந(ர)க(ர)மாக காட்சியளிக்கிறது.
ம்ம்ம்.....இதுதான் இந்தியா.......

April 8, 2005

மந்த்ராலயம்

கடந்த வாரம் வியாழனன்று மந்த்ராலயம் போனால் என்ன என்று தோன்றியது.உடனே KSRTC booking center சென்று அன்று இரவு பஸ்சுக்கு டிக்கட் புக் பண்ணிவிட்டு வந்துவிட்டேன். office'ல் மிச்சம் மீதி இருந்த வேலைகளை முடித்துவிட்டு விடு ஜூட். பயணத்திற்கு தேவையானவைகளை எடுத்துகொண்டு மெஜஸ்டிக் வந்து 9:30 பஸ் பிடித்தேன். வியாழன் என்பதால் கூட்டம் கம்மியாகயிருந்தது.கண்டக்டர் டிக்கெட் மாடி'பிட்டு ஹொஹி'னபிறகு யாருடைய தொந்தரவுமின்றி MP3 ப்ளேயரை காதில்மாட்டிகொண்டு பாலகுமாரன் படிக்க ஆரம்மித்துவிட்டேன்.பேங்களூர்-மந்த்ராலயம் 9 மணி நேரப்பயணம்.இடையே இரண்டு முறை ஏதாவது பொட்டல் காட்டில் டீ,காபி காட்டுவார்கள்.பயணம் ஒன்றும் அந்த அளவிற்கு சிறப்பாக இருக்காது.இப்போதுதான் சாலைகளை அகலபடுத்திகொண்டு இருக்கிறார்கள்.
அரைகுறையாக தூங்கி காலை 630'க்கு வெற்றிகரமாக மந்த்ராலயம் அடைந்தேன்.பஸ் ராய்ச்சூர்வரை செல்லும். மந்த்ராலயத்தில் என்னை தவிர வேறு யாரும் இறங்கவில்லை.என்னை வரவேற்க்க ஒரு பெரிய கூட்டம் காத்திருந்தது.( எல்லாம் லாட்ஜ் ப்ரொக்கர்கள்) ஒரு வழியாக அவர்களிடம் தப்பித்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றேன். கூட்டம் மிக குறைவாகவே இருந்தது.நல்ல தரிசனம்.விரும்பினால் அங்கேயே அமர்ந்து தியானம் செய்யலாம்.ஆனால் எல்லா தினங்களிலும் அனுமதிப்பதில்லை.கூட்டம் மிக குறைவாக இருக்கும் தினங்களில் யாரும் கண்டுக்கொள்வதில்லை.1 மணி நேரம் உள்ளே இருந்தேன். அதற்குபிறகு வழக்கமாக அங்கிருந்து 15 KM தூரத்தில் ஒரு கோயிலுக்கு அனைவரும் செல்வார்கள்.எனக்கு இது 4'வது பயணம்.அன்று வெயிலும் மிக அதிகம்.அறைக்கு திரும்பிவிட்டேன்.மாலை மறுபடியும் தரிசித்துவிட்டு சில பொருட்கள் (மற்றவர்களுக்கு கொடுக்க) வாங்கிகொண்டு,அறையை காலி செய்துவிட்டு 8 PM பஸ் பிடித்தேன்.மொத்தத்தில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.