Search This Blog

June 25, 2005

பயணங்கள் முடிவதில்லை...

அண்மையில் அலுவல் சம்பந்தமாக, வாஷிங்டனிலிருந்து நீயூஜெர்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. விமானம் புறப்படும் நேரம் மாலை 5 மணி. 3.30'க்கே விமானநிலையம் சென்று 'போர்டிங் கார்ட்' வாங்கியப்பிறகுதான் விமானம் 1 மணி நேரம் தாமதாமாகும் என அறிவிக்கப்பட்டது. இது என்னடா சோதனை என நினைத்துக்கொண்டு 'starbuck's' ல் ஒரு 'கேப்பச்சினோ'வை வாங்கிக்கொண்டு விமானநிலையத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் 'போர்டிங் கேட்' வந்தால், விமானம் மேலும் 1 மணி நெரம் தாமதமாகும் என அறிவித்தார்கள்.ஏதோ இயந்திரக்கோளாராம். ம்ம்ம்.... நான் கிளம்பிய நேரத்தில்தான் ஏதோ கோளாறு என நொந்துக்கோண்டு,வேண்டுதல் போல்,மீண்டும் ஒருமுறை விமானநிலையத்தை சுற்றிவிட்டு கடைசியாக 7 மணிக்கு விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.

எல்லா பயணிகளும் அமர்ந்தப்பிறகு,கதவை மூடிவிட்டு பணிப்பெண் பாதுகாப்பு நடைமுறைகளை விளக்க ஆரம்பித்த நேரத்தில், விமானியிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது.முக்கியமான பயணிகள் ஏற வேண்டியிருப்பதால் கதவு மீண்டும் திறக்கும் என அறிவிக்கப்பட்டது.
அது மிகச்சிறிய விமானம்.மொத்த இருக்கைகள் 50,ஏற்கனவே அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது. புதிதாக வருபவர்கள் எங்கு அமர்வார்கள் என நினைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு விமான சிப்பந்தி வந்து ஏற்கனவே அமர்ந்திருந்த இருப்பயணிகளை விமானத்தை விட்டு இறங்கச்சொன்னார்கள்.
ஆனால் இருவரும் இறங்க மறுத்துவிட்டார்கள்.அந்த இருவரும் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து வந்தவர்கள் ஆகவே அவர்கள் கண்டிப்பாக இறங்க வேண்டும் என விமான சிப்பந்தி சொல்லிவிட்டார்.அவர்கள் மீண்டும் மறுக்கவே 'செக்யூரிடி'யை விமானத்தினுள் அழைதது அவ்விருப் பயணிகளையும் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார்கள். நாங்கள் அனைவரும் நடந்தவைகளைக்கண்டு அதிர்ச்சி அடைந்திருந்தோம். பயணிகளிடம் இவ்வளவு கடினமாக நடந்துக்கொள்வார்களென யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.அதற்குப்பிறகு வேறு இருவர் ஏறியப்பிறகு விமானம் கிளம்பியது.
கடைசியாக இரவு 930'க்கு, 3 1/2 மணி நேர தாமதமாக நீயூஜெர்சியை அடைந்தேன். இதில் விஷேசம் என்னவென்றால், ஒழுங்காக நான் காரில் வந்திருந்தால், 3 மணி நேரத்தில் வந்து சேர்ந்திருக்கலாம்.