Search This Blog

September 1, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 6

நான் முதல்முறையாக அமெரிக்காவுக்கு 2003'ம் ஆண்டு,ஜூலை மாதவாக்கில் எங்கள் கம்பெனி வழியாக கஸ்டமர் ஆபிசில் வேலைச் செய்யச் சென்று,கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள், மூன்று வெவ்வேறு நகரங்களில் பணிப்புரிந்தேன்.பிறகு இந்தியா திரும்பியப்பின்,கடந்த ஜனவரி 2008 வரை ஆப்ஷோர் டேமேஜராக 2 வருடங்கள் பணிப்புரிந்தேன்.இந்த 5 ஆண்டுகளாக வேலைச்செய்த 'கஸ்டமர்' கம்பெனிகளில், என்னுடன் பணியாற்றிய,கஸ்டமர் மக்கள் பெரும்பாலோர் இந்தியர்கள்.அதிலும் தெலுங்கு மக்கள் அதிகம்.

IT துறையில் பெரும்பாலும் ஜப்பானியர்களுடன் வேலைச் செய்வது மிகவும் கடினம் என்பது பெரும்பான்மையானக் கருத்து.அது 100% உண்மையும்கூட.நான் கிட்டத்தட்ட 3 வருடங்கள்(2000-2003) ஜப்பான் கம்பெனியின் ப்ராஜக்ட்டில் வேலைச் செய்துள்ளேன். அவர்கள் திருப்திபடுத்தும் விதத்தில் வேலைச்செய்வது(customer satisfaction),அதுவும் இந்தியச் சூழ்நிலையில் மிகமிகக்கடினம். அதற்கு சில முக்கியக் காரணங்கள்.

1. மொழிப்பிரச்சனை - ஜப்பானியமொழி கொஞ்சம் கடினமானது நாம் கற்றுக்கொள்ள.அதேப் போல் ஜப்பானியர்கள் அவர்கள் கல்வியை ஜப்பானியமொழியிலே கற்பதால்,ஆங்கிலத்தைச் சரளமாகக் கையாளத் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவு. நான் வேலைவிஷயமாக ஒரு மாதம் டோக்கியோவில்(2001) தங்கியிருந்தேன். உணவு விஷயத்தில் அங்குள்ள உணவங்களில் உள்ளவர்களிடம் 'ஆர்டர்' செய்வதென்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.என்னுடன் வந்த மற்றோரு நண்பர் சைவம். நாங்கள் Mcdonald'க்கு சாப்பிடச் சென்றால்,நான் வழக்கமாக சிக்கன் பர்கரை ஆர்டர் செய்துவிடுவேன்.ஆனால் நண்பரோ வெஜ்பர்கர் சாப்பிடுபவர்.வெஜ்பர்கர் மெனுக்கார்டில் இருக்காது. ஆகவே அவர் 'பில் போடுபவரிடம்' மெனுக்கார்டை எடுத்து 'சிக்கன் பர்கரை' காண்பித்து, பர்கர் 'without chicken' வேண்டும் என்பார்..'பில்'லரோ' ராஜேந்திரக்குமார் ஸ்டைலில் 'ங்கே..' என முழிப்பார்.பிறகு மீண்டும் அந்தப் படத்தைக் காண்பித்து,'burger,no chicken...no meat...only vegitable' எனப் பலமுறைச் சொல்வார்,சிலபல நிமிட தலைச் சொறிதலுக்குப் பிறகு 'ஓ...வெஜ் பர்கர்???' எனப் புரிந்துக்கொண்டு, பில்லைப் போடுவார்.அதற்குப்பிறகு உள்ளே பர்கர் தயாரிப்பவர்க்கும் அவர் சொல்லிவிடுவார்.நண்பருக்கோ பாதிபசி அவர் 'சைகை மொழியை' அந்த ஜப்பானியருக்கு புரிய வைத்த மகிழ்ச்சியிலேயே போய்விட்டு இருக்கும்.

ஒரு புராஜக்ட் செய்யும்போது அனைத்து 'டாக்குமெண்ட்ஸ்'ஐயும்(req,design,functional, testplan/cases/results) ஆங்கிலத்தில் தயார் செய்து, பிறகு ஜப்பானியமொழியில் மாற்றி அவர்களுக்கு அனுப்பிவைப்போம்.ஆனால் எதற்கும் ரெஸ்பான்ஸ் இருக்காது 'கிணற்றில் போட்டக்கல்' போல. இப்படிபட்ட நிலையில் ஒரு 'டெவலப்மெண்ட்' ப்ராஜக்டை முடித்து 'அக்ஸப்டன்ஸ்' டெஸ்டுக்காக அவர்களுக்கு அனுப்பினோம். அனுப்பிய முதல்வாரம் எந்த பதிலும் இல்லை.இரண்டாவது வாரமும் 'NO SOUND'...'என்னாடா இது,நாம்ப bug-ஏ இல்லாத அப்ளிகேஷனை தயாரித்துவிட்டோமா? இரண்டு வாரம் டெஸ்ட் பண்ணியும் எந்த பிழையையும் அவர்கள் அனுப்பவில்லையே என 'நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி' அதற்கடுத்த வாரத்தில் 'டீம் ட்ரிப்' போகப் பெரிய ப்ளானே தயாரித்துவிட்டோம்.அவ்வார இறுதியில்,டீம் டின்னர்'க்கு சென்று பயங்கர கூத்து வேறு.

மீண்டும் திங்கள் அன்று பணிக்கு வந்தோம். காலை 10 மணியளவில் ஒரே ஒரு இ-மெயில் ஒரு எக்ஸல் இணைப்போடு 'கஸ்டமரிடம்' இருந்து வந்து இருந்தது. ஏதோ பாராட்டுப்பத்திரம்தான் அனுப்பியிருக்கிறார்கள் என்ற 'நினைப்புடன்(ரொம்ம்ம்ம்பதான்)' அதைத் திறந்துப் பா...ர்...த்.....த.... டேமேஜர் அலறிவிட்டார்...அவர்விட்ட சவுண்டில் அடுத்த நொடியில் அனைவரும் ஒரு கான்பரன்ஸ் ரூமில் இருந்தோம். கிட்டத்தட்ட 500'க்கும் அதிகமான 'defect' அந்த எக்ஸல் சீட்டில் எங்களைப் பார்த்து ஏளனமாகப் பல்லிளித்தது. அவர்கள் செய்த முதல் டெஸ்ட் என்னவென்றால், அந்த அப்ளிகேஷனை ப்ரொவ்சர் வழியாக இணைத்து 'லாகின்' செய்துவிட்டு,பிறகு நெட்வொர்க் கேபிளை பிடுங்கிவிட்டு, மறுபடியும் 'அப்ளிக்கேஷனில்' உள்ள சில 'லிங்க்'களை 'க்ளிக்'கினால், 'கேபிள் இணைப்பு இல்லை' என எர்ரர் மெசேஜ் 'பாப்பப்'பில் வரவேண்டும்' என்று டெஸ்ட் செய்துள்ளார்கள். அவ்வளவுதான்,டேமேஜர் அடுத்தப் ப்ளைட்டை பிடித்து ஜப்பானுக்கு ஓடினார்.நாங்கள் அடுத்த இரண்டு மாதங்கள் ராப்பகலாக வேலைச் செய்து எல்லாவற்றையும் சரிசெய்தோம்.

2.இந்தியர்களுக்கும்,ஜப்பானியர்களுக்கும் வேலைச்செய்வதிலுள்ள அணுகுமுறை :
அனைவரும் அறிந்ததுப்போல,ஜப்பானியர்கள் கடும் உழைப்பாளிகள். வேலை நேரத்தில் வேலையை மட்டும்தான் பார்ப்பார்கள்.நான் அங்கிருந்த ஒரு மாதத்தில் அவர்கள் கடும் உழைப்பைப்பார்த்து அசந்துப்போனேன். காலை 930-10மணிக்கு சீட்டில் அமர்ந்தால், பகல் உணவுக்கு மணி அடிக்கும்வரை(1230pm-100pm- உண்மையிலேயே நம் ஊரில் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதுப்போல ஆபிசில் அடிக்கிறார்கள்)வேலை பார்க்கிறார்கள்.அநாவசியமாக பக்கத்து சீட்டு மக்களிடம் அரட்டை அடிப்பதோ,டீ ப்ரேக்'கென 30 நிமிடங்கள் வெளியேப்போவதோ, எதுவும் கிடையாது. மிகவும் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.அதனால்தான் அவர்களால் 'மேக்ஸிமம் அவுட்புட்' கொடுக்கமுடிகிறது.

நாமெல்லாம்,காலையில் கஷ்டப்பட்டு ஒரு 9 மணிக்கு ஆபிசில் நுழைந்து, அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு, நண்பர்களுடன் கேண்டின் சென்று,காலை உணவு முடித்து சீட்டிற்கு வர 930-945 ஆகிவிடும். அதற்குப்பிறகு இ-மெயில் செக் செய்துவிட்டு, வந்துள்ள அனைத்து மெயில்களையும் படித்துவிட்டு,கஸ்டமரிடமிருந்து வந்த முக்கியமான மெயில்களை உடனடியாக 'டீமுக்கு' அனுப்பிவிட்டு, அதையும்விட முக்கியமாக வந்துள்ள 'பார்வேர்ட்' மொக்கை மெயில்களை படித்து,சிறிதும் தாமதிக்காமல் நண்பர்குழுக்களுக்கு அனுப்பிவிட்டு, வழக்கமாக செய்திகளைப்பார்க்கும்,rediff,தினமலர், தட்ஸ்தமிழ், தமிழ்மணம், விகடன், குமுதம் என மேய்ந்துவிட்டு 'வாட்சை'ப்பார்த்தால்,1030am ஆகிவிட்டிருக்கும்.உடனடியாக ஒரு காப்பி ப்ரேக் 11 மணிவரையில்.ஏதாவது டீம் மீட்டிங் இருந்தால் 11 மணிக்குமேல் செல்வதும், இல்லையேல், இருக்கும்வேலைகளை இன்றே செய்யலாமா? இல்லை பிறகு பார்த்துக்கொள்ளலாமா என்ற யோசிப்பிலேயெ மதிய உணவுக்கு சென்றுவிட்டு நிதானமாக ஒரு 2 மணியளவில் சீட்டிற்குவந்து, உண்டமயக்கத்தில்,கடனேயென அன்றைய வேலையை ஆரம்பித்து ஒரு 7-8 மணிவாக்கில் அன்றையதினம் முடியும்(இடையில் காப்பி ப்ரேக்,கடலை ப்ரேக்,ஸ்நாக்ஸ் ப்ரேக் என ஏகப்பட்ட தடங்கல்கள் வேறு).

ஜப்பானியர்களைப்போல நாமும் வேலை நேரத்தில் வேலைகளை மட்டும் பார்த்தால் எங்கேயோ போய்விடுவோம்.நம்மிடம் உள்ள இன்னொரு கெட்டப்பழக்கம் எந்தவேலையையும் தள்ளிப்போடுவது,அதற்குப்பிறகு அடித்துப்பிடித்து கடைசி நிமிடங்கள்வரை பயங்கர டென்சனோடு வேலைப்பார்ப்பது. இன்னொரு முக்கியமான வேறுபாடு,ஜப்பானியர்கள் hard-workers ஆனால் smart-workers கிடையாது.ஆனால் இந்தியர்களோ எடுத்துக்கொண்ட வேலையை திறம்பட செய்வதில் வல்லவர்கள்(smart workers-இதற்கு ஒரு முக்கியக் காரணம்,நம்முடைய கணித அறிவு & we are good at logical thinking.ஜப்பானியர்களுக்கு machine-dependency அதிகம்.ஒரு சிறியக் கணக்குப்போடக்கூட 'கால்குலேட்டர்' தேடுவார்கள்),ஆனால் 'எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனோபாவத்துடன், வேலைகளைத் தள்ளிப் போடுவது நம்முடைய பலவீனம்.

இவ்வளவுத்தூரம் நான் மேலே எழுதியிருப்பதற்கு காரணம்,முன்பே கூறியுள்ளதுப்போல, IT துறையில்,ஜப்பானியக் கஸ்டமரோடு வேலைப்பார்ப்பது கடினம்,அவர்களைத் திருப்திபடுத்துவது மிகமிகக் கடினம் என்றக் கருத்தை வலியுறுத்தவே...

மேற்க்கூறிய கருத்துகளில் அசையா நம்பிக்கை வைத்திருந்த நான் அமெரிக்காவில் இரண்டரை ஆண்டுகளும்,இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளும் 'இந்தியன் கஸ்டமரோடு' வேலைப்பார்த்தப் பின்பு,என் முந்தையக் கருத்துகளிலிருந்து எவ்வித நிபந்தனைகளுமின்றி பின்வாங்கிவிட்டேன்.அமெரிக்காவில் உள்ள IT கம்பெனிகளிலிருந்து, இந்தியாவில் உள்ள 'IT services' கம்பெனிகளோடு இணைந்து 'customer' என்ற நிலையில் பணிப்புரியும் இந்தியர்களைவிட ஜப்பானியக் கஸ்டமர்கள் 100..இல்லை 1000 சதவிகிதம் மேலானவர்கள்.
இது உண்மை....உண்மை...உண்மை...இதற்கு ஒரு மிகவும் முக்கியமானக் காரணம்...அவர்கள் செய்யும் அரசியல்,அவர்களில் மிகச்சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கச் செய்யும் தகிடுதம்கள்.....

அதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில்....

disclaimer : கடந்த பாகத்தில் IT துறையில் கன்னடர்களின் பங்குக் குறித்து எழுதுவதாகக் கூறியிருந்தேன்.ஆனால்,கன்னடமக்களின் சதவிகிதம் IT துறையில் மிகக்குறைவு என்பதும்,நானும் அவர்களுடன் சேர்ந்து வேலைப்பார்த்தது மிகவும் குறைவு என்பதால் அதைப்பற்றி விரிவாக எழுத எதுவுமில்லை...நிறைவுப் பகுதியில் சிலக்குறிப்பிட்ட விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்கிறேன்.

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
>பாகம் 5


(தொடரும்)

20 comments:

Thiyagarajan said...

//அமெரிக்காவில் உள்ள IT கம்பெனிகளிலிருந்து, இந்தியாவில் உள்ள 'IT services' கம்பெனிகளோடு இணைந்து 'customer' என்ற நிலையில் பணிப்புரியும் இந்தியர்களைவிட ஜப்பானியக் கஸ்டமர்கள் 100..இல்லை 1000 சதவிகிதம் மேலானவர்கள்.
இது உண்மை....உண்மை...உண்மை...இதற்கு ஒரு மிகவும் முக்கியமானக் காரணம்...அவர்கள் செய்யும் அரசியல்,அவர்களில் மிகச்சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கச் செய்யும் தகிடுதம்கள்.....//
100% agree with you in this (Even with most other points that you have mentioned :-))

மங்களூர் சிவா said...

தொடர்ந்து படித்து வருகிறேன். தலைப்பு மட்டும் நெருடலாக இருக்கிறது. பதிவு அருமை.

வடுவூர் குமார் said...

தலைப்பை பார்த்து ரொம்ப நாள் ஒதுங்கியே இருந்திட்டேன்,இனிமேல் தான் பாகம் ஒன்றில் இருந்து ஆரம்பிக்கனும். :-)
நன்றாக சொல்லியிருக்கீங்க.

Anonymous said...

excellent article,very interseting,expecting more from you

venkat-Dubai

Anonymous said...

//இது உண்மை....உண்மை...உண்மை...இதற்கு ஒரு மிகவும் முக்கியமானக் காரணம்...அவர்கள் செய்யும் அரசியல்,அவர்களில் மிகச்சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கச் செய்யும் தகிடுதம்கள்.....//

waiting!

முருகானந்தம் said...

super sir.. kalakkareenga..

Siva said...

உங்கள் அளவுக்கு இல்லாவிட்டலும் , நானும் ஜப்பானியர்களை பணியின் நிமித்தம் கவனித்துள்ளேன். அவர்கள் விழிப்புணர்வு, கவனம், சலிப்பில்லாமல் வேலை செய்யும் திறன் போன்ற விசயங்களில் நம்மவர்களை விட சிறப்பாக இருக்கின்றனர் . நுட்பமான விசயங்களில் நம்மவர்கள் நல்ல தேர்ச்சி பெற்று உள்ளனர். ஆனால் அதை ஜப்பானியர்களை போல் அறிந்து பயன்படுத்துவதில்லை. இது அனைத்து இந்திய சமூகங்களுக்கும் பொருந்தும் . அதனால் தான் திறன் இருந்தும் பிறருக்கே வேலை செய்து கொடுக்கும் நிலையில் இந்தியாகள் அனைவரும் உள்ளனர். இதில் நமக்கு போலியான பெருமை வேறு . உலகிலேய சாப்ட்வேர் வல்லரசு என்று கூறிக்கொண்டு பிறருக்கு அறிவு அடிமையாக இந்த பாரினில் உலா வருகிறோம்.

ஜப்பானியர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள நிறைய்ய உள்ளன. ஐரோப்பியர்களுக்கு சமாந்திரமாக நிற்கும் ஒரே கிழக்கு ஆசிய நாடு என்ற வகையில் நாம் ஜப்பானியர்களை கவனித்து தெரிந்து கொள்ள அதிகம் உள்ளது .

உங்கள் பதிவின் மூலம் ஜப்பானியர்களை அறிய முடிகிறது. பதிவுக்கு நன்றி.

சிவா.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

//
ஜப்பானியமொழி கொஞ்சம் கடினமானது நாம் கற்றுக்கொள்ள.அதேப் போல் ஜப்பானியர்கள் அவர்கள் கல்வியை ஜப்பானியமொழியிலே கற்பதால்,ஆங்கிலத்தைச் சரளமாகக் கையாளத் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவு. நான் வேலைவிஷயமாக ஒரு மாதம் டோக்கியோவில்(2001) தங்கியிருந்தேன்.
//

மோகன்!

இந்த தொடரை தொடர்ந்து வாசித்து வருகிறேன்! நிறைய இடங்களில் இடறும், பொதுமைப்படுத்துதல் என்று விட்டு தள்ளி போவேன்!

ஆனால் இந்த ஜப்பானிய மொழி கடினமானது என்பது தவறான தகவல் என்பதை பதிவு செய்கிறேன்!

அதுவும் தமிழுக்கும், ஜப்பானிய மொழிக்கும் உள்ள தொடர்பு மிகவும் முக்கியமானது!

தயவு செய்து தவறான தகவலை பதிவு செய்யாதீர்கள்!
நன்றி!

Anonymous said...

தலைப்பில் இருந்து விலகிச்சென்றுள்ளது மாதிரி தெரிகிறது...

அடுத்த பாகம் எப்போ ?

Anonymous said...

அருமை அருமை அருமை.....

அடுத்தபாகத்தை விரைவில் பதியுங்கள்

மோகன் said...

///100% agree with you in this (Even with most other points that you have mentioned :-))/////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தியாகு...

மோகன் said...

//தொடர்ந்து படித்து வருகிறேன். தலைப்பு மட்டும் நெருடலாக இருக்கிறது. பதிவு அருமை.///
உண்மைதான் சிவா..இந்தப் பதிவை,நீயா..நானாவில் பேசிய ஒரு கருத்துக்கு என்னுடைய கருத்துக்களைப் பதியலாம் எனதான் முதல் பாகத்தை எழுதினேன்.அதனால்தான் தலைப்பும் அப்படி அமைந்தது. ஆரம்பிக்கும்போது, இத்தனை பாகங்கள் எழுதுவதாக எந்த எண்ணமும் இல்லை...அப்படியே பாகங்கள் வளர்ந்துவிட்டது.இன்னும் 2,3 பாகங்களில் முடித்துவிடலாம் என இருக்கிறேன்...

மோகன் said...

//தலைப்பை பார்த்து ரொம்ப நாள் ஒதுங்கியே இருந்திட்டேன்,இனிமேல் தான் பாகம் ஒன்றில் இருந்து ஆரம்பிக்கனும். :-)
////
முழுவதும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் குமார்.

மோகன் said...

கருத்துகளுக்கும்,ஆதரவுக்கும் நன்றி அனானி,PM,முருகானந்தம்..

மோகன் said...

///அவர்கள் விழிப்புணர்வு, கவனம், சலிப்பில்லாமல் வேலை செய்யும் திறன் போன்ற விசயங்களில் நம்மவர்களை விட சிறப்பாக இருக்கின்றனர் . நுட்பமான விசயங்களில் நம்மவர்கள் நல்ல தேர்ச்சி பெற்று உள்ளனர். ஆனால் அதை ஜப்பானியர்களை போல் அறிந்து பயன்படுத்துவதில்லை.//

உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன் சிவா...எதையும் தள்ளிப்போடுவது நம்மிலுள்ள ஒரு கெட்டப்பழக்கம்.அதுவே நாம் முன்னேறாமல்போவதற்கு ஒரு காரணம்.

மோகன் said...

///ஆனால் இந்த ஜப்பானிய மொழி கடினமானது என்பது தவறான தகவல் என்பதை பதிவு செய்கிறேன்!///
பாரி அரசு,
நான் பார்த்தவரை ஜப்பானியமொழிக் கொஞ்சம் கடினமானதுதான்.அதைக்கற்றுக்கொள்ள முனைபவர்கள் சதவிகிதமும் அதிகமில்லை.எங்கள் கம்பெனியில் இதற்கென ப்ரோக்ராம் உள்ளது.ஆனால் சேருபவர்கள் மிகக்குறைவு. காரணம்,பெரும்பான்மையோர் US,UK,Europe போகவே விரும்புகிறார்கள்,ஆனால் savings potential ஜப்பானில்தான் அதிகம்...

மோகன் said...

//தலைப்பில் இருந்து விலகிச்சென்றுள்ளது மாதிரி தெரிகிறது...

அடுத்த பாகம் எப்போ ?///

உண்மைதான் ரவி,கடந்தபாகத்தில் கொஞ்சம் ஜப்பான் பக்கம் ஒதுங்கிவிட்டேன்...அடுத்த பாகம் இன்று எழுதலாமென இருக்கிறேன்...

மோகன் said...

//அருமை அருமை அருமை.....

அடுத்தபாகத்தை விரைவில் பதியுங்கள்////
வருகைக்கு நன்றி குமார்...

அமர பாரதி said...

//அவர்கள் செய்யும் அரசியல்,அவர்களில் மிகச்சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கச் செய்யும் தகிடுதம்கள்.....//

சரியாக சொன்னீர்கள் மோகன். எந்த அவசியமும் இல்லாமல் அடுத்தவரை குற்றம் குறை மட்டும் சொல்லியே முன்னேறப் பார்ப்பார்கள். நம் முன்னால் ஒன்றும் தெரியாத மாதிரி பூனைக்குட்டி மாதிரி இருந்து கொண்டு முதுகுக்குப் பின்னால் மலத்தை வாரியிறைக்கும் செயலை எந்த வித கூச்ச நாச்சமும் இல்லாமல் செய்வார்கள். இதில் தெலுங்கு மக்கள் பரவாயில்லை என்றே சொல்லலாம்.

கயல்விழி said...

இந்தப்பாகம் ரொம்ப நன்றாக இருக்கிறது. உண்மைத்தான், நம்மவர்கள் கடைசி நேரத்தில் இரவு பகலாக உட்கார்ந்து வேலையை முடிப்பதில் வல்லவர்கள்(என்னையும் சேர்த்து)