Search This Blog

October 14, 2008

ரஜினியின் அரசியல் விளையாட்டும், சச்சினின் விளையாட்டு அரசியலும்...

நேற்றைய நாள் இருபெரும் ரசிகக்கூட்டத்திற்கு கடந்தசில நாட்களாக(மாதங்களாக, வருடங்களாக) விடை தெரியாமல் இருந்த கேள்விக்கு விடைக்கிடைப்பதுபோல் தெரிய ஆரம்பித்து,கடைசியில் வழக்கம்போல் எதிர்ப்பார்த்த (ரசிகர்கள் விரும்பிய) முடிவு தெரியாமல் ஒரு கமா'வோடு தொடர்கிறது.

குசேலன் தோற்றதிலிருந்து நிகழ்ந்த ஏகப்பட்ட விஷயங்கள்,நெருக்கடிகள், பத்திரிக்கைகளின் வழக்கமான பரபரப்புக் கட்டுரைகள் ரஜினியை வழக்கம்போல 'ஒளி' வட்டத்துக்குள் கொண்டுவந்தது. ஏறக்குறைய ஒரு 'அக்டோபர்' புரட்சியே நடக்கும் என்றவிதத்தில் ஒரு பெரும்புரளி மீடியாக்களால் கிளப்பிவிடப்பட்டது. அதையெல்லாம் (வழக்கம்போல்)நம்பிய ரசிகர்கள் கட்சி,புதுக்கொடி, கூண்டோடு தற்கொலை, சாகும்வரை உண்ணாவிரதம் என அவர்களால் முடிந்த பரபரப்பை கிளப்பினார்கள்.

இன்னொரு பக்கத்தில், கிரிக்கெட்டில் சூப்பர்ஸ்டாரான சச்சினின் சாதனை முயற்சி, எப்போது Fab 4'ன் ரிடையர்மெண்ட், உடல்தகுதி,அவரின் குறைந்துப்போன ஆட்டத்திறன் என சச்சினையும் வழக்கம்போல பத்திரிக்கைகளும், டிவி சேனல்களும் 'ஒளி' வட்டத்துக்குள் கொண்டு வந்தன.பெங்களூரு ரசிகர்கள் ஸ்டேடியத்திலும், இதர ரசிகர்கள் டிவி முன்பும் தேவுடு காத்தனர்,சச்சின் முறியடிக்கப்போகும் லாராவின் சாதனையைக் காண.

இவ்வாறாக ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளறிவிட்ட ரஜினியும்,சச்சினும் நேற்று மாலை இருபெரும் ரசிகக்கூட்டங்களையும் வழக்கமான,பழகிப்போன ஏமாற்றத்தையும், கண்டிப்பாக பிறகு எப்போதாவது நடந்தே தீரும் என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டார்கள்.ரஜினி ஒரு அறிக்கை வாயிலாகவும், சச்சின் 14 ரன்கள் குறைவாகவும் அடித்து அவுட் ஆகி,அவர்கள் மேலான எதிர்ப்பார்ப்பு அவுட்'டாகாமல் பார்த்துக்கொண்டனர்.

ரஜினியின் அரசியல் என்பது அவருக்கும்,அவர் சார்ந்த திரைத்துறையினரின் சுயலாபத்துக்கே பெரும்பாலும் இதுவரை பயன்பட்டுள்ளது. அவருக்கு அரசியல் களத்தில் முழுமூச்சில் இறங்க வேண்டும் என்ற ஆசை சுத்தமாக இல்லை என்பது அவரின் நடவடிக்கைகளைப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அவருக்கு இருந்த ஒரே சந்தர்ப்பம் 1996'ல் முடிந்துவிட்டது. அவரின் அரசியல் நிலைப்பாடும் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதிப்புகளைச்(பாட்சா விவகாரம்,போயஸ் காட்டனில் ஜெ' வால் ஏற்ப்பட்ட நெருக்கடிகள் :-ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்றமுடியாது. 'பாபா பட விவகாரம் :-ஆறு தொகுதிகளில் பா.ம.க எதிர்ப்புநிலை/'ஜெ' became a 'தைரியலஷ்மி' )சார்ந்தே இதுவரை அமைந்துள்ளது. இவ்விஷயத்தில் சமீபத்திய வடிவேலு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் ரஜினிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

இப்போது எல்லாக் கட்சிமட்டத்திலும் சமரசமாகி தானுண்டு,தன் தொழில் உண்டு என இருக்கலாமென இருக்கும்போது, அவரால் இதுவரை 'எடுப்பார் கை பொம்மைகளாக' இருந்த ரசிகக் கண்மணிகள் 'ஒரு கைப்பார்த்துவிடுவது' என்ற நிலையெடுத்து கடந்த சில மாதங்களாக தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் கைமீறி போய்விடாமலும்,அதே சமயத்தில் அவருடைய அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக,இறுதியாக கூறாமல் 'நான் வருவென்னு முடிவு பண்ணிட்டா யாராலயும்(ஆண்டவனாலயும்??) தடுக்க முடியாது' என வழக்கமான அறிக்கையை வெளியிட்டுவிட்டார். வரும்நாட்களில், 'ரசிகர்கள் கூண்டோடு விலகல்', ரசிகர்கள் போராட்டம்,சத்தியநாராயணன் அறிக்கை,சரத்குமார் கருத்து,ஜொதிடர்களின் ரஜினியின் ஜாதக அலசல்கள் என பத்திரிக்கைகளும், வார இதழ்களும் தலைப்பு செய்தியாகப் போட்டு அவர்களின் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்வார்கள். இயந்திரன் படம் ரிலீஸிற்கு தயாராகும்போது மீண்டும் அரசியலில் அடுத்தக்கட்ட விளையாட்டை ரஜினியும், ரசிகர்களும், மீடியாக்களும் ஆரம்பிப்பார்கள்.

ரஜினியைப்போல சச்சினின் சமீபக்கால கிரிக்கெட் என்பது சாதனைகளை முறியடிக்கவும், டீமில் அவரின் நிரந்தர இடம் பறிப்போகாதிருக்கவுமே உதவுகிறது. கிரிக்கெட் வாரியத்தில் மும்பையின்ஆதிக்கம் இருக்கும்வரை அவரை யாரும் அணியிலிருந்து தைரியமாக விலக்கமுடியாது. ஒன்று ஏதாவது காயங்களால் அவர் உடல்திறன் விளையாடுவதற்கு ஏற்ற அளவில் இல்லாமல் போகவேண்டும்,அல்லது அவரின் விளம்பர வருமானங்கள் குறைந்து அவரே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறவேண்டும்.

இவ்விருவரையும் இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்துப் பார்த்தால்,இருவருமே அவர்கள் கொடிநாட்டியுள்ள துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு மேலும் மேலும் பல வெற்றிகளையும்,சாதனைகளையும்,அமைதியான குடும்ப வாழ்க்கையையும் அனுபவிக்கவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் மீடியாக்களும்,ரசிகர்களும்,விமர்சகர்களும் அவர்களை அவர்கள் விரும்பாத அரசியலில் வலுக்கட்டாயமாக திணித்து அவர்களை டென்சன் படுத்தியும்,மக்களிடையே அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி சில தோல்விகளுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.அதற்கு வெகுசமீபத்திய உதாரணம், குசேலன் தோல்வியும், இலங்கைத் தொடரில் சச்சின் சோபிக்காததும். பிறகு அத்தற்காலிக தோல்விகளே மீடியாக்களுக்கு 'அவல்' ஆகிறது.இது இவர்கள் அடைந்துள்ள பிரமாண்டமான வெற்றிகளுக்கும்,அதனால் பெற்ற சூப்பர்ஸ்டார் மகுடத்திற்கும்(முள்கிரீடம்???) அவர்கள் கொடுக்கும் விலையாகும்.


இவ்வாறு சச்சினும்,ரஜினியும் முள்கிரீடம் தரித்துக்கொண்டிருக்கும்வரை அவர்கள் இருக்கும் துறையில் அவர்களைச் சார்ந்த ரசிகர்களுக்கு இதுவரை ரசிகர்களாலும், பத்திரிக்கை/ தொலைக்காட்சி போன்ற மீடியாக்களாலும் ஏற்படுத்தப்பட்ட ஒளிபிம்பத்தில் வெளிச்சம் குறையாமல் காட்சி தந்துக் கொண்டிருப்பார்கள். Mr&Mrs பொதுஜனமும் இதுசம்பந்தமாக பத்திரிக்கைகள்,வார இதழ்களில் வந்த பரபரப்பு கட்டுரைகளைப் படித்துவிட்டு 'வேக்காடு' தாங்காமல்(இதற்குமட்டும் ஆற்காட்டார் பொறுப்பு அல்ல ) அப்பத்திரிக்கைகளாலேயே விசிறிக்கொண்டிருப்பார்கள்.

5 comments:

புருனோ Bruno said...

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் (முக்கியமாக இறுதி ஆட்டங்களில்) நடந்த ஆட்டங்கள் அதிக ஒட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமானவர் யார் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.

ஒரு ஆட்டத்தில் 100 எடுக்காவிட்டால் கூட ஆட்டத்திறன் குறைந்து விட்டது என்று கூறுபவர்களின் அறிவுத்திறனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை

A Simple Man said...

சச்சின் குறித்து நீங்கள் கூறியுள்ளதை ஏற்பதற்கில்லை.. அஜினி பற்றி தெரியாது..

A Simple Man said...

சச்சின் குறித்து நீங்கள் கூறியுள்ளதை ஏற்பதற்கில்லை.. ர‌ஜினி பற்றி தெரியாது..

மோகன் said...

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி புருனோ,அபுல்...

Anonymous said...

சச்சின் குறித்து கூறியது தவறு.அவரது சமீபத்திய ஆட்டங்கள் சிறப்பாகவே உள்ளது.