இன்னுமொரு 365 நாட்கள் வாழ்க்கைப்பாதையில் கடந்திருக்கிறோம்.2008 ஆரம்பித்தபோது,உலகப்பொருளாதாரமும்,வாழ்க்கை தரமும் வளர்ச்சிப்பாதையில் வீறுநடைப்போட்டுக் கொண்டிருந்தது. ஆகையால் பெரும்பாலான மக்கள் நம்பிக்கையுடனே 2008'ஐ வரவேற்றார்கள். ஆனால் சென்னையில் ஒரு ஓட்டலில் நடந்த விபத்து,புத்தாண்டை உயிர்பலியோடே தொடங்கியது.அடுத்த அடி,ரிலையன்ஸ் IPO வடிவில் இந்தியப் பங்குச்சந்தையை அகலப்பாதாளத்துக்கு தள்ளும் ஆரம்பக்கட்டத்தை ரிப்பன் வெட்டித்திறந்து வைத்தது. அன்று ஆரம்பித்த அடி இன்றுவரை உலக அளவில் பெரும் பொருளாதார சிக்கல்களை இடியாப்பச்ச்சிக்கலாக்கி,யாராலும் எப்போது சிக்கல் தீரும் என்று ஜோசியம் சொல்லமுடியாத அளவுக்கு தலையைப் பிய்த்துக்கொண்டு அலைய வைத்துள்ளது. ஒபாமா'வை அமெரிக்காவை ரட்சிக்கவந்துள்ள பரமப்பிதாவாக ஒளிவட்டத்தில் வைத்துள்ளது. 2009தான்,அவர் ஒபாமாவா? ஒசாமாவா? என்பதை தெளிவுப்படுத்தும்.
இந்தியாவில்,முன்பே சொன்னதுபோல்,பங்குச்சந்தையில் ஆரம்பித்த அடி,மத்தியதர மக்களைப் பெருமளவில் பாதித்தது. பங்குச்சந்தை,மியூச்சுவல் பண்ட் பற்றி அ'னா,ஆ'வன்னா கூடத் தெரியாத பெரும்பாலானவர்கள்,உடனடி லாபம் என்ற பேராசைக்கு ஆட்பட்டு,2007-2008'ல் பெருமளவு சேமிப்பை பங்குச்சந்தை,மியூச்சுவல் பண்ட்,நிலம் என எல்லாவற்றிலும் முடக்கினார்கள்.கடந்த சில மாதங்களாக வீசிய பொருளாதார வீழ்ச்சி சுனாமியில் சிக்கி அவர்கள் அனைவரும் இன்று முடங்கிப்போய் இருக்கிறார்கள்.
போதாதக்குறைக்கு, இந்தியாவில் தீவிரவாதமும் 2008'ல் தலைவிரித்து ஆடியது.2 மாதங்களுக்கு ஒருமுறை பல நகரங்களில் குண்டுவெடிப்பு என ஆரம்பித்து,அண்மையில் மும்பை சம்பவம் வரை பல உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. வழக்கம்போல,அமெரிக்க நாட்டாமையின் விரலசைவுக்கு ஆடும் பொம்மைகளாக முதுகெலும்பற்ற இந்திய,பாகிஸ்தான் அரசுகள் போர் பூச்சாண்டிக் காட்டி ஆடிக்கொண்டிருக்கிறது. அணு ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் காட்டிய உறுதியில்,ஒருஅணுக்கூட தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் காட்டவில்லை.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால்,குடும்பப்பிரச்சனைகள்,சேனல் போட்டிகள்,கூட்டணி குஸ்திகள் என தமிழக அரசு படு பிஸியாக இருந்தது. ஆற்க்காட்டார் புண்ணியத்தில், தமிழகக்குடும்பங்களுக்கு கரண்ட் பில் குறைந்ததால்,கணிசமான அளவில் பணத்தை சேமிக்க முடிந்தது. சேமித்தப்பணத்தை ஒரு ரூபாய் அரிசி வாங்கி,குடும்பத்துடன் அமர்ந்து நிலாச்சோறுண்டு 'கற்க்கால' ஆட்சியின் மகிமையை 'மானாட மயிலாட' இலவச தொலைக்காட்சிப்பெட்டி மூலமாக அனுபவித்தது.எதிரிக்கட்சி தலைவர் 'மலைஏறி' அங்கிருந்து நாளொரு போராட்டமும்,பொழுதொரு அறிக்கையுமாக ரிமோட் அரசியல் நடத்தினார். அதற்கும் சளைக்காமல் தமிழக முதல்வரும் பதில் அறிக்கையும், சாதனைப்பட்டியலையும் பக்கம்பக்கமாக தயாரித்து நியுஸ் சேனல்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் சரியான தீனியளித்தார்கள்.அறிக்கைகள் தயாரிக்க செலவிட்ட நேரம் தவிர, கிடைத்த சொற்ப நேரத்தில் திரைப்படங்கள் பார்ப்பதிலும், விழாக்களில் குத்து ஆட்டங்களைக் கண்டுகளிப்பதிலும், திரைக்கதை வசனம் எழுதி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏதாவதொரு நிவாரண நிதியளித்தும் மக்களுக்கு இந்த தள்ளாத வயதிலும் தொண்டாற்றினார்.
மக்கள் தொடர்பு சாதனங்களான சேனல்களும்,பத்திரிக்கைகளும் தங்கள் வானளாவிய சுதந்திரத்தை பயன்படுத்தி 24 மணி நேரமும் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் நிகழ்ந்த விஷயங்களை சுடச்சுட மக்களுக்கு வழங்கி மக்களின் அறிவுப்பசியைப் போக்கினார்கள். தமிழக வாரப்பத்திரிக்கைகள் மாதம் இருமுறை ரஜினியை அட்டைப்படத்தில் போட்டு கவர்ஸ்டோரிகளாக எழுதித்தள்ளினார்கள்.அவர்கள் சொன்னக்கதைகளின்படி,2008'ல் மட்டும் குறைந்தப்பட்சம் 100 முறையாவது ரஜினி புதுக்கட்சி ஆரம்பிக்க நாள் குறித்தார். ஆளும்கட்சியின் குடும்பகுஸ்தியும் வாராவாரம் செய்திசுரங்கத்தை பத்திரிக்கைகளுக்கு வாரிவழங்கியது. ஆன்டி க்ளைமாஸாக 'குருப்பெயர்ச்சி'க்குமுன் திராவிடப்பாரம்பரியத்தில் ஊறித்திளைத்தக்குடும்பம் பாசக்கிளிகளாய் ஒன்று சேர்ந்து போஸ் கொடுத்து, 2009'ல் அனைத்து வாரப்பத்திரிக்கைகளுக்கும் 'செய்திப்பஞ்சத்தை' ஏற்ப்படுத்திவிட்டனர். இவைகள் போதாதென்று மாதத்திற்கு ஒருமுறை IT துறையினர் தமிழகக் கலாசாரத்தையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டார்களென,'டேட்டியோ' போன்ற உன்னத கலாச்சாரம் பற்றிய செய்திகளைச் சுடச்சுட வாரிவழங்கி பத்திரிக்கைகளின் 'கலாச்சாரக் காவலன்' என்ற வேடத்தை திறம்பட செய்தனர்.
விளையாட்டுத்துறைக்கு 2008 நல்ல ஆண்டாகவே அமைந்தது. செஸ்'சில் கிங்'கென விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். கிரிக்கெட்'டில் தோனிக்கு லட்சுமி(ராய்)கடாட்சம்.அவர் தொட்டதெல்லாம் பொன்னானது. குறிப்பிடத்தக்க பெரும்வெற்றிகளைப் பெற்று ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதப்பட்டது.
விண்வெளி விஞ்ஞானத்தில் ஒரு பெரும் சாதனையாக 'சந்திராயன்' விண்ணில் ஏவப்பட்டு இந்தியாவின் மூளைப்பலத்தை உலகத்துக்கு உணர்த்தியது.
திரைத்துறையில் 2008'ல் வெளிவந்த 90% மேற்ப்பட்டப்படங்கள் தோல்வியைத்தழுவி, தயாரிப்புக்களத்தில் குதித்த கார்ப்பரேட் நிறுவனங்களை தள்ளாட்டத்தில் தள்ளிவிட்டது. நம்பிக்கைக்கீற்றாக 'சுப்ரமணியபுரம்,பூ' போன்ற படங்கள் வெளிவந்தன.
ஒட்டுமொத்தமாகப் பார்ந்தால் 2008,நம்பிக்கையுடன் ஆரம்பித்து, அனைத்துவகைகளிலும் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டது. இன்றைய சூழ்நிலை, பொருளாதார சிக்கலிலும், ஸ்திரமற்ற வலுவில்லாத அரசையும், அரசியல் தலைவர்களையும் வைத்துக்கொண்டு, தீவிரவாதம், வன்முறை, பேராசை,சுயநலம்,லஞ்சம், அட்டூழியம், அதிகாரப்போதை போன்றவற்றை அதிகப்படுத்தி,2009'ஐ ஒரு நிச்சயமற்ற, இருண்ட ஆண்டாக எதிர்க்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் அனைவரையும் வைத்துள்ளது.
இன்றைய நிலையில் நம் அனைவருக்கும் தேவையானது, சுயப்பரிசோதனை. இந்த நிச்சயமற்ற சூழ்நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் முக்கியமான காரணம். சூழ்நிலையை ஆராய்ந்து, ஒருமுகப்பட்ட சிந்தனையுடனும், உறுதியுடனும்,பொதுநல நோக்குடன் அனைவரும் இணைந்து செயலாற்றினால்,சோதனைகள் நிறைந்த 2009,சாதனைகள் நிகழ்த்தும் சாகசக்களமாய் பரிமளிக்கவைக்கலாம்,என்ற நம்பிக்கையுடன் 2009'ஐ எதிர்க்கொள்வோம்.
அனைவருக்கும் 2009 நன்நம்பிக்கைமுனையாக,சாதனைகள் பல நிகழ்த்தும் ஆண்டாக அமைய வாழ்த்து(க்)கள்.
3 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மிக நல்ல அலசல். ஒலிம்பிக் குறித்தும் நமது பதக்கங்கள் குறித்தும் ஏதும் எழுதவில்லையே...
//மாதத்திற்கு ஒருமுறை ஈT துறையினர் தமிழகக் கலாசாரத்தையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டார்களென//
:)
Post a Comment