Search This Blog

March 3, 2010

'விண்ணைத்தாண்டி வருவாயா?

Will you cross the skies for me? காதலில் உருகிய,காதலை இறுக்கிய,காதல் கருகிய,காதலில் மருகிய பலப்பல நெஞ்சங்களின் வலித்துடிப்பை ஒளிவடிவமாக்கியுள்ள திரைக்காதல்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா?

வாழ்க்கைப்பாதையில் காதல் என்ற அத்தியாயத்தை ப(பி)டிக்காமல் கடந்தவர்கள் வெகு சிலர்தான்.நம்மில் பலர் வாழ்வின் ஏதாவதொரு கணத்தில் நாமும் காதலிக்கப்படுவோமா?, காதல் சூறாவளி நெஞ்சக்கடலில் மையம் கொள்ளுமா என்று ஏங்கியவர்கள்தான்.அந்த ஏக்கத்தையும், ஏற்படும் வலிகளையும்,எதிர்க்கொள்ளும் புயல்களையும்,இதமாய் கொல்லும் இன்பகணங்களையும்,தோற்றுப்போனால் ஏற்படுத்தும் மரண இம்சைகளையும் கலந்துக்கட்டி இரண்டுமணி நேரத்தில் நம்வாழ்வில் கடந்த காதல்க(ன)ணங்களை கலைத்துப்போடும் படம்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா?


கார்த்திக்,ஜெஸ்ஸி என்ற இருதுருவங்கள் ஏதோ ஒரு நொடியில் காதல் என்ற காந்தசக்தியால் ஈர்க்கப்பட்டு, சேரவும் முடியாமல்,பிரியவும் முடியாமல் காதலை களையாமல் வாழ்க்கையின் நிதர்சனத்தில் தொலைந்து போகிறார்கள்.கார்த்திக்காக சிம்பு - படம்முழுக்க 'விரல்வித்தைக்' காட்டி நடிக்காமல்,நடித்திருக்கும் முதல்படம்.ஜெஸ்ஸியாக திரிஷா - கார்த்திக்கைவிட ஒரு வயது மூத்தவர் என்ற தொற்றத்துடன், காதல் வயப்படும் மேல்-மத்தியவர்க்கப் பெண்களுக்கேயுரிய குடும்பமா? காதலனா? என்ற குழப்பத்துடன் வளையவருகிறார். படத்தின் பெரும்பகுதியை இவ்விருவருமே ஆக்ரமித்துக்கொள்வதால்,இவர்கள் பேசும் வசனங்களே படத்தை நகர்த்தி செல்வது இரண்டாம் பாதியில் சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த இடங்களை ரஹ்மானின் இசையும்,தாமரையின் வரிகளும் நிரப்பிவிடுகின்றன.

காதலை அனுபவித்து,அந்த அனுபவம் தந்த துயர்களையும்,கவிதையையும்,வலியையும் கலந்து வசனங்கள் எழுதுப்பட்டுள்ளன.இக்கதைக்கு சிம்பு சரியான செலக்ஷன்.சிம்புவின் காதல்களும்,அதன் தோல்விகளும் அனைவருக்கும் தெரியும்.அது வெகுவாக இந்த திரைக்கதையின் நம்பகத்தன்மைக்கு உதவியுள்ளது.

இம்மாதிரியான திரைப்படங்களுக்கு இசையும்,பாடல் வரிகளும் மிகவும் முக்கியம்.அந்த எதிர்ப்பார்ப்பை,உணர்வை சரியான வகையில் ரகுமானின் இசையும்,தாமரையின் பாடல் வரிகளும் வெளிப்படுத்தியுள்ளது.கேமிராமேனின் கைவண்ணம் படத்திற்கு ஒரு 'ரிச் லுக்' தருகிறது.மிகவும் சிறப்பான ஒளிப்பதிவு...

மொத்தத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா? ',காதல் என்ற பெரும்கடற்புயலில் சிக்கி சிதறுண்டு போனவர்களின் உள்காயங்களையும்,அதில் வெற்றிகரமாக பயணித்து கரைச்சேர்ந்தவர்கள் சந்தித்த சோதனைகளையும் படம்பிடித்துக்காட்டியுள்ளது...




'விண்ணைத்தாண்டி வருவாயா? - வந்தால் உன்னைச் சரணடைவேன்....

October 23, 2009

இரயில் பயணங்களில்...T.ராஜேந்தருடன்...

கடந்த மாதத்தில் அலுவலக விஷயமாக சென்னை செல்ல வேண்டியிருந்தது. 2.50க்கு வரவேண்டிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாக வந்தது. C2 கோச்'சில் டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.ஏறி அமர்ந்து ஒரு வெஜிடபிள் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு, ப்ளாட்பாரத்தில் வாங்கிய குமுதத்தை பிரித்து அரைத்தூக்கத்துடன் மேய ஆரம்பித்தேன்.திடீரென எனக்குப்பின்புறம் சில ஆச்சர்யக்குரல்கள் 'ஹ்லோ சார்,நீங்க எப்படி ட்ரெய்ன்ல, நாங்க எதிர்ப்பார்க்கவேயில்லை,ஒரு ஆட்டோக்ராப் சார்,ஒரே ஒரு போட்டோக்ராப் உங்ககூட சார்' என இரண்டு,மூன்றுப்பேர் என் சீட்டிற்குபின் நின்றுக்கொண்டிருந்தார்கள். அரைக்குறை தூக்கத்திலிருந்து வி(மு)ழித்த நான்,'என்னாடா இது,என்கிட்ட எதுக்கு ஆட்டோக்ராப்/போட்டோ எடுக்க ஆசைப்படுறாங்க? ஒருவேளை நான் சிறந்த ப்ளாகர்'னு தமிழ்மணத்தில் அறிவித்து,அது சன் ப்ளாஷ் நியூஸ்'ல வந்து நான் பெரிய ஆள் ஆகிட்டனோ'ன்னு நம்ம்ம்...பி...... திரும்பிப்பார்த்தா,எனக்கு பின்வரிசையில் ராஜேந்தர் அமர்ந்திருந்தார்.



அந்த ரயில் ரசிகர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு,அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு அவர் மீண்டும் அவர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டார். எனக்கு ஏற்ப்பட்ட கடுப்பில் அவரைக்கண்டுக்கொள்ளாமல் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் என் காதுகள் பின்னால் நடப்பவற்றை 'பார்ட் டைம்'மாக கவனிக்க ஆரப்பித்தது.அந்த சில ரசிகர்களுக்குப்பிறகு வேறு யாரும் அவரைக்கண்டுக்கொள்ளவில்லை. அந்த ஏசி கோச்சில் அமர்ந்திருந்த பலரும் புத்தகத்திலும்,லேப்டாப்பிலும்,மொபைலிலும்,தூக்கத்திலும் மூழ்கிவிட்டார்கள். அவ்வப்போது நடமாடிய கேண்டீன் ஆட்கள் அவரைப்பார்த்து, சார்..காபி சாப்ட்ரீங்களா,வடை,பஜ்ஜி சூடா இருக்கு சாப்ட்ரீங்களா.. என தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவருக்கு தூக்கம் வ்ரவில்லைப்போலும்.அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துடன் பேச ஆரம்பித்தார். அவர்களிடம் இரண்டு வயது பெண் குழந்தை இருந்தது. அதைத்தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். கையாலும்,வாயாலும் தாளம்போட்டு சில சேட்டைகள் செய்துக்காட்டிக் கொண்டிந்தார். அந்தக் குழந்தையும் அவரை மாமா என அழைத்து ஒட்டிக்கொண்டது.சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் அலுத்துப்போய் தூங்கிவிட்டார். வண்டி ஜோலார்பேட்டையை நெருங்கியது.



நான் பிறந்து வளர்ந்த ஊர்,மேலும் என்னைப்பார்க்க என்னுடைய சகோதரர் வந்திருந்தார். வண்டி நின்றப்பின் சகோதரருடன் பேசிவிட்டு மீண்டும் என் கோச்சில் ஏறி வாசல்கதவருகே கம்பியைப்பிடித்து நின்றுக்கொண்டே,என்னுடைய 'ப்ளாஷ்பேக்கில்' மூழ்கிப்போனேன். ஏறக்குறைய 8 வருடங்கள் ஜோலார்பேட்டை - காட்பாடி ரயில்தடத்தில் பயணித்திருக்கிறேன். 3 வருடங்கள் குடியாத்தம் பாலிடெக்னிக் படிப்புக்கும்,3 வருடங்கள் காட்பாடியில் என்ஜினியரிங் படிப்புக்கும்,மேலும் இரண்டு வருடங்களுக்கு அதே கல்லூரியில் வேலைபார்க்கவும் என, இவ்வழித்தடம்,என் வாழ்க்கைப்பாதையில் ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அந்த பசுமை நினைவுகளின் தாக்கத்தில் கட்டுண்டுக்கிடந்த நேரத்தில்,திடிரென ஒருக்குரல் 'பார்த்து ஜாக்கிரதையா நில்லுங்க சார்' என ஒலித்தது.யாரென திரும்பி பார்த்தால் டி.ஆர் நின்றுக்கொண்டிருந்தார்.



நானும் 'அதெல்லாம் ஓகே சார்.எனக்கு இதுப்போல படியில் நின்று பயணிப்பதில் 8 வருட அனுபவம் இருக்கு' என்றேன். அவரும் 'ஆமா சார்,நானும் காலேஜ் படித்த காலத்தில் பல வருடம் ரயிலில் பயணித்திருக்கிறேன்.அந்த பழைய அனுபவங்களை பார்க்கவே இப்போதும் விமானத்தில் சென்னைப்போகாமல், ரயிலில் வந்தேன்' என்றார். அவர் இவ்வாறு இயல்பாக பேச ஆரம்பிக்கவே, நானும் அவருடன் உரையாட ஆரம்பித்தேன்.என் பெயரையும்,மற்ற விவரங்களையும் விசாரித்தார்.அவர் 'ஒரு தலை காதல்' என ஒரு புது திரைப்படம் எடுக்க் இருப்பதாகவும், அதற்கான 'கதாநாயகி'த் தேர்வுக்கு பெங்களூர் வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் ' என்னங்க சார், ஒரே இரயிலில் வருகிறோம்.யாரும் மற்றவரைப் பார்த்து புன்னகைப்பதோ,அறிமுகப்படுத்திக்கொள்வதோ இல்லை. பேச்சுத் துணையில்லாமல் 4-5 மணி நேரம் ஏசி கோச்சில் உட்கார்ந்தபடி பயணிப்பது கடினமாக உள்ளது.நான் உங்களோடு பேசுவதில் உங்களுக்கு ஆட்சேபணையில்லையே' எனக்கேட்டார். அதுவரை அவரைப்பற்றி நான் கொண்டிருந்த அபிப்ராயம் மாறி,அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்த மற்ற சிலப்பயணிகளும் கோச்சிலிருந்து வெளியே வந்து கதவருகே இருக்கும் நடைப்பாதையில் நின்றுக்கொண்டு அவருடன் பேச ஆரம்பித்தார்கள்.அவர் புதிதாக எடுக்கப்போகும் படத்தைப்பற்றி பேச்சு திருப்பியது. ' சார்,இது மதுரைய சார்ந்த கல்லூரி மாணவர்கள்,அவர்களுக்குள் ஏற்படும் காதல் பற்றிய கதை' என ஆரம்பித்தார்.நான் உடனே 'என்னங்க சார்,நீங்களும் மதுரப்பக்கம் போறீங்க.ஏற்கனவே சுப்ரமணியபுரம்,வெண்ணிலா கபடிக்குழு, மதுரைசம்பவம்'னு வந்துட்டு இருக்கு' என்றேன். 'நான் இந்தக்கதைய 1 வருஷத்துக்கு முன்பே தயார் செய்துவிட்டேன்,மற்றசிலக்காரணங்களால் தாமதமாகிவிட்டது.அடுத்த மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து ஏப்ரலில் வெளியிட்டு விடுவேன்' என கூறினார்.அந்த சமயத்தில் எங்களைச்சுற்றி 6-7 பேர் கூடிவிட்டிருந்தார்கள். வண்டியும் காட்பாடியை நெருங்கிக் கொண்டிருந்தது.


காட்பாடியில் இறங்கவேண்டியவர்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள்.அவர்களில் வயதான ஒரு தம்பதியினரும் இருந்தார்கள். அவர்களும் டி.ஆருடன் அறிமுகப்படுத்திக்கொண்டு,'உங்கள் பாட்டு என்றால் எங்களுக்கு நிறையப்பிடிக்கும்.எங்களுக்காக பாட முடியுமா என்றார்கள். வண்டி ப்ளாட்பாரத்தில் நுழைய ஆரம்பித்தது.அதைப்பார்த்த தம்பதியினர் வருத்தத்துடன், 'நீங்கள் பாடுவதை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு இல்லை' எனக்கூறினர். உடனே 'டி.ஆர்' அவர் பாக்கெட்டிலிருந்து ஒரு நாண்யத்தை எடுத்து,அருகிலிருந்த 'பாத்ரூம்' கதவில் தாளம் போட்டுக்கொண்டே 'வாடி என் மதுரக்காரக்கிளியே' எனத்தொடங்கும் பாடலை ராகத்துடன் பாட ஆரம்பித்தார்.அடுத்த இரண்டு நிமிடங்களில் வண்டி காட்பாடி ரயில்நிலையத்தில் நின்றது. அந்த வயதான தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'இந்த நாளை என்றைக்கும் மறக்கமாட்டோம்' என் 'டி.ஆரிடம் விடைப்பெற்று சென்றார்கள்.


வண்டியும் அங்கிருந்து கிளம்பியது. எங்களிடம் திரும்பிய அவர் ' வயசானவங்க சார்,நான் பாடாம இருந்திருந்தா,அது ஒரு குறையா அவங்களுக்கு இருந்திருக்கும்,அதனாலதான் உடனே பாட ஆரம்பிச்சேன்.ஏதோ என்னால முடிஞ்சது' என்றார். அவர் பாடியப்பாடல் அவரின் புதுப்படமான 'ஒரு தலை காதல் ' படத்திற்காக கம்போஸ் செய்திருக்கிறார்.அதை மறுப்படியும் தாளத்துடன் பாட ஆரம்பித்தார். ராகமும்,வரிகளும் வழக்கமான 'டி.ஆர்' டச்'சுடன் அருமையாக இருந்தது.அவர் பாடுவதை என் மொபைல் போனில் வீடியோவாக எடுத்தேன்.அதைக்கவனித்த அவர்,பாடி முடித்தவுடன் என்னிடம் ' மோகன், வீடியோவை 'internet'லோ வேறு யாருக்கோ கொடுத்து விடாதீர்கள்' வேண்டுமானால் 'அம்மாடி..ஆத்தாடி' பாடுகிறேன்,அதை எடுத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். நானும் ஒன்னும் கவலப்படாதீங்க சார்,அப்படியெல்லாம் பண்ணிடமாட்டேன்' எனக்கூற,அவர் 'அம்மாடி...ஆத்தாடி' பாட்டை பாட ஆரம்பித்தார்.






அடுத்த இரண்டு மணிநேரம்.மேலும் பல பயணிகள் வந்து அவருடன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்கள். பாடச்சொல்லிக் கேட்கும் போதெல்லாம், தயங்காமல் தாளத்துடன் பலப்பாடல்களை பாடினார். அரட்டை அரங்கம், தமிழக அரசியல்,சினிமா என பலரும் கேட்டக் கேள்விகளுக்கு தயங்காமல் வெளிப்படையான பதில் அளித்தார். ஏதோ ஒரு கேள்விக்கு 'தமிழகத்தில் பெண்கள் டி.வி சீரியலுக்கும்,ஆண்கள் டாஸ்மாக்'குக்கும் அடிமையாகிவிட்டனர்' என்றார்.வண்டி பெரம்பூரை நெருங்கும்போது கூட்டம் கலைந்தது.


என்னிடம் வந்த அவர் ' நான் காலேஜ் படிக்கும்போது,ரயில் பாத்ரூம் கதவில் காசை வைத்து தாளம் போட்டு பாட்டு பாடுவது வழக்கம், இன்று கதவருகே யாரும் இல்லாதபோது வந்து காசை எடுத்து இரண்டு தட்டுதட்டி பழைய அனுபவத்தைப் பெறலாம் என நினைத்திருந்தேன்.ஆனா இப்போ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்,பலப்பாடல்களை உங்கள் அனைவருக்கும் பாடிக்காட்டியது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு மோகன்' எனக்கூறினார்.இதுநாள்வரை பத்திரிக்கை,படங்கள்,டிவி மூலமாக அவரைப்பற்றி நான் கொண்டிருந்த சில தவறான அபிப்ராயங்கள் அந்த ரயில்பாதையில் விழுந்து சிதைந்தது.

July 3, 2009

வாழ்க்கை என்பது மணம்,குணம் நிறைந்த காபி...

கல்லூரிமுடித்து சிலபல ஆண்டுகள் கழித்து ஒன்றுசேர்ந்த நண்பர்கள்குழு கல்லூரி நினைவுகளை அசைப்போட, கல்லூரி பேராசிரியர் ஒருவரின் வீட்டில் கூடினார்கள். பேச்சுவாக்கில், நடைமுறை வாழ்க்கை எப்படி போகிறது என்று பேராசிரியர் கேட்டதற்க்கு, ஏறக்குறைய அனைவரும் அலுவலக,குடும்ப வாழ்க்கை எந்திரமயமாகவும், மிகுந்த மன அழுத்தத்தை தரக்கூடியதாகவும், ஏமாற்றங்கள் நிறைந்ததாகவும் ஓடிக்கொண்டிருப்பதாக குறைப்பட்டார்கள்.
வீட்டிற்கு வந்தவர்களுக்கு காபி ஏற்பாடு செய்த பேராசிரியர், ஒரு பெரிய குடுவை நிறைய காபியையும், ஒரு பெரிய தட்டில் காபிகப்'களையும் எடுத்துவந்து மேஜையில் வைத்தார். அவர் வைத்த காபிகப்'கள் பல்வேறு வகைப்பட்டு இருந்தது,பலவண்ணங்களில்,வடிவங்களில், ப்ளாஸ்டிக், கண்ணாடி,வெள்ளி,எவர்சில்வர்,சாதாரண பேப்பர்கப் போன்றவற்றால் செய்யப்பட்ட கப்'கள் இருந்தது.அனைவரும் அவர்களுக்கு காபிகப்'களை எடுத்து வேண்டிய அளவு காபியை அதில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களுடன் வந்தமர்ந்த பேராசிரியர் இவ்வாறு கூறினார்...' நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவர் கையிலுள்ள காபிகப்'களையும்,மேஜைமீது யாராலும் தேர்ந்தெடுக்கப்படாமலுள்ள காபிகப்'களையும் பாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் நல்லவேலைப்பாடமைந்த,காஸ்ட்லியான கப்'களையே தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். விலைமலிவான,ஆடம்பரமில்லாத கப்'களை யாரும் தொடக்கூட இல்லை.இருப்பவற்றில் சிறந்ததைபெறவே அனைவரும் ஆசைப்பட்டிருக்கிறீர்கள்,ஆனால் உங்கள் அனைவருக்கும் தேவையானது சுவையான காபி,அதை எதில் குடிக்கிறீர்கள் என்று தேர்ந்தெடுப்பதிலும்,அடுத்தவனைவிட நான் சிறந்த கப்பை வைத்திருக்கிறேனா என ஆராய்வதிலும்தான் அனைவரின் கவனமும் இருந்ததே தவிர, கிடைந்த காபியை நீங்கள் ஒருவரும் ரசித்து ருசித்துக்குடிக்கவில்லை.


இதுபோலதான் உங்களின் நடைமுறை வாழ்க்கையும் அதில் நீங்கள் சந்திக்கிற துன்பங்களும்,துயரங்களும். வாழ்க்கை என்பது நீங்கள் குடிக்கும் காபியை போன்றது. சிறந்த காபிகப்'க்கு ஆசைப்பட்டு,கிடைந்த காபியை ரசித்துகுடிக்க முடியாமல் காபிகப் போன்ற வேலை,சமூக அடையாளம்,பணம்,பதவி போன்றவைகளில் சிறந்ததைப்பெற ஆசைப்பட்டு,வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க தெரியாமல் தொலைக்கிறீர்கள்....என்று முடித்தார்.

May 28, 2009

பசங்க.. பா(ப)டம் பெரியவங்களுக்கு

படத்தப்பத்தி ஒரு வரில சொல்லனும்னா, ஒவ்வொருவருக்கும் விதம்விதமான அனுபவங்களை, பாடங்களைத் தரும் படம்.

பசங்களா இருக்கவங்களுக்கு அவங்க நிகழ்காலத்தை திரையில் பார்க்கவும்,
வாலிப பசங்களா காலேஜ்'ல கும்பியடிக்குறவங்களுக்கு அவங்க சில மாதங்களுக்குமுன்
கடந்த வாழ்க்கை அத்தியாயத்தை புரட்டிப்பார்க்கவும்,

காலேஜ் முடிஞ்சி, வேலைல சேர்ந்து 'செட்டில்' ஆகிட்டோம்,அடுத்து என்னனு இருக்குறவங்களுக்கு சில்லுன்னு ஒரு காதல் அனுபவத்திற்கு ஏங்கவும், பள்ளிக்கல்லூரிப்பருவத்தில் உடன்பயின்ற நண்பர்கள், திடீரென காணாமல் எங்கே போய்விட்டார்கள் என அதிர்ச்சியுடன் திரும்பிப்பார்க்கவும்,

கல்யாணம் ஆகி, புது வாழ்க்கை,புது சொந்தங்கள்,புதுப்புது அனுபவங்கள் என மூழ்கி, களிப்புகளைக் கடந்து கடமையில் மூழ்கிபோனவர்களுக்கு,கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து, மரித்துப்போன பள்ளிக்கால நட்புகளையும்,இழந்துப்போன  குறும்பு விளையாட்டுக்களை நினைவடுக்குகளில் ஆராய்ந்துப்பார்க்கவும்,

குழந்தை(கள்) பெற்று,பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு,தன்வீட்டுச்சூழ்நிலையையும்,தன் குழந்தைகள் எதிர்பார்ப்புகளை எந்த அளவிற்கு நிறைவேற்றி இருக்கிறோம், செய்ய வேண்டியவைகள் என்ன? என்று தெரிந்துக்கொள்ளவும்,

பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு, அவர்கள் செய்யத்தவறிய, சரியாக செய்துவிட்ட விஷயங்களை பட்டியலிட்டு சரிபார்க்கவும்,

படிப்புமுடிந்து நன்றாக செட்டில் ஆகிவிட்ட,அல்லது வேலைவெட்டியின்றி வாழ்க்கையில் த(டம்)டுமாறும் தன் பிள்ளைகள்பற்றி மகிழ்ச்சியோ,கவலையோ கொள்ளும் பெற்றோர்களுக்கு, அவர்களின் கடந்த 20 ஆண்டுக்கால தாம்பத்யம், எந்த அளவுக்கு பிள்ளைகள் வாழ்க்கையை நன்றாக அமைத்தோ/அலைக்கிழித்தோ இருக்கிறது என சுயபரிசோதனை செய்துக்கொள்ளவும்,

என அனைவரையும் சிரிக்க,சிந்திக்க,சிலிர்க்க,கண்ணீர் சிந்த என அனைத்துவித அனுபவங்களையும் படம் பார்க்கும் இரண்டரை மணிநேரத்தில் நமக்கு அளித்து விடுகிறது.

எப்போதும் இரவில் படுக்கையில் படுத்த இரண்டு நிமிடங்களில் என்னைத்தழுவும் நித்திரை,
நான் படித்த ஆரம்பநிலைப்பள்ளி,கூடப்படித்த ஜெய், பாபு, தியாகு, துளசிராஜ், குப்பன், ரமேஷ், சிவக்குமார்,எழில்மாறன்,அறிவு, அம்பி(கா),மலர்(விழி), போன்றவர்களையும், தெரேசா,ஜெயமேரி டீச்சர், ஜேசுதாஸ், அருளானந்தம் வாத்தியார்கள்,தமிழய்யா பத்திநாதன்,பூபதி என பாதை அமைத்துக்கொடுத்த ஆசிரியர்களையும், ஏழாவது படிக்கும்போது பள்ளியில் புதிதாக சேர்ந்த ஜெய்குமாருக்கும் எனக்கும் படிப்பில்,முதல் ரேங்க் வாங்குவதில்,க்ளாஸ் லீடர் ஆவதில் என ஏற்பட்ட போட்டிகள், எட்டாவது படிக்கும்போது பள்ளி மாணவத் தலைவர் தேர்தலில் நானும்,ஜெய்யும் இரு அணிகளாகப்பிரிந்து போட்டியிட்டு ஜெய் 162 வாக்குகளும்,நான் 212 வாக்குகளும் பெற்று வெற்றிப்பெற்றதும், இந்த தேர்தலினால் எங்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவரும் பேசாமல் போனதும், பள்ளி நண்பர்களும்,ஆசிரியர்களும் எவ்வளவோ முயன்றும்,என் பிடிவாதத்தால் அவனுடன் பேசாமலே இருந்து,வெவ்வேறு பாதையில் வாழ்க்கைப்பயணம் தடம்மாறி, சிலவருடங்கள் கழித்து அவன் அக்கா திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வீடு தேடிவந்ததால் மறுபடியும் மலர ஆரம்பித்த எங்கள் நட்பு இன்றுவரை சரியான புரிதலுடன் எவ்வித இடருமின்றி வளர்வதும் என,பல்வேறு நிகழ்வுகளை கிளறி,அந்த ஞாபகங்களின் தாக்கத்தால் வெவ்வேறு மனநிலைகளுக்கு ஆட்பட்டு இரவு முழுவதும் என் தூக்கம் தூரதேசம் போனது.

எனினும் இன்று காலையில் எழுந்தபோது உடலும்,மனமும் எவ்வித களைப்புமின்றி, புத்துணர்ச்சியுடனும், புதுகூதுகலத்துடனும் கொண்டாட்டம் போடுவதற்கான காரணம்,படம்பார்த்த அந்த இரண்டரை மணிநேரத்தில் நானும் என் பள்ளிப்பருவத்தை மீண்டும் ஒருமுறை வாழ்ந்துப்பார்த்ததுதான்...

May 9, 2009

மரித்துப்போன மனிதம் : விஜய் டிவி நிகழ்ச்சி

கடந்த வியாழன் இரவு விஜய் டிவியில் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் செமிபைனல் ரவுண்ட் நடந்தது. அதில் கடைசியில் நடனமாடியவர் எடுத்திக்கொண்ட கான்செப்ட் 'இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள்'.சாதாரணமாக ஆரம்பித்த குழந்தைகளுடனான நடனம், அங்கு நிகழும் குண்டுவெடிப்பும்,மக்களின் அவலநிலையையும் கண்முன்னே நிகழ்த்திக்காட்டினார்கள். அந்த 10 நிமிட நடனம் பார்த்த அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தது.

வீடியோ இங்கே...

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4

அதைப்பார்த்து என்னில் எழுந்த உணர்ச்சிகளின் வடிவம் கீழே...


கண்ணீர்துளிகள் நிஜம்,
ரத்தஆறுகள் நிஜம்,
வலிகள் நிஜம்,
இழப்புகள் நிஜம்,
துடிப்புகள் நிஜம்,
ஏக்கங்கள் நிஜம்,
கொடுமைகள் நிஜம்,
பசி,பட்டினி நிஜம்,
கற்பழிப்புகள் நிஜம்,
மரணங்கள் நிஜம்,

நிதம்நிதம் இத்தகைய
நிஜங்களின் நிர்பந்தத்தில்
நாளைய விடுதலையை எண்ணி
இன்றைய விடியலாவது
விடைத்தருமா என்ற
வினாவுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கும்
விட்டில்பூச்சி கூட்டங்களாய்
நம் ரத்தத்தின் ரத்தங்கள்.

மனிதம் நம்மில் மரித்துவிட்டதா?

April 25, 2009

என் ஜன்னலுக்கு வெளியே...

2005'லிருந்து 2008 வரை தினமணி,தமிழ்முரசு,புதியபார்வை,உயிர்மை மற்றும் அவர் வலைப்பதிவு என அரசியல்,சமூகம்,இலக்கியம்,வரலாறு என பலதரப்பட்ட தளங்களின் நிகழ்வுகள் பற்றிய மாலனின் கட்டுரைகளின் தொகுப்பு ச்என்ற புத்தகமாக 'கிழக்குப் பதிப்பகத்தால்' வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் தளத்தில் 2005'லிருத்து ஏற்பட்ட ஏகப்பட்ட நிகழ்வுகள்,கலைஞர் தலைமையிலான ஆட்சி,கலைஞர் குடும்பகுழப்பங்கள்.கவுடா குடும்ப அரசியல், அத்வானியின் ஜின்னா பற்றிய பேச்சினால் ஏற்பட்ட குழப்பங்கள், சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள்,காவிரி,ராமர் பாலம்,அணுஒப்பந்த சர்ச்சைகள்,கனிமொழியின் அரசியல் பிரவேசம் என சமகாலத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றிய விவரங்களும் அதைப்பற்றிய மாலனின் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.பெரும்பாலான விஷயங்கள் சுவைப்பட எழுதப்பட்டுள்ளது.

சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளான மும்பை தொடர் ரயில்குண்டு வெடிப்புகள்,தமிழககடலோர கிராமங்களின் சுனாமிக்குபிறகான வாழ்க்கைமுறைகள், குறிப்பாக ஒரு கடலோரகிராமத்தில் பத்தாவது படிக்கும் மாணவன்,அங்குள்ள குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுக்கும் செய்தி, சுனாமிக்குபிறகும் ஏன் இன்னும் மீன்பிடி தொழில் செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ற மாலனி கேள்விக்கு 'ஐயா,கடல் எங்களுக்கு அம்மா மாதிரி, இத்தனை வருடமும் அவதான் எங்களுக்கு சோறு போட்டிருக்கா,அன்னிக்கு அவளுக்கு ஏதோ கடும்கோவம்,அடிச்சிட்டா, அதனால அவள விட்டு போய்விடமுடியுமா' என்ற யதார்த்தமான பதில் பளீரென என்னை அறைந்தது.

'பாரதியின் மரணம் எழுப்பிய கேள்விகள்' என்ற கட்டுரை,திருவல்லிக்கேணியில் யானையால் தூக்கியெறியப்பட்டதால் பாரதி மரணமடைந்தார் என்று நினைத்துக்கொண்டிருந்த என் அறியாமையை தெளிவுப்படுத்தியது.

'மூளையை மட்டும் கழற்றி வைக்க முடிந்திருந்தால்..' என்றக்கட்டுரையில் மாலன் 'சிவாஜி' படம்பார்த்த அனுபவத்தையும் அதைச்சார்ந்த அவரின் அலசல்களையும் சொல்லியிருந்தார். காட்சிஅமைப்புகளும், கதையும் லாஜிக்கலாக இல்லை என்பது அவர் கருத்து. 'மாலன் அவர்களே, தமிழ்படங்களை,குறிப்பாக ரஜினி படங்கள்,அதுவும் சங்கர்(ஷங்கர்???) இயக்கிய படத்தில் லாஜிக் பார்ப்பது உம் தவறு.படம்பார்க்கும் மூன்று மணி நேரத்தில் திரையில் விரியும் சாகசங்களையும்,அழகி(????)களையும்,பர்ந்துபர்ந்து அடிப்பதையும், ஒரே பாட்டில்(பாட்டிலில் இல்லை.....) கட்டாந்தரையிலிருந்து, கோபுரத்திற்கு உயரும் மாயாஜாலத்தையும், இன்னபிற க்ராப்பிக்ஸ் கலக்கல்களையும் வாய்ப்பிளந்து பார்த்து,இனிமையாக பொழுதைக்கழிப்பதை விட்டுவிட்டு,யார் உங்கள் 'மூளையையெல்லாம் உபயோகப்படுத்தச் சொன்னது? (நான் ரஜினி ரசிகன் என்பது இங்கு தேவையற்ற தகவல்)

அரசியல் சார்ந்த 'நா காக்க' என்ற கட்டுரையில் 1971 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 'வங்கதேசம்' தொடர்பான போர் நடந்தசமயம் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனும்,இந்திராகாந்தியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர்,ஆனால் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.அந்த சமயத்தில் நிக்சன் அவர் உதவியாளரிடம் இந்திராவை 'கிழட்டு சூனியக்காரி' என திட்டி தீர்த்துள்ளார்.இதைப்பற்றிய விவரங்கள் ,அமெரிக்க அரசாங்க வழக்கப்படி 30 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டு சர்ச்சையானது நாம் அனைவரும் அறிந்ததுதான்.அந்த சமயத்தில் பிரிட்டன் சென்ற இந்திராகாந்தி பிபிசிக்கு பேட்டியளித்தார்,இந்தியா ஏன் வங்கதேசப்போர் விஷயத்தில் பொறுமைக்காக்கக்கூடாது எனற கேள்விக்கு இந்திரா 'பொறுமையாக இருந்தால் படுகொலைகள் நின்றுவிடுமா?கற்பழிப்புகள் நின்றுவிடுமா? கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?ஹிட்லர் படையெடுத்து வந்தபோது,யூதர்கள் சாகட்டும் என நீங்கள் பொறுமை காத்தீர்களா? என பொரிந்துதள்ளியுள்ளார்' என மாலனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய நிலைமையில் இலங்கையிலும் மேலே இந்திராகாந்தி சொல்லியுள்ள நிலைமைதான்.ஆனால் இந்திராவின் மருமகளும்,தமிழகத்தலைவர்களும்,இலங்கையில் உள்ள கடைசித்தமிழனின் தலை வெட்டுப்பட்டு சாயும்வரை மிகவும் பொறுமையாக 'கடையடைத்தும்,உண்ணாவிரதம் இருந்தும்,தந்தியடித்தும்,தொலைக்காட்சிகளில் சிறப்புத்திரைபடம் காண்பித்தும் தங்கள் பொறுமையைக் காட்டி, 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்ற பழமொழிக்கு புதுஅர்த்தத்தை கற்பித்துக்கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாகப்பார்த்தால்,'என் ஜன்னலுக்கு வெளியே' புத்தகம் கடந்த சில ஆண்டுகளில் நம்மைச்சுற்றி நடந்த விஷயங்களின் தொகுப்பை,நாம் கவனிக்கத்தவறிய சில செய்திகளையும்,மறந்துபோன/மருத்துப்போன நிகழ்வுகளையும் அசைபோடவைக்கிறது.


விவரங்களுக்கு http://nhm.in/shop/978-81-8493-063-4.html

April 20, 2009

டாடா நேனோ'வும்,நானும்...

இன்று அலுவலகத்தில் வழக்கமான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது,அலுவலக நண்பர் ஒருவர் என்னிடம் வந்து,டாடா நேனோ கார் பார்வையாளர்களுக்காக அலுவலக கார் பார்க்கிங்கில் வைத்திருக்கிறார்கள்,பார்க்க செல்லலாமா என கேட்டார்....உடனே கிளம்பிச் சென்றோம்.

ஒரு பெரும்கூட்டம் காரைச்சுற்றி நின்றுக்கொண்டிருந்தது.வெளியிலிருந்து பார்க்கையில் ரொம்பக்குட்டியாய் தெரிந்த கார்,உள்ளே அமர்ந்துப் பார்த்த போதுதான் innovative design and quality of work தெரிந்தது.

உண்மையிலேயே மிகவும் சிறப்பாக வடிவமாக்கப்பட்டுள்ளது காரின் உள்புறமும்,வெளிப்புறமும்.பின்சீட்டில் என்னளவுள்ள மூன்று பேர் தாராளமாக அமரமுடிந்தது.

நான் ஏறக்குறைய ஆறடி உயரம்.டிரைவர் சீட்டில் அமர்ந்தால் மாருதி 800,ஆல்டோவில் கால்முட்டி முன்புறமுள்ள டேஷ்போர்டில் இடிக்கும்.அண்மையில் நண்பன் ஒருவனுக்கு கார் வாங்க அலைந்தபோது, மர்ருதி சுசூகியின் 'ஏ ஸ்டார்' ஓட்டிப்பார்த்தேன்.டிரைவர் சீட்டில் அமர்ந்தால், கால் முட்டி நன்றாக முன்புறத்தை இடித்தது. சீட்டை மிகவும் பின்னுக்கு தள்ளி அமர்ந்தாலும் முட்டி இடித்தது.கஷ்டப்பட்டுதான் ட்ரைவ் செய்ய முடிந்தது.

அதே எதிர்ப்பார்ப்புடன் நேனோ'வில் டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். எந்தவிதப்பிரச்சனையும் இல்லை.சீட்டும் பின் தள்ளாமல் இருந்தது.ஸ்டியரிங் வீலையும்,கியர்,கிளட்ச்,ஆக்சிலேட்டர் மற்றும் ப்ரேக் ஆகியவற்றை சிறந்த முறையில் கையாள(காலாள???) முடிந்தது.நான் கடந்த ஆறு மாதங்களாக hyundai-i10 ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.என் காரில்,டிரைவிங் சீட்டில் அமர்ந்தால் எந்த அளவுக்கு சவுக்கரியமாக உணர்வேனோ,அதே அளவு சவுக்கரியம் நேனோவிலும் இருந்தது.உண்மையிலேயே, டாடா என்சினியர்கள் சிறந்த தயாரிப்பை அளித்திருக்கிறார்கள். காரின் மற்றப்பகுதிகளும் சிறந்த முறையில் அமைக்கப்பெற்றுள்ளது.

காரின் ரிவர்யூ மிர்ரர்கூட தேர்ந்தமுறையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஸ்டெப்னி டயர்,பெட்ரோல் போடுவதற்கான அமைப்பு ஆகியவை உள்ளது.ஒவ்வொருமுறை பெட்ரோல் போடும்போதும் காரின் முன்புறத்தை திறந்து மூடுவது ஒரு அசவுக்ரியமாக இருக்கும்.

காரின் வெளிப்புறத்தோற்றமும் மிகச்சிறப்பாக,ஒரு 'ரிச்லுக்' தருகிறது.கதவுகள்,சீட்கள் அனைத்தும் மிக மெலியதாக அமைக்கப்பட்டுள்ளது.வண்டி ஏதாவது ஆக்சிடென்ட் ஆனால் அப்பளம்கூட அல்ல,அணுஅணுவாக சிதைந்துவிடுமோ என்ற ஐயம் ஏற்பட்டது.

காரை இன்று ஓட்டிப்பார்க்கமுடியவில்லை,கூட்டம் அதிகமாக இருந்ததால்.நாளையும் காரை பார்வைக்கு வைக்க இருக்கிறார்கள்,அப்போது முயன்று பார்க்கவேண்டும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் 'டாடா' அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியிருகிறார்கள் என்றே தோன்றுகிறது. குறுகிய தூர,வழக்கமான போக்குவரத்திற்கு ஏற்ற வண்டியாக நேனோ வெற்றிப்பெறும்.