வாழ்க்கைப்பாதையில் காதல் என்ற அத்தியாயத்தை ப(பி)டிக்காமல் கடந்தவர்கள் வெகு சிலர்தான்.நம்மில் பலர் வாழ்வின் ஏதாவதொரு கணத்தில் நாமும் காதலிக்கப்படுவோமா?, காதல் சூறாவளி நெஞ்சக்கடலில் மையம் கொள்ளுமா என்று ஏங்கியவர்கள்தான்.அந்த ஏக்கத்தையும், ஏற்படும் வலிகளையும்,எதிர்க்கொள்ளும் புயல்களையும்,இதமாய் கொல்லும் இன்பகணங்களையும்,தோற்றுப்போனால் ஏற்படுத்தும் மரண இம்சைகளையும் கலந்துக்கட்டி இரண்டுமணி நேரத்தில் நம்வாழ்வில் கடந்த காதல்க(ன)ணங்களை கலைத்துப்போடும் படம்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா?

கார்த்திக்,ஜெஸ்ஸி என்ற இருதுருவங்கள் ஏதோ ஒரு நொடியில் காதல் என்ற காந்தசக்தியால் ஈர்க்கப்பட்டு, சேரவும் முடியாமல்,பிரியவும் முடியாமல் காதலை களையாமல் வாழ்க்கையின் நிதர்சனத்தில் தொலைந்து போகிறார்கள்.கார்த்திக்காக சிம்பு - படம்முழுக்க 'விரல்வித்தைக்' காட்டி நடிக்காமல்,நடித்திருக்கும் முதல்படம்.ஜெஸ்ஸியாக திரிஷா - கார்த்திக்கைவிட ஒரு வயது மூத்தவர் என்ற தொற்றத்துடன், காதல் வயப்படும் மேல்-மத்தியவர்க்கப் பெண்களுக்கேயுரிய குடும்பமா? காதலனா? என்ற குழப்பத்துடன் வளையவருகிறார். படத்தின் பெரும்பகுதியை இவ்விருவருமே ஆக்ரமித்துக்கொள்வதால்,இவர்கள் பேசும் வசனங்களே படத்தை நகர்த்தி செல்வது இரண்டாம் பாதியில் சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த இடங்களை ரஹ்மானின் இசையும்,தாமரையின் வரிகளும் நிரப்பிவிடுகின்றன.
காதலை அனுபவித்து,அந்த அனுபவம் தந்த துயர்களையும்,கவிதையையும்,வலியையும் கலந்து வசனங்கள் எழுதுப்பட்டுள்ளன.இக்கதைக்கு சிம்பு சரியான செலக்ஷன்.சிம்புவின் காதல்களும்,அதன் தோல்விகளும் அனைவருக்கும் தெரியும்.அது வெகுவாக இந்த திரைக்கதையின் நம்பகத்தன்மைக்கு உதவியுள்ளது.
இம்மாதிரியான திரைப்படங்களுக்கு இசையும்,பாடல் வரிகளும் மிகவும் முக்கியம்.அந்த எதிர்ப்பார்ப்பை,உணர்வை சரியான வகையில் ரகுமானின் இசையும்,தாமரையின் பாடல் வரிகளும் வெளிப்படுத்தியுள்ளது.கேமிராமேனின் கைவண்ணம் படத்திற்கு ஒரு 'ரிச் லுக்' தருகிறது.மிகவும் சிறப்பான ஒளிப்பதிவு...
மொத்தத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா? ',காதல் என்ற பெரும்கடற்புயலில் சிக்கி சிதறுண்டு போனவர்களின் உள்காயங்களையும்,அதில் வெற்றிகரமாக பயணித்து கரைச்சேர்ந்தவர்கள் சந்தித்த சோதனைகளையும் படம்பிடித்துக்காட்டியுள்ளது...
'விண்ணைத்தாண்டி வருவாயா? - வந்தால் உன்னைச் சரணடைவேன்....