கடந்த வார இறுதியில் ஷாப்பர் ஸ்டாப்'க்கு ஷாப்பிங் செய்யலாம் என சென்றிருந்தேன்(உபயம்: கிரெடிட் கார்ட் மூலம் கிடைத்த கிப்ட் கூப்பன்கள்).கிட்டத்தட்ட இரண்டு மணிநேர அலசலுக்குப்பிறகு சில துணிமணிகள் எடுத்துவிட்டு,பில் போட்டப்பிறகு, பேண்ட்களை என் உயரத்திற்கேற்ப மாற்றித்தைத்துக் கொடுக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என சொல்லிவிட்டார்கள்.வேறுவழியில்லாமல்,மீண்டும் முழு ஷாப்பர் ஸ்டாப்பை வலம்வரத்தொடங்கினேன்.அப்போது அங்குள்ள 'புத்தக விற்பனைப்பிரிவில் நுழைந்தேன்.
நான் வழக்கமாக தமிழ் புத்தகங்கள் மட்டுமே வாங்கும் பழக்கம் உள்ளவன்.சென்னைக்கு செல்லும்போதெல்லாம், குறைந்தப்பட்சம் ஒரு ஆயிரம் ரூபாய்காவது புத்தகங்கள் வாங்கிவிடுவேன்.இந்த ஆண்டு புத்தகச்சந்தைக்கு தவிர்க்கமுடியாத காரணங்களால் வரமுடியவில்லை. வீட்டில் இருந்த அனைத்துப் புத்தகங்களையும்,ஒருமுறைக்கு இருமுறை என பலமுறைப் படித்துவிட்டேன்.இங்கே மருந்துக்குக்கூட ஒரு தமிழ்புத்தகமும் இல்லை.சரி கிளம்பலாம் என நினைத்துத்திரும்பும்போது,கைப்பட்டு ஒரு புத்தகம் கீழே விழுந்தது.எடுத்து பார்க்கும்போது அதன் தலைப்பு 'One Night @ the call center - by Chetan Bhagat' என இருந்தது.
நான் அதிகம் ஆங்கிலப்புத்தகங்கள் படித்ததில்லை. அமெரிக்க வாசத்தின்போது, வேறுவழியில்லாமல் அங்குள்ள நூலகத்திலிருந்து Sidney Shelton' புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து,அவரின் அனைத்து நாவல்களையும் படித்து முடித்துவிட்டேன்.அதற்குப்பிறகு வேறு எந்த ஆங்கில புத்தகங்களையும் படிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.
இந்தபுத்தகத்தின் தலைப்பு என்னை வசீகரித்தது.பின் அட்டையில் கதையின் சிறுசுறுக்கத்தைக் கொடுத்திருந்தார்கள்.கதையின் ஆசிரியர் ஒரு இரவுநேர ரயில் பயணத்தின்போது ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார்,அவளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது,அந்தப்பெண் அவர் ஒரு எழுத்தாளர் எனத்தெரிந்துக்கொண்டு,அவளிடம் ஒரு கதைக்கான மூலம் இருப்பதாகவும், எழுத்தாளர் அக்கதையைக் கண்டிப்பாக எழுதுவதாக வாக்களித்தால் சொல்லுவதாகவும் சொல்கிறாள்.
முதலில் மறுக்கும் அவர்,கதையின் 'one liner' என்ன என்றுக்கேட்கிறார். 'இந்தக்கதை ஒரு கால்சென்டரில் வேலைச் செய்யும் ஆறுப்பேரின் வாழ்க்கையில் ஒரு இரவில் நடக்கும் நிகழ்வுகளும்,அப்போது அவர்களுக்கு வரும் ஒரு தொலைப்பேசி அழைப்பும் ஆகும்.அந்த தொலைப்பேசியில் பேசுபவர் கடவுள்',என்பதேயாகும்.
இக்கதையின் ஆசிரியர்போல எனக்கும் முழுக்கதையைப் படிக்கும் ஆவல் மிகுந்து அந்தப்புத்தகத்தை வாங்கிவிட்டேன்(95 ரூபாய்). துணி தைத்துக்கொடுக்க இன்னும் 40 நிமிடங்கள் இருந்ததால்,வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அமர்ந்து புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.
கதை,அதில்வரும் ஒரு கேரக்டர்(ஷ்யாம்) கதையை வழிநடத்திச் சொல்வதுப்போல ஆரம்பிக்கிறது.ஒரு மாலைநெரம்,தூக்கத்திலிருந்து விழிக்கும் ஷ்யாம்,அவசர அவசரமாக அலுவலகம் செல்ல தயாராகி,வாசலில் வந்துநிற்கும் கால்சென்டர் பிக்கப் வண்டியில் பயணம் செய்ய ஆரம்பிக்கிறான்.வழியில் அவனுடைய குழுவிலே வேலைச்செய்யும் மற்ற 5 பேரை(மிலிட்டரி அங்கிள்,ராதிகா,வரூம்,பிரியங்கா,இஷா)ஏற்றிக்கொண்டு அலுவலகம் செல்கிறார்கள்.
இந்த ஆறுப்பேருக்கிடையே அந்த ஒரு இரவில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், நட்பு, ஏமாற்றம், சண்டை, சந்தேகம், காதல், சோகம், அவநம்பிக்கை, துரோகம், தோல்விகள், சந்தோஷங்கள் எனக்கதை பயணிக்கிறது.இக்கதை 2005'க் வெளிவந்திருந்தாலும்,இன்றைய தேதியில் BPO அவுட்சோர்சிங் துறையில் உருவாகியுள்ள தேக்கத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள வேலைஇழப்பு அபாயத்தையும்,அங்கு வேலை செய்பவர்களின் நிலையையும் விளக்கமாக சொல்கிறது.
அன்றைய இரவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளால் மனம் வெதும்பிய ஆறு பேரும் ஒரு க்ளப்'பிற்கு சென்று மது அருந்திவிட்டு அலுவலகத்திற்கு திரும்பும் வழியில் ஒரு விபத்தில் மாட்டிக்கொண்டு,அவர்களுக்கு உதவிசெய்ய யாருமற்ற சூழலில் மரணத்தை எதிர்நோக்கும் வேளையில் ஷ்யாமின் அலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது.அதை எடுத்து,யார் பேசுவது எனக்கேட்டால் 'நான் கடவுள்' என பதில் வருகிறது.
கடவுள் அவர்களுடன் நட்புடன் உரையாடி அவர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளுக்கான காரணங்களையும்,அதிலிருந்து மீளும் வழியையும் சொல்கிறார்.அந்த விபத்திலிருந்தும் அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.அதன்பிறகு அவர்கள் எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகளால் அவர்களை வாட்டிய மேனேஜர் இந்த ஆறு பேர் விரித்த வலையில் மாட்டிக்கொள்வதும், அதனால் வேலையிழப்பிலிருந்து கால்சென்டர் ஊழியர்கள் தற்காலிகமாக தப்பிப்பதும்,ஷ்யாம்-பிரியங்கா காதல் சுபத்தில் முடிவதும் என ஒரு திரைப்படத்திற்கேயுரிய நம்பமுடியாத விதத்தில் கதை முடிகிறது.இக்கதையே 2008'ல் சல்மான்கான் நடிக்க 'Hello' என்ற இந்தி திரைப்படமாக வெளிவந்து திரைக்கதை சொதப்பலால் தோல்வியடைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிந்தித்துப் பார்த்தால்,இன்றைய IT/BPO உபயத்தால் ஒரு இளைய தலைமுறையே அளவுக்கதிகமான பணமும் அதனால் கிடைக்கும் பகட்டான வாழ்க்கையும்தான் நிரந்தரம் என்ற மாயவலையில் சிக்கி, தன் படிப்புக்கும்,திறமைக்கும் தீனிப்போடாத ஒரு வேலையில் வேறுவழியின்றி மாட்டிக்கொண்டு அசட்டுத்தனமான, நிச்சயமற்ற ஒரு வாழ்க்கையில் தன் சுயத்தை தொலைத்துவிட்டு உழன்றுக்கொண்டிருக்கும் அவலநிலையை இக்கதை முகத்தில் அறைவதுப்போல சொல்லிக்காட்டுகிறது.
கதை நான் வேலை செய்யும் 'பொட்டி தட்டும் தொழிலைச்சார்ந்தும்,இன்றைய உலகப்பொருளாதார சூழலால் நிலவும் நிச்சயமற்ற வாழ்க்கைமுறையையும் சார்ந்து செல்வதால் ஒரே மூச்சில் 3 மணி நேரத்தில்(ஏறக்குறைய 280 பக்கங்கள்) படித்து முடித்துவிட்டேன். ஒருமுறைக் கண்டிப்பாக படிப்பதற்கேற்ற புத்தகம்.படிக்கக்கிடைத்தால் தவறவிடாதீர்கள் என சிபாரிசு செய்கிறேன்.