Search This Blog

October 23, 2009

இரயில் பயணங்களில்...T.ராஜேந்தருடன்...

கடந்த மாதத்தில் அலுவலக விஷயமாக சென்னை செல்ல வேண்டியிருந்தது. 2.50க்கு வரவேண்டிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாக வந்தது. C2 கோச்'சில் டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.ஏறி அமர்ந்து ஒரு வெஜிடபிள் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு, ப்ளாட்பாரத்தில் வாங்கிய குமுதத்தை பிரித்து அரைத்தூக்கத்துடன் மேய ஆரம்பித்தேன்.திடீரென எனக்குப்பின்புறம் சில ஆச்சர்யக்குரல்கள் 'ஹ்லோ சார்,நீங்க எப்படி ட்ரெய்ன்ல, நாங்க எதிர்ப்பார்க்கவேயில்லை,ஒரு ஆட்டோக்ராப் சார்,ஒரே ஒரு போட்டோக்ராப் உங்ககூட சார்' என இரண்டு,மூன்றுப்பேர் என் சீட்டிற்குபின் நின்றுக்கொண்டிருந்தார்கள். அரைக்குறை தூக்கத்திலிருந்து வி(மு)ழித்த நான்,'என்னாடா இது,என்கிட்ட எதுக்கு ஆட்டோக்ராப்/போட்டோ எடுக்க ஆசைப்படுறாங்க? ஒருவேளை நான் சிறந்த ப்ளாகர்'னு தமிழ்மணத்தில் அறிவித்து,அது சன் ப்ளாஷ் நியூஸ்'ல வந்து நான் பெரிய ஆள் ஆகிட்டனோ'ன்னு நம்ம்ம்...பி...... திரும்பிப்பார்த்தா,எனக்கு பின்வரிசையில் ராஜேந்தர் அமர்ந்திருந்தார்.



அந்த ரயில் ரசிகர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு,அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு அவர் மீண்டும் அவர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டார். எனக்கு ஏற்ப்பட்ட கடுப்பில் அவரைக்கண்டுக்கொள்ளாமல் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் என் காதுகள் பின்னால் நடப்பவற்றை 'பார்ட் டைம்'மாக கவனிக்க ஆரப்பித்தது.அந்த சில ரசிகர்களுக்குப்பிறகு வேறு யாரும் அவரைக்கண்டுக்கொள்ளவில்லை. அந்த ஏசி கோச்சில் அமர்ந்திருந்த பலரும் புத்தகத்திலும்,லேப்டாப்பிலும்,மொபைலிலும்,தூக்கத்திலும் மூழ்கிவிட்டார்கள். அவ்வப்போது நடமாடிய கேண்டீன் ஆட்கள் அவரைப்பார்த்து, சார்..காபி சாப்ட்ரீங்களா,வடை,பஜ்ஜி சூடா இருக்கு சாப்ட்ரீங்களா.. என தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவருக்கு தூக்கம் வ்ரவில்லைப்போலும்.அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்துடன் பேச ஆரம்பித்தார். அவர்களிடம் இரண்டு வயது பெண் குழந்தை இருந்தது. அதைத்தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். கையாலும்,வாயாலும் தாளம்போட்டு சில சேட்டைகள் செய்துக்காட்டிக் கொண்டிந்தார். அந்தக் குழந்தையும் அவரை மாமா என அழைத்து ஒட்டிக்கொண்டது.சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் அலுத்துப்போய் தூங்கிவிட்டார். வண்டி ஜோலார்பேட்டையை நெருங்கியது.



நான் பிறந்து வளர்ந்த ஊர்,மேலும் என்னைப்பார்க்க என்னுடைய சகோதரர் வந்திருந்தார். வண்டி நின்றப்பின் சகோதரருடன் பேசிவிட்டு மீண்டும் என் கோச்சில் ஏறி வாசல்கதவருகே கம்பியைப்பிடித்து நின்றுக்கொண்டே,என்னுடைய 'ப்ளாஷ்பேக்கில்' மூழ்கிப்போனேன். ஏறக்குறைய 8 வருடங்கள் ஜோலார்பேட்டை - காட்பாடி ரயில்தடத்தில் பயணித்திருக்கிறேன். 3 வருடங்கள் குடியாத்தம் பாலிடெக்னிக் படிப்புக்கும்,3 வருடங்கள் காட்பாடியில் என்ஜினியரிங் படிப்புக்கும்,மேலும் இரண்டு வருடங்களுக்கு அதே கல்லூரியில் வேலைபார்க்கவும் என, இவ்வழித்தடம்,என் வாழ்க்கைப்பாதையில் ஒரு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அந்த பசுமை நினைவுகளின் தாக்கத்தில் கட்டுண்டுக்கிடந்த நேரத்தில்,திடிரென ஒருக்குரல் 'பார்த்து ஜாக்கிரதையா நில்லுங்க சார்' என ஒலித்தது.யாரென திரும்பி பார்த்தால் டி.ஆர் நின்றுக்கொண்டிருந்தார்.



நானும் 'அதெல்லாம் ஓகே சார்.எனக்கு இதுப்போல படியில் நின்று பயணிப்பதில் 8 வருட அனுபவம் இருக்கு' என்றேன். அவரும் 'ஆமா சார்,நானும் காலேஜ் படித்த காலத்தில் பல வருடம் ரயிலில் பயணித்திருக்கிறேன்.அந்த பழைய அனுபவங்களை பார்க்கவே இப்போதும் விமானத்தில் சென்னைப்போகாமல், ரயிலில் வந்தேன்' என்றார். அவர் இவ்வாறு இயல்பாக பேச ஆரம்பிக்கவே, நானும் அவருடன் உரையாட ஆரம்பித்தேன்.என் பெயரையும்,மற்ற விவரங்களையும் விசாரித்தார்.அவர் 'ஒரு தலை காதல்' என ஒரு புது திரைப்படம் எடுக்க் இருப்பதாகவும், அதற்கான 'கதாநாயகி'த் தேர்வுக்கு பெங்களூர் வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் ' என்னங்க சார், ஒரே இரயிலில் வருகிறோம்.யாரும் மற்றவரைப் பார்த்து புன்னகைப்பதோ,அறிமுகப்படுத்திக்கொள்வதோ இல்லை. பேச்சுத் துணையில்லாமல் 4-5 மணி நேரம் ஏசி கோச்சில் உட்கார்ந்தபடி பயணிப்பது கடினமாக உள்ளது.நான் உங்களோடு பேசுவதில் உங்களுக்கு ஆட்சேபணையில்லையே' எனக்கேட்டார். அதுவரை அவரைப்பற்றி நான் கொண்டிருந்த அபிப்ராயம் மாறி,அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்த மற்ற சிலப்பயணிகளும் கோச்சிலிருந்து வெளியே வந்து கதவருகே இருக்கும் நடைப்பாதையில் நின்றுக்கொண்டு அவருடன் பேச ஆரம்பித்தார்கள்.அவர் புதிதாக எடுக்கப்போகும் படத்தைப்பற்றி பேச்சு திருப்பியது. ' சார்,இது மதுரைய சார்ந்த கல்லூரி மாணவர்கள்,அவர்களுக்குள் ஏற்படும் காதல் பற்றிய கதை' என ஆரம்பித்தார்.நான் உடனே 'என்னங்க சார்,நீங்களும் மதுரப்பக்கம் போறீங்க.ஏற்கனவே சுப்ரமணியபுரம்,வெண்ணிலா கபடிக்குழு, மதுரைசம்பவம்'னு வந்துட்டு இருக்கு' என்றேன். 'நான் இந்தக்கதைய 1 வருஷத்துக்கு முன்பே தயார் செய்துவிட்டேன்,மற்றசிலக்காரணங்களால் தாமதமாகிவிட்டது.அடுத்த மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து ஏப்ரலில் வெளியிட்டு விடுவேன்' என கூறினார்.அந்த சமயத்தில் எங்களைச்சுற்றி 6-7 பேர் கூடிவிட்டிருந்தார்கள். வண்டியும் காட்பாடியை நெருங்கிக் கொண்டிருந்தது.


காட்பாடியில் இறங்கவேண்டியவர்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள்.அவர்களில் வயதான ஒரு தம்பதியினரும் இருந்தார்கள். அவர்களும் டி.ஆருடன் அறிமுகப்படுத்திக்கொண்டு,'உங்கள் பாட்டு என்றால் எங்களுக்கு நிறையப்பிடிக்கும்.எங்களுக்காக பாட முடியுமா என்றார்கள். வண்டி ப்ளாட்பாரத்தில் நுழைய ஆரம்பித்தது.அதைப்பார்த்த தம்பதியினர் வருத்தத்துடன், 'நீங்கள் பாடுவதை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு இல்லை' எனக்கூறினர். உடனே 'டி.ஆர்' அவர் பாக்கெட்டிலிருந்து ஒரு நாண்யத்தை எடுத்து,அருகிலிருந்த 'பாத்ரூம்' கதவில் தாளம் போட்டுக்கொண்டே 'வாடி என் மதுரக்காரக்கிளியே' எனத்தொடங்கும் பாடலை ராகத்துடன் பாட ஆரம்பித்தார்.அடுத்த இரண்டு நிமிடங்களில் வண்டி காட்பாடி ரயில்நிலையத்தில் நின்றது. அந்த வயதான தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'இந்த நாளை என்றைக்கும் மறக்கமாட்டோம்' என் 'டி.ஆரிடம் விடைப்பெற்று சென்றார்கள்.


வண்டியும் அங்கிருந்து கிளம்பியது. எங்களிடம் திரும்பிய அவர் ' வயசானவங்க சார்,நான் பாடாம இருந்திருந்தா,அது ஒரு குறையா அவங்களுக்கு இருந்திருக்கும்,அதனாலதான் உடனே பாட ஆரம்பிச்சேன்.ஏதோ என்னால முடிஞ்சது' என்றார். அவர் பாடியப்பாடல் அவரின் புதுப்படமான 'ஒரு தலை காதல் ' படத்திற்காக கம்போஸ் செய்திருக்கிறார்.அதை மறுப்படியும் தாளத்துடன் பாட ஆரம்பித்தார். ராகமும்,வரிகளும் வழக்கமான 'டி.ஆர்' டச்'சுடன் அருமையாக இருந்தது.அவர் பாடுவதை என் மொபைல் போனில் வீடியோவாக எடுத்தேன்.அதைக்கவனித்த அவர்,பாடி முடித்தவுடன் என்னிடம் ' மோகன், வீடியோவை 'internet'லோ வேறு யாருக்கோ கொடுத்து விடாதீர்கள்' வேண்டுமானால் 'அம்மாடி..ஆத்தாடி' பாடுகிறேன்,அதை எடுத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். நானும் ஒன்னும் கவலப்படாதீங்க சார்,அப்படியெல்லாம் பண்ணிடமாட்டேன்' எனக்கூற,அவர் 'அம்மாடி...ஆத்தாடி' பாட்டை பாட ஆரம்பித்தார்.






அடுத்த இரண்டு மணிநேரம்.மேலும் பல பயணிகள் வந்து அவருடன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்கள். பாடச்சொல்லிக் கேட்கும் போதெல்லாம், தயங்காமல் தாளத்துடன் பலப்பாடல்களை பாடினார். அரட்டை அரங்கம், தமிழக அரசியல்,சினிமா என பலரும் கேட்டக் கேள்விகளுக்கு தயங்காமல் வெளிப்படையான பதில் அளித்தார். ஏதோ ஒரு கேள்விக்கு 'தமிழகத்தில் பெண்கள் டி.வி சீரியலுக்கும்,ஆண்கள் டாஸ்மாக்'குக்கும் அடிமையாகிவிட்டனர்' என்றார்.வண்டி பெரம்பூரை நெருங்கும்போது கூட்டம் கலைந்தது.


என்னிடம் வந்த அவர் ' நான் காலேஜ் படிக்கும்போது,ரயில் பாத்ரூம் கதவில் காசை வைத்து தாளம் போட்டு பாட்டு பாடுவது வழக்கம், இன்று கதவருகே யாரும் இல்லாதபோது வந்து காசை எடுத்து இரண்டு தட்டுதட்டி பழைய அனுபவத்தைப் பெறலாம் என நினைத்திருந்தேன்.ஆனா இப்போ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம்,பலப்பாடல்களை உங்கள் அனைவருக்கும் பாடிக்காட்டியது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு மோகன்' எனக்கூறினார்.இதுநாள்வரை பத்திரிக்கை,படங்கள்,டிவி மூலமாக அவரைப்பற்றி நான் கொண்டிருந்த சில தவறான அபிப்ராயங்கள் அந்த ரயில்பாதையில் விழுந்து சிதைந்தது.

July 3, 2009

வாழ்க்கை என்பது மணம்,குணம் நிறைந்த காபி...

கல்லூரிமுடித்து சிலபல ஆண்டுகள் கழித்து ஒன்றுசேர்ந்த நண்பர்கள்குழு கல்லூரி நினைவுகளை அசைப்போட, கல்லூரி பேராசிரியர் ஒருவரின் வீட்டில் கூடினார்கள். பேச்சுவாக்கில், நடைமுறை வாழ்க்கை எப்படி போகிறது என்று பேராசிரியர் கேட்டதற்க்கு, ஏறக்குறைய அனைவரும் அலுவலக,குடும்ப வாழ்க்கை எந்திரமயமாகவும், மிகுந்த மன அழுத்தத்தை தரக்கூடியதாகவும், ஏமாற்றங்கள் நிறைந்ததாகவும் ஓடிக்கொண்டிருப்பதாக குறைப்பட்டார்கள்.
வீட்டிற்கு வந்தவர்களுக்கு காபி ஏற்பாடு செய்த பேராசிரியர், ஒரு பெரிய குடுவை நிறைய காபியையும், ஒரு பெரிய தட்டில் காபிகப்'களையும் எடுத்துவந்து மேஜையில் வைத்தார். அவர் வைத்த காபிகப்'கள் பல்வேறு வகைப்பட்டு இருந்தது,பலவண்ணங்களில்,வடிவங்களில், ப்ளாஸ்டிக், கண்ணாடி,வெள்ளி,எவர்சில்வர்,சாதாரண பேப்பர்கப் போன்றவற்றால் செய்யப்பட்ட கப்'கள் இருந்தது.அனைவரும் அவர்களுக்கு காபிகப்'களை எடுத்து வேண்டிய அளவு காபியை அதில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களுடன் வந்தமர்ந்த பேராசிரியர் இவ்வாறு கூறினார்...' நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவர் கையிலுள்ள காபிகப்'களையும்,மேஜைமீது யாராலும் தேர்ந்தெடுக்கப்படாமலுள்ள காபிகப்'களையும் பாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் நல்லவேலைப்பாடமைந்த,காஸ்ட்லியான கப்'களையே தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். விலைமலிவான,ஆடம்பரமில்லாத கப்'களை யாரும் தொடக்கூட இல்லை.இருப்பவற்றில் சிறந்ததைபெறவே அனைவரும் ஆசைப்பட்டிருக்கிறீர்கள்,ஆனால் உங்கள் அனைவருக்கும் தேவையானது சுவையான காபி,அதை எதில் குடிக்கிறீர்கள் என்று தேர்ந்தெடுப்பதிலும்,அடுத்தவனைவிட நான் சிறந்த கப்பை வைத்திருக்கிறேனா என ஆராய்வதிலும்தான் அனைவரின் கவனமும் இருந்ததே தவிர, கிடைந்த காபியை நீங்கள் ஒருவரும் ரசித்து ருசித்துக்குடிக்கவில்லை.


இதுபோலதான் உங்களின் நடைமுறை வாழ்க்கையும் அதில் நீங்கள் சந்திக்கிற துன்பங்களும்,துயரங்களும். வாழ்க்கை என்பது நீங்கள் குடிக்கும் காபியை போன்றது. சிறந்த காபிகப்'க்கு ஆசைப்பட்டு,கிடைந்த காபியை ரசித்துகுடிக்க முடியாமல் காபிகப் போன்ற வேலை,சமூக அடையாளம்,பணம்,பதவி போன்றவைகளில் சிறந்ததைப்பெற ஆசைப்பட்டு,வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க தெரியாமல் தொலைக்கிறீர்கள்....என்று முடித்தார்.

May 28, 2009

பசங்க.. பா(ப)டம் பெரியவங்களுக்கு

படத்தப்பத்தி ஒரு வரில சொல்லனும்னா, ஒவ்வொருவருக்கும் விதம்விதமான அனுபவங்களை, பாடங்களைத் தரும் படம்.

பசங்களா இருக்கவங்களுக்கு அவங்க நிகழ்காலத்தை திரையில் பார்க்கவும்,
வாலிப பசங்களா காலேஜ்'ல கும்பியடிக்குறவங்களுக்கு அவங்க சில மாதங்களுக்குமுன்
கடந்த வாழ்க்கை அத்தியாயத்தை புரட்டிப்பார்க்கவும்,

காலேஜ் முடிஞ்சி, வேலைல சேர்ந்து 'செட்டில்' ஆகிட்டோம்,அடுத்து என்னனு இருக்குறவங்களுக்கு சில்லுன்னு ஒரு காதல் அனுபவத்திற்கு ஏங்கவும், பள்ளிக்கல்லூரிப்பருவத்தில் உடன்பயின்ற நண்பர்கள், திடீரென காணாமல் எங்கே போய்விட்டார்கள் என அதிர்ச்சியுடன் திரும்பிப்பார்க்கவும்,

கல்யாணம் ஆகி, புது வாழ்க்கை,புது சொந்தங்கள்,புதுப்புது அனுபவங்கள் என மூழ்கி, களிப்புகளைக் கடந்து கடமையில் மூழ்கிபோனவர்களுக்கு,கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து, மரித்துப்போன பள்ளிக்கால நட்புகளையும்,இழந்துப்போன  குறும்பு விளையாட்டுக்களை நினைவடுக்குகளில் ஆராய்ந்துப்பார்க்கவும்,

குழந்தை(கள்) பெற்று,பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு,தன்வீட்டுச்சூழ்நிலையையும்,தன் குழந்தைகள் எதிர்பார்ப்புகளை எந்த அளவிற்கு நிறைவேற்றி இருக்கிறோம், செய்ய வேண்டியவைகள் என்ன? என்று தெரிந்துக்கொள்ளவும்,

பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு, அவர்கள் செய்யத்தவறிய, சரியாக செய்துவிட்ட விஷயங்களை பட்டியலிட்டு சரிபார்க்கவும்,

படிப்புமுடிந்து நன்றாக செட்டில் ஆகிவிட்ட,அல்லது வேலைவெட்டியின்றி வாழ்க்கையில் த(டம்)டுமாறும் தன் பிள்ளைகள்பற்றி மகிழ்ச்சியோ,கவலையோ கொள்ளும் பெற்றோர்களுக்கு, அவர்களின் கடந்த 20 ஆண்டுக்கால தாம்பத்யம், எந்த அளவுக்கு பிள்ளைகள் வாழ்க்கையை நன்றாக அமைத்தோ/அலைக்கிழித்தோ இருக்கிறது என சுயபரிசோதனை செய்துக்கொள்ளவும்,

என அனைவரையும் சிரிக்க,சிந்திக்க,சிலிர்க்க,கண்ணீர் சிந்த என அனைத்துவித அனுபவங்களையும் படம் பார்க்கும் இரண்டரை மணிநேரத்தில் நமக்கு அளித்து விடுகிறது.

எப்போதும் இரவில் படுக்கையில் படுத்த இரண்டு நிமிடங்களில் என்னைத்தழுவும் நித்திரை,
நான் படித்த ஆரம்பநிலைப்பள்ளி,கூடப்படித்த ஜெய், பாபு, தியாகு, துளசிராஜ், குப்பன், ரமேஷ், சிவக்குமார்,எழில்மாறன்,அறிவு, அம்பி(கா),மலர்(விழி), போன்றவர்களையும், தெரேசா,ஜெயமேரி டீச்சர், ஜேசுதாஸ், அருளானந்தம் வாத்தியார்கள்,தமிழய்யா பத்திநாதன்,பூபதி என பாதை அமைத்துக்கொடுத்த ஆசிரியர்களையும், ஏழாவது படிக்கும்போது பள்ளியில் புதிதாக சேர்ந்த ஜெய்குமாருக்கும் எனக்கும் படிப்பில்,முதல் ரேங்க் வாங்குவதில்,க்ளாஸ் லீடர் ஆவதில் என ஏற்பட்ட போட்டிகள், எட்டாவது படிக்கும்போது பள்ளி மாணவத் தலைவர் தேர்தலில் நானும்,ஜெய்யும் இரு அணிகளாகப்பிரிந்து போட்டியிட்டு ஜெய் 162 வாக்குகளும்,நான் 212 வாக்குகளும் பெற்று வெற்றிப்பெற்றதும், இந்த தேர்தலினால் எங்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவரும் பேசாமல் போனதும், பள்ளி நண்பர்களும்,ஆசிரியர்களும் எவ்வளவோ முயன்றும்,என் பிடிவாதத்தால் அவனுடன் பேசாமலே இருந்து,வெவ்வேறு பாதையில் வாழ்க்கைப்பயணம் தடம்மாறி, சிலவருடங்கள் கழித்து அவன் அக்கா திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வீடு தேடிவந்ததால் மறுபடியும் மலர ஆரம்பித்த எங்கள் நட்பு இன்றுவரை சரியான புரிதலுடன் எவ்வித இடருமின்றி வளர்வதும் என,பல்வேறு நிகழ்வுகளை கிளறி,அந்த ஞாபகங்களின் தாக்கத்தால் வெவ்வேறு மனநிலைகளுக்கு ஆட்பட்டு இரவு முழுவதும் என் தூக்கம் தூரதேசம் போனது.

எனினும் இன்று காலையில் எழுந்தபோது உடலும்,மனமும் எவ்வித களைப்புமின்றி, புத்துணர்ச்சியுடனும், புதுகூதுகலத்துடனும் கொண்டாட்டம் போடுவதற்கான காரணம்,படம்பார்த்த அந்த இரண்டரை மணிநேரத்தில் நானும் என் பள்ளிப்பருவத்தை மீண்டும் ஒருமுறை வாழ்ந்துப்பார்த்ததுதான்...

May 9, 2009

மரித்துப்போன மனிதம் : விஜய் டிவி நிகழ்ச்சி

கடந்த வியாழன் இரவு விஜய் டிவியில் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் செமிபைனல் ரவுண்ட் நடந்தது. அதில் கடைசியில் நடனமாடியவர் எடுத்திக்கொண்ட கான்செப்ட் 'இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள்'.சாதாரணமாக ஆரம்பித்த குழந்தைகளுடனான நடனம், அங்கு நிகழும் குண்டுவெடிப்பும்,மக்களின் அவலநிலையையும் கண்முன்னே நிகழ்த்திக்காட்டினார்கள். அந்த 10 நிமிட நடனம் பார்த்த அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தது.

வீடியோ இங்கே...

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4

அதைப்பார்த்து என்னில் எழுந்த உணர்ச்சிகளின் வடிவம் கீழே...


கண்ணீர்துளிகள் நிஜம்,
ரத்தஆறுகள் நிஜம்,
வலிகள் நிஜம்,
இழப்புகள் நிஜம்,
துடிப்புகள் நிஜம்,
ஏக்கங்கள் நிஜம்,
கொடுமைகள் நிஜம்,
பசி,பட்டினி நிஜம்,
கற்பழிப்புகள் நிஜம்,
மரணங்கள் நிஜம்,

நிதம்நிதம் இத்தகைய
நிஜங்களின் நிர்பந்தத்தில்
நாளைய விடுதலையை எண்ணி
இன்றைய விடியலாவது
விடைத்தருமா என்ற
வினாவுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கும்
விட்டில்பூச்சி கூட்டங்களாய்
நம் ரத்தத்தின் ரத்தங்கள்.

மனிதம் நம்மில் மரித்துவிட்டதா?

April 25, 2009

என் ஜன்னலுக்கு வெளியே...

2005'லிருந்து 2008 வரை தினமணி,தமிழ்முரசு,புதியபார்வை,உயிர்மை மற்றும் அவர் வலைப்பதிவு என அரசியல்,சமூகம்,இலக்கியம்,வரலாறு என பலதரப்பட்ட தளங்களின் நிகழ்வுகள் பற்றிய மாலனின் கட்டுரைகளின் தொகுப்பு ச்என்ற புத்தகமாக 'கிழக்குப் பதிப்பகத்தால்' வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் தளத்தில் 2005'லிருத்து ஏற்பட்ட ஏகப்பட்ட நிகழ்வுகள்,கலைஞர் தலைமையிலான ஆட்சி,கலைஞர் குடும்பகுழப்பங்கள்.கவுடா குடும்ப அரசியல், அத்வானியின் ஜின்னா பற்றிய பேச்சினால் ஏற்பட்ட குழப்பங்கள், சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள்,காவிரி,ராமர் பாலம்,அணுஒப்பந்த சர்ச்சைகள்,கனிமொழியின் அரசியல் பிரவேசம் என சமகாலத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றிய விவரங்களும் அதைப்பற்றிய மாலனின் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.பெரும்பாலான விஷயங்கள் சுவைப்பட எழுதப்பட்டுள்ளது.

சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளான மும்பை தொடர் ரயில்குண்டு வெடிப்புகள்,தமிழககடலோர கிராமங்களின் சுனாமிக்குபிறகான வாழ்க்கைமுறைகள், குறிப்பாக ஒரு கடலோரகிராமத்தில் பத்தாவது படிக்கும் மாணவன்,அங்குள்ள குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுக்கும் செய்தி, சுனாமிக்குபிறகும் ஏன் இன்னும் மீன்பிடி தொழில் செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ற மாலனி கேள்விக்கு 'ஐயா,கடல் எங்களுக்கு அம்மா மாதிரி, இத்தனை வருடமும் அவதான் எங்களுக்கு சோறு போட்டிருக்கா,அன்னிக்கு அவளுக்கு ஏதோ கடும்கோவம்,அடிச்சிட்டா, அதனால அவள விட்டு போய்விடமுடியுமா' என்ற யதார்த்தமான பதில் பளீரென என்னை அறைந்தது.

'பாரதியின் மரணம் எழுப்பிய கேள்விகள்' என்ற கட்டுரை,திருவல்லிக்கேணியில் யானையால் தூக்கியெறியப்பட்டதால் பாரதி மரணமடைந்தார் என்று நினைத்துக்கொண்டிருந்த என் அறியாமையை தெளிவுப்படுத்தியது.

'மூளையை மட்டும் கழற்றி வைக்க முடிந்திருந்தால்..' என்றக்கட்டுரையில் மாலன் 'சிவாஜி' படம்பார்த்த அனுபவத்தையும் அதைச்சார்ந்த அவரின் அலசல்களையும் சொல்லியிருந்தார். காட்சிஅமைப்புகளும், கதையும் லாஜிக்கலாக இல்லை என்பது அவர் கருத்து. 'மாலன் அவர்களே, தமிழ்படங்களை,குறிப்பாக ரஜினி படங்கள்,அதுவும் சங்கர்(ஷங்கர்???) இயக்கிய படத்தில் லாஜிக் பார்ப்பது உம் தவறு.படம்பார்க்கும் மூன்று மணி நேரத்தில் திரையில் விரியும் சாகசங்களையும்,அழகி(????)களையும்,பர்ந்துபர்ந்து அடிப்பதையும், ஒரே பாட்டில்(பாட்டிலில் இல்லை.....) கட்டாந்தரையிலிருந்து, கோபுரத்திற்கு உயரும் மாயாஜாலத்தையும், இன்னபிற க்ராப்பிக்ஸ் கலக்கல்களையும் வாய்ப்பிளந்து பார்த்து,இனிமையாக பொழுதைக்கழிப்பதை விட்டுவிட்டு,யார் உங்கள் 'மூளையையெல்லாம் உபயோகப்படுத்தச் சொன்னது? (நான் ரஜினி ரசிகன் என்பது இங்கு தேவையற்ற தகவல்)

அரசியல் சார்ந்த 'நா காக்க' என்ற கட்டுரையில் 1971 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 'வங்கதேசம்' தொடர்பான போர் நடந்தசமயம் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனும்,இந்திராகாந்தியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர்,ஆனால் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.அந்த சமயத்தில் நிக்சன் அவர் உதவியாளரிடம் இந்திராவை 'கிழட்டு சூனியக்காரி' என திட்டி தீர்த்துள்ளார்.இதைப்பற்றிய விவரங்கள் ,அமெரிக்க அரசாங்க வழக்கப்படி 30 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டு சர்ச்சையானது நாம் அனைவரும் அறிந்ததுதான்.அந்த சமயத்தில் பிரிட்டன் சென்ற இந்திராகாந்தி பிபிசிக்கு பேட்டியளித்தார்,இந்தியா ஏன் வங்கதேசப்போர் விஷயத்தில் பொறுமைக்காக்கக்கூடாது எனற கேள்விக்கு இந்திரா 'பொறுமையாக இருந்தால் படுகொலைகள் நின்றுவிடுமா?கற்பழிப்புகள் நின்றுவிடுமா? கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?ஹிட்லர் படையெடுத்து வந்தபோது,யூதர்கள் சாகட்டும் என நீங்கள் பொறுமை காத்தீர்களா? என பொரிந்துதள்ளியுள்ளார்' என மாலனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய நிலைமையில் இலங்கையிலும் மேலே இந்திராகாந்தி சொல்லியுள்ள நிலைமைதான்.ஆனால் இந்திராவின் மருமகளும்,தமிழகத்தலைவர்களும்,இலங்கையில் உள்ள கடைசித்தமிழனின் தலை வெட்டுப்பட்டு சாயும்வரை மிகவும் பொறுமையாக 'கடையடைத்தும்,உண்ணாவிரதம் இருந்தும்,தந்தியடித்தும்,தொலைக்காட்சிகளில் சிறப்புத்திரைபடம் காண்பித்தும் தங்கள் பொறுமையைக் காட்டி, 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்ற பழமொழிக்கு புதுஅர்த்தத்தை கற்பித்துக்கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாகப்பார்த்தால்,'என் ஜன்னலுக்கு வெளியே' புத்தகம் கடந்த சில ஆண்டுகளில் நம்மைச்சுற்றி நடந்த விஷயங்களின் தொகுப்பை,நாம் கவனிக்கத்தவறிய சில செய்திகளையும்,மறந்துபோன/மருத்துப்போன நிகழ்வுகளையும் அசைபோடவைக்கிறது.


விவரங்களுக்கு http://nhm.in/shop/978-81-8493-063-4.html

April 20, 2009

டாடா நேனோ'வும்,நானும்...

இன்று அலுவலகத்தில் வழக்கமான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது,அலுவலக நண்பர் ஒருவர் என்னிடம் வந்து,டாடா நேனோ கார் பார்வையாளர்களுக்காக அலுவலக கார் பார்க்கிங்கில் வைத்திருக்கிறார்கள்,பார்க்க செல்லலாமா என கேட்டார்....உடனே கிளம்பிச் சென்றோம்.

ஒரு பெரும்கூட்டம் காரைச்சுற்றி நின்றுக்கொண்டிருந்தது.வெளியிலிருந்து பார்க்கையில் ரொம்பக்குட்டியாய் தெரிந்த கார்,உள்ளே அமர்ந்துப் பார்த்த போதுதான் innovative design and quality of work தெரிந்தது.

உண்மையிலேயே மிகவும் சிறப்பாக வடிவமாக்கப்பட்டுள்ளது காரின் உள்புறமும்,வெளிப்புறமும்.பின்சீட்டில் என்னளவுள்ள மூன்று பேர் தாராளமாக அமரமுடிந்தது.

நான் ஏறக்குறைய ஆறடி உயரம்.டிரைவர் சீட்டில் அமர்ந்தால் மாருதி 800,ஆல்டோவில் கால்முட்டி முன்புறமுள்ள டேஷ்போர்டில் இடிக்கும்.அண்மையில் நண்பன் ஒருவனுக்கு கார் வாங்க அலைந்தபோது, மர்ருதி சுசூகியின் 'ஏ ஸ்டார்' ஓட்டிப்பார்த்தேன்.டிரைவர் சீட்டில் அமர்ந்தால், கால் முட்டி நன்றாக முன்புறத்தை இடித்தது. சீட்டை மிகவும் பின்னுக்கு தள்ளி அமர்ந்தாலும் முட்டி இடித்தது.கஷ்டப்பட்டுதான் ட்ரைவ் செய்ய முடிந்தது.

அதே எதிர்ப்பார்ப்புடன் நேனோ'வில் டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். எந்தவிதப்பிரச்சனையும் இல்லை.சீட்டும் பின் தள்ளாமல் இருந்தது.ஸ்டியரிங் வீலையும்,கியர்,கிளட்ச்,ஆக்சிலேட்டர் மற்றும் ப்ரேக் ஆகியவற்றை சிறந்த முறையில் கையாள(காலாள???) முடிந்தது.நான் கடந்த ஆறு மாதங்களாக hyundai-i10 ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.என் காரில்,டிரைவிங் சீட்டில் அமர்ந்தால் எந்த அளவுக்கு சவுக்கரியமாக உணர்வேனோ,அதே அளவு சவுக்கரியம் நேனோவிலும் இருந்தது.உண்மையிலேயே, டாடா என்சினியர்கள் சிறந்த தயாரிப்பை அளித்திருக்கிறார்கள். காரின் மற்றப்பகுதிகளும் சிறந்த முறையில் அமைக்கப்பெற்றுள்ளது.

காரின் ரிவர்யூ மிர்ரர்கூட தேர்ந்தமுறையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஸ்டெப்னி டயர்,பெட்ரோல் போடுவதற்கான அமைப்பு ஆகியவை உள்ளது.ஒவ்வொருமுறை பெட்ரோல் போடும்போதும் காரின் முன்புறத்தை திறந்து மூடுவது ஒரு அசவுக்ரியமாக இருக்கும்.

காரின் வெளிப்புறத்தோற்றமும் மிகச்சிறப்பாக,ஒரு 'ரிச்லுக்' தருகிறது.கதவுகள்,சீட்கள் அனைத்தும் மிக மெலியதாக அமைக்கப்பட்டுள்ளது.வண்டி ஏதாவது ஆக்சிடென்ட் ஆனால் அப்பளம்கூட அல்ல,அணுஅணுவாக சிதைந்துவிடுமோ என்ற ஐயம் ஏற்பட்டது.

காரை இன்று ஓட்டிப்பார்க்கமுடியவில்லை,கூட்டம் அதிகமாக இருந்ததால்.நாளையும் காரை பார்வைக்கு வைக்க இருக்கிறார்கள்,அப்போது முயன்று பார்க்கவேண்டும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் 'டாடா' அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியிருகிறார்கள் என்றே தோன்றுகிறது. குறுகிய தூர,வழக்கமான போக்குவரத்திற்கு ஏற்ற வண்டியாக நேனோ வெற்றிப்பெறும்.

April 14, 2009

அசல் குருவி - திரைவிமர்சனம்

அலுவல் நெருக்கடிகளாலும்,வேறு சில வேலைகளாலும்,ஆன்லைனில் டிக்கட் கிடைக்காததாலும், சரியான கம்பெனி அமையாததாலும்(போதும்பா பில்ட்அப்....),வழக்கமான சோம்பேறிதனத்தினாலும் (இதுதான் உண்மை...) படம் வெளியாகி ரொம்ப நாட்களாகனப்பிறகு சென்ற வெள்ளியிரவு நண்பனொருவன் டிக்கட் புக் செய்துவிட்டு அலைபேசியில் அழைத்தான். அன்று இரவு உணவும் அவன் வீட்டிலேயே என்று அழைத்ததால் வேறுவழியில்லாமல் அவன் வீடு சென்று ஒரு பிடிபிடித்துவிட்டு இரவு 10 மணிக்காட்சிக்கு நண்பனின் குடும்பத்தோடு படம் பார்க்கச்சென்றோம்.

பரபரப்பாக ஆரம்பித்தது படம்,அமெரிக்கன் இங்கிலீசில் பேசிக்கொண்டு ஏர்போர்ட்விட்டு வரும் நாயகன்,வெளியே வந்ததும் லோக்கல் இங்கிலிபீசில் பீட்டர் உட்டுக்கினு வராரு..மேட்டரு இன்னானா....நாளிக்கி காத்தாலிக்கா ரிலீசாகிற தலீவர் பட்த்தோட திர்ட்டு டிவிடி'ய மலேசியாலருந்து சுட்னுவந்து,லோக்கல் டமில்நாட்லே ரிலீஸ் பண்ற பிரபுகிட்ட அடியாளா மெயின்டைம் வேல(பார்ட்டைமா MSc compSci படிக்கிறார்)பாக்ராரு நம்ம ஹீரோ...நம்ம ஆளு சோக்கா CD'ஐ எட்துனு வந்தத பாத்து காண்டான வில்லன் போலிஸ்கிட்ட போட்டுகு(கெ)டுத்துற்றான்...போலிசு பக்காவா போயி எல்லாதியும் சீஸ் பண்ணி, ஒரிசினல் CD'ஐ ஜன்னல் வழியா வில்லன்கிட்ட குடுத்துற்றாங்கோ...அங்க ஆரம்பிக்ற சீனு...காங்கோ... மலேசியா, சென்னைனு சுத்தோ சுத்துனு சுத்து கட்சியா ஏர்போர்ட்ல வந்து முடியுது...

படத்தில் கதைன்னு தேடினால் மேற்கூறியவையும்,இன்னும் ஒரு 4 வரியும் சேரும்.ஆனால் திரைக்கதையிலும்,தேர்ந்த நடிப்பிலும்(சூர்யா,பிரபு & விஜய் டிவி நட்டு),சுமாரான இசையிலும் படத்தை தேத்திவிடுகிறார்கள். கில்லிக்கு பிறகு விறுவிறுப்பான படம்.சிறப்பான கேமிரா காட்சிகளும், புத்திசாலிதனமான திருப்பங்களும்,பரப்பரப்பான சண்டைக்காட்சிகளும், கிளுகிளுப்பான(????) தமனாவும் நம்மை போர் அடிக்கவிடாமல் நாற்காலியில் உட்கார வைத்துவிடுகிறார்கள்.

காங்கோவில் வரும் அந்த சண்டைக்காட்சி,ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் (கேசினோ ராயல்) சண்டைக்காட்சிக்கு சவால்விடும் விதத்திலும்,குருவி படத்தில் விஜய் போடும் சண்டைக்கு நக்கல்விடும் விதத்திலும் அமைந்துள்ளது.சூர்யாவின் இளமையும்,துடிப்பான நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. 'நேருக்கு நேர்' படத்தில் LKG'யாக இருந்த சூர்யா,இந்த படத்தில்
IIT'ல் GPA 10 வைத்திருக்கும் லெவலில் அசத்துகிறார்.

ஒட்டுமொத்தமா சொல்லனும்னா,கொடுத்த காசுக்கும்(நான் எங்க கொடுத்தேன்... சாப்பாடும் போட்டு,டிக்கட்டும் ஸ்பான்சர் செய்த நண்பன் அரவிந்த் வாழ்க....),செலவிட்ட 3 மணி நேரத்திற்கும் பங்கம் வராம 'இன்றைய பொழுது இனிதே கழிந்தது' என்ற நிறைவுடன் வரமுடிகிறது.

பார்த்த படத்தோட பேரு 'அயன்'... ஆக்சுவலா பார்த்தா இந்த படத்துக்கு 'குருவி'ங்ற பேரு ரொம்ப பொருத்தமா இருந்து இருக்கும்.ஆனா 'வருங்கால(வரும்'ங்கறீங்க?????????) சூப்பர்ஸ்டார்' இளைய தளபதி 'விஜய்' படத்தோட பேர்ல மட்டும் 'குருவி'ய வச்சிட்டு மத்ததெல்லாம்(நடிப்பு,கதை,திரைக்கதை) கோட்டைவிட்டதால படத்த ஊத்திமூடிட்டாரு... அதனாலதான் 'அயன்'னு சொல்லாம 'அசல் குருவி'னு தலைப்பு..(அட...'அசல்' தல அஜித் நடிக்கும் அடுத்த படம்.. தல'யின் அசல், குருவி மாதிரி இல்லாம இருக்க...வாங்க எல்லாரும் 'கூட்டு ப்ரார்த்தனை' செய்வோம்.

3 முட்டாள்கள் கடைசி பெஞ்சில்....

அது ஆண்களுக்கான ஆஸ்டல்.முதல்வருடம் சேர்ந்து ஒரே அறையில் தங்கியிருக்கும் மூன்று மாணவர்கள் அவர்களின் சீனியர்களின் முன்பாக 'பிறந்தநாள் உடையில்' நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு சீனியர் காலி கோக் பாட்டில்களை எடுத்து வருகிறான்..எதற்காக?

இவ்வாறு ஆரம்பிக்கும் கதை ,அந்த மூன்று நண்பர்களுக்கிடையே அரும்பும் நட்பு,பிரச்சனைகள்,கடினமான IIT வகுப்புகள், பழமையை போதிக்கும் புரபசர்கள்,விடுமுறை கொண்டாட்டங்கள், கண்டவுடன் காதல், நண்பர்களுக்கிடையேயான மோதல், குடும்பத்துக் குடைச்சல்கள்,நண்பர்களின் உதவிகள்,உபத்திரங்கள், தேர்வுகள்,தோல்விகள், தற்கொலை முயற்சிகள், சஸ்பென்சன்,காதல் தோல்வி என பலதரப்பட்ட பாதைகளில் பயணித்து சில ஆண்டுகள் அந்த மூன்று நண்பர்கள் கழித்த கல்லூரி வாழ்க்கையின் பரிமாணங்களைக் காட்டி வழக்கமான சுபமுடிவுடன் முடிகிறது.


நான் மழைக்குக்கூட IIT பக்கம் ஒதுங்கியது இல்லை.இஞ்சினியரிங் படிப்பையே ரொம்பக் கஷ்டப்படாமல் 4 வருடத்தில் எந்த அரியரும் வைக்காமல்(நம்புங்கப்பா.....நிஜமாத்தான்...) பாஸ் செய்துவிட்டு புத்தகங்களை தூக்கிப்போட்டதோடு சரி... இந்தக்கதையின் நாயகர்கள் என்னைப்போல ஒழுங்காக படிக்காமல்( டேய்...இதெல்லாம் ரொம்ப ஓவரு....) முதலாமாண்டிலிருந்தே குறைவான மதிப்பெண்கள் பெற்று GPA'வில் 5 க்கும் 6க்கும் நடுவில் அல்லாடுகிறார்கள். அவர்களின் நிலைக்கு IIT'யும் அதன் கடினமான பாடமுறைகளும்,புரபசர்களும் காரணம் என்ற கற்பிதத்தோடு, கல்லூரி வாழ்க்கையின் மற்ற சுகங்களை அனுபவிக்கலாம் என திசைமாறி போகிறார்கள்.


நாவலில் IIT வாழ்க்கையின் மறுபக்கங்கள் சிறப்பாக திறந்து காண்பிக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் தனித்தன்மைக்கும், செயல்திறனுக்கும் வேலைக் கொடுக்காத கல்விஅமைப்பு,எதற்கும் உதவாத GPA சார்ந்த ரேட்டிங், மாணவர்களின் நலனில் அக்கறைக்கொள்ளாத புரபசர்கள் என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது.


கடைசிக்கட்டத்தில் GPA'வை உயர்த்த(இன்னொரு காரணம், ஹரி டாவடிக்கும் நேகா, இம்மூவரின் head of dept செரியனின் பெண், செரியனிடம் நல்ல பெயர் வாங்க,அவர் எடுக்கும் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற ஒரு வழி,கேள்வித்தாளை செரியனின் அறையிலிருந்து ஜூட் விடுதல்) கேள்வித்தாள்களை திருட மூன்று நண்பர்கள் போடும் திட்டமும், அதில் ஏற்பட்ட சொதப்பலால் மூவரும் மாட்டிக்கொண்டு ஒரு செமஸ்டர் சஸ்பெண்ட் ஆகிறார்கள்.


கடைசியாக அவர்கள் கொடுக்கும் project proposal வீரா என்ற புரபசரின் பரிந்துரையால் ஏற்க்கப்பட்டு அதை வெற்றிகரமாக முடித்து (சினிமாவாக எடுத்தால் இந்த நிகழ்வுகளை ஒரே பாடலில் முடித்துவிடலாம்,படையப்பா 'வெற்றிக்கொடி கட்டு' பாடல் பாணியில்) கேம்பஸில் வேலையும் வாங்கி எப்படியோ வாழ்க்கையில் செட்டில் ஆகிறார்கள்.


சேதன் பகத்தின் நாவல்கள் ஒரு மசாலா திரைப்படத்திற்கேயுரிய அனைத்து flavour'களையும் கொண்டுள்ளது.முதல் பக்கத்தை படிக்க ஆரம்பித்தால் முழு புத்தகத்தையும் முடிக்காமல் கீழே வைக்க முடிவதில்லை. ஒரு சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்கு படித்து முடித்து விட்டேன்...நோ காபி,நோ லஞ்ச்,நோ ப்ரேக்...


இந்த நாவலும் இந்தியில் அமீர்கான்,மாதவன் கரீனா கபூர் நடிப்பில் தயாரிப்பில் உள்ளது.திரைக்கதையை நன்றாக கையாண்டால் ஒரு நல்ல படம் கிடைக்கும். சமீபத்திய 'ஆனந்த தாண்டவம்'- சுஜாதாவின் பிரிவோம்,சந்திப்போம் நாவலை ஒட்டி எ(கெ)டுத்த படம்போல் சொதப்பாமல் இருந்தால் சரிதான்.


சேதன்பகத்தின் லேட்டஸ்ட் நாவலான 'Three mistakes of my life' அண்மையில் வாங்கிவிட்டேன்.படிக்கதான் இன்னும் நேரம் கிடைக்கவில்லை.கடந்த வாரயிருதியில் சாருநிவேதிதாவின் 'ராஸ லீலா' என் இரண்டு நாட்களையும் சாப்பிட்டுவிட்டது.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று பிறந்துள்ளது
'ஸ்ரீவிரோதி' ஆண்டு...
விரோதங்களை மறந்து,
துரோகங்களை துறந்து,
குரோதங்களை குறைத்து,
சொந்தங்களை அணைத்து,
பந்தங்களை பணிந்து,
நண்பர்கள் நலமாய்,
அன்பே சிவமாய்,
என்றும் வளமாய்
வாழ
இந்நன்னாளில்
என் இனிய
நல்வாழ்த்துக்கள்....

March 9, 2009

அதிசயம்...ஆனால் உண்மை

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும், முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப், பனைகளுக்குப் பயன் உண்டு. பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவு:
பதனீர் - 180 லிட்டர்
பனை வெல்லம் - 25 கி
பனஞ்சீனி - 16 கி
தும்பு - 11.4 கி
ஈக்கு - 2.25 கி
விறகு - 10 கி
ஓலை - 10 கி
நார் - 20 கி.

தகவல்கள் போதுமா? நான் சொல்லவந்த விஷயம் என்னன்னா,மேலே சொன்னவைகள் நாம் அனைவரும் பெரும்பான்மையாக அறிந்ததுதான்.ஆனால் நேற்று ஒரு குடும்ப விழாவில் கலந்துக்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினத்திலிருந்து 15கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் 'பண்ணந்தூர்' என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன்.அந்த ஊரில் அதிசயப்பனை மரம் இருப்பதாக்ச் சொல்லி அதைக்காண அழைத்துச் சென்றார்கள்.




அங்கே இரண்டு பனைமரங்கள் நடப்பட்டு பலக்கிளைகள் பரப்பி ஆலமரம்போல பரந்து விரிந்துக்காட்சி தந்தது.பலவருடங்களுக்கு முன்பு மலேசியா சென்ற இந்த ஊர்க்காரர் ஒருவர்,அங்கிருந்துக் கொண்டுவந்து நட்ட பல பனைச்செடிகளில் இரண்டுமட்டும் வேறூன்றி வளர்ந்து இன்று பிரமாண்ட மரமாகாக் காட்சிதருகிறது.
நான் கண்ட அதிசயக்காட்சியை வலையுலக தமிழ் மக்களும் கண்டுக்களிக்க க்ளிக்'கியக் காட்சிகள் புகைப்படங்களாக மேலே.

March 7, 2009

மாத்தி யோசி...

அவர் முதல்முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த காலக்கட்டத்தில் கல்வி அறிவு மிகமிகக்குறைவாக இருந்தது. நிலைமையை ஆராய்ந்தபோது,வறுமைக்காரணமாக சிறுவர்கள் வேலைக்குப்போய் சம்பாதித்து உண்ணவேண்டியிருப்பது தெரியவந்தது. சொல்லப்போனால்,முதல்வரே அவர் சிறுவனாக இருந்த காலத்தில் குடும்ப வறுமைக்காரணமாக படிக்க முடியவில்லை.

'செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' என வள்ளுவர் ஒரு திருக்குறளில் சொல்லியிருப்பார்.ஆனால் செயல்முறை வாழ்க்கையில் வயிற்றில் ஏதாவதிருந்தால்தான் தன்னுணர்வு பெற்று,ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதைக் காது கொடுத்து கேட்கமுடியும் என்பதை அந்த முதல்வர் அறிந்திருந்தார்.

ஆகவே,அனைத்துப் பள்ளிகளிலும் 'இலவச மதிய உணவு' என்ற ஒரு அருமையான திட்டத்தை ஆரம்பித்தார்.ஒரு வேளையாவது தன் மகன்/மகள் நல்ல சாப்பாடு சாப்பிடட்டும் என பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்கள். அந்த உணவை உண்டு,மாணவர்களும் செஞ்சோற்றுக் கடனாக நன்கு படித்து அந்த மாநிலத்தை இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் சிறந்ததாக மாற்றினார்கள்.

அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் காமராஜ்.அவர் காதலித்தக் கொள்கை 'மாற்று வழி'.வள்ளுவனின் குறளுக்கான பொருளை மாற்றி யோசித்ததால் ஒரு கல்விப்புரட்சி பிறந்தது.

March 5, 2009

வானமே எல்லை

புகைப்படம் : கல்யாண் சுப்ரமணி & ஷிவானி சுதாகர்
புது உலகம்தான்
இது நமக்கு!
புதுமைகளும்,
புதிர்களுமே
காத்திருக்கின்றன,

வழியெங்கும்
நம்மை வரவேற்க்க.

அடுத்தவர்களை
எதிர்ப்பார்க்காதே,
அவநம்பிக்கை
கொள்ளாதே!
நமக்கு நாமே
எதிர்கொள்வோம்,
காத்திருக்கும்
சவால்களை!

வானம்தான்
நமக்கு எல்லை,
அடையும்வரை
உறக்கம் இல்லை.


கைக்கோர்த்து வா
நண்பனே!

உலகத்தை வெல்லவே
புதிதாய்
பிறந்திருக்கிறோம்
நாம்.

கல்லூரிக்கால நட்பு Vs கம்ப்யூட்டர் கால நட்பு


புதிய ஆடை!
முறுக்கு மாலை!
போர்வை போர்த்தி
தர்ம அடி!
சைட் அடிக்கும்
பெண்களின் பெயர்கள்,
பிறந்தநாள் கேக்'கில் என,
கொண்டாடப்பட்ட
நண்பர்களின் பிறந்தநாட்கள்;
இப்போதெல்லாம்
யாஹூ ரிமைண்டர் மெயில்
வந்தால்தான்
நியாபகத்திற்கு
வருகிறது!

March 2, 2009

ஒரு இரவு,கால்சென்டர்,3 ஆண்கள்,3 பெண்கள்,நான் கடவுள்

கடந்த வார இறுதியில் ஷாப்பர் ஸ்டாப்'க்கு ஷாப்பிங் செய்யலாம் என சென்றிருந்தேன்(உபயம்: கிரெடிட் கார்ட் மூலம் கிடைத்த கிப்ட் கூப்பன்கள்).கிட்டத்தட்ட இரண்டு மணிநேர அலசலுக்குப்பிறகு சில துணிமணிகள் எடுத்துவிட்டு,பில் போட்டப்பிறகு, பேண்ட்களை என் உயரத்திற்கேற்ப மாற்றித்தைத்துக் கொடுக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என சொல்லிவிட்டார்கள்.வேறுவழியில்லாமல்,மீண்டும் முழு ஷாப்பர் ஸ்டாப்பை வலம்வரத்தொடங்கினேன்.அப்போது அங்குள்ள 'புத்தக விற்பனைப்பிரிவில் நுழைந்தேன்.

நான் வழக்கமாக தமிழ் புத்தகங்கள் மட்டுமே வாங்கும் பழக்கம் உள்ளவன்.சென்னைக்கு செல்லும்போதெல்லாம், குறைந்தப்பட்சம் ஒரு ஆயிரம் ரூபாய்காவது புத்தகங்கள் வாங்கிவிடுவேன்.இந்த ஆண்டு புத்தகச்சந்தைக்கு தவிர்க்கமுடியாத காரணங்களால் வரமுடியவில்லை. வீட்டில் இருந்த அனைத்துப் புத்தகங்களையும்,ஒருமுறைக்கு இருமுறை என பலமுறைப் படித்துவிட்டேன்.இங்கே மருந்துக்குக்கூட ஒரு தமிழ்புத்தகமும் இல்லை.சரி கிளம்பலாம் என நினைத்துத்திரும்பும்போது,கைப்பட்டு ஒரு புத்தகம் கீழே விழுந்தது.எடுத்து பார்க்கும்போது அதன் தலைப்பு 'One Night @ the call center - by Chetan Bhagat' என இருந்தது.



நான் அதிகம் ஆங்கிலப்புத்தகங்கள் படித்ததில்லை. அமெரிக்க வாசத்தின்போது, வேறுவழியில்லாமல் அங்குள்ள நூலகத்திலிருந்து Sidney Shelton' புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து,அவரின் அனைத்து நாவல்களையும் படித்து முடித்துவிட்டேன்.அதற்குப்பிறகு வேறு எந்த ஆங்கில புத்தகங்களையும் படிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.

இந்தபுத்தகத்தின் தலைப்பு என்னை வசீகரித்தது.பின் அட்டையில் கதையின் சிறுசுறுக்கத்தைக் கொடுத்திருந்தார்கள்.கதையின் ஆசிரியர் ஒரு இரவுநேர ரயில் பயணத்தின்போது ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார்,அவளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது,அந்தப்பெண் அவர் ஒரு எழுத்தாளர் எனத்தெரிந்துக்கொண்டு,அவளிடம் ஒரு கதைக்கான மூலம் இருப்பதாகவும், எழுத்தாளர் அக்கதையைக் கண்டிப்பாக எழுதுவதாக வாக்களித்தால் சொல்லுவதாகவும் சொல்கிறாள்.

முதலில் மறுக்கும் அவர்,கதையின் 'one liner' என்ன என்றுக்கேட்கிறார். 'இந்தக்கதை ஒரு கால்சென்டரில் வேலைச் செய்யும் ஆறுப்பேரின் வாழ்க்கையில் ஒரு இரவில் நடக்கும் நிகழ்வுகளும்,அப்போது அவர்களுக்கு வரும் ஒரு தொலைப்பேசி அழைப்பும் ஆகும்.அந்த தொலைப்பேசியில் பேசுபவர் கடவுள்',என்பதேயாகும்.

இக்கதையின் ஆசிரியர்போல எனக்கும் முழுக்கதையைப் படிக்கும் ஆவல் மிகுந்து அந்தப்புத்தகத்தை வாங்கிவிட்டேன்(95 ரூபாய்). துணி தைத்துக்கொடுக்க இன்னும் 40 நிமிடங்கள் இருந்ததால்,வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அமர்ந்து புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.

கதை,அதில்வரும் ஒரு கேரக்டர்(ஷ்யாம்) கதையை வழிநடத்திச் சொல்வதுப்போல ஆரம்பிக்கிறது.ஒரு மாலைநெரம்,தூக்கத்திலிருந்து விழிக்கும் ஷ்யாம்,அவசர அவசரமாக அலுவலகம் செல்ல தயாராகி,வாசலில் வந்துநிற்கும் கால்சென்டர் பிக்கப் வண்டியில் பயணம் செய்ய ஆரம்பிக்கிறான்.வழியில் அவனுடைய குழுவிலே வேலைச்செய்யும் மற்ற 5 பேரை(மிலிட்டரி அங்கிள்,ராதிகா,வரூம்,பிரியங்கா,இஷா)ஏற்றிக்கொண்டு அலுவலகம் செல்கிறார்கள்.

இந்த ஆறுப்பேருக்கிடையே அந்த ஒரு இரவில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், நட்பு, ஏமாற்றம், சண்டை, சந்தேகம், காதல், சோகம், அவநம்பிக்கை, துரோகம், தோல்விகள், சந்தோஷங்கள் எனக்கதை பயணிக்கிறது.இக்கதை 2005'க் வெளிவந்திருந்தாலும்,இன்றைய தேதியில் BPO அவுட்சோர்சிங் துறையில் உருவாகியுள்ள தேக்கத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள வேலைஇழப்பு அபாயத்தையும்,அங்கு வேலை செய்பவர்களின் நிலையையும் விளக்கமாக சொல்கிறது.

அன்றைய இரவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளால் மனம் வெதும்பிய ஆறு பேரும் ஒரு க்ளப்'பிற்கு சென்று மது அருந்திவிட்டு அலுவலகத்திற்கு திரும்பும் வழியில் ஒரு விபத்தில் மாட்டிக்கொண்டு,அவர்களுக்கு உதவிசெய்ய யாருமற்ற சூழலில் மரணத்தை எதிர்நோக்கும் வேளையில் ஷ்யாமின் அலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது.அதை எடுத்து,யார் பேசுவது எனக்கேட்டால் 'நான் கடவுள்' என பதில் வருகிறது.

கடவுள் அவர்களுடன் நட்புடன் உரையாடி அவர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளுக்கான காரணங்களையும்,அதிலிருந்து மீளும் வழியையும் சொல்கிறார்.அந்த விபத்திலிருந்தும் அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.அதன்பிறகு அவர்கள் எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகளால் அவர்களை வாட்டிய மேனேஜர் இந்த ஆறு பேர் விரித்த வலையில் மாட்டிக்கொள்வதும், அதனால் வேலையிழப்பிலிருந்து கால்சென்டர் ஊழியர்கள் தற்காலிகமாக தப்பிப்பதும்,ஷ்யாம்-பிரியங்கா காதல் சுபத்தில் முடிவதும் என ஒரு திரைப்படத்திற்கேயுரிய நம்பமுடியாத விதத்தில் கதை முடிகிறது.இக்கதையே 2008'ல் சல்மான்கான் நடிக்க 'Hello' என்ற இந்தி திரைப்படமாக வெளிவந்து திரைக்கதை சொதப்பலால் தோல்வியடைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிந்தித்துப் பார்த்தால்,இன்றைய IT/BPO உபயத்தால் ஒரு இளைய தலைமுறையே அளவுக்கதிகமான பணமும் அதனால் கிடைக்கும் பகட்டான வாழ்க்கையும்தான் நிரந்தரம் என்ற மாயவலையில் சிக்கி, தன் படிப்புக்கும்,திறமைக்கும் தீனிப்போடாத ஒரு வேலையில் வேறுவழியின்றி மாட்டிக்கொண்டு அசட்டுத்தனமான, நிச்சயமற்ற ஒரு வாழ்க்கையில் தன் சுயத்தை தொலைத்துவிட்டு உழன்றுக்கொண்டிருக்கும் அவலநிலையை இக்கதை முகத்தில் அறைவதுப்போல சொல்லிக்காட்டுகிறது.

கதை நான் வேலை செய்யும் 'பொட்டி தட்டும் தொழிலைச்சார்ந்தும்,இன்றைய உலகப்பொருளாதார சூழலால் நிலவும் நிச்சயமற்ற வாழ்க்கைமுறையையும் சார்ந்து செல்வதால் ஒரே மூச்சில் 3 மணி நேரத்தில்(ஏறக்குறைய 280 பக்கங்கள்) படித்து முடித்துவிட்டேன். ஒருமுறைக் கண்டிப்பாக படிப்பதற்கேற்ற புத்தகம்.படிக்கக்கிடைத்தால் தவறவிடாதீர்கள் என சிபாரிசு செய்கிறேன்.

February 16, 2009

நான் கடவுள் ! நிஜத்தின் தரிசனம்


கடைசியாக நான்(னும்) கடவுள் பார்த்தாகிவிட்டது.ஏற்கனவே பல பதிவர்கள் படத்தைப் ப்ரேம் பை ப்ரேம் அலசிக்காயப் போட்டுவிட்டதால் என்னைப் பாதித்த,ரசித்த விஷயங்கள் மட்டும் இங்கே....


இளையராஜா...விவரிக்க வார்த்தைகள் இல்லை...டைட்டில் பாடல் மிகவும் அருமை...அதன் அர்த்தங்கள் புரியவில்லை எனினும்,இசையில் மனதை இழுத்துக்கட்டிப்போட்டுவிடுகிறார்....ஓம் சிவஹோம்...நம்மில் உண்டாக்கும் அதிர்வுகள் மெல்லிய மன இழைகளைப் பின்னிப்பிணைத்து ஒவ்வொருமுறைக் கேட்கும்போதும் ஏதோ ஒரு ஏகாந்தமயக்கத்தில் மனதை உள்ளிழுத்துச் சென்று அழுத்திவிடுகிறது. 'பிச்சைப்பாத்திரம்' பாடல்,பாலா அதுவரை திரையில் விஷுவலாகக் காட்டிய நிஜமுகங்களின் சோகத்தை,அந்த ஜீவனை ஒரே பாடலில் தன் இசை சாம்ராஜ்ஜியத்தால் நிருவிவிடுகிறார். பிண்ணனி இசையில் தான் ஒரு சக்ரவர்த்தி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.சண்டைக்காட்சிகளில் ரௌத்ரமும்,வீர்யமும் கலந்த அதிரடி பிண்ணனி இசை,நம்மில் உறங்கிக்கிடக்கும் மிருகத்தை தட்டி எழுப்பி வில்லன்கள் மேல் வன்மம் கொள்ள வைத்து, வில்லன்களை ஆர்யா அடிக்கும் ஒவ்வொரு இடியையும் குரூரத்துடன் ரசிக்கவைக்கிறது.


பூஜா...க்ளைமாக்ஸ் காட்சி ஒன்று போதும்...எந்த நடிகைக்கும் இனி எப்போதும் கிடைக்காத வேடம்..பூஜா என்ற நடிகை எந்த ஒரு சீனிலும் தெரியவில்லை...


முருகனாக நடித்த கிருஷ்ணமூர்த்தி...நாயகனைவிட அதிகமாக நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும்,நடிக்காமல்,முருகனாகவே வாழ்ந்துக்காட்டியிருக்கிறார். திருநங்கையும், இதர நிஜபாத்திரங்களும் தங்கள் வாழ்க்கையை திரையில் காட்சிப் பொருளாக்கியிருக்கிறார்கள்.


ஆர்யா...மூன்றுவருட தவத்தின் பலன்,அடுத்த 30 வருடங்களுக்கு திரையுலகில் நீடித்து நிலைப்பதற்க்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. விக்ரம்,சூர்யாபோல, இந்த அடிதளத்தை புத்திசாலிதனமாக பயன்படுத்திக் கொள்ளப்போவதில்தான் உங்கள் வருங்காலம் அமைந்திருக்கிறது.


பாலா...விளிம்புநிலை வாழ்க்கைகளை திரைகாவியங்களாக்கி சமூகத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட மனிதங்களை,இதர மானிடர்களுடன் இணைக்கும் பாலம்.....


நிஜத்தை மூன்று மணிநேரம் தரிசித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்வழியில், கடந்த வாரம் பார்த்த slumdog millionaire படத்திற்க்கு கிடைத்துக்கொண்டிருக்கும் விளம்பரங்களும், விருதுகளும், ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒளிவட்டமும் மனத்திரையில் ஓடியது,என் இதழில் ஒரு இகழ்ச்சிப்புன்னகைத் தோன்றி பல நிமிடங்கள் நீடித்தது.

February 12, 2009

நட்பு

முதல் அறிமுகத்திலேயே
மின்னலாய் துளிர்விட்ட
நட்'பூ'...
பூத்து,காய்த்து,
கனிக்கொடுத்து
சுகமான சுமையாய்,
காலமெல்லாம்
களித்திருக்கச் செய்யும்
என்ற நம்பிக்கை ஊற்று,
பு(தை)கைய ஆரம்பித்து
விட்டதற்கு
என்ன காரணம் ?

அளவுக்குமீறிய
எதிர்பார்ப்பா?
காரணமேயில்லாதக்
கோபங்களா?
பிறர் ப(ழி)றித்துவிடுவார்களோ
என்ற பரிதவிப்பா?

நட்பு என்பது
வானவில் அல்ல !
தோன்றி,
களித்து,
கரைந்துபோவதற்கு...

வாழும்வரை
உயிர்மூச்சாக...
பாலைவனப்பாதையில்
தென்றலாக...
எதிர்ப்பவர்களுக்கு
புயலாக...
நட்பு என்பது
காற்றைப்போல !

நம் நட்பு...
வானவில்லா?
தென்றல் காற்றா?

நீயே முடிவு செய்!!!

February 3, 2009

தேசிய நெடுஞ்சாலை NH7

கடந்த டிசம்பரில் ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்வதற்க்காக சென்னை செல்லவேண்டியிருந்தது. கூடவே நண்பனின் குடும்பமும்(பிறந்து ஒரு மாதமே ஆனக் கைக்குழந்தையும்,4 வயதான வாண்டுப்பெண்ணும்) வந்ததால் என்னுடைய காரிலேயே சென்றுவிடுவதென முடிவு செய்தோம்.பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 350கிமீ, முதல்முறையாக இந்தியாவில் நீண்டதூர சாலைவழிப்பயணம்,அதுவும் முழுதூரத்திற்கும் நான் ஒருவனே டிரைவர் வேலைப்பார்க்க வேண்டும்.புதன்கிழமை காலை 730க்கு முன்பு வீட்டிலிருந்துக் கிளம்பினோம்.ஒசூர்வரை பாலம் மற்றும் ரோடு போடும் வேலைகள் நடப்பதால்,35கிமீ கடக்க ஏறக்குறைய 1 மணி நேரம் ஆனது.
தென் திருப்பதி கோயில்-முழுத்தோற்றம்

ஒசூரிலிருந்து சென்னைவரை 4 வழிப்பாதை அமைக்கப்பட்டிருப்பதால் பயணம் இனிதே ஆரம்பித்தது.ஒசூரிலிருந்து சரியாக 10கிமீ தூரத்தில்,ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் தாண்டியவுடன் சாலையின் மறுபக்கத்தில் ஒரு சிறுக்குன்றின்மேல் தென்திருப்பதி என்று ஒரு வெங்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.சிறியக்கோயில் என்றாலும் மிகச்சிறப்பாக கட்டியுள்ளனர்.குன்றின் உச்சியில் கோயில் அமைந்துள்ளதால்,கோயிலின் பின்புற பிரகாரத்தை கடந்து எட்டிப்பார்த்தால் சரேலென சரியும் ஒரு பள்ளத்தாக்கு பச்சைப்பசேலென விரிகிறது.பரந்து விரிந்த பச்சை வயல்வெளியும்,அதைக் கட்டி அணைத்ததுப்போல வெகுதூரத்தில் தெரியும் மலைக்குன்றுகளும்,ஒயிலாக இடுப்பசைத்து வெக்கத்துடன் அன்னநடை நடந்து காதலனை நாடிச்செல்லும் இளம் கிராமத்து பெண்பொல வயல்களுக்கு நடுவே வளைந்து நெளிந்து சலசல என்ற கொலுசு சத்தம் போல கலகலத்து,காலை வெயிலின் தாக்கத்தால் தங்கம்போல தகதகத்து ஓடும் ஓடை நீரும்,அன்னையிடம் பாலருந்தி வயிறு நிறைந்த திருப்தியில்,தெய்வ சிரிப்பு சிரிக்கும் குழந்தையின் முகத்தைப் பார்க்கும் தாயின் பரவசநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும் மென்மையான தென்றல் காற்றும்,நாம் அங்கு செலவிடும் சில மணித்துளிகளில் நம் வயதை பாதியாகக் குறைத்து,வானத்தில் பறக்கும் ஆகாயவிமானத்தை முதல்முதலில் பார்க்கும் சிறுவனின் மனநிலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. அடுத்தமுறை ஒசூர் வழியாக கிருஷ்ணகிரி செல்பவர்கள் தவறாமல் இங்கு ஒரு விசிட் அடியுங்கள்.


தென் திருப்பதி கோயில்-கோபுரம்




பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை சாலையில் வாகன நெரிசல் ஓரளவிற்கு அதிகமாக இருக்கும்.ஏகப்பட்ட லாரிகளை ஓவர்டேக் செய்ய வேண்டியிருக்கும்.அதுவும் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை மலைப்பாங்கான சாலைகள்.பெரும்பாரம் ஏற்றிய லாரிகள்,ஆமை வேகத்தில் இருவழிகளையும் அடைத்துக்கொண்டு மேடேறுவது காரில் செல்லும் நம்முடைய பொறுமையை பயங்கரமாக சோதித்துவிடும்.கை எப்போதும் கியர் மாற்றுவதிலும், கால்கள் கிளட்ச்,பிரேக்,ஆக்ஸிலேட்டர் என மாறிமாறி சேற்றை மிதிப்பதைப்போல மாற்றிக்கொண்டிருப்பதில் கையும் காலும் ஓய்ந்துப்போகும்.கிருஷ்ணகிரிக்கு ஒர் 10கிமீ'க்கு முன்னால் அடையார் ஆனத்தபவன் உணவகம் உள்ளது.ஒன்றரை மணிநேர கடினப் பயணத்திற்குப்பிறகு சிறிது ஓய்வெடுக்க சிறந்த இடம்.

கிருஷ்ணகிரியைத்தாண்டி வேலூர் செல்லும் சாலையை அடைந்துவிட்டால்,வாகனம் ஓட்டுவதற்கு ஒரு சிறந்த தடமாகிவிடுகிறது.லாரிகள் அனைத்து சேலம் வழியாக தென் தமிழகத்திற்கும்,கேரளாவிற்கும் செல்வதால் வேலூர் சாலை,லாரிகள் அற்ற பாலைவன சோலையாகிவிடும்.சிறு பெரிய ஊர்களின் குறுக்கீடும் புறவழிச்சாலை அமைப்பால் விலகிச்சென்று விடுகிறது. ஆக்ஸிலேட்டரில் வைத்தக்காலை எடுக்கவே தேவையில்லை. குறைந்தப்பட்சம் 120கிமீ வேகத்தில் பறக்கலாம். ஆனால் அமெரிக்காவில் freeway'ல் கார் ஓட்டும் நிம்மதிக் கிடைப்பதில்லை.அதற்கு காரணம், சாலையின் குறுக்கே திடீரென ஓடும் மக்கள், எதிர்புறத்திலிருந்து அடுத்தப்பக்கம் செல்ல,முறையாக அமைக்கப்பட்டுள்ள அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள வழிகளைப் பயன்படுத்தாமல், நேரத்தையும்,பெட்ரோலையும் மிச்சம் பிடிக்கும் முனைப்புடன்,நாம் செல்லும் அதே திசையில் நேர்எதிரே வண்டி ஓட்டிவரும் இரண்டு சக்கரம்,ஆட்டோ,டிராக்டர்,லாரி, பேருந்துகள் என ஓட்டி வந்து மேலுலகத்திற்கு செல்லும் குறுக்குவழியை காட்டுவார்கள்.ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வண்டி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வேகத்தில் ஓட்டுவது நல்லது.

இந்த வழிகளின் சாலை ஓரங்கள்,இன்னும் கான்கிரீட் காடுகளாக மாறவில்லை.ஆகவே பெரும்பாலும் பச்சைபசேலென வயல்வெளிகளும்,மலைமுகடுகளும் பயணத்தை இனிமையாக்குகிறது.இந்தநிலை வேலூர் அடையும் வரைதான்.வேலூரிலிருந்து சென்னைவரை வெயிலூரின் கடுமையான வெப்பத்தால் காய்ந்துப்போய் உள்ளது. இன்னொரு பெரிய குறுக்கீடு ஆடு மாடுகளால் ஏற்படுகிறது.4 வழிப்பாதைகளின் நடுவில் சிறுமரங்களும்,புல்வெளிகளும் வளர்க்கிறார்கள்.அதற்கு நல்ல பராமரிப்பும்,தண்ணீரும் சாலை பணியாளர்களால் கொடுக்கப்படுகிறது. அந்தப்பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் மக்கள்,காலையிலேயெ அனைத்து கால்நடைகளுக்கும் சுதந்திரம் வழங்கி சாலையில் விட்டுவிடுகிறார்கள்,அவைகளும் மிகவும் சுதந்திரமாக தேசிய நெடுஞ்சாலையில் நடைப்போட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கலைத்தருகிறது.

வேலூர்,வாலாஜாவைத்தாண்டி கார் சென்றுக் கொண்டிருந்தது.ஏற்க்குறைய 70-80கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.ஒரு 50 அடிதூரத்தில் இடதுபுறமிருந்து ஒரு பசு திடீரென குறுக்கே நடக்க ஆரம்பித்தது. கடைசி சில நொடிகளில் அதைக்கவனித்த நான் வலதுப்புறம் திரும்பலாம் என்றால்,காருக்கு இணையாக ஒரு லாரி வந்துக்கொண்டிருந்தது,வேகத்தையும் முழுஅளவில் குறைக்க முடியவில்லை.பசுவும் கால்வாசி தூரத்தை நான் செல்லும் பாதையில் கடந்துக்கொண்டிருந்தது. வேறுவழியேயில்லை.காரை வலதுப்புறத்தில் லாரியை உரசாத மில்லிமீட்டர் தூரத்திற்கு செலுத்தி, வேகமும் 40கிமிக்கு குறைந்து ஒரு மைக்ரோ மீட்டர் இடைவெளியில் காரின் முன்பகுதி பசுவைக்கடந்திருந்தது.இடதுப்புற முன்பகுதி பசுவைக்கடக்கும் நேரம் 'டமார்'ரென ஒரு சத்தம்,கார் பசுவைகடந்துவிட்டது. ரிவர்வியூ மிர்ரர் வழியாக பார்த்ததில்,பசு எவ்வித பிரச்சனையுமின்றி மறுபக்கத்தை நோக்கி அன்னநடைப் போட்டுக்கொண்டிந்தது. இடதுபுற முன் இருக்கையில் 4 வயது குழந்தையுடன் அமர்ந்திருந்த நண்பனுக்கு எதுவும் ஆகவில்லை.ஏற்றிவிடப்பட்டிருந்த கண்ணாடியும் ஒன்றும் ஆகவில்லை. அப்போது சத்தம் எங்கிருந்து வந்தது? ஒருவேளை இடதுப்புறக்கதவின் கீழ்ப்பகுதி முழுவதும் அடிப்பட்டிருக்குமோ...அப்படியென்றால் குறைந்தப்பட்சம் ஒரு பத்தாயிரம் ரூபாய் மொய் எழுதவேண்டியிருக்குமோ என்ற கேள்வியுடன்,ஒரு கிமீ தூரம் கடந்துக் காரை ஓரம் கட்டினோம்.

காரிலிருந்து இறங்கி என்ன ஆனது என ஆராய்ந்தால்,இடதுப்புறக்கதவில் ஒரு சிறுக்கீறல் கூட இல்லை.பிறகுத்தான் கவனித்தோம்,இடதுப்புறம் உள்ள 'ரிவர்வியூ' மிர்ரர் மட்டும் முழுவதுமாக காணாமல் போயிருந்தது.அதுவும் கண்ணாடி மட்டும்தான்.கண்ணாடி ஹோல்டர் ஒன்றும் ஆகவில்லை.ஒரு 500 ரூபாய் செலவு அவ்வளவுதான்.அதைவிட யாருக்கும் எந்தவித இடருமின்றி பெரும் விபத்திலிருந்து தப்பித்த நிம்மதி. பசுக்கடக்கும்போது,அதன் முன்புற வாய்ப்பகுதி மட்டும் கண்ணாடியில் பட்டு,கண்ணாடி தெரித்ததால் அந்த பெரும் சத்தம்.பசுவின் வாய்ப்பகுதி அதனால் அடிப்பட்டதா என தெரியவில்லை.

அதற்குப்பிறகு மிகுந்தகவனத்துடன் ஓட்டி, ஸ்ரீபெரும்புதூருக்கு சில கிமி முன்னால் இன்னொரு உணவகத்தில் ஓய்வுக்காக நிறுத்தினோம்.அங்கிருந்து சென்னைவரை மறுபடியும் லாரிகளும்,நகரப்பேருந்துகளும்,ஆட்டோக்களுமென நெரிசல் அதிகமாகிவிடுகிறது. போதாதகுறைக்கு சுட்டெரிக்கும் மதிய வெயில்.ஒருவாறாக ஐந்தரை மணி நேரத்தில் சென்னை மாநகரை அடைந்தோம்.

சென்னையிலிருந்து பெங்களூர் வரும்போது எவ்வித சிறுசம்பவங்களும் இன்றி நல்லப்படியாக அடுத்த நாள் வீடு வந்து சேர்ந்தோம்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது,ஒரு நல்ல பயணமாகவே அமைந்தது.சிறந்தமுறையில் அமைக்கப்பட்ட சாலைகள்,பாலங்கள்,நல்ல உணவகங்கள்.ஆனால் சாலைவிதிகளை மதிக்கும் பாங்கு நமக்கு இன்னும் சரிவர தெரியவில்லை. அதற்கு சான்று வழிகளில் காணும் சிறு,பெரும் விபத்துகள்.வாகனத்தால் அடிப்பட்டு இறந்துப்பான நாய்களின் உடல்கள் அகற்றப்படாமல்,அதன்மேலே அனைத்து வாகனங்களும் சென்று,அது காய்ந்து சாலையோடு சாலையாக தேய்ந்துபோன தடங்கள். சிவப்புவிளக்கு சுழல வேகமாக செல்லும் ஆம்புலன்ஸ்கள் என பல நிகழ்வுகள்.

பெங்களூர்-சென்னை வழியில் 5 டோல்கேட்கள் உள்ளன.ஒவ்வொரு இடத்திலும் 25ரூ முதல் 45ரூ வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.ஏற்க்குறைய ரூ 350-400 வரை போய்வர செலவழிக்க வேண்டியுள்ளது.ஆனால் கொடுக்கும் காசுக்கு நல்லமுறையில் சாலைகளை பராமரிக்கிறார்கள்.அந்தவிதத்தில் மகிழ்ச்சியே !

January 14, 2009

படிக்காதவன் : லேட்டஸ்ட் விமர்சனம்

நான் எப்போதும் முதல்நாள்,முதல்காட்சி பார்ப்பதில்லை.அதுவும் பண்டிகைக்காலங்களில் வெளியாகும் படம் என்றால்,கூட்டம்,ரசிகர்களின் கூத்துக்கள்,அநியாய டிக்கெட்விலை,சீட் கிடைக்காமல் ஸ்கீரினுக்கு முன்னாலோ அல்லது ஏதாவதொரு மூலையில் கத்தல்களுக்கும்,வியர்வைக்கசகசப்புகளுக்கும் நடுவில் எவ்வித திருப்தியுமின்றி 3 மணி நேரத்தை கழிப்பது மிகவும் கடிணம்.ஆனால் விதி வலியது.இன்றைய நாளின் சம்பவங்கள் என்னை படிக்காதவன் திரைப்படத்தை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது. படத்தைப் பார்த்துமுடித்தவுடன் உடனடியாக விமர்சனம் எழுத வேண்டும் என்ற உந்துதலால் மடிக்கணிணியை திறந்து தட்ட ஆரம்பித்துவிட்டேன்.

முதலில் படத்தின் நாயகன்,நம் அனைவரும் அறிந்த கமர்சியல் கதாநாயகன்.படத்தில் ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான கதை(???),காமெடி,செண்டிமெண்ட்,சண்டை, பஞ்ச் டயலாக்,பாசப்போராட்டம்,பாடல்கள் என கமர்சியல் மசாலாக்களை அடித்து கலக்கியிருக்கிறார்கள்.

படம் கதாநாயகனின் சிறுவயது முதல் ஆரம்பிக்கிறது.பாசமான வக்கீல் அண்ணன்,பள்ளிசெல்லும் இரு தம்பிகள் என ஒரு அருமையான பாசத்தை பிழியும் பாடலுடன் ஆரம்பிக்கிறது.அப்பாடலில் அண்ணன் தீய்ந்துப்போன தோசையை சுட்டுபோடுவதால்,தம்பிகள் நல்ல தோசை சாப்பிட கல்யாணம் செய்துக் கொள்கிறார். தம்பிகளுக்கு தோசை சுட்டுப்போட வேண்டிய அண்ணி,தோசைகரண்டியால் தலையில் போடுவதால் தம்பிகள் இருவரும் வீட்டைவிட்டு சென்னைக்கு வந்துவிடுகிறார்கள்.

தம்பியின் படிப்பிற்க்காக கதாநாயகன் ஆட்டோ ஓட்டி கஷ்ட்டப்பட்டு படிக்கவைக்கிறார்.வழக்கம்போல நம்பி ஊதாரித்தனமாக செலவழித்து,ஒரு பணக்கார பெண்ணைக் காதலித்து அண்ணனின் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்துக்கொள்கிறார்.பணக்காரரின் சொத்துக்கு ஆசைப்படும் வில்லன்,அவரைக் கொன்று,பழியை கதாநாயகன் மேல் போட்டுவிடுகிறார்.பெரிய அண்ணன்,இந்த கேப்பில் நீதிபதியாகிவிடுகிறார்.அவரிடம் விசாரணைக்கு வரும் இந்த கேஸின் மூலம்,மீண்டும் தம்பிகளை அடையாளம் தெரிந்துக்கொண்டு,தம்பிகளுக்காக மீண்டும் வக்கீலாக டீப்ரமோட் ஆகி உண்மைகளைக் கண்டுபிடித்து கதாநாயகனை விடுவித்து,அனைவரும் ஒன்றாக தோசை சாப்பிடுகிறார்கள்.
கதாநாயகனின் டாக்ஸிகூட தமிழ் படித்திருக்கிறது.டாக்ஸியில் தவறான எண்ணத்துடன் யாராவது ஏறினால் ஸ்டார்ட் ஆகாது சண்டித்தனம் பண்ணும்.கதாநாயகன் அடிக்கடி டாக்ஸியுடன் பேசிக்கொல்லும் காட்சிகள் நன்றாக படம் பிடித்துள்ளனர். கதாநாயகி கர்ப்பிணி வேசத்தில் கள்ளச்சாராயம் விற்பதும்,கதாநாயகனுடன் மல்லுகட்டும் காட்சிகளும் நகைச்சுவையாக இருக்கிறது.பாடல்களும் கதாநாயகனின் சூப்பர்ஸ்டார் ஆசனத்தை நோக்கிய பயணத்திற்கு பயன்படும் விதத்தில் சிறப்பாக உள்ளது.

நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. 'தங்கச்சிய நாய் கட்சிச்சிப்பா......என கலக்குவதும்,பழம் விற்கும் கபாலி,திடீர் பணக்காரராகி கே.பாலி ஆவதும் கலகலப்புடன் படமாக்கப்பட்டுள்ளது.பாடல்கள் அருமையாக வந்துள்ளது. முதல் பாடல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டுள்ளது.தம்பி உதாசினப்படுத்திய வலியோடு,தண்ணீயடித்துவிட்டு,கதாநாயகியை பார்த்துப்பாடும் பாடல்..மிகவும் அருமை.நாயகன் நன்றாக நடித்துள்ளார்.

மொத்தத்தில் படிக்காதவன்...டிஸ்டிங்கனில் பாஸ் ஆகிவிடுவான்...

டிஸ்க்கி : இன்று விடுமுறை என்பதாலும்,அனைத்து தொல்லைக்காட்சிகளிலும் அறுவை ப்ரோக்ராம்கள் என்பதால்,DVD'ல் ரஜினி நடித்த 'படிக்காதவன்' படத்தை பார்த்தேன்.அதன் தாக்கத்தால் உடனடியாக இந்த விமர்சனம்...நீங்கள் வேறு ஏதாவது எதிர்ப்பார்த்து வந்திருந்தால் அதற்கு நான் பொருப்பல்ல..மீண்டும் முதல் வரியைப் படிக்கவும்