படம் பார்க்கவேண்டும் என தூண்டியவைகள்,
1.ஒரு (திமுக)கொடியில் பூத்த இருமலர்கள்,வெவ்வேறு துருவங்களாக மாறிய வரலாறு எந்த அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது ?
2. பாடல்கள் அனைத்தும் எப்போது கேட்டாலும் மிகவும் இனிமையாக இருக்கும்,படத்தில் எந்த இடத்தில்,எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது ?
3. ஐஸ்வர்யா'வின் முதல் படம்
4. மணிரத்னத்தின் இயக்கத்தில்,சமீபத்திய திராவிட வரலாறு எவ்வாறு காட்சிப்படுததப்பட்டிருக்கிறது ?
5. மோகன்லால்,பிரகாஷ்ராஜின் நடிப்பு,நிஜத்துடன் எந்த அளவுக்கு ஒத்துப்போயுள்ளது ?
படம் 'அனைத்து சம்பவங்களும் கற்பனையே' என்ற டைட்டிலுடன் ஓடத்தொடங்கியது. மோகன்லால் படக்கம்பெனிகளில் வாய்ப்பு கேட்பது, சிறு வேடங்களில் நடிப்பது, ஒரு படத்தில் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டு நடிக்க ஆரம்பிப்பது, ப்ரகாஷ்ராஜின் அறிமுகம் ,திடீரென மோகன்லால்,ஐஸ்வர்யா; ப்ரகாஷ்ராஜ்,ரேவதி திருமண நிகழ்வுகள், படபிடிப்பு நின்றுபோவது, ஐஸ்வர்யாவின் காரணமே தெரியாத மரணம், லால் மீண்டும் சிறுவேடங்களில் நடிக்க ஆரம்பிப்பது, ப்ரகாஷ்ராஜின் ரயில் மறியல் போராட்டம், நாசர் கட்சி ஆரம்பிப்பது என ஒரு கோர்வையேயில்லாமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது,கடைசிவரை.
என்னுடைய முதல் கேள்விக்கான பதில் கடைசிவரை கிடைக்கவில்லை. எடுத்துக்கொண்ட கால இடைவெளியில் 1940-1987(மோகன்லால்/MGR நடிக்க ஆரம்பிப்பதிலிருந்து, மரணம் அடையும்வரை) ஏகப்பட்ட சம்பவங்கள் 'இருவர்' வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளன. திரைக்கதையில்,எதை எடுப்பது/விடுவது என்ற குழப்பம் இயக்குனருக்கு ஏற்பட்டுள்ளது.அதே சமயத்தில் 'உண்மை சம்பவங்களை' எந்த அளவுக்கு காண்பிப்பது/மாற்றுவது ( முதல் தேர்தல் வெற்றிக்குப்பிறகு,நாசர்(அண்ணா) முதல்வராகாமல், ப்ரகாஷ்ராஜ்(கலைநர்) முதல்வராவது; இரண்டாவது ஐஸ்வர்யாவை(ஜெயலலிதா) விபத்தில் மரணமடைவதாக காண்பிப்பது) என்ற குழப்பமும் தெரிகிறது.மேலும் இவ்விருவரின் வாழ்க்கையின் பெரும்பாலான நிகழ்வுகள், அனைத்துதரப்பு மக்களும் ஆரம்பம் முதல் அறிந்ததே. படம் பார்க்கும் ரசிகன்,ஒவ்வொரு காட்சியையும், கேரக்டரையும், அவனுக்கு தெரிந்த நிஜத்துடன் ஒப்பிடும்போது பெருமளவு ஒத்துப்போகாதது,அவனுக்கு குழப்பத்தையே ஏற்ப்படுத்தி படத்தின் நம்பகத்தன்மை அடிப்பட்டு போகிறது. ஆனால் இந்த நிலைமை 'வீரப்பாண்டிய கட்டபொம்மனு"க்கோ, வீரசிவாஜிக்கோ ஏற்படவில்லை.ஏனெனில்,அவர்களின் வரலாறு நாம் புத்தகத்தில் படித்தோ,அடுத்தவர் சொல்லியோ கேட்டறிந்ததுதான்.படத்தில் அதே வரலாற்றை மிகைப்படுத்தியோ, மாற்றியோ காண்பிக்கும்போது சாதாரண ரசிகன் அதை ஏற்றுக்கொள்கிறான்.
பாடல்களை பொறுத்தவரை 'நறுமுகையே' பாடல் சிறத்தமுறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. மதுபாலா,மோகன்லால் ஜோடியாக நடிக்கும் படப்பாடலை,மோகன்லால்,ஐஸ்வர்யா கல்யாண ஜோடியோடு mix செய்து அருமையாக வந்துள்ளது. 'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே' (காலேஜ் ஆட்டோக்ராபில் 'கண்மணி' , 'நண்பனாக' மாறிவிட்டது) ஒரு சிறந்த கவிதைநடை.மற்றப்படி 'ஹ்ல்லோ மிஸ்டர் எதிர்கட்சி', 'ஆயிரத்தில் நான் ஒருவன்' பாடல்கள் சிறந்த முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யாவின் முதல் தமிழ்படம்,இருவேடங்களில். 'புஷ்பா' கேரக்டரில் அதிக வேலையில்லை. நடிகையாக,இரண்டாவது வேடத்தில் ரசிக்கும்படியான சில காட்சிகளில் நடித்துள்ளார்.கதாநாயகன் தளத்திற்கு வரும்போது மரியாதைக்கொடுக்காமல் இருப்பது, மோகன்லாலுடன் காதல்வசப்படுவது, கல்யாணத்திற்கு சம்மதித்து அரசியல் காரணங்களால், மணம் புரிந்துக்கொள்ளாத நாயகனை கட்சி அலுவலகத்தில் கேள்விகணைகளால் துளைப்பது, அடுத்த அரசியல்வாரிசாகாமல்(நிஜப்படி) விபத்தில் மறைவது என சொல்லும்படியான காட்சிகள். அவரின் அன்றைய அழகு இன்றுவரை எந்த மாற்றமுமின்றி பொலிவாகயிருக்கிறது.
மோகன்லால்,ப்ரகாஷ்ராஜின் நடிப்பு வழக்கம்போல,எடுத்துக்கொண்ட திரைக்கதைக்கு மிகாமல் அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
மொத்தத்தில், 'இருவரின்' சமீபத்திய வரலாறை நன்கு அறிந்த சாதாரண ரசிகனின் (தொண்டன்) எதிர்ப்பார்ப்பை மணிரத்னம் நிறைவேற்றவில்லை.அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.